புதன், 17 மார்ச், 2010

ஐபிஎல் வாஸ்து: மும்பைக்கு வாய்ப்பிருக்கு!

குடுகுடுப்பை, ஐசியூவில் இருக்கிறார். புறா, வன்முறைக்கு இரையாகிவிட்டது. இனிவரும் ஐபிஎல் ஆட்டங்களைக் கணிப்பதற்கு வேறு யாரை அணுகலாம் என்ற யோசனையில் இருந்தபோது, அமெரிக்காவிலிருந்து வாஸ்து நிபுணர் ஒருவர் பேசினார். அமெரிக்க ராணுவத்தின் பென்டகன் கட்டடம் இவரது வாஸ்து யோசனைப்படிதான் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

நேற்று போன் செய்ததற்கு சற்று முன்புகூட வெள்ளை மாளிகையில் குப்பைத் தொட்டிகளை எங்கெங்கே வைக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கு யோசனை சொன்னதாக என்னிடம் கூறினார். எஃப்பிஐயின் கண்காணிப்பில் இவர் இருப்பதால் பெயரை வெளியிடக்கூடாது என்கிற கண்டிஷனுடன்தான் அவர் பேசத் தொடங்கினார்.

இன்றைய ஐபிஎல் போட்டி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயானது. பொதுவாகவே இந்தியன்ஸ் என்ற பெயரைக் கொண்ட அணியைத்தான் அனைவரும் நேசிக்க வேண்டும். அதுதான் தேசப்பற்று. அதற்காக தேசத்தின் தலைநகரான டெல்லியையும் புறக்கணிக்க முடியாது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், வாஸ்து பிரகாரம் பெரோஷா கோட்லா பிட்ச் தடை விவகாரம் முற்றிலும் உள்ளூர் அணிக்குச் சாதகமானதல்ல.

இது தவிர பிரோவோவும், பொலார்டும் பிளைட் பிடித்து வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்கள் இன்றைக்கு ஆடும்பட்சத்தில் மும்பை அணி பட்டையைக் கிளப்பும். ஜெயசூர்யவும் சச்சினும் ஆட வேண்டியிருக்கிறது. மலிங்காவும் மிரட்டுகிறார்.

டெல்லி அணியில், கம்பீரும் சேவக்கும் ஏற்கெனவே நன்றாக ஆடிவிட்டனர். இது தில்ஷனுடைய முறை.  பந்துவீச்சில் நேன்னஸ் மிரட்டுவார் என்பது தெரிந்த விஷயம்.

ஆனாலும் கேலரி அமைப்பு, பிட்சின் திசை, ஸ்கோர் போர்டு அமைக்கப்பட்டிருக்கும் உயரம் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது வாஸ்து முழுவதும் மும்பை அணிக்கே சாதகமாக உள்ளது என்று தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் நேன்னஸ்-ஜெயசூர்ய, நேன்னஸ்-தெண்டுர்கர், நேன்னஸ்-பொலார்டு போட்டியைப் பார்க்கலாம். அதேபோல் தில்ஷனின் அதிரடியையும் எதிர்பார்க்கலாம்.

மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் வாஸ்து நிபுணர் சொல்லக் கேட்டு எழுதப்பட்டது. கணிப்புத் தவறினால் அது வாஸ்துவையே சாரும். முன்னோரைத்தான் கேட்க வேண்டும். அதைவிடுத்து அந்த பென்டகன் புகழ் நிபுணரையோ, அல்லது இதை எழுதிய மாபெரும் கட்டுரையாளரையோ தேடுவது ஜனநாயக விரோதமாகும்....

.

..

2 கருத்துகள்:

  1. அந்த வாஸ்து நிபுணர் நான் அல்ல என்பதை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

    பதிலளிநீக்கு