புதன், 30 மார்ச், 2011

கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்!


கிரிக்கெட் இரு நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டது பார்த்தீர்களா, இனி ஒரு பிரச்னையுமில்லை. எந்த வகையிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடக்காது. நாளைக்கே காஷ்மீரை இந்தியாவுக்கே கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். அல்லது சமரசம் பேசி தீர்த்துவிடுவார்கள் என்பது போல ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

அண்ணே உங்க ரெண்டு பேருக்கும் இதுவரைக்கும் சந்திக்க வாய்ப்பே கிடைக்கலையா ? எகிப்தின் குட்டித் தீவில் இருவரும் கூட்டாக ஒப்புக்குச் சப்பாணி அறிக்கையை வாசித்தீர்களே அப்போது கூட உட்கார்ந்து பேச முடியாமலா போயிற்று. கிரிக்கெட் போட்டியென்று வந்தவுடன் இருவரும் சேர்ந்து பேச வேண்டும் என்று ஏன் துடிப்பு வந்தது?

இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இரு நாடுகளுமே ராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டையே அடகு வைக்கின்றன. அதை ராஜதந்திரம் என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாகத் தேவை என்றும் கொள்வோம்.

அதனால்தான், ஷாம் எல் ஷேக் கூட்டத்தில் இருவரும் முறைத்துக் கொண்டீர்கள். ஏனென்றால், நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா குண்டுவெடிப்பு, மும்பை தாக்குதல் ஆகியவற்றை நம்மால் மறக்க முடியாது. அவர்களாலும் மறக்க முடியாது.

ஆனால், அதே ராஜதந்திரம் ஏன் கிரிக்கெட்டில் இல்லை. கிலானியை அழைத்தீர்களே அவருடன் அப்படி என்னதான் பேசியிருக்கிறீர்கள். மும்பை தாக்குதலின்போது இருதரப்பும் பேசியதையெல்லாம் மறந்துவிடப் போகிறீர்களா? சரி அதுவும் பகைமையைக்க குறைக்க உதவும் என்று வைத்துக் கொள்வோம். புதிய அத்தியாயத்தைத் தொடங்குவீர்கள் என்று கொள்வோம்.

அப்படியானால், கிலானி அழைத்தது போல பிசிசிஐ அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பப் போகிறீர்களா? பிசிசிஐ சொல்லி மன்மோகன் கேட்பார். மன்மோகன் சொன்னால் பிசிசிஐ கேட்குமா? அந்த அளவுக்கு பிசிசிஐ மட்டமா? மன்மோகன் பேச்சை அவரே கூட கேட்கமாட்டார். பிறகு எப்படி மற்றவர்கள் கேட்பார்கள்.

அப்படியானால் அதிகாரப்பூர்வமான சந்திப்பை நடத்தியிருக்க வேண்டியதுதானே. இப்போது நடந்திருப்பது கிட்டத்தட்ட தனிநபர் சந்திப்புகள், அதாவது அதிகாரப்பூர்வமற்றவை - என்று இருவருமே கூறிவிட்டீர்கள். இதன் மூலம் என்ன பேசினாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லையே பிறகு எதற்கு இப்படியொரு சந்திப்பு? அதுவும் ராகுல், சோனியா சகிதமாக. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டிக்கான முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். அதன் மூலம் பிசிசிஐ இன்னும் கூடுதலாகக் காசு பார்த்துவிட்டது.

2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், போபர்ஸ், கறுப்புப்பணம் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை மக்கள் மறக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போக வேண்டும். பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் மறக்க வேண்டும். இருவருக்கும் அமைதிப் புறாக்கள் இமேஜ் கிடைக்க வேண்டும். அதற்காகத்தானே இரு நாட்டு மக்களையும் ஏமாற்றியிருக்கிறீர்கள்.

அதையும் வேறெங்காவது வைத்திருக்கலாமே. ஏற்கெனவே மோசடிகள் நிறைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றவில்லையா?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உப்புச்சப்பில்லாமல் தொடங்கிய ஒரு கிரிக்கெட் தொடரை இருவரும் சேர்ந்து உலகப் பரபரப்பாக்கியிருக்கிறீர்கள். நம் மக்களும் இரு நாட்டு அமைதிக்கு இதுதான் வழி போலிருக்கிறது என்று இறுதிப் போட்டிக்கு ராஜபட்சவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!
.
 
.
.
.

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? இதற்காகத்தான்

வங்கதேசம் ஏன் காலிறுதிக்குத் தகுதிபெறவில்லை என்கிற கேள்வி கடந்த சில நாள்களாகவே நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது. உண்மையில் இலங்கை - வங்கதேசம், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகள்தான் அரையிறுதியில் மோதியிருக்க வேண்டும். அந்த அணி எப்படி மிஸ்ஸானது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அந்த அணி மட்டும் அரையிறுதிக்கு வந்திருந்தாலோ, அல்லது 83-ம் ஆண்டைப் போல கோப்பையை வென்றிருந்தாலோ இன்னும் 30 ஆண்டுகளுக்கு அந்த நாட்டில் கிரிக்கெட்டை அசைக்க முடியாது.

இன்றைய போட்டியை வைத்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை சூதாட்டம் நடைபெறுகிறது என்று பெரிய பெரிய ஊடகங்களே தெரிவித்திருக்கின்றன. இது ரூ.50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்றுகட கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய சூதாட்டப் பணம் மேட்ச் ஃபிக்சிங்குக்கு பயன்படுத்தப் படாது என்று நாம் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

சரி அது வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வநாசம் செய்தது பிசிசிஐ என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல நடத்தாதீர்கள் என்று இஜாஸ் பட் கதறியதைக் கூட நாம் அறிவோம். ஐசிஎல் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதற்காக பாகிஸ்தான் வீரரை, இங்கிலாந்தின் சுழற்பந்து பயிற்சியாளராகக் கூட இந்தியாவுக்கு வரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டி பாதிக்கும் என்பதால், இலங்கையும் - இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது பிசிசிஐ. இலங்கை அணி பாகிஸ்தானில் தாக்கப்பட்ட பிறகு, வங்கதேசம் பாகிஸ்தானுக்குச் செல்ல ஆர்வமாக இருந்தபோதும், அதைக் கெடுத்தது பிசிசிஐ. இன்னும் பாகிஸ்தான் எந்த வகையிலெல்லாம் பிசிசிஐயால் இழிவுபடுத்தப்பட்டது என்பதை அனைவரும் தயவு செய்து அனைவரும் தேடி படிக்கவும்.

இந்திய வெளியுறவுத் துறை, உள்துறை ஆகியவற்றின் பேச்சைக்கூட பிசிசிஐ கேட்டதில்லை. தேர்தல் காரணமாக இரண்டாவது ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று உள்துறை மன்னர் சிதம்பரம் கேட்டுக் கொண்ட பிறகும் கூட வம்படியாக இருந்தது. பலவகையிலும் கண்டிப்புடன் கூறிய பிறகுதான் அந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், யார் தேர்தலையும் இனப்படுகொலையையும் கவனித்தார்கள்?

இப்படி இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த எதேச்சதிகாரப் போக்குக் கொண்ட பிசிசிஐ அணிதான் ஜெயிக்க வேண்டுமா? உண்மையான சண்டை எங்கோ நடந்துகொண்டிருக்கையில், அந்தப் பகைமையைக் காசாக்க நினைப்பவர்கள் இவர்கள்.  உண்மையிலேயே கிரிக்கெட்டை விரும்புவோர்கூட இந்த "போலி அணி" ஜெயிப்பதை விரும்பமாட்டார்கள். மேட்ச் பிக்சிங் மூலமாகக் கூட.
 
 

...
...

திங்கள், 28 மார்ச், 2011

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? - பாகம் 3

இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் வன்மம் 1947 பிரிவினையிலேயே தொடங்கிவிட்டது. ஆனால், இதை நீரூற்றி வளர்த்தது இரு தரப்பு கிரிக்கெட் வீரர்களும்தான். ஒருவருக்கொருவர் வீட்டுப் பெண்களைக் கெட்டவார்த்தையால் திட்டியதால்தான் மைதானத்துக்குள் மோதல்கள் நடந்தன. எப்படியெல்லாம் திட்டினார்கள் என்பதை இணையத்தில் தேடிக் கொள்ளவும்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தானுடன் டூ விட்டுக் கொண்டோம்.  மும்பையில் மைதானத்தை உழுது போட்டோம். இந்தியாவுக்கு வந்தா கொன்...டே புடுவேன் என்று மிரட்டினோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மட்டுமல்ல, பாகிஸ்தான் அரசும் நடுநடுங்கியது. எல்கேஜியிலிருந்தே பாகிஸ்தான் நமக்கு எதிரி என்பதை மனப்பாடம் செய்ததால் வந்த வினை இது.


 இப்போது இருப்பது ஜியா காலத்து, புட்டோ காலத்து பாகிஸ்தான் அல்ல. சுத்த நோஞ்சான். அஞ்சுக்கும் பத்துக்கு ஐஎம்எஃப்பின் காலைப் பிடிக்கும் நிலைமையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.  நாமெல்லாம் சேர்ந்து ராசாவிடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி பாகிஸ்தானிடம் கொடுத்துவிட்டால், காஷ்மீரை மட்டுமல்ல, ராவல் பிண்டியையும் சேர்த்து நம்மிடம் கொடுத்தேவிடுவார்கள். அவ்வளவு பஞ்சத்தில் இருக்கிறது பாகிஸ்தான் அரசு. முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்புதான் அங்குள்ள ஒரு மாநிலத்தின் பட்ஜெட். நாட்டுக்குள்ளேயே அமெரிக்காவை உளவு பார்க்கவும், ஏவுகணைத் தாக்குதல் நடத்தவும்  அனுமதித்திருக்கிறது என்றால் அந்த நாட்டின் நிலைமை எவ்வளவு மோசம்?

அமெரிக்காவிடம் ஒரு அணுஉலை ஒப்பந்தம் செய்துகொண்டு, லாகூரில் குண்டு போடுங்கள் என்று சொன்னால் கச்சிதமாக முடித்துவிடுவார்கள். அந்த அளவுக்குக் கிடுக்குப் பிடியில் சிக்கியிருக்கிறது பாகிஸ்தான். அதற்காக இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்று கூற முடியாது. வளர்ச்சியடைந்த நாடு போல காட்டிக்கொண்டிருக்கிறது. பெரிய இடத்து சகவாசங்கள் இருப்பதால், பணக்காரர்களுக்கான நாடாகி இருக்கிறது. கிரிக்கெட்டில் வல்லரசாக ஆகியிருக்கிறது. மறைக்கப்பட்ட பஞ்சமும் பசியும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கின்றன.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கடந்த ஐபிஎல் போட்டிகளில் இடமில்லை. நம் நாட்டு அரசு அவர்களுக்கு விசா வழங்காது என்பதால் அந்நாட்டு வீரர்களை யாரும் தேர்வு செய்யவில்லை. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் ஆடாத ஒரு நாடு பாகிஸ்தான் மட்டும்தான். பாகிஸ்தானில் போய் ஆடவே மாட்டோம் என்று கூறி அங்கு நடக்க இருந்த உலகக் கோப்பை போட்டிகளையெல்லாம் பிடுங்கிக் கொண்ட பிறகும்  தன்மானத்தை விட்டு, பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு வந்து ஆடுகிறார்கள் என்றால், அவர்களது நிலைமை எவ்வளவு வேதனைக்குரியது. இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணித்து வருவதாகக் கூறி உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு போருக்கும், விளையாட்டு வன்மங்களுக்கும் பின்னால் அரசியல், பொருளாதார ஆதாயம் தேடும் சதி இருக்கும் என்பார்கள். மொகாலி டிக்கெட் விலை லகரங்களில் இருக்கிறதாம். இருந்தாலும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் வன்மத்துக்குப் பின்னால் சதி ஏதும் இல்லை என்று கண்ணை மூடிக் கொள்வோம்.

பி.கு: பாகம் 1-ன் கருத்துரை பகுதிதான் பாகம் 2

இதையும் படிக்கவும்...

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்

...
....
..

ஞாயிறு, 27 மார்ச், 2011

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? பாகம் - 1

அதெப்படி தோனி அணி ஆடும் ஆட்டமெல்லாம் இந்தியாவிலேயே நடக்கின்றன? இலங்கை ஆடும் ஆட்டமெல்லாம் இலங்கையிலேயே நடக்கின்றன?  லீக் போட்டிகள் ஓகே. காலிறுதி அரையிறுதியெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று?

மொத்தம் 4 காலிறுதிகள்.  அதில் 2 காலிறுதிப் போட்டிகள் வங்கதேசத்திலும் ஒரு போட்டி இலங்கையிலும் நடப்பதாக திட்டம். ஒரிஜினல் அட்டவணைப்படி இரண்டாவது காலிறுதிப் போட்டி இலங்கையில் நடப்பதாகத்தான் இருந்தது.  பின்னர் அது ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டது. அதாவது, தோனி அணி ஆட வேண்டிய காலிறுதி ஆட்டம் இலங்கையில் நடப்பதாகத்தான் இருந்தது.

ஆனால், சரியாக அந்தப் போட்டி மட்டும் இந்தியாவிலேயே நடந்தது. மற்ற மூன்று போட்டிகள் மட்டும் வெளிநாடுகளில் நடந்தன. அதே போல் இலங்கை ஆட வேண்டிய காலிறுதி மட்டும் இலங்கையில் நடந்தது. மற்ற போட்டிகள் வெளிநாடுகளில் நடந்தன. இலங்கையோ, தோனி அணியோ அடுத்த நாட்டில் போய் ஆட வேண்டிய நிலை ஏன் ஏற்படவில்லை. அட்டவணையிலேயே ஃபிக்சிங் நடந்தது என்பதை ஐபிஎல் அதிபர் சார்பில் ஏற்கெனவே ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு முறை அதை நிரூபிக்க வேண்டியதில்லை.

தோனி அணி ஆடிய காலிறுதி இந்தியாவிலும், இலங்கை அணியின் காலிறுதி இலங்கையிலும் நடப்பது தற்செயலானது என்று ஐசிசியும் பிசிசிஐயும் நம் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றன.
..

வியாழன், 24 மார்ச், 2011

தோனி அணியின் கவுன்டமணி ரன்னிங்


அண்ணே வணக்கம்னே..

வாடா வா... செயினு மோதிரமெல்லாம் டாலடிக்குது... எவனாவது இளிச்சவாயன் சிக்கிட்டானா?

போங்கண்ணே உங்களுக்கு எப்ப பாத்தாலும் குறும்புதான்...

ஆமாடா நீ எனக்கு முறைப்பொண்ணு... குறும்பு பண்றாங்க... மேட்டர சொல்லுடா..

அது ஒண்ணுமில்லைண்ணே... நின்னுபோன ஆயில் மோட்டார சுத்தி விட்டேன். நிறைய பணம் கொடுத்தாங்க... அதுல வாங்கினதுதான் இந்த செயினு மோதிரம், புலிநகம் எல்லாம்..

என்னடா சொல்ற ஆயில் மோட்டார சுத்தி விடறதுக்கு ஆயிரக் கணக்குல பணம் கொடுக்கற அந்த இளிச்ச வாயன் எவன்டா...

அது ஒரு கூட்டம்னே... நேத்து சாயங்காலம் நம்மூரு தர்மாஸ்பத்திரில ஏதாவது ஒரு கலர் மருந்து கொடுங்கண்ணு கேக்கப் போயிருந்தேன். அப்ப கரண்டு போயிடுச்சி... அங்கிருந்த ஆயில் மோட்டார ஸ்டார்ட் பண்ண சொன்னாங்க..

அப்புறம்...

 சரின்னு நானும் சுத்தி விட்டேன்... அங்க நின்ன பசங்க எல்லாம் "ஏ ஏ கொலிகாட்டர் சாட் கொலிகாட்டர் சாட்" அப்டீன்னு கத்தினாங்க...  அப்புறம் அவங்க கூப்பிட்ட இடத்துக்கு போயி அதே மாதிரி செஞ்சு காட்டினேன்... அதுக்குத்தான் காசு...

இதென்னடா தில்லாலங்கடியா இருக்கு.. கேணப்பசங்களா இருப்பாங்க போலிருக்கே...

இல்லைன்னே அவங்க தோனி பசங்க...  இப்ப ஆயில் மோட்டர சுத்தி விடறதுக்குத்தான் கோடிக்கோடியா கொடுக்குறாங்களாம்.

இதப் பாருடா... ஆங்...

இன்னும் இருக்கு கேளுங்கண்ணே... விஜய் ரிவர்ஸ் சாட், விஜயகாந்த் பேக் லெக் சாட் எல்லாம் சொல்லித் தரச் சொல்லியிருக்காங்க...

இது வேறையா...

நீங்களும் எதாவது செஞ்சி பெரிய ஆளா ஆயிடுங்கண்ணே...

ஏன்டா அப்டிச் சொல்லிப்புட்ட... நான்தான் அந்தப் பசங்களுக்கு ரன்னிங் சொல்லிக்குடுத்தேன்... பாத்தா தெரியலையா?

சரிங்கண்ணே... இன்னிக்கு பாக்கறேன்...

..

செவ்வாய், 22 மார்ச், 2011

ஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்?

இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் 10 ஆட்டங்கள் பார்க்கச் சகிக்கவில்லை.  இப்படியே போ னால் உலகக் கோப்பை போட்டிகளில் மவுசு குறைந்துவிடும் என்று எல்லோரும் வெளிப்படையாகச் சொன்னார்கள். அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கத்துக்குட்டி அணிகளுக்கு இடமில்லை என்று ஐசிசி எரிச்சலாகக் கூறியது. ஆன்டி பிளவர் தவிர அனைவரும் கைதட்டினார்கள். உலகம் முழுவதும் (10 நாடுகள்) இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பை போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் போனால், போட்ட காசை எப்படி எடுப்பது? அதற்குத்தான் திட்டம் வகுத்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதனால்தான் அதுவரை பலவீனமாக இருந்த அயர்லாந்து பயில்வானாக மாற்றப்பட்டது. தோற்கும் அணிகள் ஜெயித்தன. ஜெயிக்கும் அணிகள் தோற்றன. எல்லா போட்டிகளிலும் மண்ணைக் கவ்வும் வங்கதேச அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. உலகமே (10 நாடுகள்) பரபரப்பானது.
டிக்கெட்டுகள் மளமளவென்று விற்றுத்தீர்ந்தன. வங்கதேசம் மோதும் போட்டிகள்கூட சுவாரஸ்யமாக்கப்பட்டன. மிர்பூர் மைதானத்தில்  வெஸ்ட் இண்டீசிடம் 58 ரன்களிடம் சுருண்ட வங்கதேச அணி, காலிறுதிக்குத் தகுதி பெறும் என்று ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பு திணிக்கப்பட்டது. வங்கதேச ரசிகர்களுக்கு உலகக் கோப்பை கனவு வந்தது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரைறுதியில் பாகிஸ்தானையும் தோற்கடிப்பது போலவும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால், லீக் போட்டிகளை சுவாரஸ்யமாக்கிய ஐசிசி, காலிறுதிப் போட்டிகளுக்கு வழக்கமான பார்முலாவுக்குத் திரும்பிவிட்டது. "அந்த 8 அணிகள்" மட்டும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. உலகக் கோப்பை அட்டவணையைப் பார்த்த சிறு குழந்தைகூட காலிறுதிக்கு இந்த 8 அணிகள்தான் தகுதி பெறும் என்று கைகாட்டியிருக்கும். அப்புறம் எதற்கு இந்த லீக் போட்டிகள் என்று கேள்வி எழக்கூடும் என்பதால்தான்,  லீக் போட்டிகளையெல்லாம் மெனக்கெட்டு பரபரப்பாக்கியிருக்கிறார்கள். சில்லறைகளைக் குவித்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான மேட்சில் ஸ்பாட் பிக்சிங் நடத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது முதல் 10 ஓவர்களில் இத்தனை ரன்களை எடுப்பார்கள் என்பது தொடர்பாக பந்தயம் கட்டப்பட்டிருக்கலாம் அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடியிருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. இதுபற்றி ஐசிசி விசாரிக்கிறதாம். அப்படியானால், ஒரு போட்டி வலுக்கட்டாயமாக டை ஆக்கப்பட்டதே அதை யார் விசாரிப்பார்களாம்? கம்ரன் அக்மல் கால்களுக்கு இடையே கேட்சுகளை விட்டதையெல்லாம் யார் கேட்பது?

உலகக் கோப்பை போட்டிகள் மீது சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஐசிசியே கூட மறுக்கவில்லை. ஆனால், அதற்காக மேட்ச் பிக்சிங் செய்யப்படவில்லை என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள். இதுவரை நடந்த எல்லாப் போட்டிகளும் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோலவே நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு வங்கதேச, இங்கிலாந்து போட்டியில் ஒரு சாமான்யன் இங்கிலாந்து ஜெயிக்கும் என்றுதான் பெட் கட்டுவான். பாகிஸ்தானை  ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்பான். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு செல்வாக்கு மிக்க புக்கிகளால் யாரை வேண்டுமானாலும் ஜெயிக்க வைக்க முடியும். அதுதான் எதிர்பாராத முடிவுகளுக்கும், இன்னிங்ஸின் பல்வேறு திருப்பங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும். இது சரத்பவார் தலைமையிலான ஐசிசியின் ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதே நமது குற்றச்சாட்டு.
..

திங்கள், 21 மார்ச், 2011

ஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்!


 க்யூவில் நிற்பது பற்றி நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. எல்கேஜி அட்மிஷன் வாங்குவதற்கு முகப்பேர் டி.ஏ.வி. பள்ளிக்கு வாசலில் முந்தைய நாள் இரவே பெட்சீட், தலையணை சகிதம் வரிசையில் படுத்திருப்பது, இரவு 9 மணிக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் "மூன்றாந்தரப் பெட்டியில்" இடம் பிடிப்பதற்காக சாயங்காலம் 4 மணிக்கே காத்திருப்பது, நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை 50 பைசா உயரப்போகிறது என்று சன்டிவியில் பிளாஷ் நியூஸ் வந்ததும் டி.வி.எஸ். பெட்ரோல் பங்கில் கிலோமீட்டர் நீளத்துக்கு டூ வீலரில் கியூ கட்டுவது, வீட்டில் பெரிசுகளுக்கு பொங்கல் துணி எடுப்பதை மிச்சம் பிடிப்பதற்காக இலவச வேட்டி சேலை வாங்குவதற்கு ரேஷன் கடையில் முண்டியடிப்பது, ரஜினிகாந்த் என்பவர் ஒரேயொரு சீனில் வரும் படம் ரிலீஸாகும் சாந்தித் தியேட்டரில் கவுன்டர்களை மொய்ப்பது, டீச்சர் டிரைனிங் முடித்த மறுநாள் காலை 5 மணியிலிருந்து எம்ப்ளாய்மென்ட் வாசலில் தவம் கிடப்பது என பல்வேறு வகையான வரிசைகள் நமக்குப் பரிச்சையமானவை. எந்த வரிசையில் எப்படி முன்னேற வேண்டும், அவரச நிலைகளில் இடத்தைத் தக்கவைத்துக்குக் கொள்ளவது எப்படி என்பன நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.  இதற்காக நாம் ஜனங்களைக் குறை சொல்ல முடியாது. நமது ஆட்சியாளர்கள் நம்மை அப்படி வைத்திருக்கிறார்கள். அதுதான் லாபம் என்று கருதுகிறார்கள் அவ்வளவுதான்.இந்த வரிசையில், சேப்பாக்கத்தையும் பெங்களூரையும் சேர்த்துக் கொள்ளலாம். காந்தியார் வாழ்ந்த ஆமதாபாத் நகரமும் இப்போது இணைந்திருக்கிறது. தோனி தலைமையிலான அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான காலிறுதிப் போட்டி இங்குதான் நடைபெறுகிறது என்று முடிவானதும் டிக்கெட் வாங்கப் படையெடுத்த ரசிகர்கள் கூட்டம் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.


இன்னொருபக்கம் சுனாமியும் நிலநடுக்கமும் தாக்கிய ஜப்பான் மக்களும் குடிநீருக்காகவும் பெட்ரோலுக்காகவும் வரிசையில் நிற்கிறார்கள். நம்மூர் வரிசையையும் ஜப்பானிய மக்களின் வரிசைகளின் ஒழுங்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏக்கப் பெருமூச்சு வருவததைத் தவிர்க்க முடியவில்லை.

..
.

வியாழன், 17 மார்ச், 2011

அக்தரின் அஸ்தமனம், இந்தியர்களுக்கு இழப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு என ஒரு தனித்துவம் உண்டு. மைதானத்தில் மிக ஆவேசமாகக் காணப்படுவார்கள். மியான் தத், தொடக்க கால இன்சமாம் உல்-ஹக், சலீம் மாலிக், சில நேரங்களில் இம்ரான்கான் என இந்தப் பட்டியல் மிக நீளம். தாடி வைப்பதற்கு முன்பு சயீத் அன்வர் கூட மைதானத்தில் ஆவேசமாகத் தெரிவார்.  இந்த ஆவேசம்தான் பாகிஸ்தானின் அடையாளம். பாகிஸ்தானுடனான போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பதற்கு, 1947-ம் ஆண்டுப் பிரிவினையைப் போலவே, இந்த வீரர்களும் முக்கிய காரணம்.


சமீப கால கிரிக்கெட் வீரர்களில் சோயிப் அக்தருக்கும் அந்தப் பட்டியலில் இடமுண்டு. 90-களின் இறுதியில் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தார். அக்தரின் பந்தைச் சந்திப்பதற்கு உலகின் எல்லா முன்னணி பேட்ஸ்மேன்களும் பயந்தனர் என்பதை மறுக்கவே முடியாது. 30 மீ தூரத்துக்கு அவர் ஓடும் வேகமும், குறுகிய இடைவெளி பவுன்சர்களும் பிரத்யேகமானவை. அக்ரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அக்தரிடம் இருந்து ஓரளவு துல்லியமான யார்க்கர்களை எதிர்பார்க்க முடியும். ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்த பிறகு அவரது ஆட்டத்திறன் போச்சு.  தென்னாப்பிரிக்காவில் முகமது ஆசிப்பை அடித்த பிறகு மிச்சமும் போச்சு.

5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. யார் யாரெல்லாமோ கேட்டுக் கொண்ட பிறகும், பாகிஸ்தான் அணியில் அவர் ஆட வேண்டும் என்கிற கோரிக்கை வந்த போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் மோடி கேட்டதும், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் வாரியம் அவர் மீதான தடைகளை ரத்து செய்தது.

எப்படி மியான்தத், இன்சமாம் போன்றோரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்காதோ அதே போல், அக்தரையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலோனோருக்குப் பிடிக்காது. 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அக்தரின் பந்துகளை கில்கிறிஸ்ட் அடித்து நொறுக்கியதைக் கண்ட பிறகுதான், அந்த ஆண்டில் பிசிசிஐ அணி தோற்றதையே இந்திய வீரர்களால் மறக்க முடிந்தது. அந்த அளவுக்குப் பகைமை உண்டு.

பொதுவிலும் தனிப்பட்டவாழ்விலும் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கிய இந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடியப் போகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அவரது பந்துவீச்சு ஓரளவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உடல் ஒத்துழைக்காததால், இரண்டாவது மூன்றாவது ஸ்பெல் பந்துவீச்சில் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இனிவரும் போட்டிகளிலும் அவர் ஆடப் போவதில்லை என்றே தெரிகிறது.

சுமார் ஏழெட்டு ஆண்டுகள் உலக பேட்ஸ்மேன்களை பீதியில் உறைய வைத்தவரின் பந்துவீச்சை, இனி ஐபிஎல் போட்டிகளில் பார்த்தால்தான் உண்டு போலிருக்கிறது. எல்லாம் வர்த்தக மயமாகி போலித்தனம் நிறைந்து, வீரர்கள் கூலாகிவிட்டதால், இப்படியொரு ஆவேசமான உண்மையான முகத்தை இனி கிரிக்கெட்டில் காண்பதும் கடினம். தனது கடைசி முகத்தையும் பாகிஸ்தான் இழந்துவிட்டது. இனி பிசிசிஐ அணி, பாகிஸ்தானுடன் மோதும் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்துக்கு என்ன இருக்கிறது?
..
..

வியாழன், 10 மார்ச், 2011

காலிறுதியில் வங்கதேசம்? ஒரு சந்தேகம்

எப்படியும் வங்கதேச அணி இந்த முறை காலிறுதிப் போட்டிக்கு இழுத்து வரப்படும் என்றுதான் தோன்றுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவதானிக்கப்படுகிறது. அப்படி காலிறுதிப் போட்டிக்கு வரும்பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியோ, இங்கிலாந்து அணியோதான் வெளியேறும்.. பாவம்..

வரும் போட்டிகளிலெல்லாம் வங்கதேசம் ஜெயித்தால் புள்ளி பட்டியல் எவ்வாறு மாறும் என்பதில் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது.

கீழே இருப்பது உலகக் கோப்பை பி பிரிவின் புள்ளிபட்டியல்

அணி
வெ
தோ
டை
கை
புள்.
ரரே
வாங்.
கொடு.
தோ.அ
4
3
0
1
0
7
+0.992
1109/182.3
1017/200.0
இங்கி
4
2
1
1
0
5
+0.054
1132/198.4
1124/199.1
வெ.இ
3
2
1
0
0
4
+2.667
611/112.2
396/142.5
தெ.ஆ.
3
2
1
0
0
4
+1.754
739/142.5
513/150.0
அயர்
3
1
2
0
0
2
-0.296
714/149.1
742/146.0
வ.தே.
3
1
2
0
0
2
-1.764
546/150.0
607/112.2
நெதர்
4
0
4
0
0
0
-2.728
716/200.0
1168/185.1

இதைப் பற்றி நோஐபிஎல் அதிபருக்கு விடைதெரியாத ஒரு கேள்வி இருக்கிறது.

இந்த பட்டியலில் தோனி அணி 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அந்த அணியின் அடுத்து வரும் ஒரு போட்டி மழையால் கைவிடப் படுவதாகவும், அடுத்த போட்டியில் தோற்றுப் போவதாகவும் வைத்துக் கொண்டால்... அந்த அணிக்கு மொத்தம் 8 புள்ளிகள் கிடைக்கும்... சுமாராக அந்த அணியின் ரன் ரேட் 1.000 என்று வைத்துக் கொள்வோம்...

அதேநேரத்தில் வங்கதேச அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் ஜெயிப்பதாக வைத்துக் கொள்வோம் தற்போது அந்த அணி பெற்றிருக்கும் 2 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 8 புள்ளிகள் கிடைக்கும். அந்த அணியின் நெட் ரன்ரேட் 0.8 என்று வைத்துக் கொள்வோம். இரு அணிகளும் சமபுள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில் புள்ளி பட்டியலில் எந்த அணிக்கு முதலிடம் தரப்படும் என்பதுதான் சந்தேகம்... தோனி அணியா? வங்கதேசமா? மற்ற அணிகளைப் பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் புண்ணியமாகப் போகும்.
..

புதன், 9 மார்ச், 2011

பியூஷ் சாவ்லாவின் தேர்வு, தோனியின் பிடிவாதம்


சச்சின் பற்றியும், ரஜினி, கேப்டன் விஜயகாந்த், அஜீத், "....", தோனி ஆகியோர் பற்றியும் எழுதியதற்காக தொடர்ந்து கண்டன எஸ்எம்எஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுச் சேவை என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம்தான் என்பதாலும், இதை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரம் நோஐபிஎல் அதிபருக்கு இருக்கிறது என்பதாலும் நமது சேவை தொடர்கிறது.

வங்கதேச அணிக்கு கடந்த 2000-ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அணி இதுவரை 68 டெஸ்ட்கள் விளையாடி இருக்கிறது  என்று நினைக்கிறேன். அதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த மூன்றில் ஒன்று ஜிம்பாப்வே அணியுடனானது. மற்ற இரண்டும் வீரர்கள் ஸ்டிரைக்கில் இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பந்தாடிக் கிடைத்தது. 34 போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருக்கிறது.  இந்த 10 ஆண்டுகளில் அந்த அணியால் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியையைும் பெற முடியவில்லை. குறைந்பட்சம் சவாலாகக் கூட ஆடமுடியவில்லை.

சரி அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? இப்படி மோசமான பார்மில் இருக்கும் ஒரு அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளத்தான். வங்கதேசத்துக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட காலத்திலேயே ஒப்பீட்டளவில் கென்யா நன்றாகத்தான் ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்படவில்லையே, அது ஏன்? இத்தனை டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வியை மட்டுமே சந்தித்தபிறகும் வங்கதேசத்திடம் இருந்து டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்படவில்லையே. அது ஏன்?

மனிதத் தலைகளின் எண்ணிக்கை இதற்குப் பின்னணியில் உள்ள ரகசியம்.

பியூஷ் சாவ்லா பற்றி ஏற்கெனவே எழுதியாகிவிட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஆடாத அவரை அணியில் சேர்த்தார்கள். சரி அவர் உலகக் கோப்பையில் ஆடப் போகிறார் என்பதை கொஞ்சம் முன்கூட்டித் திட்டமிட்டாவது அவரை அணியில் சேர்த்திருக்கலாம். அதுவும் இல்லை. கேப்டனின் நெருக்கடியால் திடீரென, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அவர் அணிக்கு வந்தார். பயிற்சிப் போட்டியில் மட்டும் நன்றாக ஆடிய அவர் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறார். இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கிறார்களே அது ஏன்? தலயின் பிடிவாதம்தான் அதற்குப் பின்னணியில் உள்ள ரகசியம்.
..

செவ்வாய், 8 மார்ச், 2011

ரஜினி ரசிகரா? இதைப் படிக்காதீங்க!

அரைநிஜார் போட்ட காலத்தில் நான் ரஜினி ரசிகராக இருந்தேன். தலையைக் கோதிவிடுவதும், சிலுப்புவதும் என்று பள்ளியிலும் வீட்டிலும் ரஜினி ஆக்சன்களாகவே இருக்கும். தனிக்கட்சி தொடங்கி தலைவர் முதல்வரானதும் எப்படியாவது பொதுப்பணித்துறையைக் கேட்டு வாங்கிவிடுவது என்கிற ஆசை உள்ளுக்குள் இருந்தது. பண்ணையில் சுவரேறிக் குதித்து பாலை எடுத்து வந்து கட்டவுட்களை குளிப்பாட்டிய சம்பவங்களும் நமது வரலாற்றில் உண்டு. அப்போதுதான் இதைப் பார்க்க நேர்ந்தது.இதன் பிறகும் ரஜினி ரசிகராக இருக்க முடியவில்லை. இனி கேப்டனிடம் போய் சரணடைந்தேன். விருதாசலம் தொகுதிக்கு விருப்பமனுச் செய்தேன். ஆனால் பலனில்லை. கேப்டனுடன் தோளுக்குத் தோளாக நின்ற சமயத்தில்தான் இந்தக் காட்சியைக் காணவேண்டிய நிர்பந்தம் வந்தது.

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு தலதான் சரியான சரியான ஆள் என்றார்கள். நாம் அவருடன் சேர்ந்த காலத்தில் அம்சமாக இருந்தார். கொஞ்சநாள் போனதும் இரண்டு இண்டேன் சிலின்டர்களை அடுக்கி வைத்தது போல் மாறிவிட்டார். அப்படியிருந்தும் சொன்ன பேச்சை கேட்காமல் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். அதில் ஊருக்குள் காலாரா வந்து பலர் உயிரை விட்டுவிட்டனர்.
காலராவை உருவாக்கிய பாடல் இதுதான்...காலராவில் இருந்து மீண்டு யாருடைய ரசிகராகவோ தொண்டராகவோ இருக்க வேண்டும் என்பதற்காக பல காடு மலைகள் தாண்டி தவமிருந்து ஒருவரைக் கண்டுபிடித்தேன். அவர் பெயர் விஜய். வசனம் பேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவரது படங்களைப் பார்க்கச் செல்லும்போது ஒரு டஜன் டோலோ 650 மாத்திரைகளைக் கொண்டு செல்வது மட்டும்தான் நமக்குப் பிரச்னையாக இருந்தது. வேறு எந்தத் தொந்தரவும் இல்லை. இப்படிச் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருநாள் இந்தக் காட்சியை குளோசப்பில் பார்க்க நேர்ந்தது.இதைப் பார்த்தபிறகு சிக்குன்குனியா வந்தது. இனிமேல் இப்படி எதையும் பார்க்கக்கூடாது என்பதற்காக எந்த சினிமாவையும் பார்ப்பதில்லை என்கிற முடிவுக்குவந்தேன். அப்போது ஒருநாள் டி.வி.யில் கிரிக்கெட் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் நான் கண்ட சம்பவம்...
இது பொறுப்பதில்லை தம்பீ... ஆறாத ரணங்களைக் கொண்ட இந்த மனதை ஏன் வேல்கம்பால் குத்துகிறீர்கள் என்று எழுந்து நியாயம் கேட்கப் புறப்பட்டதன் விளைவுதான் இப்போது எழுதுவதெல்லாம்...
..
..

திங்கள், 7 மார்ச், 2011

யுவராஜின் எழுச்சி, தோனிக்கு ஆபத்து!

அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு அனுப்பும் யுடிஆர்எஸ் முறைக்கு கேப்டன் தோனி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இந்த முறை குழப்பமாக இருக்கிறது என்று யுவராஜ் சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த விஷயத்திலும் வாயைத் திறக்காமல் இருந்தவர்தான் இந்த "பி" கிரேடு பிளேயராகத் தரம் இறக்கப்பட்ட யுவராஜ் சிங். கேப்டன் பதவியை தோனி பறித்துச் சென்றது முதல், நீலாம்பரி போல பழைய விடியோவைப் பார்த்துக்கொண்டு வீட்டில் முடங்கிக் கிடந்தார். அய்பீஎல் போட்டிகளிலும் ஒன்றும் ஆகவில்லை. கிரிக்கெட் வாரியத்தால் பிஸ்கெட் போட்டு வளர்க்கப்படும் கேப்டன் சிங்கங்கள் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளரவிடுவதில்லை. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்கக்கூடாதல்லவா. அந்த வகையில் அழிக்கப்பட்டவர்தான் யுவராஜ் சிங். டெஸ்ட் போட்டியில் இருந்து தூக்கினார்கள், பின்னர் பி கிரேடு கொடுத்தார்கள்.

எல்லா கேப்டன் சிங்கங்களுக்கும் ஒரே முடிவுதான் ஏற்படும். கபில்தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த், அசாருதீன், கங்குலி, டிராவிட் ஆகிய எல்லோரையும் சேற்றைப் பூசித்தான் அனுப்பினார்கள். அசாருதீனுக்கு முன்பு வரைக்குமாவது ஓகே. அதன் பிறகு, கங்குலிக்கும், டிராவிட்டுக்கும் நேர்ந்தது கிரிக்கெட் பிஸினஸின் உச்சகட்ட அசிங்கம். ஆனால், இந்த அசிங்கங்களையும் தாங்கிக்கொண்டு சிங்கங்கள் தொடர்ந்து ஆடின. எல்லோருக்கும் இரண்டாம் நிலைத் தலைவர்களால்தான் பிரச்னை வந்தது. அசாருதீனுக்கு யாரால் வந்தது என்பதை அவரவர் சொந்த அபிப்ராயத்துக்கு விட்டு விடுகிறேன். கங்குலிக்கு டிராவிட், டிராவிட்டுக்கு தோனி, தோனிக்கு நிச்சயம் யுவராஜ்தான்.

இப்போது ஆட்ட நாயகன் விருதைத் தட்டியிருக்கும் யுவராஜ் பழிவாங்குவதற்குக் களத்தில் இறங்கிவிட்டார். பி கிரேடு, டெஸ்ட் பிளேயர் அந்தஸ்து போனது, கேப்டன் பதவி அபகரிக்கப்பட்டது போன்ற எல்லா நினைவுகளும் கண்முன் வந்து போகுமா இல்லையா? அதனால்தான் நீண்காலத்துக்குப் பிறகு வாயைத் திறந்திருக்கிறார் யுவராஜ். அதற்குப் பக்கபலமாக ஆட்ட நாயகன் விருதும் கிடைத்துவிட்டது. இப்படி ஸ்பின்னில் கலக்கினால், டெஸ்ட் போட்டிகளில் சேர்த்தாக வேண்டுமே... அடுத்தது கேப்டன் பதவிதான்.

-----------------------------

இப்போது தோனி கேட்டவுடன் டோர்னமென்ட் கூட முடியாத நிலையில், யூடிஆர்எஸ் முறையில் மாற்றத்தைச் செய்திருக்கிறது ஐசிசி. அந்த அளவுக்கு பிசிசிஐ மேல் பயம். இனிமேல் எல்பிடபிள்யூ பரிசீலனை செய்யப்படும்போது, பந்து உடலில் படும் தூரம் 3.5 மீ என அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 2.5 மீ என வைத்திருந்தார்கள். விளையாட்டில் பாதியிலேயே விதிகளை மாற்றுவதைப் போல கொடுமை இருக்க முடியுமா? யூடிஆர்எஸ் முறையே கிறுக்குத்தனம்தான் என்றாலும் அதை பாதியிலேயே மாற்றுவது - தலைவர் பாணியில் கேட்டால் - நியாயம்தானா? அப்ப இதுவரை நடந்த போட்டிகளெல்லாம் என்னவாம்?

1981-ம் ஆண்டுவரை இதுபோன்ற இன்னொரு கிறுக்குத்தனம் இருந்தது. அதுதான் அன்டர்ஆர்ம் பவுலிங். கிட்டத்தட்ட பந்தை உருட்டி விடுவது. 1981-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அண்ணன் ரீவர் கடைசி பந்தை உருட்டிவிட்டார். கடைசிப் பந்தில் சிக்சர் எடுத்தால் மேட்ச் டை ஆகிவிடும் என்பதால், அதை முறியடிப்பதற்காக இந்த ஏற்பாடு. ரீவர் இப்படிச் செய்த பிறகு அன்டர் ஆர்ம் பவுலிங்குக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் தடைவிதிக்கப்பட்டது. நம்ம கிளென் மெக்ராத்கூட இப்படியொரு பந்தைப் போட்டு, பில்லி பவுடனிடம் ரெட் கார்டு வாங்கியிருக்கிறார்.


 
..
.

வியாழன், 3 மார்ச், 2011

உலகக் கோப்பைக்கு முன்பு சூதாட்டக்காரர் விடுதலை! என்ன செய்து கொண்டிருப்பாரோ?


இது பழைய செய்தி! 10 ஆண்டுகளுக்கு முந்தையது
 
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த புக்கி முகேஷ் குப்தா, சிபிஐஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கிரிக்கெட் சூதாட்டத்தில்ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அணியிலிருந்து குரோனியே நீக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி எட்வர்ட்கிங் தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. கமிஷன் முன் ஆஜரான குரோனியேவிடம்குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இந்தியாவைச் சேர்ந்த புக்கி முகேஷ் குப்தா என்னை சந்தித்து லஞ்சம் கொடுத்தார். அவரை என்னிடம்அறிமுகப்படுத்தியது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்தான் என்று குரோனியே கூறினார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனரா என்று விசாரித்து வரும் மத்திய புலனாய்வுப்பிரிவு (சிபிஐ), முகேஷ் குப்தாவைக் கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதைக் கேள்விட்ட பிறகுமுகேஷ் குப்தா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
முகேஷ் குப்தா கைது செய்யப்பட்டால்தான் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றநிலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந் நிலையில், தில்லியில் மறைந்திருந்த முகேஷ் குப்தாவை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.பின்னர் அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வந்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பல உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் முகேஷ் குப்தா கூறியுள்ளதாகத்தெரிகிறது. கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி முகேஷ் குப்தா கைது செய்யப்பட்டதைஅடுத்து அவ் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பல உண்மைகள் வெளிவரும் என்று சிபிஐஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவும் பழைய செய்தி!

கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கத் தூண்டப்பட்டேன். அப்போதுநான் குழப்பமான மனநிலையில் இருந்தேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின்முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே தெரிவித்தார்.மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் அவர்நீக்கப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங்தலைமையில் தனி விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான குரோனியேவிடம் கேள்விகள்கேட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குரோனியே கூறியது:

5 ஆண்டுகளுக்கு முன் என்னை கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் அணுகினர். எனக்குபண ஆசை காட்டி என்னைத் தூண்டினர். சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம்பெற்றதை நினைத்து இப்போது நான் வருந்துகிறேன். சூதாட்டக்காரர்களிடமிருந்து 5.8 லட்சம் டாலர் லஞ்சமாக வாங்கியிருக்கிறேன்.சூதாட்டக்காரர்கள் என்னிடம் வந்து பேசி ஆசை காட்டியதால் குழப்ப மனநிலையில்லஞ்சம் வாங்கிக் கொள்ள நான் தூண்டப்பட்டேன் என்பதே உண்மை.லஞ்சம் கொடுக்க சூதாட்டக்காரர்கள் முன் வந்தபோது அவர்களை திட்டிஅனுப்பியிருக்கலாமோ என்று இப்போது நான் கருதுகிறேன். ஆனால், அப்போது நான்அவ்வாறு செய்யவில்லை.
அப்போது நான் மறுத்திருந்தால் இப்போது எனக்கு இந்தநிலை வந்திருக்காது. சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம் வாங்கியது உண்மை. ஆனால், மேட்ச் பிக்ஸிங்கில்ஒருபோதும் நான் ஈடுபடவில்லை. 1995-ம் ஆண்டு முதல் இதுநாள் வரைகிளிஃப்போர்டு கிரீன் என்ற ஏஜெண்டு மூலம் ஸ்பான்சர்ஷிப் மற்றும்என்டார்ஸ்மென்டுகளுக்காக மட்டும்தான் நான் பணம் பெற்றேன். 1996-ம் ஆண்டு, இந்தியாவில் முகேஷ் குப்தா என்பவரை அசாருதீன் ஒரு ஹோட்டல்அறையில் எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் தன்னை அவர் ஒரு நகைக்கடைஉரிமையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், பின்னர்தான் அவர்மேட்ச் பிக்ஸிங் செய்யும் சூதாட்டக்காரர் என்று தெரிந்தது.தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்காக முகேஷ் குப்தாவிடம் பணம்வாங்கிக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்வதாகக் கூறினேன். அதுதான் நான்செய்த பெரிய தவறு. பணம் வாங்கியது பற்றி அணி வீரர்கள் யாரிடமும்தெரிவிக்கவில்லை. பணத்தை நானே வைத்துக் கொண்டேன். அந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோற்றுவிட்டது.அந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணிசுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதும் தென் ஆப்பிரிக்கா வந்த முகேஷ் குப்தா டர்பன் மற்றும் கேப் டவுனில் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன் அப் போட்டிதொடர்பான தகவல்களைப் கேட்டார் என்றார் குரோனியே.


இது சூதாட்ட டைம்லைன்

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் இந்திய கிரிக்கெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

முதன் முதலாக இத்தகைய குற்றச்சாட்டைக் கூறியது இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர். அதன் பிறகு பல்வேறு சமயங்களில் பல்வேறு வீரர்கள்,கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.கடந்த 6 மாதம் தீவிரமாகவும், விரிவாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தியசிபிஐயின் விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்டதிலிருந்து இப்போது சிபிஐ அறிக்கைவெளியிடப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்:

ஆண்டு 2000.

ஏப்ரல் 7 : மேட்ச் பிக்ஸிங் ஊழலை டெல்லி போலீஸார் வெளிப்படுத்தினர். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குரோனியோ உள்பட மேலும் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள்மீதும் இரண்டு இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு.
ஏப்ரல் 28: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

ஏப்ரல் 30: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக ஸ்காட்லாந்து யார்டுபோலீஸார் இந்தியா வருகை. சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.

மே 1: மேட்ச் பிக்ஸிங் குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ தனது முதற்கட்டவிசாரணையைத் தொடங்கியது.

மே 4: கபில்தேவ் தனக்கு ரூ. 25 லட்சம் கொடுக்க முன் வந்ததாக மனோஜ் பிரபாகர்தன்னிடம் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்பிந்த்ரா தகவல். இக் குற்றச்சாட்டை மறுத்தார். செய்தியாளர் கூட்டத்தில் கண்ணீர் விட்டார்கபில்தேவ்.

மே 6: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு லஞ்சம் கொடுக்கமுன் வந்தது உண்மை என்று மனோஜ் பிரபாகர் அறிவித்தார். ஆனால், பெயரைஅறிவிக்கவில்லை.

மே 11: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தொடர இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு.

மே 12: சிபிஐ வெளி நபர்களிடம் தனது விசாரணையைத் தொடங்கியது.

மே 13: விசாரணைக்கு வரும்படி மனோஜ் பிரபாகருக்கு சிபிஐ உத்தரவு.

மே 15: சிபிஐ முன் பிந்த்ரா ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். 360 பக்கஅறிக்கையையும் சிபிஐயிடம் அவர் சமர்ப்பித்தார்.

மே 16: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கையை சிபிஐ ஆராய்ந்தது. இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும் விதம் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியதுசிபிஐ.

மே 18: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு விளக்கம்அளிக்கும்படி பிந்த்ராவுக்கு சிபிஐ கோரிக்கை.

மே 20: இந்திய அணியின் முன்னாள் மேலாளர் அஜித் வடேகரிடம் மும்பையில் சிபிஐவிசாரணை.

மே 22: சிபிஐ முன் ஆஜராக கால அவகாசம் கோரினார் மனோஜ் பிரபாகர்.

மே 23: சிபிஐ முன் நவ்ஜோத் சிங் சித்து ஆஜராகி வாக்குமூலம். பிந்த்ரா கூறிய தகவல்குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றார்.

மே 24: சிபிஐ முன் மனோஜ் பிரபாகர் ஆஜரானார். இன்டர்நெட் தளத்துக்குபேட்டியளித்தார். கபில்தேவ் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது உண்மை என்றுதெரிவித்தார். இதற்கு மோங்கியா, சித்து, பிரசாந்த் வைத்தியா ஆகியோர் சாட்சி என்றார்.மேலும் அச் சம்பவம் பற்றி அசாருதீன், ரவி சாஸ்திரி, அஜீத் வடேகர், கவாஸ்கர்ஆகியோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

மே 25: கபில்தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி என்னிடம் பிரபாகர் கூறினார்என்று ரவி சாஸ்திரி லண்டனில் தெரிவித்தார். மற்றவர்கள் அச் சம்பவம் பற்றி தெரியாதுஎன்று கூறிவிட்டனர்.

மே 28: மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரபாகர். இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்,பெட்டிங் குறித்து கிரிக்கெட் வீரர்களிடம் எடுத்த பேட்டி அடங்கிய விடியோ கேசட்டைவெளியிட்டார். அசார், ஜடேஜா ஆகியோருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புஇருப்பது தெரியவந்தது.

மே 30: மும்பை, டெல்லி நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் சிபிஐவிசாரணை.

ஜூன் 2: கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின்வங்கிக் கணக்குகளைப் பரிசோதிக்க சிபிஐ முடிவு.

ஜூன் 3: தன்னிடமிருந்து விடியோ கேசட்டுகளை சிபிஐயிடம் மனோஜ் பிரபாகர்ஒப்படைத்தார்.

ஜூன் 5: விடியோ கேசட்டுகளை சிபிஐ பரிசோதித்தது.

ஜூன் 9: பிரபாகர் பேட்டி எடுத்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிபிஐ சம்மன். விசாரணைக்குவரும்படி அழைப்பு.

ஜூன் 11: கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கானமுக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தகவல்.

ஜூன் 12: சித்து மீண்டும் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகர் கூறியகுற்றச்சாட்டுகள் குறித்தும், விடியோ கேசட்டில் இருப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

ஜூன் 13: விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.பிரபாகரின் குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜூன் 15: முகேஷ் குப்தா என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரரிடம் என்னை முதன் முதலாகஅறிமுகப்படுத்தியது அசாருதீன்தான் என்றார் குரோனியே.

ஜூன் 16: குப்தா பற்றி தகவல்களைச் சேகரித்தது சிபிஐ. தெற்கு டெல்லியில் நகைக் கடைவைத்திருப்பவர்தான் குப்தா என்று சிபிஐ கண்டுபிடித்தது.

ஜூன் 19: பிரசாந்த் வைத்தியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகரின்குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜூன் 20: சிபிஐ முன் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அஜித் வடேகர்.தன்னிடம் பிரபாகர் பேசியது எதுவும் நினைவில்லை என்று மறுத்தார்.

ஜூன் 22: அசாருதீனிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் தனக்குத்தொடர்பில்லை என்று மறுத்தார் அசாருதீன்.

ஜூன் 28: கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா பிடிபட்டார். அவரிடம் வாக்குமூலம்பெற்றது சிபிஐ.

ஜூன் 29: நிகில் சோப்ராவிடம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் ஈடவில்லை என்றுமறுத்தார் நிகில் சோப்ரா.

ஜூலை 1: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் அலிஇராணியிடம் சிபிஐ விசாரணை.

ஜூலை 4: பிரபாகரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. அவர் கொடுத்த விடியோ கேசட்டுகள்உண்மையானதுதானா என்று பிரபாகரிடம் விளக்கம் கேட்டது சிபிஐ.

ஜூலை 16: அஜய் ஜடேஜாவிடம் சிபிஐ விசாரணை.

ஜூலை 20: கிரிக்கெட் வீரர்கள், வாரிய அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களில்வீடுகளில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை.

ஜூலை 22: வருமான வரித் துறை சோதனை தொடர்ந்தது. வங்கி லாக்கர்கள்சீலிடப்பட்டன. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித் துறைஅதிகாரிகளுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகளும் ஆவணங்களைப் பரிசோதித்தனர்.

ஜூலை 24: அஜய் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு பேர் கொண்ட சிபிஐகுழு லண்டன் சென்றது. ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

ஜூலை 28: அஜய் சர்மாவிடம் சிபிஐ குழு விசாரணை. கிரிக்கெட் வீரர்களுக்கும்,சூதாட்டக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் கிடைத்தன.அசாருதீனுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக அஜய்சர்மா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1: ஜடேஜா, கபில்தேவ் ஆகியோரது வங்கி லாக்கர்களைத் திறந்து சிபிஐசோதனை.

ஆகஸ்ட் 4: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, செயலர்லேலே, பொருளாளர் கிஷோர் ருங்தா ஆகியோர் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.

ஆகஸ்ட் 14: முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும்உள்ள ரவி சாஸ்திரியிடம் சிபிஐ விசாரணை. பிரபாகரின் குற்றச்சாட்டை ஆமோதித்தார்.

ஆகஸ்ட் 16: வருமான வரிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைபரிசோதனை செய்தது சிபிஐ.

ஆகஸ்ட் 17: கிரிக்கெட் வாரியப் பொருளாளர் ருங்தா சிபிஐ முன் மீண்டும் ஆஜராகிவாக்குமூலம்.

ஆகஸ்ட் 18: மேட்ச் பிக்ஸிங் பற்றி ஒரு வழக்கோ அல்லது முதல் தகவல் அறிக்கையோபதிவு செய்யப்படாது, விசாரணை முடிந்தவுடன் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம்சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ அறிவித்தது.

ஆகஸ்ட் 31: அஜய் சர்மாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. பொய் கண்டறியும்சோதனையில் ஈடுபடும்படி மனோஜ் பிரபாகரிடம் சிபிஐ கோரிக்கை. ஆனால், அச்சோதனையில் ஈடுபட மனோஜ் பிரபாகர் மறுப்பு. மற்றவர்களுக்கும் அச் சோதனைநடத்தப்படவேண்டும் என்றார் அவர்.

செப்டம்பர் 7: சிபிஐ முன் ஆஜரானார் கபில்தேவ். தன் மீதான குற்றச்சாட்டுகளைமறுத்தார்.

செப்டம்பர் 12: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கபில்தேவ்.

செப்டம்பர் 15: சிபிஐ அறிக்கையில் ஓரிரு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் சூசகத் தகவல்.

செப்டம்பர் 16: மாதக் கடைசியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்று சிபிஐ தெரிவித்தது.

செப்டம்பர் 17: தென் ஆப்பிரிக்காவில் மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரித்து வரும் எட்வர்ட்கிங் கமிஷனின் வழக்கறிஞர் ஷாமிலா பதோஹி விசாரணை நடத்துவதற்காக இந்தியாவந்தார்.

செப்டம்பர் 19: டெல்லி போலீஸாருடன் ஷாமிலா பதோஹி ஆலோசனை.

செப்டம்பர் 20: சிபிஐ உயர் அதிகாரிகளுடன் ஷாமிலா பதோஹி சந்திப்பு.

செப்டம்பர் 22: மத்திய அரசிடம் சிபிஐ விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு தள்ளிவைப்பு.

அக்டோபர் 3: இம் மாதத்தில் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்என்று சிபிஐ அறிவிப்பு.

அக்டோபர் 10: மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.

அக்டோபர் 20: அக்டோபர் 23-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கலாகும் என்று சிபிஐஅறிவிப்பு.

அக்டோபர் 23: விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிவைப்பு.

அக்டோபர் 30: மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிப்பு.

அக்டோபர்  31: பிரையன் லாரா, அலெக் ஸ்டூவர்ட், மார்ட்டின் குரோ, அரவிந்த டி சில்வா, சலீம் மாலீக் மீது குப்தா குற்றச்சாட்டு

நவம்பர் 1: சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அசாரூதீன் மீது குற்றச்சாட்டு

டிசம்பர் 5: அசாருதீனுக்கு வாழ்நாள் தடை, அஜய் ஜடேஜாவுக்கு 5 ஆண்டு தடை, அஜய் சர்மா, பிரபாகர், வைத்தியர் அலி இரானி போன்றோருக்கும் தடைகள் விதிக்கப்பட்டன.

இது லேட்டஸ்ட்

இந்த மேட்ச் பிக்சிங் ஊழலுக்குக் காரணமான முகேஷ் குப்தா உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய நாள் பிப்ரவரி 18-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான பெரா குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அரசு தரப்பு வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவர் என்ன செய்து கொண்டிருப்பார் என்று யாராவது சொல்ல முடியுமா?
...

செவ்வாய், 1 மார்ச், 2011

மேட்ச் ஃபிக்சிங் செய்ததா தோனி அணி?

எப்படி பறந்து பறந்து அடிக்கிறாரு... நம்மால முடியுமா?
மேட்ச் ஃபிக்சிங் என்பது சூதாட்டத்துடன் தொடர்புடையது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் குழு தொடங்கப்பட்டபோதே இது வெறும் நாடகம் என்பதைக் கூறுவதற்காகத்தான் கைக்காசை செலவு செலவு நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.  ஏனென்றால் ஐபிஎல் என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரே நோக்கத்துக்காக செயல்படுகிற, மூடிய அமைப்பு. விளையாடுவது அரசாங்கங்கள் அல்ல. அரசாங்கங்களே ரகசிய உடன்பாடுகளைச் செய்துகொண்டு காய் நகர்த்தும் காலம்தான் இது. என்றாலும் இந்த ரகசிய உடன்பாடுகளை மூடிய அமைப்பில் மிக எளிதாகச் செய்து  கொள்ள முடியும்.

சினிமாவில் ரசிர்களைக் கவருவதற்காக, இந்த இடத்தில் பாட்டு, இந்த இடத்தில் பைட்டு வைக்க வேண்டும் என்று டைரக்டர் திட்டமிடுகிறார். இசை, நடனம், கதை முடிச்சுகள், பின்னணி என பார்ப்பவர்களைக் கட்டிப் போடுவதற்கான அனைத்து அம்சங்களுக்காகவும் சினிமாகக்காரர்கள் மெனக்கெடுவார்கள். இதெல்லாம் வெளிப்படையானவை. ஹீரோ குண்டடி பட்டு இறந்தால், அவர் நிஜமாவே இறப்பதில்லை என்னும் பிரக்ஞை நமக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

ஐபிஎல் போன்ற கிளப் ஆட்டங்களுக்கும் இந்த சுவாரஸ்யம் மிக முக்கியம். எல்லாப் போட்டிகளும் பரபரப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் திருப்தியடைவார்கள். என் ஊர் ஜெயித்துவிட்டது என்று புளகாங்கிதம் அடைவார்கள். போட்டிகள் சுவாரஸ்யமற்று இருந்தால், சம்பந்தப்பட்ட அணிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக லீக்குக்கே சிக்கல் ஏற்படும். ரசிகர்கள் சலிப்படைவார்கள். சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் உள்பட என்னவெல்லாமோ செய்பவர்கள், அணிகள் சொதப்புவதை விரும்புவார்களா என்ன?

அதற்காகத்தான் ரகசிய உடன்பாடுகள் செய்யப்படுகின்றன. முதலாளிகள் பேசிக்கொள்கிறார்கள். போட்டி எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஸ்கிரிப்ட் எழுதப்படுகிறது. வீரர்களுக்கு ஒத்திகை நடத்தப்படுகிறது. கன கச்சிதமாக மைதானத்தில் நாடகம் அரங்கேறுகிறது. பெர்பார்மன்ஸ் சூப்பர் என்றபடி ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் செய்வாரே, அந்த மாதிரியான பெர்பார்மன்ஸ் என்பது ரசிகர்களுக்குப் புரிவதில்லை.

இந்த உலகக் கோப்பை போட்டியிலும், தொடக்கத்திலிருந்தே சுவாரஸ்யம் மிஸ்ஸிங். பரபரப்பே இல்லாமல் போட்டி போய்க்கொண்டிருந்தது. இப்படியே போனால், கத்துக்குட்டி அணிகளை விலக்கிவிட்டு 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் போட்டியைத்தான் நடத்த வேண்டியிருக்கும் என்றுகூட ஐசிசி யோசிக்கத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில்தான், இலங்கை - பாகிஸ்தான், தோனி அணி - இங்கிலாந்து இடையேயான போட்டிகள் நடந்தன. இதில் ரகசிய உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில் மஹில ஜெயவர்த்தனவும், சமரவீரவும் 1,2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்குதான் மேட்ச் பிக்சிங் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொழும்பு சூதாட்டக்காரர் ஒருவர், பல லட்ச ரூபாய்க்கு பெட் கட்டியிருந்ததாகவும், அதன்படியே சமரவீரவும், ஜெயவர்த்தனவும் ஆடியதாகவும் கூறப்படுகிறது. இதனை ஐசிசி விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

இதே சர்ச்சை இங்கிலாந்து அணியுடன் தோனி அணி மோதிய ஆட்டத்திலும் எழுந்திருக்கிறது. சூதாட்டத் தரகர்களுக்கு மிகமிகச் சாதகமான ஆட்டம் இது. ஸ்டிராஸின் சேசிங் ஆட்டத்தைப் பார்த்த எவரும் அந்த அணி தோற்கும் என்ற கூறியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கச்சிதமான, பொறுப்பான ஆட்டமாகத் தெரிந்தது. ஆனால், அவர் 43-வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே எடுத்ததும் ஜாகீர்கானின் பந்துவீச்சுக்கு 3 விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கிச் சென்றது. இதன்பிறகு கடைசி இரு ஓவரில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு தெரிந்தது. அதுவும் கடைசி ஓவர் சிக்சருக்குப் பிறகு அந்த அணி வெற்றிபெற்றுவிடும் என்றே அனைவரும் கருதினர். கடைசி பந்துவரை கொண்டு செல்லப்பட்ட ஆட்டம், இறுதியில் டையில் முடிந்தது.

கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடத்தப்படும்போது, லைவ் ஃபிக்சிங், லைவ் பெட்டிங் நடத்தப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் பணம் கட்டினால், 4 மடங்கு பணம் கிடைக்கும், ஒரு மணிநேரத்தில் பணம் கட்டினால் 2 மடங்கு பணம் கிடைக்கும் என்பது போல. ஆட்டத்தின் போக்குக்கேற்பவும் இந்த மடங்குகள் அதிகமாகும். அதாவது, இங்கிலாந்து தோற்கும் நிலையில் இருக்கும்போது, ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டி ரிஸ்க் எடுப்பவர்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். இந்த லைவ் பெட்டிங்தான் இங்கிலாந்து - தோனி அணி இடையிலான ஆட்டத்தில் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆட்டத்தின் தேவையற்ற, நாடகத்தனமான பல திருப்பங்களைப் பார்க்கும்போது நமக்கும் அதே சந்தேகம் வருகிறது. சூதாட்டம் நடந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், மேட்ச் பிக்சிங் நடந்ததா, அதில் இந்திய அணி என்று கூறிக் கொள்ளும் குழுவில் உள்ள எவருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.  2000-ம் ஆண்டில் முக்கியத் தலைகளை விட்டுவிட்டது போல, இந்த முறை யாரையும் தப்ப விட்டுவிடக்கூடாது, அது அவராக இருந்தாலும் சரி, இவராக இருந்தாலும் சரி.

பி.கு.: இந்தக் கட்டுரையின் தலைப்பில் கேள்விக்குறி இடாமல் எழுத வேண்டும், மேட்ச் ஃபிக்சிங் நடந்தது உண்மைதான் என்று எழுத வேண்டும் என்பதுதான் நோஐபிஎல் அதிபரின் ஆசை. ஆனால்,  ஏற்கெனவே இப்படிக் கூறிய தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது மஹில ஜெயவர்த்தன மான நஷ்டஈடு வழக்குத் தொடர்ந்திருப்பதால், எந்த ரிஸ்க்கும் இப்போதைக்கு வேண்டாம் என்று நோஐபிஎல் அதிபர் முடிவு செய்திருக்கிறார்.
..
..