திங்கள், 30 ஜனவரி, 2012

பபூன்களின் ஆட்டம்!

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நமது கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அறிவித்ததும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தீவிரமான ரசிகர்களுக்கு ஜுரமே வந்துவிட்டது. சென்னைக்காரர்கள் கண்ணீர் விட்டார்கள்.


டெண்டுல்கருக்கு பிறகு பாரத ரத்னா விருதும், விதிமுறைகள் சம்மதித்தால் நோபல் பரிசும் வெல்லக்கூடிய தகுதி கொண்ட ஒரே நபர் இவர்தான் என்று பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு அறிவிப்பு வந்தால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?


ஆனாலும் ரசிகர்கள் உடனடியாக அழ வேண்டியதில்லை. ஓராண்டு கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டுதான் அவர் ஓய்வு பெறப் போகிறாராம். அதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை ஏற்பதையும் ஹெலிகாப்டர் ஷாட்கள் அடிப்பதையும் ரசிகர்கள் பார்த்து மகிழலாம். அவ்வப்போது இன்னிங்ஸ் தோல்விகள், 300 ரன் வித்தியாசத்தில் தோல்விகள் போன்றவை வந்தாலும் மனம் தளர்ந்து விடக்கூடாது.


ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணிக்கு 2 இன்னிங்ஸ்கள் என்றால், தோனி தலைமையிலான அணிக்கு 20 இன்னிங்ஸ்கள் பேட்டிங் வாய்ப்புத் தரும் வகையில் டக்வொர்த் - லீவிûஸக் கூப்பிட்டு விதிமுறைகளை வகுத்துத் தரச் சொன்னால் இந்தப் பிரச்னையை மிக எளிதாகச் சமாளித்துவிடலாம்.


இப்படியொரு விதிமுறையை வகுப்பதற்கு, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என எந்த நாட்டுக்காரர்களும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.


அப்படி யாராவது எதிர்ப்பதாகத் தெரியவந்தால், ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்துவிட வேண்டும். முடிந்தால் பிரதமரைவிட்டு ராஜதந்திர ரீதியில் அறிக்கைவிடச் சொல்லலாம். அடுத்த கணத்தில், எதிர்ப்புத் தெரிவித்த எல்லோரும் பரமார்த்த குருவின் சீடர்களைப் போல மாறிவிடுவார்கள்.


டெஸ்ட் போட்டிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்தியாவுக்கு 25 இன்னிங்ஸ்கள் கொடுக்கலாம் என்றுகூடவேண்டுகோள் விடுப்பார்கள். சுவரில் கரித்துண்டால் கோடு கிழித்து, தென்னை மட்டையைப் பேட்டாக பயன்படுத்தும் சிறுவர்கள்கூட தங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிசிசிஐயால், இது ஒன்றும் முடியாததல்ல.


ஆனால், இதெல்லாம் இன்னும் ஓர் ஆண்டுக்குத்தான். அதன் பிறகு தோனியின் முடிவை ரசிகர்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியே தீர வேண்டும் என்று யாரும் அடம்பிடிக்கக் கூடாது. காவடி எடுக்கிறேன் என்றோ அலகு குத்துவதாகவோ வேண்டிக் கொள்ளக்கூடாது.


உண்மையில் தேசத்தையும், குறிப்பாக சென்னை மக்களின் பெருமையையும் காப்பாற்றுவதற்காகவே ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால், ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி எப்படி ஜெயிக்கும்? டெஸ்ட் போட்டிகளில் ஆடி, அதனால் களைப்பு ஏற்பட்டு ஐபிஎல் போட்டிகளில் கோட்டைவிட்டால், சென்னையின் மானமல்லவா போய்விடும்? டெஸ்ட் கிரிக்கெட்டா, சென்னையின் பெருமையா என்று கேட்டால், நமது ரசிகர்கள் சென்னைதான் என்று உறுதியாகக் கூறுவார்கள். தவிரவும், 5 நாள்கள் தொடர்ந்து வெயிலில் காய்ந்தால் கிடைக்கும் பணத்தைப் போல பல மடங்கு பணம் சில மணி நேரங்களில் கிடைக்கிறதென்றால், புத்திசாலித்தனம் கொண்ட அனைவரும் தோனியின் முடிவைத்தான் எடுப்பார்கள் என்கிற வாதத்தையும் ரசிகர்கள் ஏற்க வேண்டும்.


டெஸ்ட் கிரிக்கெட் குறைந்து போவதாலோ, வீரர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாலோ கிரிக்கெட்டில் பாரம்பரியம் போய்விட்டது, தேசத்துக்காக ஆடும் அர்ப்பணிப்பு உணர்வு குறைந்துவிட்டது என்றெல்லாம் யாரும் பிதற்றக்கூடாது. அப்படி அதிர்ச்சியடையும் அளவுக்குத் திடீரென எதுவும் நடந்துவிடவில்லை.


ஏனென்றால், இந்திய கிரிக்கெட்டில் கடந்த 20 ஆண்டுகளாகவே இதெல்லாம் கிடையாது. அணியில் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்ûடுமென்றால், சொந்த அணி வீரரையே ரன் அவுட் ஆக்கலாம், சதம் அடிப்பதற்காக அணியைத் தோற்க வைக்கலாம் என்பதெல்லாம் இந்திய கிரிக்கெட்டின் எழுதப்படாத விதிமுறைகளாக மாறி பல காலம் ஆகிவிட்டது.


அதுவுமில்லாமல், டெஸ்ட் போட்டிகளில் இனி சாதனை செய்வதெற்கென்று ஏதுமில்லை. எல்லாவற்றையும் டெண்டுல்கரே செய்து முடித்துவிட்டார். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் இந்திய அணி இன்னும் குறைந்தது நூறு போட்டிகளிலாவது தோற்க நேரிடும். அதற்குள் இன்னொரு சதத்தையும் டெண்டுல்கர் அடித்து விடுவார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகள் மீது இந்தியர்களுக்கு வேறு எந்த சுவாரசியமும் இல்லை என்று கூறி, ஐசிசியே அவற்றைத் தடை செய்துவிடும். அதனால் எதிர் காலம் இல்லாத, சாதனை செய்யும் வாய்ப்பில்லாத டெஸ்ட் கிரிக்கெட்டை ஏன் ஆட வேண்டும் என்று தோனி போன்றவர்கள் கருதுவது நியாயம்தானே? அதனால்தான், திராவிட் போன்ற முதிர்ந்த வீரர்களே டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும் என்று, ஐபிஎல் போட்டிகளை நோக்கி நடையைக் கட்டிவிட்டார்.


கிரிக்கெட் எந்த வகையிலும் அழிந்துவிடக்கூடாது என்பதில் தோனி போன்றவர்கள் எந்த அளவுக்கு அக்கறையாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு அக்கறை நமது திரை நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், ஐபிஎல் போல சிசிஎல் என்கிற குழுவைத் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள இந்தியர்களை ஈர்த்திருக்கிறார்கள். ஐபிஎல்லுக்கும் சிசிஎல்லுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நடிகர்களாக மாறி மைதானத்துக்குள் நடிக்கிறார்கள். சிசிஎல் போட்டிகளில் நடிகர்கள் எல்லோரும் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அவ்வளவுதான்!


ஆனால், சிசிஎல் போட்டிகளின் வரவால் ஐபிஎல்லுக்கு ஒரு புதிய பிரச்னை முளைத்திருக்கிறது. விளம்பரங்களில் நடிப்பதால் நான் ஒரு நடிகன்தான் என்றுகூறி டெண்டுல்கர் வருமான வரியிலிருந்து விலக்கு கோரியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால், ஒரு நடிகன் என்கிற வகையில் சிசிஎல் போட்டிகளுக்கு அவர் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த தாவாவை இருதரப்பினருமே தீர்த்துக் கொள்ள வேண்டும்.


மற்றபடி ரசிகர்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆடு, மாடு, ஈமு கோழி, மாங்கொட்டையிலிருக்கும் வண்டு, அமீபா என எந்த உயிரினம் பேட்டை எடுத்துக் கொண்டு ஆட வந்தாலும் பார்ப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்....

..
.