வியாழன், 30 ஏப்ரல், 2009

ஏனிந்த அவசரம் ரெய்னா!

கிரிக்கெட் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவைப் போல் பரிதாபகரமான ஒருவரை இதற்கு முன்னால் பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக நன்றாகத்தான் ஆடிக் கொண்டிருந்தார். யார் செய்த சதியோ, அவர் 98 ரன் எடுத்தபோது, ஸ்கோர் போர்டில் 100 எனக் காட்டப்பட்டது. உடனே ஹெல்மெட்டையும் பேட்டையும் தலைக்கு மேலே உயர்த்தி, சூரியனுக்கு டாட்டா காட்டி, ரசிகர்களை நோக்கிப் பெருமிதப் பார்வையும் பார்த்துவிட்டார். அடுத்த பந்தைச் சந்தித்த அவர், 100 ரன்கள் எடுத்துவிட்ட குஷியில் ஏனோதானோவென அசால்ட் கேட்ச் கொடுத்துவிட்டு, பெவிலியனுக்கு ராஜநடையில் வந்தார். அப்போதும், ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தத் தவறுவதில்லை. வெளியே வந்ததும், மேனேஜர்தான் ரெய்னாவில் தலையில் குட்டி, உண்மையைப் புரியவைத்தார். அடப் பதருகளா!

சாரி சொன்னால், பொது மன்னிப்பு!

இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனது குரூர புத்தியை மீண்டும் ஒரு முறை வெளிப்படையாகவே பயன்படுத்தியிருக்கிறது. இதுவரை ஐசிஎல் வீரர்களை பலவாறான இன்னல்களுக்கு உள்ளாக்கிய நமது கிரிக்கெட் வாரியம், இப்போது அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது. மனம் திருந்த விரும்பும் ஐசிஎல் வீரர்கள், ஒரு மாதத்துக்குள் கிரிக்கெட் வாரிய ஓனர்களின் கால்களில் விழுந்துவிட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், ஒரு வருடம் புரோபேஷன் காலம் முடிந்ததும் இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புக் கிடைக்கும்.

ஐபிஎல் அணிகளுக்காக ஆடும் வீரர்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிஎல் வீரர்கள் அனைவருமே சாரி சொல்லத் தயாராக இருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்றைக்கு நமது பஞ்சம் தீரும் என்று விரக்தியில் இருக்கும் அவர்கள் மட்டுமல்ல, கூட்டத்தோடு கூட்டமாக கபில்தேவ் வந்தால்கூட சகல மரியாதையுடன் வரவேற்புக்கிடைக்கும். எப்படியோ எதிரணிக் கூடாரம் காலியாகப் போகிறது.

புதன், 29 ஏப்ரல், 2009

டிராவிட், ஸ்டெடியான டாடி!

என்ன ரெண்டு மூணு நாளா ஆளையே காணும் என்று டிராவிட்டை பற்றி பல தரப்பிலிருந்து விசாரணைக் கணைகள் வந்து கொண்டிருக்கின்றன. விசாரித்ததில், அவர் மீண்டும் அப்பாவாகியிருப்பது தெரிந்தது. இப்போதும் அவருக்கு ஆண் குழந்தை. இதனால்தான், மல்லையாவிடம் எக்ஸ்கியூஸ் கேட்டுக்கொண்டு பெங்களூருக்குப் பறந்து வந்து விட்டார் டிராவிட். மனைவி விஜேதா, முதல் மகன் சமீத் இப்போது இரண்டாவது மகன் என ஆனந்தத்தில் ஐக்கியமாகிவிட்ட அவர், எப்போது மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்புவார் எனத் தெரியவில்லை. சீக்கிரம் வந்துவிடுங்கள் என கேபி சொல்லித்தான் அனுப்பியிருப்பார். ஏனெனில், பெங்களூர் அணியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்தச் சுவருக்கு இருக்கிறது.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

ஏழரை யாருக்கு? யாருக்கோ!

உனது சொல்லும் செயலும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது என்று வெகு தூரத்தில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்து சொன்னார். அப்படியே, இந்த பொறுமையைச் சோதிக்கும் ஏழரை நிமிட இடைவெளியைப் பற்றி ஏதாவது எழுது என கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டார். அந்த ஒரே காரணத்துக்காக, சரி போகட்டும் என்று இதை எழுதுகிறேன்.

ஏழரையால் ரசிகர்களுக்கு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நமது கிரிக்கெட் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி யோசிப்பதற்கு முன்னால், இந்த வலுக்கட்டாய இடைவெளி எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பதைப் புலன் விசாரணை செய்வோம். வெளிப்படையாகத் தெரிந்த ஒரே காரணம் மோடியின் பாக்கெட்டை நிரப்புவதுதான். இன்னொரு காரணமும் இருக்கிறது. கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகக் கருதாமல் ஒரு நாடகமாக, அதாவது டி.வி. சீரியலாக அல்லது சினிமாவாகக் கருத வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எப்படி சீரியல்களுக்கு 10 நிமிடங்களுக்கு இடையே விளம்பர இடைவேளை இருக்கிறதோ, அதைப் போலவே இந்தப் போட்டிகளில் 10 ஓவர்களுக்கு இடையே ஒரு ஏழரை.

ஆனால், இந்த இடைவேளையால் ரசிகர்களுக்கு இரண்டு வகை நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. சீரியல் இடைவேளைகளில் என்ன செய்வோமா அதைப்போல இந்த இடைவேளைகளிலும், சாப்பிடுவது, குழந்தைகளைக் கொஞ்சுவது, அலுவலகப் பணி என எதையாவது செய்யலாம். இன்னொரு நன்மை, அந்தப் பத்தாவது ஓவரைக் கடத்திவிட்டால், ஏதோ அடுத்த நாள் ஆட்டத்தில் தெம்பாக விளையாடலாம் என்பதைப் போல பத்தாவது ஓவரை நமது பேட்ஸ்மேன்கள் தேயோ தேய் எனத் தேய்க்கிறார்களே! நல்ல காமெடி. செட் மேக்ஸில் ஆதித்யாவைப் பார்த்த உணர்வு.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

கேப்டன் ஷாருக்?

கிரிக்கெட்டை என்னைவிட ஓவராக நையாண்டி செய்வது ஷாருக்கான்தான். கோல்கத்தா அணியின் கேப்டனான... சாரி.. ஓனரான அவர், கேப்டன் பதவியை எப்படி வழங்குவது என்பதில் உலகுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறார். அதாவது கேப்டன் யார் என்பது போட்டி தொடங்கும்வரை யாருக்குமே தெரியாது. ஏன் ஷாருக், நீங்க என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படிக் குழப்புவதற்குப் பதிலாக நீங்களே கேப்டனாக இருக்கலாம். ஒரு வீரருக்கு தரவேண்டிய விலையாவது மிச்சப்படும். அப்புறம் கொஞ்சம் பணம் கொடுத்து ஒன்றிரண்டு வெற்றிகளை விலைக்கு வாங்கிக் கொண்டால் போயிற்று. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன?
டெக்கான்-கோல்கத்தா ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு என்றார்கள். கொஞ்சம் டீப்பாக விசாரித்தபோது, விளக்குகள் தகராறு செய்ததாகக் கூறினார்கள். பவர் கட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். தாமதமாகத் தொடங்கினாலும் இந்த ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்படவே இல்லை. கடந்த ஆண்டில் சொதப்பித் தள்ளிய டிசி அணியினர் இந்தப் போட்டியில் கோல்கத்தா அணியினரை துவம்சம் செய்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். அதுசரி இந்த ஆட்டத்தில் ஏன் ஓவர்களைக் குறைக்கவில்லை என்று தெரியுமா?

ஆறே ஓவர்..! அடப் பாவிகளா...

கிரிக்கெட் வீரர்களின் ஒட்டுமொத்தத் திறமையும் டெஸ்ட் போட்டிகளில்தான் வெளிப்படும் என்பதை லலித் மோடி கூட ஒப்புக் கொள்வார். ஆனால், சினிமாவில் டைட்டில் கார்டு போட்டதும் கிளைமேக்ஸ் காட்டப்பட்டது போன்று ஒரு உணர்வு தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில் ஏற்பட்டது. மழை பெய்து மைதானம் ஈரமாக இருந்தது என்பதால் ஆட்டத்தை தாமதமாகத் தொடங்கினார்கள். இதற்காக ஓவரைக் குறைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென 14 ஓவரில் ஆட்டம் நடக்கும் என்றார்கள். அப்புறம் 12 ஓவர்கள் என்றார்கள். சரி என்று பஞ்சாப் அணியினர் ஆடினார்கள். 100 ரன்களையும் அடித்தனர்.
பின்னர் தில்லி அணி ஆட வந்ததும் மீண்டும் மழை வந்ததால், ஓவர்களை மீண்டும் குறைத்தார்கள். ஆறே ஓவர். பஞ்சாப் ஓவர். இன்னும் மழை வந்தால் குறைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். 1 ஓவர், 2 ஓவர் போட்டிகளைக் காணவேண்டிய கஷ்டகாலம் நமக்கு வரத்தான் போகிறது.
இந்தப் போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்தவர் என்னிடம், Ôமொத்தமே 3 மணி நேரம் நடக்கும் ஒரு போட்டியில் ஏன் ஓவர்களைக் குறைக்க வேண்டும். வெளிச்சம்கூட பிரச்னையில்லையேÕ. என அப்பாவியாகக் கேட்டார். அடப் பாவிகளா... உங்கள மாதிரி அப்பாவிகள் இருக்கிற வரைக்கும் நம்ம கிரிக்கெட் வாரியம் மிளகாய் அரைப்பதை நிறுத்தவே செய்யாது. அது சரி, ஓவரை ஏன் குறைக்க வேண்டும் என யாருக்காவது தெரியுமா?

ஐசிஎல்-க்கு அங்கீகாரமா? போ... போ...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒரே எதிரி ஐசிஎல். அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பவர்களை செத்த எலியைப் போலப் பார்ப்பதுதான் வாரியத்தின் வழக்கம். இன்னும் கொஞ்சநாள் போனால், ஐசிஎல் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க முடியாது என்று சட்டம் கூடப் போடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது ஐசிஎல் அமைப்பு கேணச் செயல் ஒன்றைச் செய்தது. அதாவது ஐபிஎல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுபோல தங்களுக்கும் வழங்க வேண்டும் ஐசிஎல் அமைப்பினர் என்று ஐசிசியிடம் கோரிக்கை வைத்தனர். நீங்கள் சட்ட விரோதமானவர்கள், முறையற்றவர்கள் என ஐசிஎல் அமைப்பினரின் காது நோகும் அளவுக்குத் திட்டி அனுப்பியது ஐசிசி இப்போது ஐசிஎல் அமைப்பினர் மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடைக்கண் பார்வைப்படி தலையசைப்பது ஒன்றையே லட்சியமாகக் கொண்டுள்ள ஐசிசி, தங்களுக்கு அனுமதி வழங்கும் என இவர்கள் எப்படி நினைத்தார்கள் என்றே தெரியவில்லை. இப்போது கோர்ட்டுக்கு போகப்போகிறார்களாம். போங்கள். போய்ப் பாருங்கள். சூடுதான் கிடைக்கும்.

ராகுல்! கமான், கமான்

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. ஆட்டத்தின் ஹீரோ நமது சுவர் ராகுல் டிராவிட்தான். 48 பந்துகளில் 66 ரன்களை அடித்துத் தள்ளினார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இப்படிக் குழம்பிப்போய் நானும் ஒருமுறைக்கு இருமுறை செய்தித்தாள்களைப் படித்தேன். உண்மைதான்.
டிராவிட்டுக்கு சுவர் என்று பெயர் வைத்தது உண்மையிலேயே புகழுக்கு உரியதா அல்லது அவரது தடவல் ஆட்டத்தைக் கிண்டலடிப்பதற்காக வைக்கப்பட்டதா என்று கூட எனக்குச் சந்தேகம் உண்டு. எனது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், ஒருநாள் அணியில் இருந்து தூக்கப்பட்டார். டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்படும் பரிதாப நிலைக்கே சென்றார். எப்படியோ தட்டுத் தடுமாறி இன்னும் டெஸ்ட் அணியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவரை சுவர் என்று கூறும்போதெல்லாம், அவர் ஒருநாள் போட்டிக்கு லாயக்கற்றவர் என்று கூறுவதுபோலவே எனக்குத் தோன்றும். எவ்வளவோ மரியாதைக் குறைவான சம்பவங்கள் நடந்தபோதும், இவர் ஏன் அணியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என நான் நினைத்ததுண்டு. கடந்த ஆண்டு பெங்களூர் ஐபிஎல் அணியிலும் அவருக்கு இதே நிலைமைதான்.
ஆனால், இப்போது அவருக்கு குரு உச்சத்தில் இருக்கிறான் என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் கொஞ்சம் ரன் எடுக்க தொடங்கியிருக்கிறார். இப்போது சிறு பையன்கள் விளையாடும் 20 ஓவர் ஆட்டத்திலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். ஆனால், ராகுல், இதையெல்லாம் வைத்துக்கொண்டு, ஒருநாள் அணியில் இடம்பிடிக்க நினைப்பதும், கேப்டன் பதவிக்கு கனவு காண்பதும் வேண்டவே வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெட்டியைக் கட்டுங்கள். ரவிசாஸ்திரியின் பேச்சைக் கேட்டு ரொம்பவே போரடித்து விட்டது. அவர் இடத்தைப் பிடிக்க வேண்டியது உங்களது பொறுப்பு. அல்லது உங்க ஊர் ஸ்ரீநாத் மாதிரி ரெப்ரி ஆகிவிடுங்கள்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இன்னொரு தகவலுக்காக ஒரு வெப்சைட்டை திறந்தேன். அதில் ஐபிஎல் முதல் நாள் ஆட்டத்தில் டிராவிட் ஆட்டத்தையும் தெண்டுல்கர் ஆட்டத்தையும் ஒப்பிட்டு வரைபடம் வரைந்து கட்டுரையும் எழுதியிருந்தனர். எல்லா வகையிலும் டிராவிட்தான் முன்னிலையில் இருந்தார். அதைப் பார்த்தும் எனக்கு அதிர்ச்சி. இந்த விவரங்களை டிராவிட் பார்த்துவிடக்கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். பார்த்துவிட்டால் இன்னும் கொஞ்ச நாள் ஆடலாம் என்று நினைத்து விடுவாரே என்ற அச்சம் என்னைத் தொற்றிக்கொண்டது.

சென்னைக்கு பெப்பே...

அணிக்கு பெயர் சென்னை. ஆனால் அணியில் சென்னைக்காரர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பத்ரிநாத், அஸ்வின் என்ற இரண்டு பையன்களை கடனே என அணியில் சேர்த்திருந்தார்கள். ஆனால், ஆட்டத்தில் அவர்கள் செய்த வேலைகளைப் பார்த்தால், அடுத்த ஆட்டத்தில் சென்னைக்காரர்களே இல்லாத அணிதான் சென்னை என்ற பெயரில் விளையாடும் எனத் தெரிகிறது. அப்படி என்ன வேலை செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? பத்ரிநாத் பூஜ்யம் ரன்களை எடுத்தார். சுழல்பந்து வீச்சாளரான அஸ்வின், பந்து வீசவே இல்லை. சரி அவர் மட்டையாவது பிடிப்பார் என்று பார்த்தால், அவரைக் கடைசி ஆளாக பெஞ்ச் தேய்க்க வைத்துவிட்டார்கள். அதனால், அவர் மட்டை பிடிக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்படிச் சென்னைக்காரர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட அணி எப்படி ஜெயிக்கும். நானே கூட சாபம் விட்டேன், தோற்றுப் போகட்டும் என்று. கடைசியில் அப்படித்தான் ஆகிப்போனது.
20 ஓவர் போட்டிகளில் ஆடவே மாட்டேன் என்று சத்தியம் செய்து வாழ்ந்து வந்த சச்சின், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், இந்தியா சார்பில் 20 ஓவர் அணியில் சேர்ந்தால், அதன் கட்டமைப்பு பாதிக்கப்படும், ஆனால் ஐபிஎல் போட்டிகள் அப்படியில்லை என்று சமாளிக்கிறார். இந்த ஆட்டத்தில் அரைச் சதம் வேறு அடித்தார். ஒருநாள் போட்டியில் செய்யும் எல்லா பந்தாவையும் செய்தார். ம்... பணம் பேசுகிறது.
ஆட்டத்தை நான் டி.வி.யில் பார்த்துவிட்டு ஓய்ந்திருந்த நேரத்தில் நண்பர் ஒருவர் போன் செய்தார். Ôநம் டீம் இப்படித் தோத்து போயிட்டாங்களேÕ என்று ரொம்ப பீல் பண்ணினார். மனதுக்குள் எழுந்த கடுமையான வார்த்தைகள் நாக்குக்கு வந்துவிடாமல் அடக்கிக்கொண்டு நான் சொன்னேன், Ôஎன்ன செய்யறது, மனச தேத்திக்கோங்க. அடுத்த ஆட்டத்தில பாக்கலாம்Õ.

அதிதீவிர கிரிக்கெட் ரசிகன்

நமது நாட்டில் கிரிக்கெட்டையும் தேசபக்தியையும் பிரிக்கவே முடியாது. அதற்காக, பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆடப்படும் ஐபிஎல், ஐசிஎல் போன்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நமது தேச பக்தியையும், உள்ளூர் உணர்வுகளையும் கலப்பது முறையல்ல. எட்ட நின்று இந்த ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தால், அதில் ஒரு நாடகத்தனம் இருப்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை நமது கிரிக்கெட் வாரியமே ஒத்துக்கொண்டுவிட்ட பிறகு, அதில் ஆடுவோர் அனைவரும் நடிகர்கள்தான். இடைவெளியில்லாமல் விளம்பரப் படங்களில் நடித்துக் களைத்து, ஆடுகளத்துக்குள் வரும் அவர்களை, வீரர்களாக என்மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வகையில், ஒரு பாமர இந்தியனின் கண்ணோட்டத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒருவித நக்கல் நயத்துடன் இங்கே விமர்சிக்கப் போகிறேன். ஒரு அதிதீவிர கிரிக்கெட் ரசிகன் என்ற முறையில் அதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. என்னுடைய கொடுமையான விமர்சனங்களால் யாரேனும் கவலைப்பட்டால், எந்த அளவுக்குக் கவலைப்பட்டீர்கள் என்பதை மட்டும் எனக்கு தவறாமல் தெரிவித்துவிடுங்கள்.