புதன், 2 நவம்பர், 2011

டெண்டுல்கர்னா யாரு, பெரிய அப்பா டக்கரா?

கால்பந்து ஜாம்பவான்கள் பீலேவும், ரொனால்டோவும் நம் ஊர் சாலையில் நடந்து போனால்கூட யாருக்கும் அடையாளம் தெரியாது. கிறிஸ் எவர்ட், ஆர்தர் ஆஷ் ஆகியோரை யார் என்று கேட்பார்கள். ஃபார்முலா -1 என்றால் பிதாகரஸின் இன்னொரு சூத்திரம் என்று தப்புத் தப்பாகப் புரிந்து கொள்வார்கள்.

இவையெல்லாம் வெளிநாட்டு சங்கதிகள் என்பதால் நமக்குத் தெரியவில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை வரிசை மாறாமல் சொல்வதற்குக்கூட நமக்குத் தெரியும். யார் எதில் தேர்ந்தவர், என்னென்ன சாதனை புரிந்திருக்கிறார் என்பதெல்லாம்கூட நமக்கு அத்துப்படி. கிரிக்கெட் வீரர்கள் நின்றாலும் நடந்தாலும், செய்தியில் வந்துவிடுவார்கள்.

டெண்டுல்கர் என்றால் நமக்கு கடவுள். அவர் காயமடைந்து போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்னால், இளைஞர்களுக்கு வழி விடுகிறார் என்பார்கள். திடீரென அணியில் வந்து ஆடினால், கடினமான நேரத்தில் அணியைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று கதையை மாற்றுவார்கள்.

அவர் பல கோடி ரூபாயில் பழைய வீடு ஒன்றை வாங்கிக் குடியேறியதை பெரும்பாலான ஊடகங்களும் எழுதின. ஆனால் அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் வீட்டில் குடியேறுவதற்கான சான்றைப் பெறவில்லை. அதற்கு சில லட்சங்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்து ஃபெராரி காரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து முறைகேடாக வரிவிலக்குக் கோரினார். இன்னொரு முறை, தாம் ஒரு கலைஞர் எனவும், அதற்காக வெளிநாடுகளில் கிடைக்கும் அன்னியச் செலாவணியில் தமக்கு விலக்குத் தர வேண்டும் எனவும் கேட்டார். இந்த நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் சிலரும் ஆதரவாக இருந்தனர்.

வீட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயத்திலும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவர் டெண்டுல்கருக்கு ஆதரவாக மாநகராட்சியில் முறையிட்டார். நாட்டுக்காக அவர் நிறைய பெருமைகளைத் தேடித் தந்ததாகவும் வாதாடினார். ஆனாலும் அபராதம் விதிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் இப்போது அபராதத்தைக் கட்டி அந்தச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது.

சச்சின் வீடு கட்டியதிலும் குடியேறியதிலும் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரர் என்பதால் மட்டுமே அவரது சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதும், சலுகைகள் காட்ட முற்படுவதும்தான் ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஒலிம்பிக் போட்டிகளிலும், பிற சர்வதேசப் போட்டிகளிலும் பதக்கங்களைக் குவிப்பவர்களை இந்த அளவுக்கு நாம் ஊக்குவிப்பதில்லை என்பது காலம்காலமாகக் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டு. ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அசுர பலத்தால் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணப்படும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.

மத்திய அரசு இயற்ற முயலும் விளையாட்டு மசோதா, தங்களுடைய எதேச்சதிகார நடைமுறைகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் அந்த மசோதாவை கிரிக்கெட் வாரியத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ஊக்கமருந்து சோதனை உள்ளிட்ட உலக விளையாட்டுகளுக்கு விதிக்கப்படும் எந்தவிதமான சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டோம் என்பதிலும் முரட்டுப் பிடிவாதமாக இருக்கின்றனர். பணபலமும், அரசியல் செல்வாக்கும் இதற்கு உடந்தையாக இருக்கின்றன.

கிரிக்கெட் மட்டும்தான் இந்தியர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு என்கிற தோற்றம் இருக்கிறது. உண்மை அதுவன்று. மற்ற எல்லா விளையாட்டுகளையும் முடக்குவதன் மூலம் நமது மக்களிடையே கிரிக்கெட் திணிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் சரி.

அதனால்தான் வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே முழுமையாகத் தெரிந்த ஓர் ஆட்டத்தை வைத்துக் கொண்டு "உலக' கோப்பை போட்டிகளை நடத்துகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த அனைவரும் இந்த மாபெரும் பொய்யை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் உசுப்பேற்றி ஏமாற்றுவதுபோல வெளிநாட்டுக்காரர்களை ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் எஃப் 1 போட்டிகளைப் பற்றி செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, சச்சினைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர் யார், அவர் பின்னால் ஏன் இத்தனை கூட்டம், பெரிய பணக்காரரா என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றபோதும் சச்சினுக்கு இதே கதிதான் நேர்ந்தது.

கிரிக்கெட்டில் சச்சின் மாபெரும் வீரர். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்கிற வகையில் கிரிக்கெட்டை முழுமையாக ஆடத் தெரிந்த வெறும் 10 நாடுகளுக்குத்தான். உலகத்துக்கே அல்ல. இந்த விளையாட்டில் உலகக் கோப்பையை வென்றதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறெதுவும் இருக்க முடியாது.

கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும் புகழும் பணமும் அவர்களது திறமையைவிடப் பல மடங்கு அதிகமானது. வேறு எல்லா விளையாட்டுகளையும் ஒழிப்பதாலும், ஊடகங்கள் உருவாக்கிய பிம்பங்களாலும் மட்டுமே அவர்களால் இந்திய இளைஞர்களுக்குக் கடவுளராக முடிந்திருக்கிறது. அந்த ஸ்பெயின் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி அந்த போலி பிம்பங்களை உடைத்திருக்கிறது.
..