திங்கள், 18 மார்ச், 2013

ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா?



"இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளைச் செய்தது.
போர்முனைக்குச் சம்பந்தமே இல்லாத கொழும்பு போன்ற நகரங்களில் அப்பாவிகளைக் குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் வீசப்பட்டன. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை முறியடித்து வெற்றி பெற்ற ராணுவத்துக்கு வாழ்த்துகள்! "


இதைப் பேசியது யார் தெரியுமா? சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் குமார சங்ககாரதான். 2011-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கௌட்ரி நினைவு உரையில் அவர் பேசியதுதான் இது.

இப்படிப் பேசியவரைத்தான் நம்மூர்க்காரர் ஒருவர் பல கோடிகளைக் கொடுத்து அணியின் தலைவராக நியமித்துள்ளார்.

இது மட்டுமல்ல இவரைப் போல மொத்தம் 13 பேர் ஐ.பி.எல். அணிகளில் உள்ளனர்.

மஹில ஜெயவர்த்தன டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் குலசேகர இருக்கிறார்.

புணே வாரியர்ஸில் அஜந்தா மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ்.

ராயல் சேலஞ்சர்ஸில் தில்ஷன், முத்தையா முரளி தரன் (இவர என்ன பண்றது?)

மும்பையில் லசித் மலிங்கா.

ஆக ஏழு அணிகளில் மொத்தம் 13 பேர்.

சென்னையில் நடக்கும் 16 போட்டிகளிலும் ஏதாவது ஒரு இலங்கை வீரர் ஆட இருக்கிறார். ஆக இலங்கை வீரர்கள் இல்லையெனில் ஐ.பி.எல். போட்டியே பணாலாக வாய்ப்புள்ளது.

இனப்படுகொலைக்கு நீதி கேட்பது முக்கியமா? அல்லது சங்காரவின் கவர் டிரைவ்களையும், மலிங்காவின் யார்க்கர்களையும், மெண்டிஸின் சுழலையும் பார்த்து ரசிப்பது முக்கியமா என்று முடிவெடுக்க முடியாத குழப்பமான நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். நடக்கவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமே, என்ன செய்வது?

இன்னொரு பக்கம் சோ கால்டு "ஈழ ஆதரவு அரசியல்வாதிகள்" ஐபிஎல் ஓனர்களுடன் பேரம் பேசத் தொடங்கியிருப்பார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேன். நானும் நம்ப மாட்டேன்.

போகட்டும். மற்ற போராட்டக்காரர்கள் என்ன செய்வார்கள்?

ஓட ஓட விரட்ட சங்ககாரவும், மெண்டிஸும் புத்த பிக்குகளா என்ன?

..

ஞாயிறு, 17 மார்ச், 2013

ஐபிஎல் கவுன்டவுன்: சபாஷ் சிவ சேனா!





நண்பர் ஒருவர் கேட்டார்...

"பாஸ்! இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்?"

"தெரியலையே பாஸ்!"

"அதெல்லாம் உங்களுக்குக் கண்டிப்பா தெரியும்... சும்மா சொல்லுங்க". வாயைப் பிடுங்கினார்.

நான் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

"இல்லைங்க... சத்தியமா எனக்குத் தெரியாது". நழுவினேன்.

"ஹலோ! அதான் ஏதாவது சொல்லுவீங்களே, ஐ.பி.எல். தொடங்குறவரைக்கும்தான் போராட்டமெல்லாம்... அப்டீன்னு" ஒரே போடாகப் போட்டார்.

ரொம்ப ஆசைதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்...

"அப்படியெல்லாம் சொல்ல முடியாது..." இழுத்தேன்.

"நீங்க சொல்லாட்டி பரவாயில்ல... நான் சொல்றேன்... ஐ.பி.எல். தொடங்கின உடனே எல்லோரும் சேப்பாக்கத்தில் வரிசையில நிப்பாங்க" அப்டீன்னார்.

இதுக்கு மேல் போனால், அடிதடி நிச்சயம் என்று உணர்ந்து, பேச்சை மாற்றினேன்.

"சேப்பாக்கைத்தை விடுங்க. ஐபிஎல் போட்டிய நடத்தணும்னா, விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரணம் தரணும்னு ஐ.பிஎல். ஓனர்களுக்கு சிவசேனை எச்சரிக்கை விடுத்திருக்கே தெரியுமா"

"ஓ அப்படியா" ஆர்வமாகக் கேட்டார்.

"ஆமாம்.." வேறு பிரச்னைக்கு தாவிவிட்ட திருப்தியில் வேகமாகத் தலையை ஆட்டினேன்.

"ஆமாங்க! மும்பை, புணே அப்டீங்கற பேர வெச்சுத்தானே சம்பாதிக்கிறாங்க... அப்ப கொடுக்க வேண்டியதானே. ஊர்ப் பேரு மட்டும் இல்லாட்டி இவங்களை நாய்கூட மதிக்காதே..."

"சரிதாங்க" ஆமோதித்தேன்.

"இங்க உள்ளவங்க என் பண்றாங்க... இங்கேயும் விவசாயிகள் தண்ணி கிடைக்காம கஷ்டப் படுறாங்க... மின்சாரம் இல்லாம சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க... ஊர்ப் பேரை வெச்சு ஏமாத்துற காசுல கொஞ்சத்த கொடுக்க வேண்டியதுதானே" லாஜிக்காக பேசினார்.

"சூப்பரா சொன்னீங்க" பாராட்டினேன்.

"ஆனா இங்க நடக்காதுங்க" சுருதியைக் குறைத்தார்.

"ஏங்க"




"இங்க உள்ளவங்க அவங்க சொந்தக்காரங்களுக்கு ஏதாவது கேட்டு வாங்கிப்பாங்களே தவிர, ஊருக்காகக் கேட்டு வாங்குற பழக்கமெல்லாம் இதுவரைக்கும் கெடையாதே..."

"ஓ" ஆச்சரியப்படுவதுபோலக் கேட்டேன்.

"அதுக்கெல்லாம் சொரணை வேணுங்க". சொல்லி முடித்தார்.

"..."