திங்கள், 23 மே, 2011

சச்சின் தெண்டுல்கரின் லேட்டஸ்ட் மோசடி!












சச்சின் தெண்டுல்கர் ஒரு மாபெரும் நடிகர் என்று நோஐபிஎல் அதிபர் உள்பட நல்லோர் அனைவரும் வெகு காலம் முன்பே சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் தேச பக்தர்கள்தான் அதை ஏற்கவில்லை. அவர் தேசத்துக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்று கருதுபவர் என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சச்சின் தெண்டுல்கரே முன்வந்து தாம் ஒரு நடிகர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். நம்மிடம் இல்லை. வருமான வரித்துறையிடம்.

விளம்பரத்தில் நடிப்பதன் மூலமும் வேறு பல வகைகளிலும் 2002-03ம் வரிஆய்வு ஆண்டில் சச்சின் தெண்டுல்கருக்கு ரூ.18.கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இதுபோக அன்னியச் செலாவணி வகையில் ரூ.5.92 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. கலைஞர்களுக்கு அன்னியச் செலாவணி வருவாயில் அளிக்கப்படும் வரிவிலக்கை தமக்கும் வழங்க வேண்டும் என்று தெண்டுல்கர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. யாரோ "தேச விரோத" அதிகாரி தெண்டுல்கரின் மகிமை புரியாமல், அவர் நாட்டுக்கு ஆற்றும் சேவை தெரியாமல்,  வரிவிலக்கு வழங்க முடியாது என்று கூறிவிட்டாரம். சச்சின் ஒரு நடிகரோ கலைஞரோ அல்ல என்றும் கூறிவிட்டார்.

ஆனால் பாரத ரத்னாவுக்கு தகுதியுடையவராக உலகமே நம்பிக்கொண்டிருக்கும் சச்சின் தெண்டுல்கர், தாம் ஒரு நடிகர் என்பதை உறுதி செய்வதற்காக வருமான வரித் தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். தீர்ப்பாயத்துக்கு சச்சின் தெண்டுலகர் யார் என்பது தெரியும் போலும். அதனால் இப்போது சச்சினுக்கு வரிவிலக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் சச்சின் நாட்டுக்குச் செய்த சேவைக்கு அவருக்கு நாடு ஏதோ ஒருவகையில் திருப்பிச் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளும் ஒருவகையில் நாடகங்களே என்பதாலும், ஆட்டக்காரர்கள் அனைவரும் நடிகர்கள்தான் என்பதாலும் ஐபிஎல் போட்டி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி வருவாய்க்கும் ஏதாவது வரிவிலக்கு தரப்படுமா என்பதை நாடு ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாக வரிவிலக்கு தந்து ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கும் இதற்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லை என்று நாம் எத்தனை முறை கூறினாலும் மக்கள் என்ன நம்பவா போகிறார்கள்? ஏற்கெனவே சச்சின் மோசடிகளை எழுதிய நோஐபிஎல் அதிபர் வீட்டுக்கு ஆட்டோக்கள் வந்தன. அதெல்லாம் இன்னும் கண்முன் வந்துபோகத்தான் செய்கின்றன. இருந்தாலும் நெஞ்சுரம் மிக்க அவர் அதே செயலை மீண்டும் செய்யத் துணிந்திருக்கிறார். இருப்பினும் உள்ளுக்குள் அவருக்கும் எள்முனையளவு உதறல் இருக்கிறது என்பதையும் தேசபக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

..

.