திங்கள், 4 ஏப்ரல், 2011

வரி ஏய்ப்பவர்கள்தான் உலகச்சாம்பியன்!

1. பிசிசிஐ தொடங்கி இத்தனை ஆண்டு காலமும் எந்த விதமான வரியும் கட்டவில்லை. அவர்கள் சேவை செய்கிறார்களா?.

2. உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்த உள்கட்டமைப்பு பொருள்களுக்கு வரி விலக்குப் பெற்றது பிசிசிஐயும் ஐசிசியும்.  ஏனென்றால் அவையெல்லாம் லாப நோக்கமற்ற அமைப்புகளா?

3. சச்சின் வரி ஏய்ப்பு செய்தார். அவரிடம் வரிக் கட்டும் அளவுக்கு எந்தப் பணமும் இல்லையா?

4. இப்போது யுவராஜ் சிங் ஆயிரம் முறை முத்தமிட்டது ஒரிஜினல் உலகக் கோப்பைதான். அதாவது இந்த அணிக்கு வழங்க வேண்டிய உலகக் கோப்பைதான். அதுவும் 10 கிலோ தங்கம்.

5. சுங்க வரித்துறையிடம் பிடிபட்டதும் ஒரிஜினல் உலகக் கோப்பைதான். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது இரு உலகக் கோப்பைகளும் ஆஸ்திரேலியா அணியிடம் வழங்கப்பட்டது.  ஒரு கோப்பை வழக்கம்போல் துபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டுமே பத்து கிலோ தங்கம்தான்.

6. யுவராஜ் சிங் முத்தமிட்ட உலகக் கோப்பை, சுங்கவரி செலுத்தாமல் மும்பைக்கு வந்தது எப்படி?

7. ஐசிசியின் கூற்றுப்படி, வரி ஏய்க்கப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

8.  மன்மோகனும் கிலானியும் இருதரப்பு நட்புறவுக்காக மேற்கொண்ட பயணத்தை ஒரு நொடியில் அப்ரிதி உடைத்து எறிந்துவிட்டார். பாகிஸ்தானியர்களையும் முஸ்லிம்களையும் போல இந்தியர்களுக்குப் பெரிய மனது இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படி அவரை பிசிசிஐ என்ன செய்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.


9. சுவாரஸ்யம் இல்லாமல் தொடங்கிய ஒரு போட்டி உலக மகா பரபரப்பாக முடிந்திருக்கிறது.  அதன் மூலம் சில நாள்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐக்கு நல்ல வேட்டை. தோனி அணி இதற்கு முன்பு 20 ஓவர் ஒரு உலகக் கோப்பையை வென்ற போதுதான் ஐபிஎல் பிறந்தது. இப்போது பெரிய சாம்ராஜ்யமாகியிருக்கிறது. இருந்தாலும் உலகக் கோப்பை வெற்றிக்கும் ஐபிஎல் போட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்புவோம்.  மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதை தொடர்ந்து ரசிப்போம்.

10. நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் சில காலத்துக்கு மூடப்படுகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய நிலுவை, பஞ்சப்படி, போனஸ் ஆகியவை வழங்கப்பட்டுவிட்டன.
..
..

சனி, 2 ஏப்ரல், 2011

தமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்களே...

ஒரு வழியாக முக்கியக் கடவுள்களைத் தரிசனம் செய்துவிட்டு தமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்கள் இப்போது மும்பைக்கு வந்திருக்கிறார். பூமியில் வாழ்வதற்குச் சிரமப்பட்ட ஆயிரக்கணக்கானோரை பத்திரமாக மேலுலகத்துக்கு அனுப்பி வைத்த அவருடைய அரும்பெரும் பணிகளையும் சேவைகளையும் பாராட்டுவதற்காக மேதகு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களும் மும்பைக்கு வருகிறார்கள். எல்லை தாண்டிப் பயங்கரவாதத்தை அரங்கேற்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் கொட்டத்தை அடக்கிய ராஜபட்சவுக்கு இந்திய அரசு தரும் உயரிய மரியாதை இது.

எளவு முடிந்து அலரி மாளிகையில் கறிவிருந்து சாப்பிட்டுவிட்டு வந்தவர்களில் ஒரு பிரிவினர் இன்று தமிழினத் தலைவர் ராஜபட்சவின் வருகையை எதிர்த்து கூக்குரலிடுகிறார்கள். ராஜபட்சவுக்கு ராஜகம்பளம் விரிப்பவர்களுக்கு எடுபிடி வேலை செய்வதையும் இவர்கள் பார்டைம் ஜாப்பாக செய்து நாடாளுமன்ற, சட்டமன்றப் பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

 டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும்  தமிழ் மீனவர்களை சேவ் செய்யுங்கள் என்று புரட்சி செய்த கூட்டம், இந்தியா வாழ்க, தோனி வாழ்க என்று அதே டிவிட்டரிலும் பேக்புக்கிலும் வேறு வகையான சமூகப் புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறது. மும்பையில் நடக்கும் போரில் ராஜபட்சவை வரவைத்து தோற்கடிப்பதன் மூலம் பழி தீர்த்துக் கொள்ளப் போவதாக தன்மானத் தமிழினம் கர்ஜிக்கிறது.

அதுதான் போர் முடிந்து அமைதி ஏற்பட்டுவிட்டதே, இனி ஏன் கலகம் செய்கிறீர்கள் என்ற  தமிழ்நாட்டுத் தமிழர்களின் தத்துவங்களைக் கேட்க முடிகிறது. சொந்தக்காரர்கள் மோட்சம் அடைந்தபிறகு ஏற்பட்ட மயான அமைதி இது என்று ஈழத்திலிருந்து பைத்தியக்காரத்தனமான உளறல்களும்  ஒலிக்கத்தான் செய்கின்றன.

மலிங்காவின் பந்துகளை அடித்து நொறுக்குவதன் மூலம் மாடத்தில் இருக்கும் ராஜபட்சவை அழ வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தக் கணக்குப்படி பாகிஸ்தானுடனான போட்டியைவிட இலங்கையுடனான போட்டிதான் தமிழர்களுக்கு முக்கியம். இந்த இனப் பற்றும் தேசப் பற்றும் இருக்கும் வரையில் தமிழனை வேறு யாராலும் ஏமாற்ற முடியாது.
.
.
.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

முடிகிறது சச்சின் அத்தியாயம்!

இந்த உலகக் கோப்பை போட்டியே திட்டமிட்ட நாடகம். மோசடிகள் நிறைந்தது. பணம் குவிப்பதற்காக தேசபக்தியை விற்கிறார்கள் என பல்வேறு விமர்சனங்களை நோஐபிஎல் அதிபர் பலமுறை எழுதியிருக்கிறார். மேட்ச் ஃபிக்சிங் உள்பட பல்வேறு தருணங்களில் சச்சின் தெண்டுல்கர் துரோகம் செய்ததாகவும் பட்டியலிட்டிருக்கிறார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தோனி தலைமையிலான அணியை நையாண்டி செய்திருக்கிறார். எல்லா இந்திய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்திய அணி கோப்பையை வெல்லட்டும் என்று முதல்பக்கத்தில் பிரமாண்ட செய்தி எழுதும்போது, அந்த அளவுக்கு தேசபக்தி தமக்கு இல்லை என்பதையும் நோஐபிஎல் அதிபர் ஒப்புக்கொள்கிறார். பல்வேறு கட்டங்களில் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

2000 ஆண்டுக்குப் பிந்தைய மேட்ச்பிக்சிங் குற்றச்சாட்டுகளும், ஐபிஎல் போட்டிகளின் தொடக்கமுமே கிரிக்கெட் மூலம் பிதுங்கும் தேசபக்தி அவருக்கு இல்லாமல் போனதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. வெகுஜன புத்தியின் ஓட்டத்தில் செல்ல முடியவில்லையே என்கிற தீராத ஏக்கமும் கவலையும் அவருக்கு எப்போதுமே உண்டு என்பது தெரியவந்திருக்கிறது. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

இன்னொரு உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஆடுவார் என்பது சந்தேகமே.  என்னதான் தெண்டுல்கர் மீது பல்வேறு வகையான விமர்சனங்களை அள்ளி வீசினாலும், தனிப்பட்ட முறையில் இந்திய இளைஞர்களுக்கெல்லாம் அவர் ஒரு வழிகாட்டி என்பதை நோஐபிஎல் அதிபர் உள்ளிட்ட எவருமே மறுக்க மாட்டார்கள். ஒரு துறையிலேயே தம்மைத் தோய்த்துக் கொண்டு அதன் எல்லா உச்சங்களையும் எட்டிவிட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்கு சச்சினை விட்டால் வேறு ஆள்கிடையாது.

ஒரே துறையில் நீண்டகாலம் இருக்கும் அனைவருக்குமே ஒரு சலிப்புத் தன்மை வரும். அந்த சலிப்புத் தன்மைதான் திறமைக்கும் புகழுக்கும் எதிரி. அதே பேட், அதே பந்து, அதே மைதானம் என்றாலும் எந்தவித சலிப்புத்தன்மையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் புதிதாய்க் களமிறங்குவது போல இருப்பது சச்சினின் சுபாவம். எல்வாவிதமான ஷாட்களையும் அடிக்கும் திறன் கொண்ட அவர், இன்னமும்கூட பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார் என்பது அவரிமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று. இதே மாதிரியான சுபாவத்தை முதல்வர் கருணாநிதியிடமும் காண முடியும் - தயவு செய்து இந்த ஒப்பீட்டை நேர்மறையாகக் கொள்ளவும்.

எத்தனையோ முறை பார்ம் இல்லாமல் சிரமப்பட்டாலும்கூட, தமது இலக்கிலிருந்து விலகாத சச்சினின் மனஉறுதி போற்றுதலுக்குரியது. சச்சினுக்கு இதுதான் உச்சநிலை என்பதே கிடையாது. எல்லா உச்சங்களும் அவருக்கு இன்னொரு படியாகத்தான் இருந்திருக்கின்றன. 10 ஆயிரம் ரன்களைக் குவிக்க வேண்டும், 35 சதங்களை அடிக்க வேண்டும் என்று சாதனைகளை முறியடிப்பதுடனும், இலக்குகளை எட்டுவதுடனும் சச்சின் ஓய்ந்து இருந்துவிடவில்லை. சாதனைகளை முறியடிக்கும் அனைவருமே "அப்பாடா" என்று மூச்சிரைக்கத்தான் இலக்கை எட்டியிருக்கிறார்கள். கபில்தேவ், ஆலன் பார்டர் போன்றவர்களெல்லாம் சாதனைகளை முறியடிக்கும்போது "எல்லைக்கோட்டில் வந்து பொத்தென்று விழுந்தார்கள்" என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு மேல் அவர்களால் நகரவே முடியவில்லை. ஆனால் போகிறபோக்கில் சாதனைகளுக்கான இலக்குகளை கடந்து சென்றவர் சச்சின்.

சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு பிசிசிஐயின் கிரிக்கெட் அணி தனது அடையாளம் இழந்து போகப் போகிறது. கபில்தேவும் அசாருதீனும் போன பிறகு ஏற்பட்டதைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றிடம் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படும் என்பதைக் கணிக்க முடிகிறது.

அதி தீவிரமான கிரிக்கெட் ரசிகன் என்கிற முறையில் நோஐபிஎல் அதிபர் கூறிய சில குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன. நக்கல், நையாண்டி எல்லாம் உள்ளுக்குள் இன்னமும் உண்டு. ஆனாலும், உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஆடும் கடைசிப் போட்டி இதுதான் என்னும்போது இருவிழிகளிலும் கண்ணீர் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை....
...