ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உலகக் கோப்பை கவுன்டவுன் 20: குவார்ட்டர் கோயிந்தன் பதில்கள்

அதைப் படிக்கும் முன் இதைப் படிக்க: கீழ்க்காணும் பதில்கள் அனைத்தும் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் குவார்ட்டர் கோயிந்தன் அவர்கள் தனது அனுபவ அறிவைக் கொண்டு எழுதியவை... கேள்விகள் அனைத்தும் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் கேட்கும் அளவுக்குத் தரமானவை.

ஐசிசி தலைவர் தலைவர் யாரு?

சரத் பவார்.


பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் யாரு?
ஜக்மோகன் டால்மியா


ரெண்டு பேருக்கும் என்ன உறவு?

வாய்க்காத் தகராறு ஏகப்பட்டது... இவரு நல்லவரு... அவரு ரொம்ப நல்லவரு...


இப்ப என்ன அக்ரிமெண்ட்?

நான் திருடினத நீ காட்டிக் கொடுக்கக்கூடாது... நீ திருடினா நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்.  


கொல்கத்தாவுல என்ன பிரச்சனை?
ஆடுற தெரு கோணலா இருக்காம்.




எதனால இந்தப் பிரச்சனை?
ஐசிசி தலைவர் சரத் பவார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா.



கோணலான தெருவ சரி செய்ய முடியாதா?
அத சரி செய்யறதுக்குத்தான் நம்ம நிதியமைச்சர்லேருந்து பொதுப்பணித்துறை வரை எல்லாம் வரிஞ்சு கட்டியிருக்காங்க.


இவங்களுக்கு வேற வேலையே இல்லையா?
இது என்ன தமிழக மீனவர் பிரச்னையா... கண்டுக்காம விடுறதுக்கு... கிரிக்கெட்டுமா கிரிக்கெட்டு...


கடைசியா ஒரு கேள்வி... கொல்கத்தாவுல குத்தாட்டம் நடக்குமா நடக்காதா?
ஐசிசி தலைவர் சரத் பவார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா.







..
..

புதன், 19 ஜனவரி, 2011

வெறும் 10 டீம் விளையாடறதுக்கு பேரு உலகக் கோப்பையா?

"நான் ரேஸ்ல செகண்டா வந்தேன்"

"மொத்தம் எத்தனை பேர் ஓடினாங்க"

"ரெண்டு பேர்"

ஒரு விளம்பரத்தில் வந்து பிரபலமாகியிருக்கும் டயலாக் இது. யோசித்துப் பார்த்தால் கிரிக்கெட் உலகக் கோப்பையும் இது போலத்தான் தெரிகிறது. சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்ட ஐசிசி சர்வதேச கிரிக்கெட் அமைப்பில் இன்று வரைக்கும்10 கிரிக்கெட் வாரியங்கள் மட்டும்தான முழு உறுப்பினர் அந்தஸ்துடன் இருக்கின்றன. இதில் 9 நாடுகள்தான் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற நாடுகளாம். இந்த 9 நாடுகளில்தான் நாங்கள் முதலாவதாக வந்துவிட்டோம் என்று தற்போதைய பிசிசிஐ நிர்வாகம் பீற்றிக் கொண்டிருக்கிறது. 

இதைவிடவும் வேடிக்கை ஒன்று இருக்கிறது. 2007 உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியமான இரு போட்டிகளிலும் தோனி முட்டை போட்டதால், அணி வீட்டுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும் டிராவிட், தெண்டுல்கர், கங்குலி எல்லாம் ரெஸ்ட்  எடுத்தனர். கண்காட்சிப் போட்டி போல நடக்க இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. எல்லா நாடுகளும் இரண்டாந்தர அணிகளை அனுப்பியது. நமது பிசிசிஐயும் தோனி தலைமையில் சீனியர்கள் இல்லாத அணியைத்தான் அனுப்பியது. சோதா அணிகளை அடித்துவிட்டு கோப்பையை வாங்கியது தோனி அணி. அதை இன்று வரைக்கும் தோனி குழுவினர் பெருமையடித்துக் கொள்வதுதான் சகிக்க முடியவில்லை. ஒரு கண்காட்சிப் போட்டியில் ஜெயித்துவிட்டு உலகச் சாம்பியன் என்று கூறிக் கொள்வதற்கு இந்த அணிக்கு வெட்கமாக இல்லையா?

ஐசிசி உலகக் கோப்பையும் இப்படி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுதான். நாங்களும் உலகக் கோப்பை போட்டி நடத்துகிறோம் என்று வெறும் 10 அணிகள் மட்டும் 4 சோதா அணிகளைச் சேர்த்துக் கொண்டு ஆடுவதற்குப் பெயர் உலகக் கோப்பையா? கால்பந்தைப் போல 200 நாடுகளுக்கும் தகுதிச் சுற்று வைத்து அதிலிருந்து சில நாடுகளைத் தேர்வு செய்து இறுதிப் போட்டி நடத்தும் காலம் வந்தால்தான் ஐசிசி நடத்தும் போட்டியை உலகக் கோப்பை போட்டி என்று ஏற்றுக் கொள்ள முடியும். தற்போது அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களை முழு உறுப்பினர்களாக அங்கீகரித்த பிறகுதான் இதெல்லாம் சாத்தியம். அதன் பிறகு வெற்றிபெறும் அணியைத்தான் உலகச் சாம்பியன் என்று கூற முடியும். அதுவரைக்கும் இந்தக் கூத்துக்குப் பெயர் குண்டுச் சட்டிக் கோப்பைதானே?


..

செவ்வாய், 18 ஜனவரி, 2011

சாந்தி ஸ்வீட்ஸில் இருக்கிறது, சரத் பவாரிடம் இல்லையா?

திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அண்மையில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதாகச் செய்தி வந்திருக்கிறது. அவர்கள் வியாபாரம் நேரடியாகத் தெரிகிறது. வெறும் அல்வா மட்டுமே விற்று கட்டுக் கட்டாகப் பணம் சேர்க்க முடிகிறதென்றால், ரகசிய பேரங்களிலும் ரகசிய தொழிலிலும் கிரிக்கெட் வியாபாரத்திலும் எவ்வளவு பணம் கிடைக்கும்?

நம்மூர் அரசியல்வாதிகள் முதல் முக்கால்வாசி புலனாய்வு பத்திரிகையாளர்கள் வரை பேரம் பேசும் தொழிலைத்தான் செய்து வருகிறார்கள். அப்படிச் சேர்த்த பணம்தான் குட்டிக் குட்டி கரீபியன் தீவுகளிலுள்ள சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கள்ளப்பணத்தைப் பதுக்கி வைத்திருப்போர் பற்றி புலனாய்வு செய்வதற்கு தெஹல்கா முதல் உள்ளூர் வினவு வரை யாரும் தயாராக இல்லை. தெஹல்காவுக்கு தெரிந்தது ஜார்ஜ் பெர்னாண்டஸ், பங்காரு லட்சுமணன், மோடி மாதிரி ஆள்கள்தான். இப்போது ஜெஸிக்கா லால் கொலை வழக்கைப் பிடித்துக் கொண்டு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படியாவிட்டால் "நோ ஒன் கில்டு ஜெசிக்கா"  வெளியாகும். இல்லையென்றால் கதை வேறு மாதிரி திரும்பும். நம்மூர் புலனாய்வு பத்திரிகைகளை விட பேரம் பேச வேறு ஆள் உண்டா? குட் லக் தேஜ்பால்.

வெளிநாடுகளில் கள்ளக் கணக்கு வைத்திருக்கும் நம்மூர்காரர்கள் பற்றி அரசுக்கு நன்றாகவே தெரியும். இந்தா வைத்துக் கொள் என்று எத்தனையோ முறை ஜெர்மன்காரர்கள் நம்மிடம் கேட்டாகிவிட்டது. ஆனாலும் நம் ஆள்கள் அந்தப் பட்டியலைப் பெறுவதற்கு எந்த முனைப்பும் காட்டவில்லை. கிடைத்தால் மட்டும் என்ன செய்யப்போகிறார்கள். முதல் வேலையாக அதை தீ வைத்துக் கொளுத்துவார்கள்.  ஏனென்றால் பெரிய மேடம்தான் கள்ளக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலில் இருக்கும் முதல் ஆள்.

இந்த முறை அண்ணன் அசாஞ்சே கையில் பட்டியல் சிக்கியிருக்கிறது. அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த அண்ணன், இந்த முறை இந்திய அரசியல் வாதிகளுக்கு கடுக்காய் கொடுப்பார் என்று நம்புவோமாக. கிரிக்கெட் பிழைத்துப் போகட்டுமே.

..

திங்கள், 17 ஜனவரி, 2011

நொண்டியடிக்குது பிசிசிஐ அணி

சென்னையில் இருக்கும் நமக்கெல்லாம் எந்த வகையிலும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கவில்லை. முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஸ்ரீகாந்துக்கு மட்டும் சென்னையில் நிறைய பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்திருக்கிறது. பிசிசிஐ அணியைத் தேர்வு செய்திருப்பது பற்றி என்ன கேள்வி கேட்டாலும் பாசிட்டிவ் எனர்ஜியைப் பற்றித்தான் பேசுகிறார் அவர். இந்த அணி ஜெயிக்கும், வேறொன்றும் சொல்ல முடியாது என்கிறார். 

சரி அப்படி என்னதான் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது என்று பார்ப்போம். முதலில் எல்லா வடைகளையும் தாமே விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு உடம்பு சரியில்லையாம். நல்ல பாசிட்டிவ் எனர்ஜிதான். அப்புறம் பிரவீண் குமார் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லையாம். இதுதான் பாசிட்டிவ் எனர்ஜி நம்பர் டூ. அடுத்தது சேவக்கும், கம்பீரும் எப்ப வேணும்னாலும் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்குவாங்களாம். இதுதான் பாசிட்டிவ் எனர்ஜி நெம்பர் த்ரீ. அடுத்தது, எப்படி அடிபட்டாலும் தாமே கீப்பராக இருப்பேன் என்று வம்படியாக இருக்கும் தோனிதான் பாசிட்டிவ் எனர்ஜி நம்பர் நாலு. அப்புறம் என்னென்னே தெரியாத பியூஷ் சாவ்லா மர்மம்தான் பாசிட்டிவ் எனர்ஜி நெம்பர் அஞ்சு.

இந்த 5 பாசிட்டிவ் எனர்ஜிக்களைத்தான் ஸ்ரீகாந்த் சொல்கிறார் போலும். எப்படியும் ஜெயிக்கும்னு இவரு சொல்வதைப் பார்க்கும்போது, 2007-ம் ஆண்டு வீறு கொண்டு எழுந்து வெஸ்ட் இண்டீஸுக்கு சென்ற டிராவிட் தலைமையிலான பிசிசிஐ அணிதான் நினைவுக்கு வருகிறது. அந்த ஆண்டில் இந்தியா இருந்தது மிக எளிமையான பிரிவு. வங்கதேசம், இலங்கை, பெர்முடா அணிகள் மட்டும்தான் எதை வேண்டுமானலும் எத்தனை ரன் வித்தியாசத்தில் வேண்டுமானாலும் தோற்கடிக்கலாம். முதல் போட்டியிலேயே வங்கதேசத்திடம் மண்ணைக் கவ்வினார்கள். ரெண்டாவது போட்டியில் பெர்முடா டவுசரைக் கிழித்தார்கள். மூன்றாவது போட்டியில் தோற்றால் வீட்டுக்கு வந்துவிடலாம் என்கிற நிலை இருந்தபோது இலங்கையிடம் வேட்டியைப் பறிகொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.


தோற்றுப் போன இரண்டு போட்டிகளிலும் முட்டை ரன்கள் எடுத்த ஒரு வீரர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? இன்று பாசிட்டிவ் எனர்ஜிகளுக்குத் தலைமையேற்று கோடிகளைக் குவிக்கும் தோனிதான் அவர். அன்று முட்டைகளை எடுத்ததற்காக கிரிக்கெட் தேச பக்தர்கள் ஒன்று திரண்டு அவரது வீட்டை அடித்து நொறுக்கினார்கள். செருப்பு மாலை போட்டார்கள். படங்களைக் கொளுத்தினார்கள். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார்.


இந்த முறை என்னுடைய வேண்டுகோள் ஒன்றேயொன்றுதான். இனிமேல் செருப்பு மாலைகளுக்கு பேட்டா செருப்புகளையோ, ரீபோக் ஷூக்களையோ மட்டும் பயன்படுத்துங்கள்.
.
.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

சென்னை ரசிகர்கள் பாவம்

தமிழக கலகப் பேரவையில் மம்மி கட்சியினர் கடந்த சில நாள்களாக வெளிநடப்பு செய்தனர். கவர்னரை எதிர்த்தனர், அம்பலக்காரரையும் எதிர்த்தனர். டாஸ்மாக் கழகத்தை எதிர்த்து ரொம்ப ஆவேசமாகப் பேசினர். 9 பேரை வீட்டுக் அனுப்பியதும் போட்டிக் கூட்டம் நடத்திப் பார்த்தனர். எந்தப் பப்பும் வேகவில்லை. இதற்கு மேல் வெளிநடப்பு பூச்சாண்டி காட்டினால் பேட்டா கட்டாகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ, வேறு வழியே இல்லாமல் உள்நடப்பு செய்யும் போராட்டத்தில் குதித்தனர்.

காலையிலிருந்தே எப்படியாவது உள்ளே விட்டுவிடுங்கள் என அஞ்சாங்கிளாஸ் பையனைப் போல நாட்டாமையிடம் கெஞ்சினர். நாட்டாமை அம்பலக்காரரைப் பார்த்தார். அம்பலக்காரர் சினிமா வசனம் பேசினார். இனி செய்தால் தொலைத்துவிடுவேன் என்பது போலப் பேசி, காதைத் திருகி, "மறப்போம் மன்னிப்போம்" என்றார். சுற்றியிருந்தவர்கள் பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல எல்லா விஷயத்திலும் ஆவேசம் காட்டும் மம்மி அணி, இந்தமுறை இப்படி தடாலடியாக காலில் விழுந்தது ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை அம்பலக்காரரை வீழ்த்தும் வியூகம் ஏதாவது வைத்திருக்கிறார்களோ என்னவோ?

கலகப் பேரவை தொடங்கிய நாளில் இருந்து  நாலைந்து நாட்களாக சினிமா பார்ப்பது போல நாட்டு நடப்பு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது. இப்போது மம்மி கட்சியினர் வீழ்ந்துவிட்டதால் சப்பென்றாகி விட்டது. சரி போகட்டும் எப்படியும் ஏப்ரல் மேயில் தேர்தல் வரப்போகிறது என்பதால் இந்த கேளிக்கைக் காட்சிகள் இனி ஊருக்கு ஊர் நடக்கும். கூடுதல் சுவாரஸ்யத்துடன் கண்டுகளிக்கலாம்.

அந்த வகையில் சென்னை பொது ஜனத்துக்கு ரெட்டை ஜாக்பாட். ஆதித்யா டிவியும், சிரிப்பொலி டிவியும் ஒரேநரத்தில் பார்ப்பது போல, இந்த முறை தேர்தலும், ஐபிஎல்லும் ஒரே நேரத்தில் நடந்தாலும் நடக்கலாம். ரெண்டு காமெடிகளை ஒரே நேரத்தில் ரசிக்கலாம். ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச சேவை செய்வதற்காக நோஐபிஎல் தொடங்கியது போல தேர்தலுக்கு எதிராக நோதேர்தல் என்று பிளாக் எழுதும்படி பல்வேறு தோழர்களிடமிருந்தும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஆனால், நோதேர்தல் தொடங்கினால், நம்மை நக்சலைட்டுகள் என்று பிடித்துப் போடுவார்கள் என்பதால், கொஞ்சம் அடக்கிவாசிக்கும்படியும் வேறு சில நலமிவிரும்பிகள் சொல்கிறார்கள்.

அதை விடுங்கள், நமக்கு ரெண்டு காமெடிகள் காத்திருக்கின்றன. ஒருவேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போல ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், இந்த முறை சென்னை போட்டிகளெல்லாம் வேறு இடத்துக்கு மாற்றப்படக்கூடும். அது தேசபக்தர்களுக்கு ஏமாற்றமாக அமையக்கூடும். இந்த ஏமாற்றத்தை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்பதுதான் கோடானுகோடி தேசபக்தர்கள் பதற்றத்துடன் முன்வைத்திருக்கும் கேள்வி.
..



திங்கள், 10 ஜனவரி, 2011

தோனி அணி தோற்க வேண்டும்; இந்தியா ஜெயிக்க வேண்டும்

ஒரிசா, சத்தீஸ்கர், அசாம், உத்தரகண்ட், பிகார், மேற்கு வங்கம், தமிழகத்தின் தேனி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தெரியும் இந்தியா வேறு, இந்தியா என்கிற பெயரில் ஆடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் அணியின் முகம் வேறு. மேற்சொன்ன இடங்களில் இந்தியா ஒரு மூன்றாந்தர நாடு. வறுமையிலும் பஞ்சத்திலும் வாடும் நாடு. கல்வி அறிவில்லாத நாடு. உணவுக்காகவும், வேலைக்காகவும் வேறு பகுதிகளைத் தேடும் நாடு. இலவசங்களுக்காக வரிசையில் நிற்கும் நாடு. 

ஆனால், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிரிக்கெட் அணியின் இந்தியா, வளர்ச்சியடைந்த நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படும், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கே உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நாடு. கிரிக்கெட் உலகில் எதேச்சதிகாரப் போக்கு கொண்ட நாடு. 

கடந்த 20 ஆண்டுகளில் மேம்பாலங்களாகவும், குட்டிக் கார்களாகவும், மெட்ரோ ரயில்களாகவும் இந்தியாவின் பொருளாதார வீக்கம் பெரிதாகிக் கொண்டே போவதுபோல, கிரிக்கெட் அணியின் செல்வாக்கும், அச்சுறுத்தும் போக்கும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. 

உண்மையைச் சொன்னால், இந்தியக் கிரிக்கெட் அணி நினைத்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம், அல்லது நிறுத்தலாம், மாற்றி அமைக்கலாம். எந்த அணியை வேண்டுமானலும் நசுக்கலாம். மேலே கொண்டுவரலாம். அந்த அளவுக்கு இந்திய மக்களின் தலைகளையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் சந்தைப்படுத்தி பிசிசிஐ செல்வாக்குப் பெற்று வருகிறது.

2ஜி அலைக்கற்றை இந்தியாவின் வளம் என்றால், இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வம் மட்டும் தேசத்தின் சொத்து இல்லையா? 2ஜி, 3ஜிக்களை எல்லாம் ஏலம்விட்டு ராயல்டி கேட்கும் இந்திய அரசு, எந்த ராயல்டியும் இல்லாமல் ஒரு கூட்டம் இந்தியாவில் இந்தியாவின் வளத்தை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை எப்படி அனுமதிக்கிறது? நம்மையெல்லாம் விற்கிறார்கள், அதுவும் தனியாருக்கு, அப்படித்தானே?

இப்படிக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தாரை வார்த்துத் தரப்பட்டகிரிக்கெட், இப்போதெல்லாம் உண்மையாக ஆடப்படுவதில்லை; ஸ்கிரிப்ட் போல எழுதப்படுகிறது என்பதுதான் நிஜம்.

கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தோல்வியுற்ற போதும், ஐபிஎல் போட்டிகளில் நடந்த மோசடிகள் வெளியானபோதும், இந்திய கிரிக்கெட், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருந்து விடுதலையாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையாவது அது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். தோனி அணி தோற்பதன் மூலம் கிரிக்கெட்டும், பின்தங்கிய இந்தியாவும் காப்பாற்றப்படட்டும்.
.
.
.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 41: உன்பேரைச் சொல்லும்போதே...

ஐயா, வணக்கமுங்க

ம் ம் வணக்கம் வணக்கம்... என்ன விஷயம்?

ஐயா உங்கள எங்கேய பாத்த மாதிரியிருக்கே ஏதாவது பேங்ல போஸ்டாபீஸ்ல வேலை பாக்கிறீங்களோ

ஏய் என்னப் பாத்து யாருன்னு கேக்கறியா நீ, என்னப்போல ஜெயிக்கத் தெரியுமா? வேறெவனாவது ஜெயிச்சிருக்கானா?

ஐயா எதிலங்கையா? கோலி ஆட்டமா, இல்ல பல்லங்குளியா, இல்ல பம்பரம் கிம்பரம் விட்டீங்களா?

என்ன நக்கலா? சட்டையக் கழற்றிச் சுத்தினத நீ பாக்கலையா? சின்னப் புள்ளைக்கு கூடத் தெரியமேய்யா...

அட காக்கா கக்கா போயிடுச்சா... ஏன்யா சட்டையக் கழட்டுனீங்க...

ரொம்பப் பொறுமையச் சோதிக்காத...  ஒருகாலத்தில நான்தான்யா கேப்டன் ...

ஓ நீங்கதானா அது...

ம்... இப்ப புரியுதா...

புரியுதுய்யா... அது சரிய்யா, இப்ப இருக்கற கேப்டன் ஏன் எந்தக் கூட்டணிக்கும் போக மாட்டேங்கறார்... படமும் பாக்க சகிக்கல... நீங்க ஏதாவது சொல்லக்கூடாதா...

ஏய் ஏய் ஏய் நான் கிரிக்கெட் டீம் கேப்டன்யா...

கிரிக்கெட் டீமா...  ஐயா இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல... பேசாமா உங்க பேரச் சொல்லிடுங்கய்யா...

நான்தாம்பா பெங்கால் டைகர்....

ஆ... அய்யோ... என்ன கொடுமை.... நீங்களா... ஐபிஎல் நாடகத்துல வேசம் கிடைக்காமப் போச்சாமே... பேசாமா... எங்க தமிழ்நாட்டு கேப்டன் மாதிரி களத்தில குதிச்சிருங்க... மம்தா, பட்டாச்சார்யாவுக்கெல்லாம் சூடு கொடுக்கலாம்....


வெள்ளி, 7 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 43: அம்பாந்தோட்டை ராஜபட்ச மைதானம்

கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடத்துவதற்கென்றே இலங்கையில் இரண்டு மைதானங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டு சுனாமியில் பேரழிவுக்கு உள்ளான இந்த நகரம் வளர்ச்சியில் படுமந்தம். இந்தப் பகுதியில் இருந்துதான் அதிபர் ராஜபட்ச நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதால், இப்போது இந்த நகரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவுக்கு ஆணியடிக்கும் சீனாவின் முயற்சியும் அம்பாந்தோட்டையில்தான் தொடங்குகிறது. அம்பாந்தோட்டையில் சீனா கட்டிவரும் பிரமாண்டமான துறைமுகம் பற்றியும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயம் பற்றியும்  ஏற்கெனவே பல பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாகப் பிரிந்து எழுதிவிட்டன. இப்போது இந்த நகரத்தை பெரு நகரமாக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி.  சுமார் 35 ஆயிரம் பேர் அமரும் வகையில் உருவாகும் இந்த மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒருநாள் போட்டிகளும், டெஸ்ட் போட்டிகளும் உலகக் கோப்பை போட்டிதான் அதிகாரப்பூர்வமாக நடக்க இருக்கிறது. மைதானத்துக்கு அதிபர் ராஜபட்சவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

உலகக் கோப்பை போட்டிகள் முடிந்தபிறகு, 2018-ம் ஆண்டில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளும் அம்பாந்தோட்டையில்தான் நடக்க இருக்கின்றன.

எந்த வசதியுமே இல்லாத அம்பாந்தோட்டைக்கு இலங்கையும் சீனாவும் இவ்வளவு முக்கியத் துவம் கொடுப்பது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், எல்லோரும் கூறுவது போல இந்தியாவுக்குச் செக் வைப்பதற்கான முயற்சிதான் இது என்கிற சந்தேகம் வலுத்து வருவதையும் மறுக்க முடியவில்லை.
.

வியாழன், 6 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 44: ரூ.600 கோடிக்கு இன்சூரன்ஸ்

உலகக் கோப்பையை ஒளிபரப்பும் உரிமையை குத்தகைக்கு எடுத்திருக்கும் இஎஸ்பிஎன் நிறுவனத்துக்கு பயம் வந்துவிட்டது. போட்டிக்கு ஏதேனும் பங்கம் வந்துவிட்டால், செய்த செலவும் போய், வர வேண்டிய லாபமும் வராமல் போய்விடுமே. வேறு வழியே இல்லாமல் ரூ.600 கோடிக்கு காப்பீடு கேட்டு அலைந்தது. இப்போது நியூ இந்தியா அஷ்ஷுரன்ஸ் நிறுவனம் காப்பீடு கொடுக்க முன்வந்திருக்கிறது.

பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. மும்பை பயங்கரவாதத் தாக்குதலால் போட்டிகள் பாதிக்கப்பட்டதும், சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ரத்தானதும் இஎஸ்பிஎன் கண்முன் வந்து போகாமலா இருக்கும். அதுவும் இந்தியாவின் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் குண்டு வைக்கும் அளவுக்கு நாட்டில் ஜனநாயகம் தளைத்து ஓங்கும் நிலையில் தாக்குதல் நடத்துவது ஒன்றும் முடியாத காரியமில்லையே. அதனால்தான், எதையும் இழந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் காப்பீடு செய்யும் முடிவுக்கு இஎஸ்பின் வந்திருக்கிறது.

இதுபோக, போட்டிகள் ரத்தானால், இஎஸ்பின் நிறுவனத்துக்கு பிசிசிஐ சார்பிலும் போட்டி ஒன்றுக்கு ஆறேழு கோடிகள் இழப்பீடு கிடைக்குமாம். பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் விஷேச சலுகையும் உண்டு.

உண்மையில் பிசிசிஐ இருக்கும்போது, இந்த மாதிரி இன்சூரன்ஸ் எல்லாம் தேவையேயில்லை. என்ன தாக்குதல் நடந்தாலும் நமது வாரியம் போட்டியை மட்டும் ரத்து செய்யவே செய்யாது. உதாரணம் வேண்டுமா? மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்த போது இங்கிலாந்துக்காரர்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடிக் கொண்டிருந்தார்கள். பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாட்டுக்குப் பறந்துவிட்டார்கள். 

விட்டு விடுமா நமது வாரியம். அவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிவந்து சென்னையில் டெஸ்ட் போட்டியை ஆட வைத்தார்கள். 2-வது ஐபிஎல் போட்டிகள் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடக்க முடியாமல் போனபோது தென்னாப்பிரிக்காவுக்கு சாமர்த்தியமாக நகர்த்தினார்கள். இது போதாதா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் திறமையைப் பறைசாற்ற? போட்டிகள் ரத்தாகும் என இன்னமுமா இஎஸ்பிஎன் பயப்படவேண்டும்?
.
.

புதன், 5 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 45: ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பில்லை?

உலகக் கோப்பை உத்தேச அணியில் ஸ்ரீசாந்த் இருக்கிறார். தற்போது டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலும் இவருக்கு மவுசு கூடியிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 5விக்கெட்டுகளை அள்ளி தென்னாப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தார். ஆனால், டிரஸ்ஸில் ரூமில் ஸ்ரீசாந்துக்கு அவ்வளவு மரியாதை இல்லை. ஆளாளுக்கு அவரை ஏளனம் செய்கிறார்கள்.

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, "ஒரு ஓவரை 6நிமிடங்கள் வீசினால் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று தோனி எச்சரித்திருக்கிறார். தோனியின் திட்டால் நொந்து போயியிருந்த ஸ்ரீசாந்த் முதல் இன்னிங்ஸில் அருமையாகப் பந்துவீசியதும் தோனியிடம் இருந்து பாராட்டைப் பெறலாம் என்று நினைத்தார். ஊகூம். பழைய மரியாதையே தொடர்ந்தது.

இந்த லட்சணத்தில் களத்தில் ஸ்மித்தின் அம்மாவைக் கெட்டவார்த்தையில் திட்டியதாக ஸ்ரீசாந்த் மீது புகார் வந்தது. உன் வேலையைப் பார் என்று ஸ்மித் கூறிவிட்டதாகவும், ஆனாலும் திட்டுவதை ஸ்ரீசாந்த் விடவில்லை எனவும் கூறுகிறார்கள்.

4-ம் நாள் ஆட்டத்தில் இன்னொரு கூத்து நடந்தது. நம்ம ஸ்ரீசாந்த் குழந்தைபோல கேவிக் கேவி அழுதார். எதற்கென்று கேட்கிறீர்களா? இவரது திட்டியதைப் பொறுக்க மாட்டாமல் பவுன்டரியில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த இவர் மீது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் காலி வாட்டர் பாட்டிகளையும் இன்னபிற சங்கதிகளையும் வீசியிருக்கிறார்கள்.

வழக்கம் போல "அவன் அடிச்சிட்டான் சார்" என் அம்பயரிடம் ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார். அப்போது சீனுக்கு வந்த தோனி, ஸ்ரீசாந்த்தின் புகாரைக் கேட்டு கேலியாகச் சிரித்திருக்கிறார். இதெல்லாம் கேமராவில் பதிவாகியிருக்கிறது. நம்மூர் 24 மணி நேர நகைச்சுவைச் செய்திச் சேனல்கள் இதை ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தன. தோனிக்கும் ஸ்ரீசாந்துக்கும் பகை என்பதுபோல.

ஸ்ரீசாந்துக்கு நாம் கூறும் அறிவுரை இதுதான். உத்தேச அணியில் இருக்கும் யுவராஜ் போன்றோருக்கே உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. இப்போது தோனியைப் பகைத்துக் கொள்வது சரியில்லை. காலம் வரும்போது ஒரு கை பார்க்கலாம். அதைவிட்டுவிட்டு கதறி அழுது, உமது வாய்ப்பை நீரே கெடுத்துக்கொள்ள வேண்டுமா?

.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 46: சோயப் மாலிக் அவுட்

சோயப் மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் அணிக்குள் சண்டை ஏற்பட்டதைத் தவிர அவர் பெரிய சர்ச்சையில் ஏதும் சிக்கவில்லை. ஸ்பாட் ஃபிக்சிங் போன்ற ஊழல் புகார்களும் அவர் மீது இல்லை. என்ன காரணத்தாலோ இந்த முன்னாள் கேப்டன் கழற்றி விடப்பட்டிருக்கிறார். இன்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. பேசாமால் லங்காஷையர் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் அவர் கவுன்டி கிரிக்கெட்டுக்குப் போய்விடலாம். அல்லது டென்னிஸ் மைதானத்தில் சானியாவுக்கு தண்ணீர், டவல் எடுத்துக் கொடுக்கலாம்.

சோயப்புடன் லெக் ஸ்பின்னர் கனேரியாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோ சொல்லிவிட்டது. ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அதனால், உத்தேசப் பட்டியலில் அவரது பெயர் இல்லாமல் போனது பெரிய ஆச்சரியமில்லை. டெஸ்ட் தொடரில் வாய்ப்புக் கிடைக்கிறதா என்று காத்திருந்து பார்க்கலாம்.

ஸ்பாட் ஃபிக்சிங் முறைகேட்டில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் எதிர்பார்த்தபடியே அணியில் இடம்பெறவில்லை. ஆனால், ஸ்பாட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுக்கு ஆளான விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலைப் பார்த்தால், வரும் உலகக் கோப்பைப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை சாஹித் அஃப்ரிடிதான் வழிநடத்துவார் போலத் தெரிகிறது. எனினும் விரைவில் வர இருக்கும் நியூசிலாந்து தொடரில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துத்தான் மீதியைச் சொல்ல முடியும்

தற்போதைய உத்தேச அணி:

சாஹித் அப்ரிதி, முகமது ஹபீஸ், அகமது சேசாத், நசீர் ஜம்ஷெட், ஆசாத் அலி, உமர் அக்மல், யூனிஸ் கான், முகமது யூசுப், மிஸ்பா உல் கக், அசார் அலி, ஆசாத் சாபிக், நவீத் யாசின், கம்ரன் அக்மல், சர்ப்ராஸ் அகமது, சல்மான் அகமது, அப்துல் ரசாக், யாசர் அராபத், ரான் நவீன்௱உல் ஹசன், அப்துல் ரஹ்மான், சயீத் அஜ்மல், யாசீர் ஷா, ஜுல்பிகர் பாப்ர், சோயப் அக்தர், உமர் குல், வஹாப் ரியாஸ், சோஹைல் தன்வீர், தன்வீர் அகமது, ஜூனைத் கான், ஐசாஸ் சீமா, ஆசாத் அலி.
.

திங்கள், 3 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 47 - கிரிக்கெட்டும் தேசப் பற்றும்

இந்திய கிரிக்கெட் அணியையும் வாரியத்தையும் குறைகூறினால், தேச விரோதி என்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கொஞ்சம் கரிசனப் பார்வை பார்த்து விட்டால், பயங்கரவாதிகளுக்கு உதவுகிறாயா என அடிக்க வருகிறார்கள். சிலர் வாடா, போடா என உச்ச மரியாதையான சொற்களை பின்னூட்டத்தில் பயன்படுத்துகிறார்கள்.


எல்லோரையும் போலவே நோஐபிஎல் என்கிற பன்னாட்டு அமைப்பின் அதிபருக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம் போன்றவை எல்லாம் இருக்கிறது. இருந்தாலும் தேவையற்ற கருத்துகளுக்கு அவர் பொங்கி எழுவதில்லை.

அவருக்கும் நாட்டுப் பற்று இருக்கிறது. அவரும் "ஜனகன" பாடி மரியாதை செய்பவர்தான். ஆனால், இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் சச்சினுக்கும் தோனிக்கும் இந்தியாவில் மட்டையெடுக்கும் இன்ன பிற கடவுளர்களுக்கும் "போற்றி போற்றி" சொல்லித்தான் அவரது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை என பிபிசி தமிழோசை வாயிலாக பலமுறை அவர் கூறியிருக்கிறார்.


கடந்த பல ஆண்டுகளாக  நோஐபிஎல் அதிபர் வலியுறுத்திவரும் விஷயம் இதுதான். எல்லோரும் நாட்டை நேசியுங்கள். ஒழுங்காக வரி செலுத்துங்கள். சட்டத்தை மதியுங்கள். குறைந்தபட்சம் டிராபிக் சிக்னலையாவது மதியுங்கள். நல்ல முறையில் கிரிக்கெட் பாருங்கள். ரசியுங்கள். ஆனால், நாட்டையும் கிரிக்கெட்டையும் சேர்த்துக் கொண்டாடாதீர்கள். தந்திர வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.


நமது கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ, ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதன் கணக்கு வழக்குகளை சாதாரண இந்தியக் குடிமகன் யாரும் வாங்கிப் பார்க்க முடியாது. அதன் சட்டதிட்டங்களை அதுவே வகுத்துக் கொள்ளும். எந்த வகையிலும் அது அரசுடன் தொடர்புடையது அல்ல. அவர்களைத் தவிர வேறு யாரும் கிரிக்கெட்டை வைத்து காசு பார்த்து விடக்கூடாது என்பதற்காக எத்தனையோ வகையான நேர்மையற்ற செயல்களை பிசிசிஐ செய்திருக்கிறது.


ஆக, நோஐபிஎல் அதிபர் எந்தக் காலத்திலும் ஐபிஎல் அதிபர் போலச் செயல்பட முடியாது. அதே நேர்ததில் அவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எந்த வகையான வாய்க்காத் தகராறும் இதுவரை இல்லை. வேறு நாட்டு அணியை பாராட்டி எழுதியதற்காக அவர்கள் நோஐபிஎல் அதிபருக்கு இதுவரை சீனி மிட்டாய்கூட வாங்கித் தரவில்லை.


இந்தக் களத்தின் நோக்கம் கிரிக்கெட்டை நேர்மையாக விமர்சிப்பது. ஒரு அதிதீவிர கிரிக்கெட் ஆட்டக்காரர், ரசிகர் என்பதால் அப்படி விமர்சிப்பதற்கான முழு உரிமையும் நோஐபிஎல் அதிபருக்கு உள்ளது. நமது பாட்டுக்கு எதிர்பாட்டுப் பாடும் உரிமையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. திறந்து கிடக்கும் கமென்ட் பகுதியில் நாட்டு மக்கள் தங்களது மனதில் உள்ள எதை வேண்டுமானாலும் கொட்டலாம்.



ஞாயிறு, 2 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 48 - கிரிக்கெட் கஞ்சர்

20-20 யுகத்தில் ரன்னே எடுக்காத ஓவர் என்பது மிகவும் அரிது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருநாள் போட்டிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஓவர்கள் வரை ரன் எடுக்காத ஓவர்களாக இருந்திருக்கின்றன. கபில்தேவ், மெக்டர்மாட், அம்புரோஸ், வால்ஷ், ஆலன் டொனால்டு போன்றவர்கள் தொடக்க ஓவர்களை மெய்டன்கள் மாற்றுவதல் வல்லவர்கள். 1996-க்கு முன்பு இலங்கையின் அதிரடித் தொடக்க உத்தி அறிமுகமாவதற்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஓவர்கள் சில மெய்டன்களாக ஆவது கிட்டத்தட்ட ஒரு வழக்கம் போலவே இருந்தது.


1963-1964 ல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் நம்மூர்க்காரர் ஒருவர் தொடர்ந்து 21 ஓவர்களை மெய்டன்களாக வீசியிருக்கிறார். ரன்னே கொடுக்காமல் அவர் தொடர்ந்து வீசிய பந்துகளின் எண்ணிக்கை 131. 

கிரிக்கெட் உலகில் கஞ்சர் எனப் பெயரெடுத்த அந்த வீரர் நட்கர்னி. மகராஷ்டிரத்தைச் சேர்ந்த அவர் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் வல்லவர். மேலே சொன்ன அந்த இன்னிங்ஸில் மட்டும் 27 மெய்டன் ஓவர்களை நட்கர்னி வீசியிருக்கிறார். அதே இன்னிங்ஸில் மற்றொரு இந்தியரான போர்டே 30 மெய்டன்களை வீசியிருக்கிறார். அந்த அளவுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் நிதானமாக ஆடியிருக்கிறார்கள். டிராவான அந்த மேட்சின் முதல் இன்னிங்ஸில்தான் இந்தக் கூத்து நடந்திருக்கிறது.

அந்த பவுலிங் விவரம்


Bowling O M R W Econ


VB Ranjane 16 2 46 1 2.87


ML Jaisimha 7 3 16 0 2.28


CG Borde 67.4 30 88 5 1.30


SA Durani 43 13 97 3 2.25


RG Nadkarni 32 27 5 0 0.15


AG Kripal Singh 25 10 52 1 2.08



..

சனி, 1 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 49: பாகிஸ்தானுக்குத் துரோகம்

1992 உலகக் கோப்பை மியான்தத் - கிரன்மோரே
பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்பார்கள். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்பார்கள். நாட்டு நடப்பைப் பார்க்கும்போது அது உண்மை என்பது தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் ஏமாளி, அப்பாவி முகத்தையும் நாம் பார்க்க வேண்டும். 

அதிபரும், பிரதமரும், நாடாளுமன்றமும் இருக்கும் ஒரு நாட்டில் இன்னொரு நாடு உளவு வேலை செய்தால் சம்பந்தப்பட்ட நாடு என்ன செய்ய வேண்டும்? உளவாளியைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட நாட்டைக் கூப்பிட்டு "ஜாக்கிரதையாக இரு" எனக் கண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் எதிர்ப்பாவது தெரிவிக்க வேண்டும் இல்லையா? 


ஆனால் பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளை ஏவுகணை வீசி அழித்துக் கொண்டிருப்பது அமெரிக்க உளவுத்துறை. அந்த உளவு வேலைக்கு காவல் வேலை பார்ப்பது பாகிஸ்தான் அரசு. எப்படி இருக்கிறது பாருங்கள் கதை. சொந்த நாட்டில் சொந்த மக்களை குண்டு போட்டுக் கொல்வோருக்கு இந்த நாடு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. இதுதான் பாகிஸ்தானின் லட்சணம். இந்த நாட்டை பயங்கரவாத நாடு என்று சொல்லி நமது கோபத்தைக் காட்டுவதைவிட, கொஞ்சம் கரிசனப் பார்வை பார்த்தால் அது ஒரு கிறுக்குத்தனமான நாடு என்பது புரியும்.



அந்த நாட்டுக் கிரிக்கெட் வாரியத்துக்கும் இந்த ஏமாளி, அப்பாவிப் பட்டங்கள் அப்படியே பொருந்தும். 2009 மார்ச்சில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வந்த பஸ்ஸை நோக்கி  பயங்கரவாதிகள் சுட்டு ஐந்தாறு பாதுகாப்பு போலீஸாரைக் கொன்றனர். இலங்கை வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். அன்றிலிருந்து இந்தப் பயங்கரவாத முத்திரை கிரிக்கெட்டுக்கும் குத்தப்பட்டது. ஆஸ்திரேலியா முதல் வங்கதேசம், ஜிம்பாப்வே வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடுக்காய் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு நாடு வந்து ஆடும் என்ற எதிர்பார்ப்பில்  இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடந்ததால், அங்கு நடக்க இருந்த உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தையும் இந்தியா பறித்துக் கொண்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை கெஞ்சிய பிறகும் "இதுதான் முடிவு, முடிந்ததைப் பார்த்துக்கொள்" என்ற ரீதியில் தன்னிச்சையான முடிவுகளை ஐசிசி மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்தது. இதை நம்பிக் கடன் வாங்கி விட்டோம், நாட்டின் பெயர் கெட்டுப் போகும், வேண்டுமென்றால் துபை போன்ற வேறெங்காவது பாகிஸ்தான் பேனரில் போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கதறிப் பார்த்தது. ஆனால், இந்தியா அந்த வாரியத்தை ஒரு "செத்த எலியைப்" போலத்தான் பாவித்தது.





அடுத்து ஐபிஎல். மும்பை பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்கக்கூடாது என இந்தியா என்ற முகத்திரையை அணிந்து கொண்டு பிசிசிஐ அழுகுணி ஆட்டம் ஆடியது. அதையும் அந்த கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது.  இப்போது சூதாட்ட சர்ச்சைக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ற ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. யார் யாரெல்லாம் அணியில் இருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் தடைக் காலத்தில் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. இப்படி எல்லா வகையிலும் ஒரு கிரிக்கெட் அணி நொந்து போனபோது, இந்தியக் கிரிக்கெட் வாரியம் எந்த வகையிலும் ஆதரவுக் கரம் நீட்டவில்லை என்பதுடன் போதிய அளவு தொந்தரவுதான் கொடுத்தது. அந்த நாட்டு கிரிக்கெட் எப்படிப் போனாலும் பிசிசிஐக்குக் கவலையில்லை. எப்போதாவது அந்த நாட்டு அணியுடன் ஆடினால், ஏதோ எதிரியுடன் போர் நடப்பதைப் போல இந்தியர்கள் எல்லாம் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.  அப்போது சச்சினும், தோனியும் பல்லிளிக்கும் விளம்பரங்களுக்கான வருவாய் கொட்டும். அது மட்டும்தான் பிசிசிஐக்கு வேண்டும். அதைக் கொண்டுதானே மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை மிரட்ட முடியும்.

.