செவ்வாய், 11 ஜனவரி, 2011

சென்னை ரசிகர்கள் பாவம்

தமிழக கலகப் பேரவையில் மம்மி கட்சியினர் கடந்த சில நாள்களாக வெளிநடப்பு செய்தனர். கவர்னரை எதிர்த்தனர், அம்பலக்காரரையும் எதிர்த்தனர். டாஸ்மாக் கழகத்தை எதிர்த்து ரொம்ப ஆவேசமாகப் பேசினர். 9 பேரை வீட்டுக் அனுப்பியதும் போட்டிக் கூட்டம் நடத்திப் பார்த்தனர். எந்தப் பப்பும் வேகவில்லை. இதற்கு மேல் வெளிநடப்பு பூச்சாண்டி காட்டினால் பேட்டா கட்டாகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ, வேறு வழியே இல்லாமல் உள்நடப்பு செய்யும் போராட்டத்தில் குதித்தனர்.

காலையிலிருந்தே எப்படியாவது உள்ளே விட்டுவிடுங்கள் என அஞ்சாங்கிளாஸ் பையனைப் போல நாட்டாமையிடம் கெஞ்சினர். நாட்டாமை அம்பலக்காரரைப் பார்த்தார். அம்பலக்காரர் சினிமா வசனம் பேசினார். இனி செய்தால் தொலைத்துவிடுவேன் என்பது போலப் பேசி, காதைத் திருகி, "மறப்போம் மன்னிப்போம்" என்றார். சுற்றியிருந்தவர்கள் பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல எல்லா விஷயத்திலும் ஆவேசம் காட்டும் மம்மி அணி, இந்தமுறை இப்படி தடாலடியாக காலில் விழுந்தது ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை அம்பலக்காரரை வீழ்த்தும் வியூகம் ஏதாவது வைத்திருக்கிறார்களோ என்னவோ?

கலகப் பேரவை தொடங்கிய நாளில் இருந்து  நாலைந்து நாட்களாக சினிமா பார்ப்பது போல நாட்டு நடப்பு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது. இப்போது மம்மி கட்சியினர் வீழ்ந்துவிட்டதால் சப்பென்றாகி விட்டது. சரி போகட்டும் எப்படியும் ஏப்ரல் மேயில் தேர்தல் வரப்போகிறது என்பதால் இந்த கேளிக்கைக் காட்சிகள் இனி ஊருக்கு ஊர் நடக்கும். கூடுதல் சுவாரஸ்யத்துடன் கண்டுகளிக்கலாம்.

அந்த வகையில் சென்னை பொது ஜனத்துக்கு ரெட்டை ஜாக்பாட். ஆதித்யா டிவியும், சிரிப்பொலி டிவியும் ஒரேநரத்தில் பார்ப்பது போல, இந்த முறை தேர்தலும், ஐபிஎல்லும் ஒரே நேரத்தில் நடந்தாலும் நடக்கலாம். ரெண்டு காமெடிகளை ஒரே நேரத்தில் ரசிக்கலாம். ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச சேவை செய்வதற்காக நோஐபிஎல் தொடங்கியது போல தேர்தலுக்கு எதிராக நோதேர்தல் என்று பிளாக் எழுதும்படி பல்வேறு தோழர்களிடமிருந்தும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஆனால், நோதேர்தல் தொடங்கினால், நம்மை நக்சலைட்டுகள் என்று பிடித்துப் போடுவார்கள் என்பதால், கொஞ்சம் அடக்கிவாசிக்கும்படியும் வேறு சில நலமிவிரும்பிகள் சொல்கிறார்கள்.

அதை விடுங்கள், நமக்கு ரெண்டு காமெடிகள் காத்திருக்கின்றன. ஒருவேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போல ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், இந்த முறை சென்னை போட்டிகளெல்லாம் வேறு இடத்துக்கு மாற்றப்படக்கூடும். அது தேசபக்தர்களுக்கு ஏமாற்றமாக அமையக்கூடும். இந்த ஏமாற்றத்தை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்பதுதான் கோடானுகோடி தேசபக்தர்கள் பதற்றத்துடன் முன்வைத்திருக்கும் கேள்வி.
..கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக