திங்கள், 3 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 47 - கிரிக்கெட்டும் தேசப் பற்றும்

இந்திய கிரிக்கெட் அணியையும் வாரியத்தையும் குறைகூறினால், தேச விரோதி என்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கொஞ்சம் கரிசனப் பார்வை பார்த்து விட்டால், பயங்கரவாதிகளுக்கு உதவுகிறாயா என அடிக்க வருகிறார்கள். சிலர் வாடா, போடா என உச்ச மரியாதையான சொற்களை பின்னூட்டத்தில் பயன்படுத்துகிறார்கள்.


எல்லோரையும் போலவே நோஐபிஎல் என்கிற பன்னாட்டு அமைப்பின் அதிபருக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம் போன்றவை எல்லாம் இருக்கிறது. இருந்தாலும் தேவையற்ற கருத்துகளுக்கு அவர் பொங்கி எழுவதில்லை.

அவருக்கும் நாட்டுப் பற்று இருக்கிறது. அவரும் "ஜனகன" பாடி மரியாதை செய்பவர்தான். ஆனால், இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் சச்சினுக்கும் தோனிக்கும் இந்தியாவில் மட்டையெடுக்கும் இன்ன பிற கடவுளர்களுக்கும் "போற்றி போற்றி" சொல்லித்தான் அவரது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை என பிபிசி தமிழோசை வாயிலாக பலமுறை அவர் கூறியிருக்கிறார்.


கடந்த பல ஆண்டுகளாக  நோஐபிஎல் அதிபர் வலியுறுத்திவரும் விஷயம் இதுதான். எல்லோரும் நாட்டை நேசியுங்கள். ஒழுங்காக வரி செலுத்துங்கள். சட்டத்தை மதியுங்கள். குறைந்தபட்சம் டிராபிக் சிக்னலையாவது மதியுங்கள். நல்ல முறையில் கிரிக்கெட் பாருங்கள். ரசியுங்கள். ஆனால், நாட்டையும் கிரிக்கெட்டையும் சேர்த்துக் கொண்டாடாதீர்கள். தந்திர வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.


நமது கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ, ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதன் கணக்கு வழக்குகளை சாதாரண இந்தியக் குடிமகன் யாரும் வாங்கிப் பார்க்க முடியாது. அதன் சட்டதிட்டங்களை அதுவே வகுத்துக் கொள்ளும். எந்த வகையிலும் அது அரசுடன் தொடர்புடையது அல்ல. அவர்களைத் தவிர வேறு யாரும் கிரிக்கெட்டை வைத்து காசு பார்த்து விடக்கூடாது என்பதற்காக எத்தனையோ வகையான நேர்மையற்ற செயல்களை பிசிசிஐ செய்திருக்கிறது.


ஆக, நோஐபிஎல் அதிபர் எந்தக் காலத்திலும் ஐபிஎல் அதிபர் போலச் செயல்பட முடியாது. அதே நேர்ததில் அவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எந்த வகையான வாய்க்காத் தகராறும் இதுவரை இல்லை. வேறு நாட்டு அணியை பாராட்டி எழுதியதற்காக அவர்கள் நோஐபிஎல் அதிபருக்கு இதுவரை சீனி மிட்டாய்கூட வாங்கித் தரவில்லை.


இந்தக் களத்தின் நோக்கம் கிரிக்கெட்டை நேர்மையாக விமர்சிப்பது. ஒரு அதிதீவிர கிரிக்கெட் ஆட்டக்காரர், ரசிகர் என்பதால் அப்படி விமர்சிப்பதற்கான முழு உரிமையும் நோஐபிஎல் அதிபருக்கு உள்ளது. நமது பாட்டுக்கு எதிர்பாட்டுப் பாடும் உரிமையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. திறந்து கிடக்கும் கமென்ட் பகுதியில் நாட்டு மக்கள் தங்களது மனதில் உள்ள எதை வேண்டுமானாலும் கொட்டலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக