ஞாயிறு, 25 மார்ச், 2012

வழக்குப் போடுவீர்களா அக்கா?


கடந்த உலகக்க கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தோனியின் அணி தட்டுத் தடுமாறி அரையிறுதிக்கு வந்தது. அதற்கு முன்னால் பல இடங்களில் முறுக்கிக் கொண்டு போன மன்மோகன் சிங்கும் கிலானியும் பிசிசிஐ கூப்பிட்டதும் இந்தப் போட்டியைப் பார்க்க ஓடோடி வந்தார்கள்.  மும்பை தாக்குதலின்போது இருதரப்பும் பேசியதையெல்லாம் மறந்துவிட்டார்கள்.  ராகுல் சோனியா என இந்தப் போட்டியை கமர்ஷியலாக மாற்றுவதற்கான எல்லா வேலைகளும் நடந்தன.

இந்தப் போட்டியில்தான் "மேட்ச் பிக்சிங்" நடந்ததாக லண்டன் பத்திரிகை சண்டை டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பாலிவுட் நடிகை நுபுர் மேத்தா, இந்த மேட்ச் பிக்சிங்குக்கு "ஏற்பாடு செய்து தரும்" நபராக இருந்தார் என்றும் படத்துடன் சூசகமாகக் கூறியது.

இந்தச் செய்தி வெளியானதும் பிசிசிஐ வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது. ஆனால், வழக்கு ஏதும் போடவில்லை. அட்லீஸ்ட் மானம் போச்சு என்றாவது வழக்குப் போட்டிருக்கலாம். ஆவணங்களைக் கேட்டாவது வழக்குப் போட்டிருக்கலாம். ஊகூம்.
வரி கட்டாமல் இருப்பதற்காக அவ்வப்போது தலைமையிடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் "எங்கள் கைகள் கறைபடியாதவை" என்று கத்தியது. ஆனாலும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அறிக்கைவிட்டதோடு சரி. தங்கள் வருமான வரி மோசடிக் கணக்கைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

நுபுர் மேத்தா? அவர் படத்தைத்தான் அரைகுறையாகப் போட்டார்களே? சும்மா விடுவாரா? தன் பங்குக்கு "களங்கம்" ஏற்பட்டுவிட்டதாகக் கதறினார். அழுது புரண்டார். வழக்குப் போடப்போவதாகவும் மிரட்டினார்.

முதல் நாள் போயிற்று. உங்களுக்குக் கிரிக்கெட் வீர்களைத் தெரியுமா என்று நமது நிருபர்கள் கேட்டனர். "ஓ நோ" என கோணினார்.

அடுத்த நாள் போயிற்று. வழக்குப் போடப்போவதாக உறுதியாகச் சொன்னார்.

சில நாள்கள் கடந்தன. தோசையைத் திருப்பிப் போட்டார். எனக்கு இலங்கை வீரர் தில்ஷானை மட்டும் தெரியும் என்றார்.  அதுவும் பெரிய அளவில் இல்லை. சும்மா அறிமுகம் ஆகும் அளவுக்குத்தான் என்றார்.

லண்டனில் தங்கியிருந்தபோது, தன்னுடன் புக்கி ஒருவர் தங்கியிருந்ததாகக் கூறியதையும் மறுத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சண்டே டைம்ஸ் மீது வழக்குப் போடவில்லை. வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பியிருக்க மாட்டார் என்று தெரிகிறது.

இந்தத் தாமதம் நமக்குச் சொல்லும் உண்மை ஒன்றேயொன்றுதான். எல்லோரும் மனதளவில் ஒப்புக் கொண்டாலும், இந்தியா என்கிற தேசத்தின் மீதான பற்று காரணமாக ஒப்புக் கொள்ள மறுக்கும் "சூதாட்டம்" என்கிற ஒன்று அந்தப் போட்டியில் நடந்திருக்கலாம்.

உண்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டுமானால், நுபுர் மேத்தா வழக்குப் போட்டால்தான் உண்டு. ஏனென்றால், சூதாட்டம், மேட்ச் பிக்சிங்குக்கு ஆதாரம் இருப்பதாக சண்டே டைம்ஸ் கூறிக் கொண்டிருக்கிறது. நுபுர் மேத்தா வழக்குப் போட்டால் இந்த ஆதாரம் நிச்சயம் வெளியே வரும்.

பிரதமர்களின் முன்னிலையில் மேட்ச் பிக்சிங் நடந்ததா எனத் தெரிந்துவிடும்.


ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. அக்கா வழக்குப் போடுவீர்கள்தானே?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக