வெள்ளி, 7 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 43: அம்பாந்தோட்டை ராஜபட்ச மைதானம்

கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடத்துவதற்கென்றே இலங்கையில் இரண்டு மைதானங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டு சுனாமியில் பேரழிவுக்கு உள்ளான இந்த நகரம் வளர்ச்சியில் படுமந்தம். இந்தப் பகுதியில் இருந்துதான் அதிபர் ராஜபட்ச நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதால், இப்போது இந்த நகரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவுக்கு ஆணியடிக்கும் சீனாவின் முயற்சியும் அம்பாந்தோட்டையில்தான் தொடங்குகிறது. அம்பாந்தோட்டையில் சீனா கட்டிவரும் பிரமாண்டமான துறைமுகம் பற்றியும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயம் பற்றியும்  ஏற்கெனவே பல பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாகப் பிரிந்து எழுதிவிட்டன. இப்போது இந்த நகரத்தை பெரு நகரமாக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி.  சுமார் 35 ஆயிரம் பேர் அமரும் வகையில் உருவாகும் இந்த மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒருநாள் போட்டிகளும், டெஸ்ட் போட்டிகளும் உலகக் கோப்பை போட்டிதான் அதிகாரப்பூர்வமாக நடக்க இருக்கிறது. மைதானத்துக்கு அதிபர் ராஜபட்சவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

உலகக் கோப்பை போட்டிகள் முடிந்தபிறகு, 2018-ம் ஆண்டில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளும் அம்பாந்தோட்டையில்தான் நடக்க இருக்கின்றன.

எந்த வசதியுமே இல்லாத அம்பாந்தோட்டைக்கு இலங்கையும் சீனாவும் இவ்வளவு முக்கியத் துவம் கொடுப்பது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், எல்லோரும் கூறுவது போல இந்தியாவுக்குச் செக் வைப்பதற்கான முயற்சிதான் இது என்கிற சந்தேகம் வலுத்து வருவதையும் மறுக்க முடியவில்லை.
.

1 கருத்து: