செவ்வாய், 17 ஏப்ரல், 2012

ஐபிஎல் போட்டியால் வளரும் வீரர்களுக்கு நன்மையா?


ஐபிஎல் போட்டிகள் பற்றி விமர்சனம் செய்யும் போதெல்லாம், எட்டுத் திக்கிலிருந்து கண்டனக் கணைகள் பறந்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் தேசபக்தர்கள். பலர் சென்னையை தாய் மண்ணாகவும் தோனியை மண்ணின் மைந்தனாகவும் கருதுபவர்கள். நொடிந்து போயிருக்கும் இந்தியக் கிரிக்கெட்டையும் மட்டையாகிப் போன தோனியையைும் மீட்பதற்கு, பிரியங்கா சோப்ரா போன்ற உலக அழகிகள் வந்துதான் குத்தாட்டம் போட வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தேசபக்தர்கள்,  "ஐபிஎல் போட்டிகளால் தேசிய அணியில் இடம் கிடைக்காத இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அதனால் கிரிக்கெட் வளருகிறது" என்று பிதற்றுகிறார்கள்.

இது எப்படியிருக்கிறது தெரியுமா? கஜானாவுக்கு 1.72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஒருவர், "நிறுவனங்களுக்கு நான் அளித்த சகாயங்களால்தான் இப்போது நீங்கள் 10 பைசாவுக்கு போனில் பேசிக் கொண்டிருக்க முடிகிறது, சந்து பொந்தெல்லாம் செல்போன் நடமாடுகிறது" என்றாராம். அப்படித்தான் இருக்கிறது ஐபிஎல் போட்டிகளால் வளரும் வீரர்களுக்கு நன்மை என்கிற சப்பைக் கட்டு, சாக்குப் போக்குகள்.

தொலைக்காட்சியில் தோன்றி ஐபிஎல்லுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் டபிள்யூ.வி.ராமன் உள்ளிட்ட எல்லோரும்தான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலே வளரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால், ஐபிஎல் போல எத்தனை அமைப்புகள் வந்தாலும் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும். திறமை உள்ளவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், நீங்கள் தேசிய அணி என்ற எதேச்சதிகார அணி ஒன்றை வைத்திருக்கிறீர்களே, அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் என்ன செய்கிறீர்கள்? இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்.

ஐசிஎல் என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த எத்தனையோ இளம் வீரர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். அப்படியொரு அமைப்பு இனி எந்த வகையிலும் தொடங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகக் கங்கணம் கட்டிச் செயல்பட்டீர்கள். உள்ளநாட்டுக்கார்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர் ஐசிஎல்லில் பந்து பொறுக்கிப் போடும் வேலையைப் பார்த்திருந்தாலும்கூட அவர்களுக்கு தேசிய அணியில்  எந்த நன்மையும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்கள்.

உண்மை இப்படியிருக்க,  ஏதோ கிரிக்கெட்டுக்கும், இளம் வீரர்களுக்கும் நன்மை செய்வதாக கபடநாடகம். ஐபிஎல் என்பது வெறும் பொழுதுபோக்கு களியாட்டம்தான். எதிரிகள் பலரை நயவஞ்சகமாக ஒழித்துக் கட்டிவிட்டு நடத்தப்படும் வியாபாரம்தான். லாபமெல்லாம் முதலாளித்துவ வர்க்கத்தின் உச்சியில் இருக்கும் பத்துப் பதினைந்து பேருக்குப்போகின்றன. இதில் எங்கிருந்து வந்தது கிரிக்கெட்டுக்கும் இளம் வீரர்களுக்கும் நன்மை?  ஆடும் வீரர்களுக்கு கிடைப்பதெல்லாம் முதலாளிகள் வீசியெறியும் சோற்றுப் பருக்கைகளும்,  எலும்புத் துண்டுகளும், சதைகளும்தான்.  இதைத்தான் நன்மை என்கிறார்கள். 
நல்லாயிருக்குப்பா உங்க பெர்பாமென்ஸு!

...

வியாழன், 5 ஏப்ரல், 2012

"அது" மாயம் - சிறுகதை


அன்று அமாவாசை. மாலை 4.30 மணி. ஊரே நிசப்தமான பவர்கட் நேரம். அந்த பங்களாவின் கிரில் கேட்டை திறந்து கொண்டு நான்கு உருவங்கள் உள்ளே நுழைகின்றன. முகங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் முகமூடி அணிந்திருக்கலாம். அல்லது அந்த கண்ணாடிக் கடைக்காரன் நம்மை ஏமாற்றியிருக்க வேண்டும்.

நான்கு உருவங்களும் பங்களாவின் பின்பக்கமாகச் சென்று கதவை உடைத்தன. யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டுக்குள் புகுந்தன. அந்த பங்களாக்காரர் வைர வியாபாரி. அவருக்கு  அழகான 3 பெண்கள். ஆனால், இந்த உருவங்கள் எந்த நோக்கத்துக்காக வந்திருக்கின்றன என்று இதுவரை தெரியவில்லை.

நான்கு உருவங்களும் உள்ளே நுழைந்த இடம் சமையல்கட்டு. அதைத் தாண்டிப் பார்த்தால், எதிரெதிரே இரண்டு அறைகள். பூனைகள் போல அடியெடுத்து வைத்து நகர்ந்தனர். ஒருவன் முதலாவது அறைக் கதவு அருகே சென்றான். தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே படுக்கையில் இரு பெண்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். ஐஸ்வர்யா ராயும் அமலாபாலும் போல. முதலாவது உருவம் அவர்கள் அருகே சென்றது. இருண்டாவது உருவமும் உள்ளே நுழைந்தது. மூன்றாவது உருவம் உள்ளே நுழைய முயற்சித்த போது "2 பேர் போதும்" என்பது போல நான்காவது உருவம் தடுத்தது.

கதவை ஓசையில்லாமல் சாத்திவிட்டு இரு உருவங்களும் அடுத்த அறையைத் திறக்க முயற்சித்தன. வேறு யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு ஒரு உருவம் கதவைத் தட்டியது. சில விநாடிகளுக்குப் பிறகு கதவு திறந்தது. நின்றது ஒரு பெண். அங்கே ஐஸ்வர்யா ராயும் அமலாபாலும் சொன்னோமா, இங்கே நின்றது சினேகா. இவர்களைப் பார்த்து அவள் கண்ணை அகலத் திறந்து, பிறகு வாயைத் திறந்து கத்துவதற்குள், டக்கென்று ஒரு உருவம் வாயைப் பொத்தியது. அந்தப் பெண்ணின் வாயைத்தான்.

மீதமிருக்கும் ஒரு உருவம் கதவைச் சாத்திவிட்டு வீட்டு அடுத்த பகுதிக்குச் சென்றது. அங்கே பிரமாண்டமான மற்றொரு அறை திறந்தே கிடந்தது. அழகிய வேலைப்பாடுடன் கூடிய கதவு. உருவம் உள்ளே சென்று பார்த்தது. யாரும் இல்லை. பிறகு வேறு எதையோ தேடியது. அங்கே ஒரு பீரோ. உருவத்தின் கைகள் பரபரத்தன. வேகமாகச் சென்று பீரோவைத் திறக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் மீண்டும். ஊகூம்.

திடீரென இருமல் சத்தம். பாத்ரூம் கதவு திறந்தது. வெளியே வந்தது டாப்ஸியாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுவும் பாத்ரூமிலிருந்து... கதை விளங்கிடும்... சரி.. என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தது அமிதாப் உயரம் கொண்ட ஒரு ஆள். சுதாரித்துக்கொண்ட உருவம் பீரோவின் மறுபுறத்தில் பதுங்கிக் கொண்டது.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஆள் கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு பீரோவைத் திறந்தார். அதில் இருந்த நம்பர் பேடில் சில எண்களைத் தட்டினார். சிறிய கதவுகள் திறந்து கொண்டன. உள்ளே. மின்னும் கற்கள். அவர் வைரவியாபாரி என்பதால் அது வைரக் கற்களாகத்தான் இருக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் செயல்பட்ட உருவம், கையில் இருந்த மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை அந்த ஆளின் முகத்தில் வைத்தது. அந்த ஆள் மயங்கிச் சரிந்தார். பீரோவைத் திறந்த அந்த உருவம் வைரக் கற்களைத் தள்ளிவிட்டு எதையோ தேடியது. சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு அது அகப்பட்டது. அத்துடன் வேலை முடிந்தது. 4 உருவங்களின் வேலையும் முடிந்தது.

மறுநாள் தினந்தந்தி பேப்பரில் தலைப்புச் செய்தி, "வைர வியாபாரி வீட்டில் 4 ஐபிஎல் டிக்கெட்டுகள் கொள்ளை: முகமூடிக் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு". - எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு. பக்கத்திலேயே அமிதாப் பச்சன் போல அந்த ஆளும் 3 பெண்களும் கதறியழுதபடி நிற்கும் படம், வண்ணத்தில். (உள்படம்) சிதறிக் கிடக்கும் வைரக் கற்கள். (சைடு படம்) கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்.

..
...

புதன், 4 ஏப்ரல், 2012

ஐபிஎல் கோடிகளும் 121 கேடிகளும்


நாட்டில் சென்சஸ் கணக்கெடுப்பதே இந்தியாவில் எத்தனை தலைகள் இருக்கின்றன. கிரிக்கெட் என்ற பெயரில் அவர்களை விற்று எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதற்குத்தான். கிரிக்கெட் ஒளிப்பரப்பு உரிமம், விளம்பரம், ஐபிஎல் உரிமம், ஏலம் எல்லாம் சென்சஸ்படிதான். நீங்கள் இன்னொரு குழந்தையைப் பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசனுக்கு லாபம் கூடுகிறது என்பதுதான் உண்மையான பொருள். 

ஆனால், ஐபிஎல் போட்டிகளை வெறுப்பவர்கள், அதை விரும்புவர்கள் என நம்நாட்டில் இரு இனங்கள் இருக்கின்றன. முதலாவது பெரும்பான்மை சுமார் 121 கோடி. இரண்டாவது மிகச் சிறுபான்மை சுமார் 121 கேடி. நோஐபிஎல் கடையின் ஓனர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். ஐபிஎல் பிடிக்காது. பிடிக்காவிட்டால் அதைப்பற்றி ஏன் பேச வேண்டும் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

இது ஏதோ "எனக்கு வென்னிலா பிடிக்காது, ஸ்டிராபெர்ரி பிடிக்காது, பிஸ்தாதான் பிடிக்கும்" என்பது போன்ற "பிடிக்காது" அல்ல. எனக்கு ராஜபட்ச பிடிக்காது, பொன்சேகா பிடிக்காது என்பார்களே அந்த மாதிரி "பிடிக்காது".

சிலர் குத்தாட்டம் போடுவதற்காக எல்லோரும் போகும் பாதையில்தான் போக்குவரத்தை மாற்றுகிறார்கள். எல்லோருக்கும் பவர்கட் இவர்களுக்கு மெகாவாட் கணக்கில் மின்சாரம். எல்லோருக்கும் பொதுவான அரசு இவர்களுக்குத்தான் இலவசமாக நிலத்தை வழங்கி மைதானம் கட்டிக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. 

தி.நகரில் விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தின் கட்டுமான விதிமீறல்கள் மட்டும் "நாட்டுக்காக" மன்னிக்கப்படுகின்றன. தியேட்டரில் 120 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை வைக்கக்கூடாது என்பதைக்கூட  அரசு நிர்ணயித்திருக்கிறது. இங்கு அந்த விதியும் கிடையாது. 

பிசிசிஐ என்கிற தனியார் நிறுவனம் இந்த நாட்டின் கிரிக்கெட் வளத்தையெல்லாம் கொள்ளையடிக்கிறது. ஒரு சிறிய தொழிலதிபர்களின் ரகசியக் கூட்டில் இதில் ஆட்டத்திறன் குறைக்கப்பட்டு நாடகத்திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பெருங்கூட்டம் பஞ்சப் பரதேசிகளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், கொஞ்சூண்டு அதை அனுபவித்து வந்த எவனாலும் ஐபிஎல் போட்டிகளை ஆகா ஓகோவெனப் புகழ்ந்து எழுத முடியாது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸை வெறுப்பவர்கள் சென்னையை வெறுப்பவர்கள் இல்லை. மும்பை இண்டியன்ஸை புறக்கணிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகளும் இல்லை. 

..


ஞாயிறு, 25 மார்ச், 2012

வழக்குப் போடுவீர்களா அக்கா?


கடந்த உலகக்க கோப்பை கிரிக்கெட் போட்டியில்  தோனியின் அணி தட்டுத் தடுமாறி அரையிறுதிக்கு வந்தது. அதற்கு முன்னால் பல இடங்களில் முறுக்கிக் கொண்டு போன மன்மோகன் சிங்கும் கிலானியும் பிசிசிஐ கூப்பிட்டதும் இந்தப் போட்டியைப் பார்க்க ஓடோடி வந்தார்கள்.  மும்பை தாக்குதலின்போது இருதரப்பும் பேசியதையெல்லாம் மறந்துவிட்டார்கள்.  ராகுல் சோனியா என இந்தப் போட்டியை கமர்ஷியலாக மாற்றுவதற்கான எல்லா வேலைகளும் நடந்தன.

இந்தப் போட்டியில்தான் "மேட்ச் பிக்சிங்" நடந்ததாக லண்டன் பத்திரிகை சண்டை டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பாலிவுட் நடிகை நுபுர் மேத்தா, இந்த மேட்ச் பிக்சிங்குக்கு "ஏற்பாடு செய்து தரும்" நபராக இருந்தார் என்றும் படத்துடன் சூசகமாகக் கூறியது.

இந்தச் செய்தி வெளியானதும் பிசிசிஐ வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது. ஆனால், வழக்கு ஏதும் போடவில்லை. அட்லீஸ்ட் மானம் போச்சு என்றாவது வழக்குப் போட்டிருக்கலாம். ஆவணங்களைக் கேட்டாவது வழக்குப் போட்டிருக்கலாம். ஊகூம்.
வரி கட்டாமல் இருப்பதற்காக அவ்வப்போது தலைமையிடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் "எங்கள் கைகள் கறைபடியாதவை" என்று கத்தியது. ஆனாலும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அறிக்கைவிட்டதோடு சரி. தங்கள் வருமான வரி மோசடிக் கணக்கைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

நுபுர் மேத்தா? அவர் படத்தைத்தான் அரைகுறையாகப் போட்டார்களே? சும்மா விடுவாரா? தன் பங்குக்கு "களங்கம்" ஏற்பட்டுவிட்டதாகக் கதறினார். அழுது புரண்டார். வழக்குப் போடப்போவதாகவும் மிரட்டினார்.

முதல் நாள் போயிற்று. உங்களுக்குக் கிரிக்கெட் வீர்களைத் தெரியுமா என்று நமது நிருபர்கள் கேட்டனர். "ஓ நோ" என கோணினார்.

அடுத்த நாள் போயிற்று. வழக்குப் போடப்போவதாக உறுதியாகச் சொன்னார்.

சில நாள்கள் கடந்தன. தோசையைத் திருப்பிப் போட்டார். எனக்கு இலங்கை வீரர் தில்ஷானை மட்டும் தெரியும் என்றார்.  அதுவும் பெரிய அளவில் இல்லை. சும்மா அறிமுகம் ஆகும் அளவுக்குத்தான் என்றார்.

லண்டனில் தங்கியிருந்தபோது, தன்னுடன் புக்கி ஒருவர் தங்கியிருந்ததாகக் கூறியதையும் மறுத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சண்டே டைம்ஸ் மீது வழக்குப் போடவில்லை. வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பியிருக்க மாட்டார் என்று தெரிகிறது.

இந்தத் தாமதம் நமக்குச் சொல்லும் உண்மை ஒன்றேயொன்றுதான். எல்லோரும் மனதளவில் ஒப்புக் கொண்டாலும், இந்தியா என்கிற தேசத்தின் மீதான பற்று காரணமாக ஒப்புக் கொள்ள மறுக்கும் "சூதாட்டம்" என்கிற ஒன்று அந்தப் போட்டியில் நடந்திருக்கலாம்.

உண்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டுமானால், நுபுர் மேத்தா வழக்குப் போட்டால்தான் உண்டு. ஏனென்றால், சூதாட்டம், மேட்ச் பிக்சிங்குக்கு ஆதாரம் இருப்பதாக சண்டே டைம்ஸ் கூறிக் கொண்டிருக்கிறது. நுபுர் மேத்தா வழக்குப் போட்டால் இந்த ஆதாரம் நிச்சயம் வெளியே வரும்.

பிரதமர்களின் முன்னிலையில் மேட்ச் பிக்சிங் நடந்ததா எனத் தெரிந்துவிடும்.


ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. அக்கா வழக்குப் போடுவீர்கள்தானே?


செவ்வாய், 20 மார்ச், 2012

சச்சின் புள்ளி விவரங்கள் சொல்லும் பொய்கள்!


புள்ளிவிவரங்களைப் பாருங்கள், சச்சின் எவ்வளவு பெரிய ஆட்டக்காரர் என்பது தெரியும் என்று கூறுவோருக்காக...


உலகின் பெரும்பாலான புள்ளி விவரங்கள் பொய் சொல்கின்றன 

சில உதாரணங்கள்


இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை பற்றி பல்வேறு கமிட்டிகள் அளித்த போலி புள்ளி விவரங்கள்.

Arjun Sengupta committee - 77%
Saxena Committee - 50 %
Tendulkar Committee - 37.2%
planning Commission - 25.7%
World bank - 44%

மின்வெட்டு, பஸ்கட்டண உயர்வு, பால்விலை உயர்வுக்குப் பிறகும் தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதைக் காட்டும் சங்கரன் கோவில் இடைத் தேர்தல்.

Sankarankovil bypoll First Round Result

AIADMK - 6088
DMK - 1683
MDMK - 1265
DMDK - 686
புள்ளி விவரங்கள் பொய் கூறுவது இப்படித்தான்.மேலும் இந்த புள்ளி விவரத்தைக் கவனியுங்கள்...


உலகத்திலுள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை - 192

கடந்த 100 ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடத் தெரிந்த நாடுகள் 9.

உப்புக்குச் சப்பாணியாக எப்போதுமே தோற்கும் நாடுகள் - 2

மீதமுள்ள எதிரி நாடுகள் - 6

சென்று ஆட விரும்பாத நாடு - 1

இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காகவே கிரிக்கெட் ஆடும் நாடுகள் - 5

மீதமிருக்கும் இந்தியாதான் உலக சாம்பியன்.

கமான் இண்டியா.

..

ஈனா மீனா டீக்கா - ஆம்லெட்டில் இருந்து குஞ்சு பொறிப்பவர்கள்!

கடந்த "உலகக் கோப்பை"  போட்டியில் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் சொதப்பிய இவர்கள் சாம்பியன் ஆனார்கள்.  இப்போது சமீப கால வரலாற்றில் இல்லாத வகையில் தோற்றிருக்கிறார்கள். வரும் 4-ம் தேதி முதல் 70 நாளுக்கு  அனைவரும் வாண வேடிக்கை காட்டுவார்கள். ஹீரோக்களாக வலம் வருவார்கள்.  ஃபார்ம் எப்படியிருந்தாலும் அடுத்த "உலகக் கோப்பையை" மீண்டும் கைப்பற்றுவார்கள்.

திங்கள், 19 மார்ச், 2012

உலக சாதனை அண்ணே!

"அண்ணே, அதான் நூறு சதம் அடிச்சாச்சே இப்பாவவது ரிடயர் ஆயிடுங்கண்ணே"

"தம்பீ, அசையற சொத்து 4800 கோடி ரூபா, அசையாத சொத்து 5100 கோடி ரூபா இன்னொரு நூறு கோடி சேத்து பத்தாயிரம் கோடியாக்கி உலக சாதனை பண்ணிட்டு ரிடயர் ஆயிடறேன்"திங்கள், 6 பிப்ரவரி, 2012

சகாரா ஊடலும் டீசல் திருடர்களும்

எனக்குத் தெரிந்தவரையில் யாருக்காகவும் எதற்காகவும் பிசிசிஐ வளைந்து கொடுத்தது கிடையாது. 2009-ம் ஆண்டு தேர்தலின்போது, ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டபோது, அதைச் செவிமெடுக்கவில்லை. அரசையே எதிர்த்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்குப் போய் போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளை இங்கே ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிடக்கூட இந்திய அரசால் முடியவில்லை.

அதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோதும், நாட்டுக்குத் திரும்பிச் சென்ற இங்கிலாந்து அணியை வலுக்கட்டயாகமாக திருப்பி அழைத்துவந்து ஆட வைத்தார்கள். ஐசிஎல் அமைப்புக்கு நேர்ந்த கதியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.


நாடு முழுவதும் சலுகைவிலையில் அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்டிருக்கும் மைதானங்களை, முழுக்க முழுக்க வர்த்தகத்துக்காகப் பயன்படுத்துவதைக்கூட கேட்பதற்கு நம்மால் முடியாது. உதாரணத்துக்கு டிஎன்சிஏவுக்கு தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கியது. இப்போதும் மாநில விலையில் டீசல் வழங்குவது உள்ளிட்ட படுபாதகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

அதாவது அப்பாவி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய மானியம்தான் ஐபிஎல் போட்டிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கும் மீன் பிடிப்பதற்கும் டீசல் இல்லாதபோது, இங்கே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு மானிய விலையில் தட்டுப்பாடு இல்லாமல் டீசல் கிடைக்கிறது என்றால், அது மோசடிதானே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், தன்னுடைய சொந்த வர்த்தக லாபத்துக்காக சேப்பாக்கம் மைதானத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று டிஎன்சிஏவில் இருப்பவர்களே சொல்கிறார்கள். ஐபிஎல் போட்டிகளுக்காக மட்டுமே மைதானம் புதுப்பிக்கப்படுகிறது. ஆனாலும் அதைத் கேட்க நாதியில்லை. அவ்வளவு செல்வாக்கு.


சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மாநகராட்சியின் எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அவசரகால முன்னேற்பாடுகள் எதுவும் கிடையாது. மேல்புற கேலரியில் அமரும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவசரமாக வெளியேற வேண்டுமானால் ஒரேயொரு குறுகியவழிதான் இருக்கிறது. ஆனாலும் தி.நகரில் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டதைப் போல சேப்பாக்கம் மைதானம் சீல் வைக்கப்படவில்லை. பேருக்கு இரண்டு கேலரிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன் இப்போதைய சொந்தக்காரர், உலகில் அதிகப் பணம் படைத்த விளையாட்டு அமைப்பின் தலைவர்.


ஆனால் இவர்களையும் பணிய வைத்திருக்கிறது சகாரா குழுமம். பெரு நிறுவனங்களின் நடவடிக்கைகள், நியாமற்ற வர்த்தக முறைகளுக்கு நாம் எதிரானவர்கள்தான் என்றாலும், ஐபிஎல்லை அடிபணிய வைத்திருப்பதில் முதல் வெற்றியைப் பெற்றவர்கள் என்பதற்காக சகாரா குழுமம் நமது பாராட்டுக்குரியவர்கள். பிசிசிஐ ஒன்றும் எதிர்க்க முடியாத அமைப்பல்ல என்பதை இது நிரூபித்திருக்கிறது.


புணே அணி எங்களுக்கு வேண்டாம் என்று சகாரா ஒதுங்கியிருப்பதன் மூலம் சுமார் 1700 கோடி ரூபாயை அவர்களுக்குத் திருப்பியளித்தாக வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதுவரையில் யாருக்கும் அடிபணியாத பிசிசிஐ இப்போது, சகாரா குழுமத்துடன் பேச்சு நடத்துவதற்கும் முன் வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக கிரிக்கெட்டையும், இந்திய மக்களையும், அரசையும் ஆட்டிப்படைத்து வந்த பிசிசிஐக்கு இது முதல் தோல்வி. கிரிக்கெட்டை சுயநல வாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும்வரை இது தொடர வேண்டும்.

.
.
.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்!

சச்சின் ஜுரம் எல்லோருக்கும் 100 டிகிரியைத் தாண்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் நூறாவது சதத்தை எப்போது அடிப்பார் என்பது மட்டும் தெரியவில்லை. இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 2 ரன் எடுத்திருந்தபோது பான்டிங் அவரை பிடித்து வெளியே அனுப்பிவிட்டார். சச்சின் நூறு அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நமக்குக் கவலையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையெல்லாம் விமர்சனம் செய்யவே கூடாது என்கிற ரீதியில் நமது கடைக்கு வரும் ஒரே ஒரு வாடிக்கையாளரும் குறை பட்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

1991-92 ல் பென்சன் - ஹெட்ஜஸ் சீரியஸ், அதைத் தொடர்ந்து வந்த பென்சன் - ஹெட்ஜஸ் உலகக் கோப்பைகளில் இந்திய அணி மிகச் சுமாராக ஆடியது. இன்றைக்கு ஊரிலுள்ள அனைவருக்கும் பேட்டிங், பவுலிங் டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் நமது ரவி சாஸ்திரி அன்றைக்குத் தொடக்க ஆட்டக்காரர். உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலும் அசார் தலைமையிலான அணி,  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோற்றுப் போனது. அதிகப் பந்துகளைச் சந்தித்து குறைந்த ரன்களை எடுத்திருந்தார்.  எனது நினைவு சரியெனில், முதல் போட்டியில் 54 பந்துகளில் 27 ரன்களும், இரண்டாவது போட்டியில் 110 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தார். இந்தப் போட்டிகளில் 7 ரன்கள் மற்றும் 1 ரன் வித்தியாசத்தில் அசார் அணி தோற்றது.

ரவிசாஸ்திரியின் இந்த ஆட்டம் மோசமானது என்பதில் சந்தேகமேயில்லை. குறிப்பிட்ட ஓவர்கள் போட்டியில் இப்படி ஆடவேகூடாதுதான். இதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? செருப்பு மாலை. 

ஆனால், இன்றைய வீரர்களுக்கு அத்தகைய பரிசு கிடையாது. செருப்பு மாலை அணிவிப்பது தவறுதான். ஆனால், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதும் தவறு என்பதுதான் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. நூறு நூறு ரன்களாக அடிப்பதால் மட்டும் சச்சின் டெண்டுல்கரோ, பிற வீரர்களோ வளர்ந்துவிடவில்லை.  ஊடகங்களில் வெற்று உந்துதல் மிக முக்கியமான காரணம். அதன் மூலமாகத்தான், கிரிக்கெட்டும் அதன் வீரர்களும் வளர்ந்திருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீங்களும் நானும்கூட இவர்களை வளர்த்துவிட்டதில் ஓர் அங்கம். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த கிரிக்கெட்டைத்தான் இன்றைய வீரர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்களா? இல்லவே இல்லை.

இந்தியாவை பிராண்டாகவும், அதன் மக்களை சந்தையாகவும் மாற்றி வியாபாரம் செய்வதுதான் இன்றைய கிரிக்கெட்டின் உத்தி. இந்தியா என்ற பெயரில் ஆடிய அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற்றது என்றால், அதற்குப் பின்னால், பல்வேறு வியாபார ராஜதந்திரங்கள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. வேறு எந்த தேசபக்தியும் மண்ணாங்கட்டியும் கிடையாது.

உலகக் கோப்பைப் போட்டியில் தோனி அணி ஜெயிக்கக்கூடாது என்றோ, சச்சின் டெண்டுல்கர் நூறாவது சதம் அடிகக்கூடாது என்றோ நான் வேண்டிக் கொள்வது கிடையாது. ஆனால், இவர்களின் தந்திரம் தோற்றுப் போகவேண்டும் என்கிற அக்கறை எனக்கு உண்டு. 
  
 கிரிக்கெட்டை வெறும் களியாட்டமாக மாற்றிக் கொண்டிருப்பதற்காக, பிசிசிஐ மட்டும் எதிர்க்க வேண்டுமா அல்லது சச்சின், தோனி போன்ற அனைவரையும் எதிர்க்க வேண்டுமா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.  ஆனால், இந்தக் காலத்தில் ஆடப்படும் கிரிக்கெட்டையே விமர்சிப்பதுதான் நமது வழி. பிசிசிஐயும் அதன் அடிமைகளும் நமது விமர்சனத்துக்கு ஆளாவதைத் தவிர்க்கவே முடியாது.

"யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்தறே"  என்கிற கேள்விக்கு இடம் தராதவகையில் நம் கடையிலும் சரக்குத் தேடி வரும் அந்த ஒரேயொரு வாடிக்கையாளருக்காகவே இந்த விளக்கம்.

.

.
...


திங்கள், 30 ஜனவரி, 2012

பபூன்களின் ஆட்டம்!

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நமது கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அறிவித்ததும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தீவிரமான ரசிகர்களுக்கு ஜுரமே வந்துவிட்டது. சென்னைக்காரர்கள் கண்ணீர் விட்டார்கள்.


டெண்டுல்கருக்கு பிறகு பாரத ரத்னா விருதும், விதிமுறைகள் சம்மதித்தால் நோபல் பரிசும் வெல்லக்கூடிய தகுதி கொண்ட ஒரே நபர் இவர்தான் என்று பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு அறிவிப்பு வந்தால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?


ஆனாலும் ரசிகர்கள் உடனடியாக அழ வேண்டியதில்லை. ஓராண்டு கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டுதான் அவர் ஓய்வு பெறப் போகிறாராம். அதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை ஏற்பதையும் ஹெலிகாப்டர் ஷாட்கள் அடிப்பதையும் ரசிகர்கள் பார்த்து மகிழலாம். அவ்வப்போது இன்னிங்ஸ் தோல்விகள், 300 ரன் வித்தியாசத்தில் தோல்விகள் போன்றவை வந்தாலும் மனம் தளர்ந்து விடக்கூடாது.


ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணிக்கு 2 இன்னிங்ஸ்கள் என்றால், தோனி தலைமையிலான அணிக்கு 20 இன்னிங்ஸ்கள் பேட்டிங் வாய்ப்புத் தரும் வகையில் டக்வொர்த் - லீவிûஸக் கூப்பிட்டு விதிமுறைகளை வகுத்துத் தரச் சொன்னால் இந்தப் பிரச்னையை மிக எளிதாகச் சமாளித்துவிடலாம்.


இப்படியொரு விதிமுறையை வகுப்பதற்கு, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என எந்த நாட்டுக்காரர்களும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.


அப்படி யாராவது எதிர்ப்பதாகத் தெரியவந்தால், ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்துவிட வேண்டும். முடிந்தால் பிரதமரைவிட்டு ராஜதந்திர ரீதியில் அறிக்கைவிடச் சொல்லலாம். அடுத்த கணத்தில், எதிர்ப்புத் தெரிவித்த எல்லோரும் பரமார்த்த குருவின் சீடர்களைப் போல மாறிவிடுவார்கள்.


டெஸ்ட் போட்டிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்தியாவுக்கு 25 இன்னிங்ஸ்கள் கொடுக்கலாம் என்றுகூடவேண்டுகோள் விடுப்பார்கள். சுவரில் கரித்துண்டால் கோடு கிழித்து, தென்னை மட்டையைப் பேட்டாக பயன்படுத்தும் சிறுவர்கள்கூட தங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிசிசிஐயால், இது ஒன்றும் முடியாததல்ல.


ஆனால், இதெல்லாம் இன்னும் ஓர் ஆண்டுக்குத்தான். அதன் பிறகு தோனியின் முடிவை ரசிகர்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியே தீர வேண்டும் என்று யாரும் அடம்பிடிக்கக் கூடாது. காவடி எடுக்கிறேன் என்றோ அலகு குத்துவதாகவோ வேண்டிக் கொள்ளக்கூடாது.


உண்மையில் தேசத்தையும், குறிப்பாக சென்னை மக்களின் பெருமையையும் காப்பாற்றுவதற்காகவே ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால், ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி எப்படி ஜெயிக்கும்? டெஸ்ட் போட்டிகளில் ஆடி, அதனால் களைப்பு ஏற்பட்டு ஐபிஎல் போட்டிகளில் கோட்டைவிட்டால், சென்னையின் மானமல்லவா போய்விடும்? டெஸ்ட் கிரிக்கெட்டா, சென்னையின் பெருமையா என்று கேட்டால், நமது ரசிகர்கள் சென்னைதான் என்று உறுதியாகக் கூறுவார்கள். தவிரவும், 5 நாள்கள் தொடர்ந்து வெயிலில் காய்ந்தால் கிடைக்கும் பணத்தைப் போல பல மடங்கு பணம் சில மணி நேரங்களில் கிடைக்கிறதென்றால், புத்திசாலித்தனம் கொண்ட அனைவரும் தோனியின் முடிவைத்தான் எடுப்பார்கள் என்கிற வாதத்தையும் ரசிகர்கள் ஏற்க வேண்டும்.


டெஸ்ட் கிரிக்கெட் குறைந்து போவதாலோ, வீரர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாலோ கிரிக்கெட்டில் பாரம்பரியம் போய்விட்டது, தேசத்துக்காக ஆடும் அர்ப்பணிப்பு உணர்வு குறைந்துவிட்டது என்றெல்லாம் யாரும் பிதற்றக்கூடாது. அப்படி அதிர்ச்சியடையும் அளவுக்குத் திடீரென எதுவும் நடந்துவிடவில்லை.


ஏனென்றால், இந்திய கிரிக்கெட்டில் கடந்த 20 ஆண்டுகளாகவே இதெல்லாம் கிடையாது. அணியில் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்ûடுமென்றால், சொந்த அணி வீரரையே ரன் அவுட் ஆக்கலாம், சதம் அடிப்பதற்காக அணியைத் தோற்க வைக்கலாம் என்பதெல்லாம் இந்திய கிரிக்கெட்டின் எழுதப்படாத விதிமுறைகளாக மாறி பல காலம் ஆகிவிட்டது.


அதுவுமில்லாமல், டெஸ்ட் போட்டிகளில் இனி சாதனை செய்வதெற்கென்று ஏதுமில்லை. எல்லாவற்றையும் டெண்டுல்கரே செய்து முடித்துவிட்டார். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் இந்திய அணி இன்னும் குறைந்தது நூறு போட்டிகளிலாவது தோற்க நேரிடும். அதற்குள் இன்னொரு சதத்தையும் டெண்டுல்கர் அடித்து விடுவார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகள் மீது இந்தியர்களுக்கு வேறு எந்த சுவாரசியமும் இல்லை என்று கூறி, ஐசிசியே அவற்றைத் தடை செய்துவிடும். அதனால் எதிர் காலம் இல்லாத, சாதனை செய்யும் வாய்ப்பில்லாத டெஸ்ட் கிரிக்கெட்டை ஏன் ஆட வேண்டும் என்று தோனி போன்றவர்கள் கருதுவது நியாயம்தானே? அதனால்தான், திராவிட் போன்ற முதிர்ந்த வீரர்களே டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும் என்று, ஐபிஎல் போட்டிகளை நோக்கி நடையைக் கட்டிவிட்டார்.


கிரிக்கெட் எந்த வகையிலும் அழிந்துவிடக்கூடாது என்பதில் தோனி போன்றவர்கள் எந்த அளவுக்கு அக்கறையாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு அக்கறை நமது திரை நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், ஐபிஎல் போல சிசிஎல் என்கிற குழுவைத் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள இந்தியர்களை ஈர்த்திருக்கிறார்கள். ஐபிஎல்லுக்கும் சிசிஎல்லுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நடிகர்களாக மாறி மைதானத்துக்குள் நடிக்கிறார்கள். சிசிஎல் போட்டிகளில் நடிகர்கள் எல்லோரும் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அவ்வளவுதான்!


ஆனால், சிசிஎல் போட்டிகளின் வரவால் ஐபிஎல்லுக்கு ஒரு புதிய பிரச்னை முளைத்திருக்கிறது. விளம்பரங்களில் நடிப்பதால் நான் ஒரு நடிகன்தான் என்றுகூறி டெண்டுல்கர் வருமான வரியிலிருந்து விலக்கு கோரியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால், ஒரு நடிகன் என்கிற வகையில் சிசிஎல் போட்டிகளுக்கு அவர் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த தாவாவை இருதரப்பினருமே தீர்த்துக் கொள்ள வேண்டும்.


மற்றபடி ரசிகர்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆடு, மாடு, ஈமு கோழி, மாங்கொட்டையிலிருக்கும் வண்டு, அமீபா என எந்த உயிரினம் பேட்டை எடுத்துக் கொண்டு ஆட வந்தாலும் பார்ப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்....

..
.