திங்கள், 6 பிப்ரவரி, 2012

சகாரா ஊடலும் டீசல் திருடர்களும்

எனக்குத் தெரிந்தவரையில் யாருக்காகவும் எதற்காகவும் பிசிசிஐ வளைந்து கொடுத்தது கிடையாது. 2009-ம் ஆண்டு தேர்தலின்போது, ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டபோது, அதைச் செவிமெடுக்கவில்லை. அரசையே எதிர்த்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்குப் போய் போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளை இங்கே ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிடக்கூட இந்திய அரசால் முடியவில்லை.

அதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோதும், நாட்டுக்குத் திரும்பிச் சென்ற இங்கிலாந்து அணியை வலுக்கட்டயாகமாக திருப்பி அழைத்துவந்து ஆட வைத்தார்கள். ஐசிஎல் அமைப்புக்கு நேர்ந்த கதியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.


நாடு முழுவதும் சலுகைவிலையில் அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்டிருக்கும் மைதானங்களை, முழுக்க முழுக்க வர்த்தகத்துக்காகப் பயன்படுத்துவதைக்கூட கேட்பதற்கு நம்மால் முடியாது. உதாரணத்துக்கு டிஎன்சிஏவுக்கு தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கியது. இப்போதும் மாநில விலையில் டீசல் வழங்குவது உள்ளிட்ட படுபாதகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

அதாவது அப்பாவி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய மானியம்தான் ஐபிஎல் போட்டிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கும் மீன் பிடிப்பதற்கும் டீசல் இல்லாதபோது, இங்கே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு மானிய விலையில் தட்டுப்பாடு இல்லாமல் டீசல் கிடைக்கிறது என்றால், அது மோசடிதானே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், தன்னுடைய சொந்த வர்த்தக லாபத்துக்காக சேப்பாக்கம் மைதானத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று டிஎன்சிஏவில் இருப்பவர்களே சொல்கிறார்கள். ஐபிஎல் போட்டிகளுக்காக மட்டுமே மைதானம் புதுப்பிக்கப்படுகிறது. ஆனாலும் அதைத் கேட்க நாதியில்லை. அவ்வளவு செல்வாக்கு.


சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மாநகராட்சியின் எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அவசரகால முன்னேற்பாடுகள் எதுவும் கிடையாது. மேல்புற கேலரியில் அமரும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவசரமாக வெளியேற வேண்டுமானால் ஒரேயொரு குறுகியவழிதான் இருக்கிறது. ஆனாலும் தி.நகரில் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டதைப் போல சேப்பாக்கம் மைதானம் சீல் வைக்கப்படவில்லை. பேருக்கு இரண்டு கேலரிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன் இப்போதைய சொந்தக்காரர், உலகில் அதிகப் பணம் படைத்த விளையாட்டு அமைப்பின் தலைவர்.


ஆனால் இவர்களையும் பணிய வைத்திருக்கிறது சகாரா குழுமம். பெரு நிறுவனங்களின் நடவடிக்கைகள், நியாமற்ற வர்த்தக முறைகளுக்கு நாம் எதிரானவர்கள்தான் என்றாலும், ஐபிஎல்லை அடிபணிய வைத்திருப்பதில் முதல் வெற்றியைப் பெற்றவர்கள் என்பதற்காக சகாரா குழுமம் நமது பாராட்டுக்குரியவர்கள். பிசிசிஐ ஒன்றும் எதிர்க்க முடியாத அமைப்பல்ல என்பதை இது நிரூபித்திருக்கிறது.


புணே அணி எங்களுக்கு வேண்டாம் என்று சகாரா ஒதுங்கியிருப்பதன் மூலம் சுமார் 1700 கோடி ரூபாயை அவர்களுக்குத் திருப்பியளித்தாக வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதுவரையில் யாருக்கும் அடிபணியாத பிசிசிஐ இப்போது, சகாரா குழுமத்துடன் பேச்சு நடத்துவதற்கும் முன் வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக கிரிக்கெட்டையும், இந்திய மக்களையும், அரசையும் ஆட்டிப்படைத்து வந்த பிசிசிஐக்கு இது முதல் தோல்வி. கிரிக்கெட்டை சுயநல வாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும்வரை இது தொடர வேண்டும்.

.
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக