வெள்ளி, 31 டிசம்பர், 2010

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 50 - பிரபல பேட்டி

அடுத்த கிரிக்கெட் சீசன் வந்துவிட்டது. இன்னும் நமது பிளாக்கை தூசி தட்டாமல் வைத்திருந்தால் எப்படி? சச்சினும் தோனியும் கோபித்துக் கொள்ள மாட்டார்களா? அதனால், பரணிலிருந்து பிளாக்கை இறக்கி மீண்டும் எழுதலாம் என முடிவாயிற்று. முதலிலேயே ஒரு எச்சரிக்கை விட்டுவிடுகிறேன். இந்த பிளாக்கை நாட்டுப் பற்றி மிக்கவர்கள் படிக்க வேண்டாம். சொல்லியும் கேளாமல் படித்துவிட்டு, வலிக்கிறது என்று அழுபவர்களுக்கு நோஐபிஎல் அன் கோ எந்தக் காரணம் கொண்டும் ஆறுதல் சொல்ல முன்வராது. தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்பவர்கள் சொந்தச் செலவில்தான் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி மணியார்டர் அனுப்பச் சொல்லி தொந்தரவு செய்தால் தோனி அணி உலகக் கோப்பை வாங்குவது போல கனவு வருவதற்குச் சபிக்கப்படும்.


சரி பணிக்கு வருவோம்... மீண்டும் எழுதுவது என்பது முடிவாயிற்று. ஆனால் என்ன எழுதுவது நாம் ஒன்றும் எழுத்தாளனில்லையே. வாத்தியார் சொன்ன பேச்சைக் கேட்டு பத்தாம் வகுப்பில் நம்மால் பாடப்புத்தகத்தை மட்டும்தானே படிக்க முடிந்தது. பேசாமல் கோயிந்தன் சொன்ன புத்தகங்களை வாங்கிப் படித்திருந்தால் பிரபல எழுத்தாளராகியிருக்கலாம். எல்லாம் முடிந்து போயிற்று. இப்போது யோசித்து என்ன செய்வது? நம்மால் என்ன முடியுமோ அதை எழுதலாம், சந்திப் பிழை, கூறியதுகூறல், மயக்கப் பிழைகள் எல்லாம் வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து முன்பு போலவே எழுதி விடுவது என இறுதி முடிவெடுக்கப்பட்டு விட்டது.


எழுதலாம். முதலில் என்ன எழுதுவது. எதைக் கொண்டு பிள்ளையார் சுழி போடுவது என்ற தீராக் குழப்பம் 10 நாள்களாக பாத்ரூமில் தொந்தரவு செய்தது. இதைப் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், முன்பு எதைச் செய்தார்களோ அதையே செய்யுங்கள் அதுதான் லாபமும் தப்பிக்கும் வழியும் என்றார். எனக்குப் புரியவில்லை. சரி போகட்டும் சிபிஐ அலுவலகத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருந்த அவரிடம் இதற்கு மேல் விளக்கம் கேட்டால், நமது 2ஜி செல்போன் கனெக்ஷனைக் கட் செய்துவிடுவார் என்கிற பயத்தில் வந்துவிட்டேன். இறுதியில் நேற்று முன்தினம் இரவில் ஒரு கனவு வந்தது. பிரபலம் யாரிடமாவது ரெண்டு கேள்வி கேட்டு பேட்டி எடுப்பது போல. யுரேகா.. யுரேகா...


யார் அந்தப் பிரபலம்... சச்சின், தோனி, ரஜினிகாந்த் ஆகியோரைவிட பிரபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தோம். அவர் வேறுயாருமல்ல  பொன்மனச் செம்மலும், பார்புகழும் பிளாக்கர்களில் ஒருவருமான நோஐபிஎல் பிளாக்கின் அதிபர்தான்.  இந்தப் பேட்டி யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.


நிருபர்: வணக்கம் ஐயா.


நோஐபிஎல் அதிபர்: வணக்கம்


நிருபர்: கிரிக்கெட் மீது உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?


நோஐஅ: அது ஒரு சுவாரஸ்யமான கதை. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருவேன். 9 மணிக்கு பள்ளியென்றால் 8 மணிக்கு வந்துவிடுவேன். ஆனாலும் பத்தாம் வகுப்பு வந்ததும் ஆங்கில ஆசிரியர் எஸ்ஸே எழுதச் சொல்லும்போது, மாற்றான் மொழியை எழுதுவதற்கு எனது கையும் மனமும் நடுங்கின. அதில் இருந்து தப்புவதற்காகாகத்தான் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆங்கில வகுப்புகளைப் புறக்கணிப்பதுடன் நமது சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் முடிவு செய்தேன்.

நிருபர்: அருமை. உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?

நோஐஅ: சச்சின்...

நிருபர்: அவரை ஏன் பிடிக்கும்?

நோஐஅ: ஏன்னா அவர்தான் மற்ற எல்லா டீமுக்கும் உலகக்கோப்பை வாங்கி கொடுத்தார்.


(பேட்டி தொடரும்)
.
.