வியாழன், 15 டிசம்பர், 2011

சாத்தான்களும் யூதாஸ்களும்

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை வந்த அணிகள் 16 ஆட்டங்களில் ஆடியிருந்தன. 16 ஆட்டங்கள் என்றால் ஒவ்வொரு வீரரும் அதிகபட்சமாக 48 மணி நேரம் களத்தில் இருந்திருப்பார்கள்.

பேட்டிங் என்றால் பன்னாட்டு நிறுவன விளம்பரங்கள் அச்சிட்ட பேட்டை கேமரா முன் காட்டுவதிலேயே பாதி நேரம் போய்விடும். பீல்டிங் நேரத்தில் வீரர்கள் எவ்வளவு "சுறுசுறுப்பாக' இருப்பார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்போதாவது பந்து வந்தால் ஓட வேண்டும். இல்லையென்றால் வழக்கம் போல ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

48 மணி நேரத்தில் இவர்கள் செய்த இந்த மாதிரியான வேலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு தெரியுமா? ரூபாயில் சொல்வதென்றால் சில கோடிகள். அதுவும் சென்னை மண்ணின் மைந்தனாகிப் போன தோனியின் வருமானம் 10 கோடி ரூபாயையும் தாண்டும் என்கிறார்கள். இப்படி அள்ளிவீசப்படும் பணம்தான் கிரிக்கெட்டையும், வாரியத்தையும் பெருந்தலைகள் மொய்ப்பதற்குக் காரணம்.

இந்தியாவில் கிரிக்கெட்டைப் பற்றி விமர்சித்தால் ஒன்று தேசத் துரோகியாக வேண்டியிருக்கும். அல்லது வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என்பார்கள். கிரிக்கெட் மீது நம் மக்கள் வைத்திருக்கும் பற்று அப்படி. சரி, கிரிக்கெட் என்கிற விளையாட்டை விடுங்கள். அதை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு பற்றி யாராவது கைநீட்டிக் குறைகூறிவிட முடியுமா? அந்த அமைப்பை எதிர்த்து இதுவரை யாராவது ஜெயிக்க முடிந்திருக்கிறதா? ஒரு காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த கபில்தேவ்கூட, கொஞ்சகாலம் பிசிசிஐக்கு எதிராகப் போராடிப் பார்த்துவிட்டு, கடைசியில் சரணடைந்து விட்டார்.

இப்போது பிசிசிஐக்கு எதிராகக் கிளம்பியிருப்பவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான அனில் கும்ப்ளே. அவரது பேரைச் சொன்னதும் இரு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. மற்றொன்று 2002-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக செயிண்ட் ஜான் மைதானத்தில் நடந்த போட்டியில் தில்லான் அடித்த பந்து தாடையைக் கிழித்த பிறகும், தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து 14 ஓவர்கள் பந்து வீசிய துணிவு. இத்தகைய வீரர் இப்போது, பிசிசிஐக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார். கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பிசிசிஐ மீது எத்தனையோ புகார்கள் எழுந்த போதெல்லாம் வராத எதிர்ப்பு, இப்போது ஏன் வந்திருக்கிறது என்று எல்லோரும் கேட்பது புரிகிறது. ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து வந்தார் கும்ப்ளே. இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து, திறமையானவர்களை அடையாளம் காண்பதற்காக கடந்த 2000-ம் ஆண்டில் ராஜ்சிங் துங்கர்பூர் தொடங்கிய அமைப்பு இது. அண்மையில் சதமடித்த மனோஜ் திவாரி உள்பட பலர் இந்த அமைப்பின் மூலம் அணிக்கு வந்திருக்கிறார்கள்.

தன்னுடைய கனவுத் திட்டங்கள் எதையும் பிசிசிஐ அமைப்பு ஏற்கவில்லை என்றும், வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக தாம் தொடர முடியாது என்றும் கூறி தனது பதவியை கும்ப்ளே ராஜிநாமா செய்திருக்கிறார். பிசிசிஐ நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார். ஆனால், கும்ப்ளேவின் பதவி விலகலுக்குப் பின்னணியில் இருக்கும் பல்வேறு தகவல்கள் இப்போது கசிந்து கொண்டிருக்கின்றன. வீரர்களின் காயங்கள் தொடர்பான மேலாண்மைக்கான புதிய திட்டத்தை கும்ப்ளே முன்வைத்திருக்கிறார்.

ரூ.15 கோடி செலவு பிடிக்கும் இந்தத் திட்டம் கணினி மென்பொருளை மையமாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் இதற்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பதில் கும்ப்ளே பிடிவாதமாக இருந்ததாகவும், ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து கமிஷன் பெற முயற்சிக்கிறார் என்று கூறி வாரியம் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகே கும்ப்ளே பதவி விலகியிருக்கிறார்.

தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து கொண்டே, டென்விக் என்கிற கிரிக்கெட் வீரர்களுக்கான நிறுவனத்தையும் நடத்தி வந்தார் கும்ப்ளே. அந்த நிறுவனம் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக தனது பதவியை பயன்படுத்திக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

உலகக் கோப்பைக்கு வரி செலுத்த மறுத்தது, சூதாட்டக்காரர்களுடன் முன்னணி வீரர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி இன்றுவரை மூடி மறைப்பது, டால்மியா மீதான புகார்களை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொண்டது, ஐபிஎல் போட்டி மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட லலித் மோடி மீது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கருணைகாட்டுவது, இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்துக்கான கணக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர மறுப்பது என பிசிசிஐயின் எண்ணற்ற அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்ட நமக்கு கும்ப்ளேவின் விவகாரம் பெரிதாகத் தெரியவில்லை.

கும்ப்ளேவுக்கு ஆதரவாக பிசிசிஐ அமைப்பைத் தாக்கியிருக்கும் காவஸ்கர்கூட, தனது ஐபிஎல் சேவைகளுக்கு ரூ.4 கோடி தரவில்லை என்றுதான் குற்றம்சாட்டியிருக்கிறார். கபில்தேவ், கும்ப்ளே, லலித் மோடி, காவஸ்கர் போன்றோரெல்லாம் பிசிசிஐ மீது குற்றம்சாட்டுவதும், முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாகக் கூறுவதும் அவர்களது சுயநலத்துக்குத்தானேயன்றி, அதில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்குச் சாதகமாக எல்லாம் நடந்தால் பிசிசிஐயுடன் கைகோத்துவிட தயங்கவே மாட்டார்கள்.

மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் பறித்து பதுக்கி வைத்துக் கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக்கூட தர மாட்டோம் என்று கூறும் பிசிசிஐ அமைப்பையும் அதற்குத் துணை போவோரையும் ரசிகர்களே எதிர்த்தால்தான் உண்டு.

..

புதன், 2 நவம்பர், 2011

டெண்டுல்கர்னா யாரு, பெரிய அப்பா டக்கரா?

கால்பந்து ஜாம்பவான்கள் பீலேவும், ரொனால்டோவும் நம் ஊர் சாலையில் நடந்து போனால்கூட யாருக்கும் அடையாளம் தெரியாது. கிறிஸ் எவர்ட், ஆர்தர் ஆஷ் ஆகியோரை யார் என்று கேட்பார்கள். ஃபார்முலா -1 என்றால் பிதாகரஸின் இன்னொரு சூத்திரம் என்று தப்புத் தப்பாகப் புரிந்து கொள்வார்கள்.

இவையெல்லாம் வெளிநாட்டு சங்கதிகள் என்பதால் நமக்குத் தெரியவில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை வரிசை மாறாமல் சொல்வதற்குக்கூட நமக்குத் தெரியும். யார் எதில் தேர்ந்தவர், என்னென்ன சாதனை புரிந்திருக்கிறார் என்பதெல்லாம்கூட நமக்கு அத்துப்படி. கிரிக்கெட் வீரர்கள் நின்றாலும் நடந்தாலும், செய்தியில் வந்துவிடுவார்கள்.

டெண்டுல்கர் என்றால் நமக்கு கடவுள். அவர் காயமடைந்து போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்னால், இளைஞர்களுக்கு வழி விடுகிறார் என்பார்கள். திடீரென அணியில் வந்து ஆடினால், கடினமான நேரத்தில் அணியைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று கதையை மாற்றுவார்கள்.

அவர் பல கோடி ரூபாயில் பழைய வீடு ஒன்றை வாங்கிக் குடியேறியதை பெரும்பாலான ஊடகங்களும் எழுதின. ஆனால் அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் வீட்டில் குடியேறுவதற்கான சான்றைப் பெறவில்லை. அதற்கு சில லட்சங்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்து ஃபெராரி காரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து முறைகேடாக வரிவிலக்குக் கோரினார். இன்னொரு முறை, தாம் ஒரு கலைஞர் எனவும், அதற்காக வெளிநாடுகளில் கிடைக்கும் அன்னியச் செலாவணியில் தமக்கு விலக்குத் தர வேண்டும் எனவும் கேட்டார். இந்த நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் சிலரும் ஆதரவாக இருந்தனர்.

வீட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயத்திலும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவர் டெண்டுல்கருக்கு ஆதரவாக மாநகராட்சியில் முறையிட்டார். நாட்டுக்காக அவர் நிறைய பெருமைகளைத் தேடித் தந்ததாகவும் வாதாடினார். ஆனாலும் அபராதம் விதிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் இப்போது அபராதத்தைக் கட்டி அந்தச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது.

சச்சின் வீடு கட்டியதிலும் குடியேறியதிலும் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரர் என்பதால் மட்டுமே அவரது சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதும், சலுகைகள் காட்ட முற்படுவதும்தான் ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஒலிம்பிக் போட்டிகளிலும், பிற சர்வதேசப் போட்டிகளிலும் பதக்கங்களைக் குவிப்பவர்களை இந்த அளவுக்கு நாம் ஊக்குவிப்பதில்லை என்பது காலம்காலமாகக் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டு. ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அசுர பலத்தால் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணப்படும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.

மத்திய அரசு இயற்ற முயலும் விளையாட்டு மசோதா, தங்களுடைய எதேச்சதிகார நடைமுறைகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் அந்த மசோதாவை கிரிக்கெட் வாரியத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ஊக்கமருந்து சோதனை உள்ளிட்ட உலக விளையாட்டுகளுக்கு விதிக்கப்படும் எந்தவிதமான சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டோம் என்பதிலும் முரட்டுப் பிடிவாதமாக இருக்கின்றனர். பணபலமும், அரசியல் செல்வாக்கும் இதற்கு உடந்தையாக இருக்கின்றன.

கிரிக்கெட் மட்டும்தான் இந்தியர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு என்கிற தோற்றம் இருக்கிறது. உண்மை அதுவன்று. மற்ற எல்லா விளையாட்டுகளையும் முடக்குவதன் மூலம் நமது மக்களிடையே கிரிக்கெட் திணிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் சரி.

அதனால்தான் வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே முழுமையாகத் தெரிந்த ஓர் ஆட்டத்தை வைத்துக் கொண்டு "உலக' கோப்பை போட்டிகளை நடத்துகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த அனைவரும் இந்த மாபெரும் பொய்யை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் உசுப்பேற்றி ஏமாற்றுவதுபோல வெளிநாட்டுக்காரர்களை ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் எஃப் 1 போட்டிகளைப் பற்றி செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, சச்சினைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர் யார், அவர் பின்னால் ஏன் இத்தனை கூட்டம், பெரிய பணக்காரரா என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றபோதும் சச்சினுக்கு இதே கதிதான் நேர்ந்தது.

கிரிக்கெட்டில் சச்சின் மாபெரும் வீரர். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்கிற வகையில் கிரிக்கெட்டை முழுமையாக ஆடத் தெரிந்த வெறும் 10 நாடுகளுக்குத்தான். உலகத்துக்கே அல்ல. இந்த விளையாட்டில் உலகக் கோப்பையை வென்றதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறெதுவும் இருக்க முடியாது.

கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும் புகழும் பணமும் அவர்களது திறமையைவிடப் பல மடங்கு அதிகமானது. வேறு எல்லா விளையாட்டுகளையும் ஒழிப்பதாலும், ஊடகங்கள் உருவாக்கிய பிம்பங்களாலும் மட்டுமே அவர்களால் இந்திய இளைஞர்களுக்குக் கடவுளராக முடிந்திருக்கிறது. அந்த ஸ்பெயின் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி அந்த போலி பிம்பங்களை உடைத்திருக்கிறது.
..

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

அடங்க மறுக்கும் பிசிசிஐ

கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மாத்திரமல்ல, அது மயக்கும் களியாட்டம். அந்தக் களியாட்டத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். இதைச் சாதுர்யமாகப் பணமாக்கிக் கொண்டிருக்கிறது பிசிசிஐ. கடந்த சில ஆண்டுகளாக உலகக் கிரிக்கெட்டும் இந்தியர்களின் கையில்தான் இருக்கிறது என்பதால் பிசிசிஐயின் வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை.

ஒருபக்கம் அன்னியச் செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பிசிசிஐ மீது எழுகின்றன.

இன்னொருபக்கம் கிரிக்கெட் வீரர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதா, பாரத ரத்னா கொடுப்பதா என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்கிறது என்றால் நடு இரவானாலும் பல கோடிபேர் டி.வி. முன் உட்கார்ந்திருப்பதை இன்னமும் பார்க்க முடிகிறது. இதுதான் கிரிக்கெட். இதுதான் இந்தியா.

தோனியும் சச்சினும் குளிர்பான விளம்பரத்தில் வந்துவிட்டால் அது நஞ்சேயானாலும் வாங்கிக் குடித்துவிடுவதற்கு இந்திய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் இளைஞர்களுக்கு ரோல் மாடலாகக் காட்டிக் கொள்ளும் தோனி, ஹர்பஜன் போன்றோர் மதுபான விளம்பரங்களில் துணிச்சலாக நடிக்கிறார்கள். தேவைப்பட்டால், அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

பிறகு மீண்டும் மைதானத்தில் குலாவிக் கொள்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் இதையெல்லாம் பொருள்படுத்துவதில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் நம்மை மயக்கி வைத்திருக்கிறது.

எதற்கெடுத்தாலும் இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தும் பிசிசிஐ, ஏதாவது சிக்கல் என்றால் மட்டும், தான் ஒரு தனியார் அமைப்பு என்பதை நினைவூட்டுகிறது.

ஒரு நிறுவனம் என்கிற வகையில் கட்டுப்படுத்தாலாமே தவிர, அதன் நடவடிக்கைகளில் இந்திய அரசு தலையிட முடியாது. கணக்கு வழக்குகளைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் கோர முடியாது.

அரசு நிதியுதவியைப் பெறவில்லை என்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பிசிசிஐயிடம் செல்லுபடியாகாது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் மூலம் பல ஆயிரம் கோடிகளைக் குவித்திருக்கிறது பிசிசிஐ. அன்னியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டு அந்த அமைப்பின் மீது இருக்கிறது.

ஆனால், காமன்வெல்த் போட்டியில் விரைந்து செயல்பட்ட சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற அமைப்புகள் ஐபிஎல் மோசடிகள் தொடர்பாக அதிரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே, ஏன்? காரணம் இருக்கிறது.

மாபெரும் ஊழல்கள் தொடங்குவதே அரசியல்வாதிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையில் உருவாகும் கள்ளத்தனமான தொடர்பில்தான் என்று கூறினால் யாரும் மறுக்க மாட்டார்கள். கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் பெட்ரோலிய வளம் கொள்ளை போவது, சொகுசு நகரம் அமைப்பதற்காக மலைகளை அழிக்கப்படுவது, தொழிற்சாலைகளுக்காக அடிமாட்டு விலைக்கு விவசாய நிலங்களை அபகரிப்பதற்கும் இந்தத் தொடர்புதான் காரணம். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததும், காமன்வெல்த் போட்டியால் இந்தியா அவமானப்பட நேர்ந்ததும் இதனால்தான்.

பிசிசிஐ என்பதும் பெரு நிறுவனம்தான். உலகத்திலேயே அதிகம் சம்பாதிக்கும் இரண்டாவது பெரிய விளையாட்டு அமைப்பு. இந்த அமைப்பை அரசியல்வாதிகள் பலர் ஆக்கிரமித்திருப்பதுதான் பிசிசிஐயின் மறைமுகச் செல்வாக்குக்கும் மோசடிகள் மறைக்கப்படுவதற்கும் காரண ம்.

விளையாட்டு அமைப்புகளின், அதிலும் குறிப்பாக பிசிசிஐயின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதாவை மத்திய விளையாட்டு அமைச்சகம் உருவாக்கியது. விளையாட்டு அமைப்புகள் அனைத்தையும் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவருவது இதன் முக்கிய அம்சமாகும்.

விளையாட்டு அமைப்புகளில் 70 வயதுக்கு மேற்பட்டோர் பதவி வகிக்க முடியாது, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகளை இந்த மசோதா வரையறுத்திருக்கிறது.

இந்த மசோதா சட்டமானால், பிசிசிஐ மட்டுமல்ல, இந்திய ஒலிம்பிக் சங்கம், தட கள சம்மேளனம், வில்வித்தை சம்மேளனம் போன்றவற்றில் 80 சதவீதம் பேருக்குப் பதவி போய்விடும்.

அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அரசுப் பதவி வகிப்பவர்கள் எந்த விளையாட்டு அமைப்பிலும் பதவி வகிக்க முடியாது. ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால், விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கும் மசோதா இது.

இது போதாதா பிசிசிஐ உள்ளிட்ட அமைப்புகளும் அதில் பதவி வகிக்கும் அரசியல்வாதிகளும் பொங்கி எழுவதற்கு? இந்த மசோதா அமைச்சரவையில் விவாதத்துக்கு வந்தபோது, அமைச்சர்கள் சரத்பவார், பரூக் அப்துல்லா, விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோர் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

மூன்று பேரும் கிரிக்கெட் அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவூட்டியாக வேண்டும். இவர்களின் எதிர்ப்பால், மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது.

லோக்பால் மசோதா, மகளிர் மசோதாபோல விளையாட்டு மேம்பாட்டு மசோதாவும் தங்களது பரந்துபட்ட அதிகாரத்தைப் பறிக்கும் என்பதுதான் அவர்களது எதிர்ப்புக்குக் காரணமேயன்றி விளையாட்டின் மீதான அக்கறை காரணமாக இருக்க முடியாது.

விளையாட்டுகளை மேம்படுத்துவதுடன், அவற்றைக் கொண்டு நடைபெறும் ஊழலையும் ஒழிக்க வேண்டுமானால், இந்த எதிர்ப்புகளையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், நமது நாட்டின் பெயரைப் பயன்படுத்த பிசிசிஐ உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
..
.

புதன், 27 ஜூலை, 2011

சச்சினுக்கு தண்டனை கிடையாதா?

 உடல்நிலை சரியில்லாவிட்டால் எந்த ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதுவும் குழுப் போட்டிகள் என்றால் உடல் தகுதியை நிரூபித்தே ஆக வேண்டும். ஏனென்றால் உடல் தகுதி இல்லாத ஒருவருக்குப் பதிலாக வேறொருவரை களமிறக்க முடியும். ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் நம் ஆள்கள் இந்த விதியை காற்றில் பறக்க விடுகிறார்கள்.

 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே நமது சச்சின் தெண்டுல்கருக்கு காய்ச்சலாம். ஆனாலும் மைதானத்தில் அவர் இருந்தார். ஏனய்யா காய்ச்சலுடன் ஆடினீர்கள் என்று கேட்டால், "காய்ச்சலையும் பொருள்படுத்தாமல் நாட்டுக்காக ஆடினேன்" என்கிற ரீதியில் பதில் வரும். அவரது பக்தகோடிகள் இதையும் கேட்டு "சல்யூட்" அடிப்பார்கள். சச்சின் இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் தோனி டீம் இந்தப் போட்டியில் ஜெயித்திருக்கக்கூடும் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அனில் கும்ளே தலை முழுக்கு கட்டுப்போட்டு வந்து ஒரு போட்டியில் பந்து வீசினார். ஆனால் அதெல்லாம் ஆடுகளத்திலேயே காயம் ஏற்பட்ட காயம். ஆனால், காய்ச்சல் இருக்கிறது எனத் தெரிந்தே ஒருவர் ஆடுகளத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு இந்த அணியின் கேப்டனும் தலையசைத்திருக்கிறார். சுய நலத்துக்காக சொந்தக் குழுவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் தண்டனை கிடையாதென்றால்...
.

.

வெள்ளி, 22 ஜூலை, 2011

சச்சின் நல்லவரா, ரொம்ப நல்லவரா?

சச்சினைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் எதையும் எழுதக்கூடாது என்பதற்காகவே மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் ஏதாவது கூறி நோஐபிஎல் அதிபரை எழுத வைத்து விடுகிறார்கள். சச்சினைப் பற்றி உனக்கென்ன தெரியும், உன்னால் நூறு மீட்டர் போட்டியில் ஓட முடியுமா, நாலு சுவருக்குள் அடைந்து கொண்டு இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். இதனால் நோஐபிஎல் அதிபர் மனமுடைந்த போய் இதை எழுத வேண்டியிருக்கிறது.

 அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை சிக்ஸ்பேக்குக்கு சொந்தக்காரர்தான் இந்த நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனத்தின் சிஇஓ. நூறு மீட்டர் என்ன 1500 மீ போட்டிகளிலும் 400 பெருக்கல் 4 ரிலே ஓட்டங்களிலும் அவர் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். முக்கியமான தருணங்களில் கிரிக்கெட் அணியை வழிநடத்தியிருக்கிறார்.

2000-ம் ஆண்டு வரை சச்சினை கிரிக்கெட் கடவுளாக நினைத்து வந்திருக்கிறார். சச்சின் ஒவ்வொரு ரன் எடுக்கும்போது அந்தப் புள்ளி விவரங்களை மனதிலேயே அப்டேட் செய்து கொண்டிருந்தவர்தான் நோஐபிஎல் அதிபர்.  ஒருநாள் போட்டியில் சச்சின் எப்போது முதல் சதம் அடித்தார், டெஸ்ட் போட்டியில் எப்போது சதம் அடித்தார் என்பதெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரியும், ஏனென்றால் பரீட்சைகளைத் தவறவிட்டு தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அவை. இதைவிட சச்சினை விமர்ச்சிப்பதற்கு வேறு ஏதாவது தகுதி வேண்டுமா எனத் தெரியவில்லை.

சச்சின் என்ன தப்பு செய்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். சூதாட்டத்தை மறைத்தது, ஃபெராரி கார் விவகாரம், இப்போது வருமான வரியைக் குறைப்பதற்காக நடிகர் என்று பொய் சொன்னது எல்லாம் சின்னச் சின்ன தவறுதானே என்கிறார்கள். நமது நாட்டின் புகழுக்காக ஆடும் செல்லப் பிள்ளையின் இந்தத் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம்தானே என்றும் கேட்கிறார்கள். இதற்கு நோ ஐபிஎல் அதிபர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

1984-ல் இந்திரா காந்தி இறந்தபிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்து ஆட்சியைப் பிடித்தார். இப்போது சச்சின் எப்படியோ அப்படியே ராஜீவ் காந்தியும். இந்தியாவுக்கே செல்லப்பிள்ளை. அவர் அரசியலில், இவர் விளையாட்டில் அவ்வளவுதான் வேறுபாடு.

ராஜீவ் காலத்தில்தான் ஈழத்துக்கு அமைதிப்படை அனுப்பியது, போபர்ஸ் ஊழல் ஆகியவை நடந்தன. அமைதிப்படையை அனுப்பியதற்கான விளைவுகள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொன்று போபர்ஸ். சில கோடிகள்தானே என்று பலரும் மன்னித்து விட்டார்கள். அப்போதும் இந்தச் செல்ப்பிள்ளை கான்செப்ட்தான் ராஜீவ் தப்பித்துக் கொள்ள உதவியது. போபர்ஸ் ஆதாரங்களை பாக்கெட்டிலேயே வைத்திருப்பதாகக் கூறிவந்த வி.பி.சிங்கும் எதற்கு மயங்கினாரோ தெரியவில்லை. ஆட்சிக்கு வந்ததும் போபர்ஸை கிடப்பில் போட்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது.

ஒரேயொரு போபர்ஸ் பிரச்னைக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்குமானால், ஹர்ஷத் மேத்தா விவகாரமும், ஜார்க்கண்ட் எம்பிகளுக்கு பணம் கொடுத்ததும், நரசிம்மராவ் மகனின் ஊழல் விவகாரமும், சந்திராசாமியின் செயிண்ட் கிட்ஸ் மோசடியும், அவ்வளவு ஏன் இன்றைக்கு 2ஜி ஊழல் கூட நடந்திருக்காது. யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருந்திருக்கும்.

இதே கரிசனம்தான் சச்சின் தெண்டுல்கர் விவகாரத்திலும் காட்டப்படுகிறது. அவரைப்போல ஆடமுடியுமா என்கிற ஒரே பதிலில் அவரது எல்லாவிதமான மோசடிகளையும் முடக்கப்பார்க்கிறார்கள். ஒரே நாளில் பல லட்சம் கோடி சம்பாதித்த ஆ.ராசாவுக்கு கூடதான் திறமை இருக்கிறது. அவருடன் யாராவது போட்டி போட முடியுமா?

தெண்டுல்கர் என்பதால் மட்டும் ஆடம்பரத்துக்காக வரிவிலக்குக் கோருவதை நியாயப்படுத்த முடியுமா? ஒரு நாளைக்கு ரூ.20க்கும் கீழே வருமானம் உள்ளோர் 37 சதவீதத்துக்கும் அதிகமானோர் இருக்கும் ஒரு நாட்டில், இதை நியாயப்படுத்துவதற்கும் சிலர் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி "சாதகமாக" நடந்து கொள்வதை ஆதரிப்பதுதான் எல்லாச் சீர்கேட்டுக்கும் காரணம்.

இன்று வரைக்கும் ஸ்பாட் ஃபிக்சிங் இருக்கிறது. ஐசிசியே இதை அவ்வப்போது ஒப்புக்கொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு அசாரை பலிகடாவாக்கியவர்கள், சச்சின் போன்றவர்களையும், பிசிசிஐயும் தப்பிக்க விட்டதால் வந்த வினைதான் இது. சச்சின் திறமையானவர்தான். அவருக்கு நிகர் யாருமில்லைதான். ஆனால் அது மைதானத்துக்குள்ளே மட்டும்தான். டிரஸ்ஸிங் ரூமிலும், மைதானத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக்கூடாது என்றால், நாட்டுக்கு அவர் சேவை செய்கிறார், பாரத ரத்னா வழங்க வேண்டும் என்கிற பேச்செல்லாம் எங்கும் கேட்கக்கூடாது.

.
..
..

புதன், 20 ஜூலை, 2011

தோனியின் சரக்குச் சண்டையும் பஜ்ஜியின் சீக்கிய மதமும்

சரக்கு அடிப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி எழுதும் அளவுக்கு அனுபவம் நோஐபிஎல் அதிபருக்கு இல்லை. எப்போதோ ஒரு காலத்தில் நண்பர்களுடன் பாரில் அமர்ந்து கோக-கோலாவும், ஆபாயிலும், ஜிஞ்சர் சிக்கனும், மட்டன் கொத்தும் சாப்பிட்டதோடு சரி. அந்த நேரத்தில் விஸ்கி, பிராந்தி ஆகியவற்றுடன் இன்னபிற அயிட்டங்களும் சேர்ந்த ஒரு காக்டெயில் வாசனை வரும். அந்த வாசனையைப் பிடித்த அனுபவம் மட்டுமே நோஐபிஎல் அதிபருக்கு இருக்கிறது. இதை ம்ட்டுமே கொண்டு  சரக்கு சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் எழுதத் துணிந்திருக்கிறார்.

 இந்தக் கட்டுரை தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோருடைய சரக்கு விளம்பரங்களைப் பற்றியது. ஹர்பஜனின் ராயல் ஸ்டேக் விளம்பரத்தைக் கேலி செய்து மால்யாவின் மெக்டவல் விளம்பரம் இருப்பதாக ஹர்பஜனின் அம்மா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மால்யாவின் விளம்பரத்தில் நடித்தது 121 கோடி மக்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனி.

 ஹர்பஜனை மட்டுமன்றி, அவரது குடும்பத்தினரையும் அந்த விளம்பரம் கேலிசெய்வதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தோனி நடித்த விளம்பரத்தில் சீக்கிய சமூகமே கேலி செய்யப்பட்டிருப்பதாகவும் ஹர்பஜனின் அம்மா கூறுயிருக்கிறார். நோஐபிஎல் அதிபருக்கு இந்த இடத்தில்தான் சந்தேகம். சீக்கிய மத அடையாளங்களை அணிந்து கொண்டு, சரக்கி விளம்பரத்தில் நடித்து, கல்லாப்பெட்டியை நிரம்பும்போது, சீக்கிய மதத்தின் மானம் போகவில்லையா. தனது சொந்த மகனே ஊர் மக்களையெல்லாம் தண்ணியடியுங்கள் என்று பரிந்துரை செய்யும்போது மத உணர்வுகள் வந்து தடுக்கவில்லையா?

 இப்போதும் ஹர்பஜனுக்கும் அவரது குடும்பத்துக்கும் மத உணர்வும், குடும்ப பாசமும் இழுத்ததால் தோனியின் விளம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரியவில்லை. ஹர்பஜன் கேலி செய்யப்பட்டதால் விளம்பர வருவாய் போய்விடக்கூடாது என்பதுதான் அவர்கள் எண்ணம். இதில் கார்ப்பரேட் வர்த்தகப் பின்னணியும், நெருக்கடியும் கண்டிப்பாக இருக்கும்.
 உண்மை இப்படியிருக்க  மதத்தை சுயலாபத்துக்காக வம்புக்கிழுக்கும் ஹர்பஜன் அண்ட் கோவுக்கு ஏகன் படத்தை இடைவேளை வரையாவது பார்க்க வைத்து தண்டனை தர வேண்டு்ம். ஏற்கெனவே சைமண்ட்ஸை திட்டியதற்காக வேட்டைகாரன் தண்டைனை நிலுவையில் இருக்கிறது.

 அது போகட்டும்  தோனியிடம் கேட்டால், எனக்கு விளம்பரத்தின் முழு ஸ்கிரிப்டும் தெரியாது என்று மழுப்பியிருக்கிறார். அதாவது தமது அணி வீரர் போன்ற ஒருவரை காதோடு அப்பும் காட்சி இருப்பது அவருக்குத் தெரியாதாம். இப்போது தெரிந்த பிறகு மட்டும் என்ன செய்யப் போகிறார். எதுவுமில்லை. ஏனென்றால் பஜ்ஜி மதத்தை மட்டும்தான் விற்கிறார். நீங்கள் விற்பதற்கும் அடகுவைப்பதற்கும்தான் 121கோடி தலைகள் இருக்கின்றனவே.

..
.

வியாழன், 23 ஜூன், 2011

கிரிக்கெட் வாரியமும் தமிழர் கோபமும்!

நமது நாட்டில் கிரிக்கெட்டை ஒட்டமொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும் பிசிசிஐ, இப்போது உலக கிரிக்கெட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஐபிஎல் தொடங்கி வெற்றிகரமாக வியாபாரம் ஆனதும் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி தங்களுக்கு வந்துவிட்டதாக பவார், மனோகர் குழு நினைத்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இலங்கை பிரீமியர் லீக் மீதான அடக்குமுறை.

 இலங்கை மீதும் அதன் அதன் அதிபர் மீதும் நமக்குக் வெளிப்படுத்த முடியாத கோபம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகக் கோப்பை இறுதி டிராமா போட்டியில் தோனி குழுவினர் ஜெயிக்க வேண்டும் என்று தமிழர்கள் அங்கப் பிரதட்சணம் செய்ததற்கும் இந்தக் கோபம்தான் காரணம். எம்ஜிஆரும் நம்பியாரும் சண்டையிட்டால் டி.வி.பொட்டி முன் நின்று குதித்துக் கொண்டிருப்போமே, அதே பழக்கம்தான் இந்த விஷயத்திலும் தொடர்கிறது. நோஐபிஎல அதிபரைப் போல் போல் நடுநிலையாகவும், நேர்மையாகவும் சிந்திக்கக்கூடிய யோக்கியவான்கள் ஆயிரம் பேர் வந்தாலும் இதையெல்லாம் திருத்த முடியாது. யார் நினைத்தாலும் பிசிசிஐ இப்போதைக்கு கலைக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது.

 இருந்தாலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியிருப்பதன் மூலம் பிசிசிஐ புதிய அத்தியாயத்தைப் படைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. மும்பையில் இலங்கை அணியை தோனி நாடகக் குழுவினர் புரட்டியபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தமிழர்கள் இதற்காகவும் மகிழ்ச்சியடையலாம். ஏனென்றால், இந்திய அரசு ஒரு போதும் இலங்கை அரசை எச்சரித்ததோ மிரட்டியதோ இல்லை. ஆனால் நாட்டுக்காகவே ஆடும் சாமுராய்கள் நிறைந்த நமது கிரிக்கெட் அணியை உருவாக்கிய வாரியம், இலங்கையை எக்கச்சக்கமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 சானல்-4 புட்டுப்புட்டு வைத்தபோதும், மூன் விலாவாரியாக விவரித்தபோதும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால், இந்தவகையிலாவது பழிதீர்த்துக் கொண்டதாக உணர்வோம். அதுதான் நமது கிரிக்கெட் வாரியத்துக்கும், அத்துடன் இணைந்த வியாபார வஸ்துக்களான சச்சின், தோனிக்கும் மட்டுமல்ல, நமது தேசபக்திக்கும் நல்லது.



.

திங்கள், 23 மே, 2011

சச்சின் தெண்டுல்கரின் லேட்டஸ்ட் மோசடி!












சச்சின் தெண்டுல்கர் ஒரு மாபெரும் நடிகர் என்று நோஐபிஎல் அதிபர் உள்பட நல்லோர் அனைவரும் வெகு காலம் முன்பே சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் தேச பக்தர்கள்தான் அதை ஏற்கவில்லை. அவர் தேசத்துக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்று கருதுபவர் என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சச்சின் தெண்டுல்கரே முன்வந்து தாம் ஒரு நடிகர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். நம்மிடம் இல்லை. வருமான வரித்துறையிடம்.

விளம்பரத்தில் நடிப்பதன் மூலமும் வேறு பல வகைகளிலும் 2002-03ம் வரிஆய்வு ஆண்டில் சச்சின் தெண்டுல்கருக்கு ரூ.18.கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இதுபோக அன்னியச் செலாவணி வகையில் ரூ.5.92 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. கலைஞர்களுக்கு அன்னியச் செலாவணி வருவாயில் அளிக்கப்படும் வரிவிலக்கை தமக்கும் வழங்க வேண்டும் என்று தெண்டுல்கர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. யாரோ "தேச விரோத" அதிகாரி தெண்டுல்கரின் மகிமை புரியாமல், அவர் நாட்டுக்கு ஆற்றும் சேவை தெரியாமல்,  வரிவிலக்கு வழங்க முடியாது என்று கூறிவிட்டாரம். சச்சின் ஒரு நடிகரோ கலைஞரோ அல்ல என்றும் கூறிவிட்டார்.

ஆனால் பாரத ரத்னாவுக்கு தகுதியுடையவராக உலகமே நம்பிக்கொண்டிருக்கும் சச்சின் தெண்டுல்கர், தாம் ஒரு நடிகர் என்பதை உறுதி செய்வதற்காக வருமான வரித் தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். தீர்ப்பாயத்துக்கு சச்சின் தெண்டுலகர் யார் என்பது தெரியும் போலும். அதனால் இப்போது சச்சினுக்கு வரிவிலக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் சச்சின் நாட்டுக்குச் செய்த சேவைக்கு அவருக்கு நாடு ஏதோ ஒருவகையில் திருப்பிச் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளும் ஒருவகையில் நாடகங்களே என்பதாலும், ஆட்டக்காரர்கள் அனைவரும் நடிகர்கள்தான் என்பதாலும் ஐபிஎல் போட்டி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி வருவாய்க்கும் ஏதாவது வரிவிலக்கு தரப்படுமா என்பதை நாடு ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாக வரிவிலக்கு தந்து ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கும் இதற்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லை என்று நாம் எத்தனை முறை கூறினாலும் மக்கள் என்ன நம்பவா போகிறார்கள்? ஏற்கெனவே சச்சின் மோசடிகளை எழுதிய நோஐபிஎல் அதிபர் வீட்டுக்கு ஆட்டோக்கள் வந்தன. அதெல்லாம் இன்னும் கண்முன் வந்துபோகத்தான் செய்கின்றன. இருந்தாலும் நெஞ்சுரம் மிக்க அவர் அதே செயலை மீண்டும் செய்யத் துணிந்திருக்கிறார். இருப்பினும் உள்ளுக்குள் அவருக்கும் எள்முனையளவு உதறல் இருக்கிறது என்பதையும் தேசபக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

..

.

திங்கள், 4 ஏப்ரல், 2011

வரி ஏய்ப்பவர்கள்தான் உலகச்சாம்பியன்!

1. பிசிசிஐ தொடங்கி இத்தனை ஆண்டு காலமும் எந்த விதமான வரியும் கட்டவில்லை. அவர்கள் சேவை செய்கிறார்களா?.

2. உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்த உள்கட்டமைப்பு பொருள்களுக்கு வரி விலக்குப் பெற்றது பிசிசிஐயும் ஐசிசியும்.  ஏனென்றால் அவையெல்லாம் லாப நோக்கமற்ற அமைப்புகளா?

3. சச்சின் வரி ஏய்ப்பு செய்தார். அவரிடம் வரிக் கட்டும் அளவுக்கு எந்தப் பணமும் இல்லையா?

4. இப்போது யுவராஜ் சிங் ஆயிரம் முறை முத்தமிட்டது ஒரிஜினல் உலகக் கோப்பைதான். அதாவது இந்த அணிக்கு வழங்க வேண்டிய உலகக் கோப்பைதான். அதுவும் 10 கிலோ தங்கம்.

5. சுங்க வரித்துறையிடம் பிடிபட்டதும் ஒரிஜினல் உலகக் கோப்பைதான். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது இரு உலகக் கோப்பைகளும் ஆஸ்திரேலியா அணியிடம் வழங்கப்பட்டது.  ஒரு கோப்பை வழக்கம்போல் துபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டுமே பத்து கிலோ தங்கம்தான்.

6. யுவராஜ் சிங் முத்தமிட்ட உலகக் கோப்பை, சுங்கவரி செலுத்தாமல் மும்பைக்கு வந்தது எப்படி?

7. ஐசிசியின் கூற்றுப்படி, வரி ஏய்க்கப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

8.  மன்மோகனும் கிலானியும் இருதரப்பு நட்புறவுக்காக மேற்கொண்ட பயணத்தை ஒரு நொடியில் அப்ரிதி உடைத்து எறிந்துவிட்டார். பாகிஸ்தானியர்களையும் முஸ்லிம்களையும் போல இந்தியர்களுக்குப் பெரிய மனது இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படி அவரை பிசிசிஐ என்ன செய்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.


9. சுவாரஸ்யம் இல்லாமல் தொடங்கிய ஒரு போட்டி உலக மகா பரபரப்பாக முடிந்திருக்கிறது.  அதன் மூலம் சில நாள்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐக்கு நல்ல வேட்டை. தோனி அணி இதற்கு முன்பு 20 ஓவர் ஒரு உலகக் கோப்பையை வென்ற போதுதான் ஐபிஎல் பிறந்தது. இப்போது பெரிய சாம்ராஜ்யமாகியிருக்கிறது. இருந்தாலும் உலகக் கோப்பை வெற்றிக்கும் ஐபிஎல் போட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்புவோம்.  மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதை தொடர்ந்து ரசிப்போம்.

10. நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் சில காலத்துக்கு மூடப்படுகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய நிலுவை, பஞ்சப்படி, போனஸ் ஆகியவை வழங்கப்பட்டுவிட்டன.
..
..

சனி, 2 ஏப்ரல், 2011

தமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்களே...

ஒரு வழியாக முக்கியக் கடவுள்களைத் தரிசனம் செய்துவிட்டு தமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்கள் இப்போது மும்பைக்கு வந்திருக்கிறார். பூமியில் வாழ்வதற்குச் சிரமப்பட்ட ஆயிரக்கணக்கானோரை பத்திரமாக மேலுலகத்துக்கு அனுப்பி வைத்த அவருடைய அரும்பெரும் பணிகளையும் சேவைகளையும் பாராட்டுவதற்காக மேதகு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களும் மும்பைக்கு வருகிறார்கள். எல்லை தாண்டிப் பயங்கரவாதத்தை அரங்கேற்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் கொட்டத்தை அடக்கிய ராஜபட்சவுக்கு இந்திய அரசு தரும் உயரிய மரியாதை இது.

எளவு முடிந்து அலரி மாளிகையில் கறிவிருந்து சாப்பிட்டுவிட்டு வந்தவர்களில் ஒரு பிரிவினர் இன்று தமிழினத் தலைவர் ராஜபட்சவின் வருகையை எதிர்த்து கூக்குரலிடுகிறார்கள். ராஜபட்சவுக்கு ராஜகம்பளம் விரிப்பவர்களுக்கு எடுபிடி வேலை செய்வதையும் இவர்கள் பார்டைம் ஜாப்பாக செய்து நாடாளுமன்ற, சட்டமன்றப் பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

 டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும்  தமிழ் மீனவர்களை சேவ் செய்யுங்கள் என்று புரட்சி செய்த கூட்டம், இந்தியா வாழ்க, தோனி வாழ்க என்று அதே டிவிட்டரிலும் பேக்புக்கிலும் வேறு வகையான சமூகப் புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறது. மும்பையில் நடக்கும் போரில் ராஜபட்சவை வரவைத்து தோற்கடிப்பதன் மூலம் பழி தீர்த்துக் கொள்ளப் போவதாக தன்மானத் தமிழினம் கர்ஜிக்கிறது.

அதுதான் போர் முடிந்து அமைதி ஏற்பட்டுவிட்டதே, இனி ஏன் கலகம் செய்கிறீர்கள் என்ற  தமிழ்நாட்டுத் தமிழர்களின் தத்துவங்களைக் கேட்க முடிகிறது. சொந்தக்காரர்கள் மோட்சம் அடைந்தபிறகு ஏற்பட்ட மயான அமைதி இது என்று ஈழத்திலிருந்து பைத்தியக்காரத்தனமான உளறல்களும்  ஒலிக்கத்தான் செய்கின்றன.

மலிங்காவின் பந்துகளை அடித்து நொறுக்குவதன் மூலம் மாடத்தில் இருக்கும் ராஜபட்சவை அழ வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தக் கணக்குப்படி பாகிஸ்தானுடனான போட்டியைவிட இலங்கையுடனான போட்டிதான் தமிழர்களுக்கு முக்கியம். இந்த இனப் பற்றும் தேசப் பற்றும் இருக்கும் வரையில் தமிழனை வேறு யாராலும் ஏமாற்ற முடியாது.
.
.
.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

முடிகிறது சச்சின் அத்தியாயம்!

இந்த உலகக் கோப்பை போட்டியே திட்டமிட்ட நாடகம். மோசடிகள் நிறைந்தது. பணம் குவிப்பதற்காக தேசபக்தியை விற்கிறார்கள் என பல்வேறு விமர்சனங்களை நோஐபிஎல் அதிபர் பலமுறை எழுதியிருக்கிறார். மேட்ச் ஃபிக்சிங் உள்பட பல்வேறு தருணங்களில் சச்சின் தெண்டுல்கர் துரோகம் செய்ததாகவும் பட்டியலிட்டிருக்கிறார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தோனி தலைமையிலான அணியை நையாண்டி செய்திருக்கிறார். எல்லா இந்திய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்திய அணி கோப்பையை வெல்லட்டும் என்று முதல்பக்கத்தில் பிரமாண்ட செய்தி எழுதும்போது, அந்த அளவுக்கு தேசபக்தி தமக்கு இல்லை என்பதையும் நோஐபிஎல் அதிபர் ஒப்புக்கொள்கிறார். பல்வேறு கட்டங்களில் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

2000 ஆண்டுக்குப் பிந்தைய மேட்ச்பிக்சிங் குற்றச்சாட்டுகளும், ஐபிஎல் போட்டிகளின் தொடக்கமுமே கிரிக்கெட் மூலம் பிதுங்கும் தேசபக்தி அவருக்கு இல்லாமல் போனதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. வெகுஜன புத்தியின் ஓட்டத்தில் செல்ல முடியவில்லையே என்கிற தீராத ஏக்கமும் கவலையும் அவருக்கு எப்போதுமே உண்டு என்பது தெரியவந்திருக்கிறது. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

இன்னொரு உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஆடுவார் என்பது சந்தேகமே.  என்னதான் தெண்டுல்கர் மீது பல்வேறு வகையான விமர்சனங்களை அள்ளி வீசினாலும், தனிப்பட்ட முறையில் இந்திய இளைஞர்களுக்கெல்லாம் அவர் ஒரு வழிகாட்டி என்பதை நோஐபிஎல் அதிபர் உள்ளிட்ட எவருமே மறுக்க மாட்டார்கள். ஒரு துறையிலேயே தம்மைத் தோய்த்துக் கொண்டு அதன் எல்லா உச்சங்களையும் எட்டிவிட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்கு சச்சினை விட்டால் வேறு ஆள்கிடையாது.

ஒரே துறையில் நீண்டகாலம் இருக்கும் அனைவருக்குமே ஒரு சலிப்புத் தன்மை வரும். அந்த சலிப்புத் தன்மைதான் திறமைக்கும் புகழுக்கும் எதிரி. அதே பேட், அதே பந்து, அதே மைதானம் என்றாலும் எந்தவித சலிப்புத்தன்மையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் புதிதாய்க் களமிறங்குவது போல இருப்பது சச்சினின் சுபாவம். எல்வாவிதமான ஷாட்களையும் அடிக்கும் திறன் கொண்ட அவர், இன்னமும்கூட பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார் என்பது அவரிமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று. இதே மாதிரியான சுபாவத்தை முதல்வர் கருணாநிதியிடமும் காண முடியும் - தயவு செய்து இந்த ஒப்பீட்டை நேர்மறையாகக் கொள்ளவும்.

எத்தனையோ முறை பார்ம் இல்லாமல் சிரமப்பட்டாலும்கூட, தமது இலக்கிலிருந்து விலகாத சச்சினின் மனஉறுதி போற்றுதலுக்குரியது. சச்சினுக்கு இதுதான் உச்சநிலை என்பதே கிடையாது. எல்லா உச்சங்களும் அவருக்கு இன்னொரு படியாகத்தான் இருந்திருக்கின்றன. 10 ஆயிரம் ரன்களைக் குவிக்க வேண்டும், 35 சதங்களை அடிக்க வேண்டும் என்று சாதனைகளை முறியடிப்பதுடனும், இலக்குகளை எட்டுவதுடனும் சச்சின் ஓய்ந்து இருந்துவிடவில்லை. சாதனைகளை முறியடிக்கும் அனைவருமே "அப்பாடா" என்று மூச்சிரைக்கத்தான் இலக்கை எட்டியிருக்கிறார்கள். கபில்தேவ், ஆலன் பார்டர் போன்றவர்களெல்லாம் சாதனைகளை முறியடிக்கும்போது "எல்லைக்கோட்டில் வந்து பொத்தென்று விழுந்தார்கள்" என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு மேல் அவர்களால் நகரவே முடியவில்லை. ஆனால் போகிறபோக்கில் சாதனைகளுக்கான இலக்குகளை கடந்து சென்றவர் சச்சின்.

சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு பிசிசிஐயின் கிரிக்கெட் அணி தனது அடையாளம் இழந்து போகப் போகிறது. கபில்தேவும் அசாருதீனும் போன பிறகு ஏற்பட்டதைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றிடம் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படும் என்பதைக் கணிக்க முடிகிறது.

அதி தீவிரமான கிரிக்கெட் ரசிகன் என்கிற முறையில் நோஐபிஎல் அதிபர் கூறிய சில குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன. நக்கல், நையாண்டி எல்லாம் உள்ளுக்குள் இன்னமும் உண்டு. ஆனாலும், உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஆடும் கடைசிப் போட்டி இதுதான் என்னும்போது இருவிழிகளிலும் கண்ணீர் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை....
...

புதன், 30 மார்ச், 2011

கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்!


கிரிக்கெட் இரு நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டது பார்த்தீர்களா, இனி ஒரு பிரச்னையுமில்லை. எந்த வகையிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடக்காது. நாளைக்கே காஷ்மீரை இந்தியாவுக்கே கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். அல்லது சமரசம் பேசி தீர்த்துவிடுவார்கள் என்பது போல ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

அண்ணே உங்க ரெண்டு பேருக்கும் இதுவரைக்கும் சந்திக்க வாய்ப்பே கிடைக்கலையா ? எகிப்தின் குட்டித் தீவில் இருவரும் கூட்டாக ஒப்புக்குச் சப்பாணி அறிக்கையை வாசித்தீர்களே அப்போது கூட உட்கார்ந்து பேச முடியாமலா போயிற்று. கிரிக்கெட் போட்டியென்று வந்தவுடன் இருவரும் சேர்ந்து பேச வேண்டும் என்று ஏன் துடிப்பு வந்தது?

இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இரு நாடுகளுமே ராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டையே அடகு வைக்கின்றன. அதை ராஜதந்திரம் என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாகத் தேவை என்றும் கொள்வோம்.

அதனால்தான், ஷாம் எல் ஷேக் கூட்டத்தில் இருவரும் முறைத்துக் கொண்டீர்கள். ஏனென்றால், நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா குண்டுவெடிப்பு, மும்பை தாக்குதல் ஆகியவற்றை நம்மால் மறக்க முடியாது. அவர்களாலும் மறக்க முடியாது.

ஆனால், அதே ராஜதந்திரம் ஏன் கிரிக்கெட்டில் இல்லை. கிலானியை அழைத்தீர்களே அவருடன் அப்படி என்னதான் பேசியிருக்கிறீர்கள். மும்பை தாக்குதலின்போது இருதரப்பும் பேசியதையெல்லாம் மறந்துவிடப் போகிறீர்களா? சரி அதுவும் பகைமையைக்க குறைக்க உதவும் என்று வைத்துக் கொள்வோம். புதிய அத்தியாயத்தைத் தொடங்குவீர்கள் என்று கொள்வோம்.

அப்படியானால், கிலானி அழைத்தது போல பிசிசிஐ அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பப் போகிறீர்களா? பிசிசிஐ சொல்லி மன்மோகன் கேட்பார். மன்மோகன் சொன்னால் பிசிசிஐ கேட்குமா? அந்த அளவுக்கு பிசிசிஐ மட்டமா? மன்மோகன் பேச்சை அவரே கூட கேட்கமாட்டார். பிறகு எப்படி மற்றவர்கள் கேட்பார்கள்.

அப்படியானால் அதிகாரப்பூர்வமான சந்திப்பை நடத்தியிருக்க வேண்டியதுதானே. இப்போது நடந்திருப்பது கிட்டத்தட்ட தனிநபர் சந்திப்புகள், அதாவது அதிகாரப்பூர்வமற்றவை - என்று இருவருமே கூறிவிட்டீர்கள். இதன் மூலம் என்ன பேசினாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லையே பிறகு எதற்கு இப்படியொரு சந்திப்பு? அதுவும் ராகுல், சோனியா சகிதமாக. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டிக்கான முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். அதன் மூலம் பிசிசிஐ இன்னும் கூடுதலாகக் காசு பார்த்துவிட்டது.

2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், போபர்ஸ், கறுப்புப்பணம் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை மக்கள் மறக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போக வேண்டும். பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் மறக்க வேண்டும். இருவருக்கும் அமைதிப் புறாக்கள் இமேஜ் கிடைக்க வேண்டும். அதற்காகத்தானே இரு நாட்டு மக்களையும் ஏமாற்றியிருக்கிறீர்கள்.

அதையும் வேறெங்காவது வைத்திருக்கலாமே. ஏற்கெனவே மோசடிகள் நிறைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றவில்லையா?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உப்புச்சப்பில்லாமல் தொடங்கிய ஒரு கிரிக்கெட் தொடரை இருவரும் சேர்ந்து உலகப் பரபரப்பாக்கியிருக்கிறீர்கள். நம் மக்களும் இரு நாட்டு அமைதிக்கு இதுதான் வழி போலிருக்கிறது என்று இறுதிப் போட்டிக்கு ராஜபட்சவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!
.
 
.
.
.

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? இதற்காகத்தான்

வங்கதேசம் ஏன் காலிறுதிக்குத் தகுதிபெறவில்லை என்கிற கேள்வி கடந்த சில நாள்களாகவே நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது. உண்மையில் இலங்கை - வங்கதேசம், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகள்தான் அரையிறுதியில் மோதியிருக்க வேண்டும். அந்த அணி எப்படி மிஸ்ஸானது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அந்த அணி மட்டும் அரையிறுதிக்கு வந்திருந்தாலோ, அல்லது 83-ம் ஆண்டைப் போல கோப்பையை வென்றிருந்தாலோ இன்னும் 30 ஆண்டுகளுக்கு அந்த நாட்டில் கிரிக்கெட்டை அசைக்க முடியாது.

இன்றைய போட்டியை வைத்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை சூதாட்டம் நடைபெறுகிறது என்று பெரிய பெரிய ஊடகங்களே தெரிவித்திருக்கின்றன. இது ரூ.50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்றுகட கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய சூதாட்டப் பணம் மேட்ச் ஃபிக்சிங்குக்கு பயன்படுத்தப் படாது என்று நாம் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

சரி அது வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வநாசம் செய்தது பிசிசிஐ என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல நடத்தாதீர்கள் என்று இஜாஸ் பட் கதறியதைக் கூட நாம் அறிவோம். ஐசிஎல் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதற்காக பாகிஸ்தான் வீரரை, இங்கிலாந்தின் சுழற்பந்து பயிற்சியாளராகக் கூட இந்தியாவுக்கு வரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டி பாதிக்கும் என்பதால், இலங்கையும் - இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது பிசிசிஐ. இலங்கை அணி பாகிஸ்தானில் தாக்கப்பட்ட பிறகு, வங்கதேசம் பாகிஸ்தானுக்குச் செல்ல ஆர்வமாக இருந்தபோதும், அதைக் கெடுத்தது பிசிசிஐ. இன்னும் பாகிஸ்தான் எந்த வகையிலெல்லாம் பிசிசிஐயால் இழிவுபடுத்தப்பட்டது என்பதை அனைவரும் தயவு செய்து அனைவரும் தேடி படிக்கவும்.

இந்திய வெளியுறவுத் துறை, உள்துறை ஆகியவற்றின் பேச்சைக்கூட பிசிசிஐ கேட்டதில்லை. தேர்தல் காரணமாக இரண்டாவது ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று உள்துறை மன்னர் சிதம்பரம் கேட்டுக் கொண்ட பிறகும் கூட வம்படியாக இருந்தது. பலவகையிலும் கண்டிப்புடன் கூறிய பிறகுதான் அந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், யார் தேர்தலையும் இனப்படுகொலையையும் கவனித்தார்கள்?

இப்படி இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த எதேச்சதிகாரப் போக்குக் கொண்ட பிசிசிஐ அணிதான் ஜெயிக்க வேண்டுமா? உண்மையான சண்டை எங்கோ நடந்துகொண்டிருக்கையில், அந்தப் பகைமையைக் காசாக்க நினைப்பவர்கள் இவர்கள்.  உண்மையிலேயே கிரிக்கெட்டை விரும்புவோர்கூட இந்த "போலி அணி" ஜெயிப்பதை விரும்பமாட்டார்கள். மேட்ச் பிக்சிங் மூலமாகக் கூட.
 
 





...
...

திங்கள், 28 மார்ச், 2011

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? - பாகம் 3





இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் வன்மம் 1947 பிரிவினையிலேயே தொடங்கிவிட்டது. ஆனால், இதை நீரூற்றி வளர்த்தது இரு தரப்பு கிரிக்கெட் வீரர்களும்தான். ஒருவருக்கொருவர் வீட்டுப் பெண்களைக் கெட்டவார்த்தையால் திட்டியதால்தான் மைதானத்துக்குள் மோதல்கள் நடந்தன. எப்படியெல்லாம் திட்டினார்கள் என்பதை இணையத்தில் தேடிக் கொள்ளவும்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தானுடன் டூ விட்டுக் கொண்டோம்.  மும்பையில் மைதானத்தை உழுது போட்டோம். இந்தியாவுக்கு வந்தா கொன்...டே புடுவேன் என்று மிரட்டினோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மட்டுமல்ல, பாகிஸ்தான் அரசும் நடுநடுங்கியது. எல்கேஜியிலிருந்தே பாகிஸ்தான் நமக்கு எதிரி என்பதை மனப்பாடம் செய்ததால் வந்த வினை இது.


 இப்போது இருப்பது ஜியா காலத்து, புட்டோ காலத்து பாகிஸ்தான் அல்ல. சுத்த நோஞ்சான். அஞ்சுக்கும் பத்துக்கு ஐஎம்எஃப்பின் காலைப் பிடிக்கும் நிலைமையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.  நாமெல்லாம் சேர்ந்து ராசாவிடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி பாகிஸ்தானிடம் கொடுத்துவிட்டால், காஷ்மீரை மட்டுமல்ல, ராவல் பிண்டியையும் சேர்த்து நம்மிடம் கொடுத்தேவிடுவார்கள். அவ்வளவு பஞ்சத்தில் இருக்கிறது பாகிஸ்தான் அரசு. முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்புதான் அங்குள்ள ஒரு மாநிலத்தின் பட்ஜெட். நாட்டுக்குள்ளேயே அமெரிக்காவை உளவு பார்க்கவும், ஏவுகணைத் தாக்குதல் நடத்தவும்  அனுமதித்திருக்கிறது என்றால் அந்த நாட்டின் நிலைமை எவ்வளவு மோசம்?

அமெரிக்காவிடம் ஒரு அணுஉலை ஒப்பந்தம் செய்துகொண்டு, லாகூரில் குண்டு போடுங்கள் என்று சொன்னால் கச்சிதமாக முடித்துவிடுவார்கள். அந்த அளவுக்குக் கிடுக்குப் பிடியில் சிக்கியிருக்கிறது பாகிஸ்தான். அதற்காக இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்று கூற முடியாது. வளர்ச்சியடைந்த நாடு போல காட்டிக்கொண்டிருக்கிறது. பெரிய இடத்து சகவாசங்கள் இருப்பதால், பணக்காரர்களுக்கான நாடாகி இருக்கிறது. கிரிக்கெட்டில் வல்லரசாக ஆகியிருக்கிறது. மறைக்கப்பட்ட பஞ்சமும் பசியும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கின்றன.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கடந்த ஐபிஎல் போட்டிகளில் இடமில்லை. நம் நாட்டு அரசு அவர்களுக்கு விசா வழங்காது என்பதால் அந்நாட்டு வீரர்களை யாரும் தேர்வு செய்யவில்லை. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் ஆடாத ஒரு நாடு பாகிஸ்தான் மட்டும்தான். பாகிஸ்தானில் போய் ஆடவே மாட்டோம் என்று கூறி அங்கு நடக்க இருந்த உலகக் கோப்பை போட்டிகளையெல்லாம் பிடுங்கிக் கொண்ட பிறகும்  தன்மானத்தை விட்டு, பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு வந்து ஆடுகிறார்கள் என்றால், அவர்களது நிலைமை எவ்வளவு வேதனைக்குரியது. இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணித்து வருவதாகக் கூறி உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு போருக்கும், விளையாட்டு வன்மங்களுக்கும் பின்னால் அரசியல், பொருளாதார ஆதாயம் தேடும் சதி இருக்கும் என்பார்கள். மொகாலி டிக்கெட் விலை லகரங்களில் இருக்கிறதாம். இருந்தாலும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் வன்மத்துக்குப் பின்னால் சதி ஏதும் இல்லை என்று கண்ணை மூடிக் கொள்வோம்.

பி.கு: பாகம் 1-ன் கருத்துரை பகுதிதான் பாகம் 2

இதையும் படிக்கவும்...

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்

...
....
..

ஞாயிறு, 27 மார்ச், 2011

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? பாகம் - 1

அதெப்படி தோனி அணி ஆடும் ஆட்டமெல்லாம் இந்தியாவிலேயே நடக்கின்றன? இலங்கை ஆடும் ஆட்டமெல்லாம் இலங்கையிலேயே நடக்கின்றன?  லீக் போட்டிகள் ஓகே. காலிறுதி அரையிறுதியெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று?

மொத்தம் 4 காலிறுதிகள்.  அதில் 2 காலிறுதிப் போட்டிகள் வங்கதேசத்திலும் ஒரு போட்டி இலங்கையிலும் நடப்பதாக திட்டம். ஒரிஜினல் அட்டவணைப்படி இரண்டாவது காலிறுதிப் போட்டி இலங்கையில் நடப்பதாகத்தான் இருந்தது.  பின்னர் அது ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டது. அதாவது, தோனி அணி ஆட வேண்டிய காலிறுதி ஆட்டம் இலங்கையில் நடப்பதாகத்தான் இருந்தது.

ஆனால், சரியாக அந்தப் போட்டி மட்டும் இந்தியாவிலேயே நடந்தது. மற்ற மூன்று போட்டிகள் மட்டும் வெளிநாடுகளில் நடந்தன. அதே போல் இலங்கை ஆட வேண்டிய காலிறுதி மட்டும் இலங்கையில் நடந்தது. மற்ற போட்டிகள் வெளிநாடுகளில் நடந்தன. இலங்கையோ, தோனி அணியோ அடுத்த நாட்டில் போய் ஆட வேண்டிய நிலை ஏன் ஏற்படவில்லை. அட்டவணையிலேயே ஃபிக்சிங் நடந்தது என்பதை ஐபிஎல் அதிபர் சார்பில் ஏற்கெனவே ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு முறை அதை நிரூபிக்க வேண்டியதில்லை.

தோனி அணி ஆடிய காலிறுதி இந்தியாவிலும், இலங்கை அணியின் காலிறுதி இலங்கையிலும் நடப்பது தற்செயலானது என்று ஐசிசியும் பிசிசிஐயும் நம் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றன.
..

வியாழன், 24 மார்ச், 2011

தோனி அணியின் கவுன்டமணி ரன்னிங்


அண்ணே வணக்கம்னே..

வாடா வா... செயினு மோதிரமெல்லாம் டாலடிக்குது... எவனாவது இளிச்சவாயன் சிக்கிட்டானா?

போங்கண்ணே உங்களுக்கு எப்ப பாத்தாலும் குறும்புதான்...

ஆமாடா நீ எனக்கு முறைப்பொண்ணு... குறும்பு பண்றாங்க... மேட்டர சொல்லுடா..

அது ஒண்ணுமில்லைண்ணே... நின்னுபோன ஆயில் மோட்டார சுத்தி விட்டேன். நிறைய பணம் கொடுத்தாங்க... அதுல வாங்கினதுதான் இந்த செயினு மோதிரம், புலிநகம் எல்லாம்..

என்னடா சொல்ற ஆயில் மோட்டார சுத்தி விடறதுக்கு ஆயிரக் கணக்குல பணம் கொடுக்கற அந்த இளிச்ச வாயன் எவன்டா...

அது ஒரு கூட்டம்னே... நேத்து சாயங்காலம் நம்மூரு தர்மாஸ்பத்திரில ஏதாவது ஒரு கலர் மருந்து கொடுங்கண்ணு கேக்கப் போயிருந்தேன். அப்ப கரண்டு போயிடுச்சி... அங்கிருந்த ஆயில் மோட்டார ஸ்டார்ட் பண்ண சொன்னாங்க..

அப்புறம்...

 சரின்னு நானும் சுத்தி விட்டேன்... அங்க நின்ன பசங்க எல்லாம் "ஏ ஏ கொலிகாட்டர் சாட் கொலிகாட்டர் சாட்" அப்டீன்னு கத்தினாங்க...  அப்புறம் அவங்க கூப்பிட்ட இடத்துக்கு போயி அதே மாதிரி செஞ்சு காட்டினேன்... அதுக்குத்தான் காசு...

இதென்னடா தில்லாலங்கடியா இருக்கு.. கேணப்பசங்களா இருப்பாங்க போலிருக்கே...

இல்லைன்னே அவங்க தோனி பசங்க...  இப்ப ஆயில் மோட்டர சுத்தி விடறதுக்குத்தான் கோடிக்கோடியா கொடுக்குறாங்களாம்.

இதப் பாருடா... ஆங்...

இன்னும் இருக்கு கேளுங்கண்ணே... விஜய் ரிவர்ஸ் சாட், விஜயகாந்த் பேக் லெக் சாட் எல்லாம் சொல்லித் தரச் சொல்லியிருக்காங்க...

இது வேறையா...

நீங்களும் எதாவது செஞ்சி பெரிய ஆளா ஆயிடுங்கண்ணே...

ஏன்டா அப்டிச் சொல்லிப்புட்ட... நான்தான் அந்தப் பசங்களுக்கு ரன்னிங் சொல்லிக்குடுத்தேன்... பாத்தா தெரியலையா?

சரிங்கண்ணே... இன்னிக்கு பாக்கறேன்...

..

செவ்வாய், 22 மார்ச், 2011

ஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்?

இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் 10 ஆட்டங்கள் பார்க்கச் சகிக்கவில்லை.  இப்படியே போ னால் உலகக் கோப்பை போட்டிகளில் மவுசு குறைந்துவிடும் என்று எல்லோரும் வெளிப்படையாகச் சொன்னார்கள். அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கத்துக்குட்டி அணிகளுக்கு இடமில்லை என்று ஐசிசி எரிச்சலாகக் கூறியது. ஆன்டி பிளவர் தவிர அனைவரும் கைதட்டினார்கள். உலகம் முழுவதும் (10 நாடுகள்) இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பை போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் போனால், போட்ட காசை எப்படி எடுப்பது? அதற்குத்தான் திட்டம் வகுத்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதனால்தான் அதுவரை பலவீனமாக இருந்த அயர்லாந்து பயில்வானாக மாற்றப்பட்டது. தோற்கும் அணிகள் ஜெயித்தன. ஜெயிக்கும் அணிகள் தோற்றன. எல்லா போட்டிகளிலும் மண்ணைக் கவ்வும் வங்கதேச அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. உலகமே (10 நாடுகள்) பரபரப்பானது.
டிக்கெட்டுகள் மளமளவென்று விற்றுத்தீர்ந்தன. வங்கதேசம் மோதும் போட்டிகள்கூட சுவாரஸ்யமாக்கப்பட்டன. மிர்பூர் மைதானத்தில்  வெஸ்ட் இண்டீசிடம் 58 ரன்களிடம் சுருண்ட வங்கதேச அணி, காலிறுதிக்குத் தகுதி பெறும் என்று ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பு திணிக்கப்பட்டது. வங்கதேச ரசிகர்களுக்கு உலகக் கோப்பை கனவு வந்தது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரைறுதியில் பாகிஸ்தானையும் தோற்கடிப்பது போலவும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால், லீக் போட்டிகளை சுவாரஸ்யமாக்கிய ஐசிசி, காலிறுதிப் போட்டிகளுக்கு வழக்கமான பார்முலாவுக்குத் திரும்பிவிட்டது. "அந்த 8 அணிகள்" மட்டும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. உலகக் கோப்பை அட்டவணையைப் பார்த்த சிறு குழந்தைகூட காலிறுதிக்கு இந்த 8 அணிகள்தான் தகுதி பெறும் என்று கைகாட்டியிருக்கும். அப்புறம் எதற்கு இந்த லீக் போட்டிகள் என்று கேள்வி எழக்கூடும் என்பதால்தான்,  லீக் போட்டிகளையெல்லாம் மெனக்கெட்டு பரபரப்பாக்கியிருக்கிறார்கள். சில்லறைகளைக் குவித்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான மேட்சில் ஸ்பாட் பிக்சிங் நடத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது முதல் 10 ஓவர்களில் இத்தனை ரன்களை எடுப்பார்கள் என்பது தொடர்பாக பந்தயம் கட்டப்பட்டிருக்கலாம் அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடியிருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. இதுபற்றி ஐசிசி விசாரிக்கிறதாம். அப்படியானால், ஒரு போட்டி வலுக்கட்டாயமாக டை ஆக்கப்பட்டதே அதை யார் விசாரிப்பார்களாம்? கம்ரன் அக்மல் கால்களுக்கு இடையே கேட்சுகளை விட்டதையெல்லாம் யார் கேட்பது?

உலகக் கோப்பை போட்டிகள் மீது சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஐசிசியே கூட மறுக்கவில்லை. ஆனால், அதற்காக மேட்ச் பிக்சிங் செய்யப்படவில்லை என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள். இதுவரை நடந்த எல்லாப் போட்டிகளும் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோலவே நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு வங்கதேச, இங்கிலாந்து போட்டியில் ஒரு சாமான்யன் இங்கிலாந்து ஜெயிக்கும் என்றுதான் பெட் கட்டுவான். பாகிஸ்தானை  ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்பான். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு செல்வாக்கு மிக்க புக்கிகளால் யாரை வேண்டுமானாலும் ஜெயிக்க வைக்க முடியும். அதுதான் எதிர்பாராத முடிவுகளுக்கும், இன்னிங்ஸின் பல்வேறு திருப்பங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும். இது சரத்பவார் தலைமையிலான ஐசிசியின் ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதே நமது குற்றச்சாட்டு.
..

திங்கள், 21 மார்ச், 2011

ஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்!


 க்யூவில் நிற்பது பற்றி நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. எல்கேஜி அட்மிஷன் வாங்குவதற்கு முகப்பேர் டி.ஏ.வி. பள்ளிக்கு வாசலில் முந்தைய நாள் இரவே பெட்சீட், தலையணை சகிதம் வரிசையில் படுத்திருப்பது, இரவு 9 மணிக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் "மூன்றாந்தரப் பெட்டியில்" இடம் பிடிப்பதற்காக சாயங்காலம் 4 மணிக்கே காத்திருப்பது, நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை 50 பைசா உயரப்போகிறது என்று சன்டிவியில் பிளாஷ் நியூஸ் வந்ததும் டி.வி.எஸ். பெட்ரோல் பங்கில் கிலோமீட்டர் நீளத்துக்கு டூ வீலரில் கியூ கட்டுவது, வீட்டில் பெரிசுகளுக்கு பொங்கல் துணி எடுப்பதை மிச்சம் பிடிப்பதற்காக இலவச வேட்டி சேலை வாங்குவதற்கு ரேஷன் கடையில் முண்டியடிப்பது, ரஜினிகாந்த் என்பவர் ஒரேயொரு சீனில் வரும் படம் ரிலீஸாகும் சாந்தித் தியேட்டரில் கவுன்டர்களை மொய்ப்பது, டீச்சர் டிரைனிங் முடித்த மறுநாள் காலை 5 மணியிலிருந்து எம்ப்ளாய்மென்ட் வாசலில் தவம் கிடப்பது என பல்வேறு வகையான வரிசைகள் நமக்குப் பரிச்சையமானவை. எந்த வரிசையில் எப்படி முன்னேற வேண்டும், அவரச நிலைகளில் இடத்தைத் தக்கவைத்துக்குக் கொள்ளவது எப்படி என்பன நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.  இதற்காக நாம் ஜனங்களைக் குறை சொல்ல முடியாது. நமது ஆட்சியாளர்கள் நம்மை அப்படி வைத்திருக்கிறார்கள். அதுதான் லாபம் என்று கருதுகிறார்கள் அவ்வளவுதான்.



இந்த வரிசையில், சேப்பாக்கத்தையும் பெங்களூரையும் சேர்த்துக் கொள்ளலாம். காந்தியார் வாழ்ந்த ஆமதாபாத் நகரமும் இப்போது இணைந்திருக்கிறது. தோனி தலைமையிலான அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான காலிறுதிப் போட்டி இங்குதான் நடைபெறுகிறது என்று முடிவானதும் டிக்கெட் வாங்கப் படையெடுத்த ரசிகர்கள் கூட்டம் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.


இன்னொருபக்கம் சுனாமியும் நிலநடுக்கமும் தாக்கிய ஜப்பான் மக்களும் குடிநீருக்காகவும் பெட்ரோலுக்காகவும் வரிசையில் நிற்கிறார்கள். நம்மூர் வரிசையையும் ஜப்பானிய மக்களின் வரிசைகளின் ஒழுங்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏக்கப் பெருமூச்சு வருவததைத் தவிர்க்க முடியவில்லை.

..
.

வியாழன், 17 மார்ச், 2011

அக்தரின் அஸ்தமனம், இந்தியர்களுக்கு இழப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு என ஒரு தனித்துவம் உண்டு. மைதானத்தில் மிக ஆவேசமாகக் காணப்படுவார்கள். மியான் தத், தொடக்க கால இன்சமாம் உல்-ஹக், சலீம் மாலிக், சில நேரங்களில் இம்ரான்கான் என இந்தப் பட்டியல் மிக நீளம். தாடி வைப்பதற்கு முன்பு சயீத் அன்வர் கூட மைதானத்தில் ஆவேசமாகத் தெரிவார்.  இந்த ஆவேசம்தான் பாகிஸ்தானின் அடையாளம். பாகிஸ்தானுடனான போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பதற்கு, 1947-ம் ஆண்டுப் பிரிவினையைப் போலவே, இந்த வீரர்களும் முக்கிய காரணம்.


சமீப கால கிரிக்கெட் வீரர்களில் சோயிப் அக்தருக்கும் அந்தப் பட்டியலில் இடமுண்டு. 90-களின் இறுதியில் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தார். அக்தரின் பந்தைச் சந்திப்பதற்கு உலகின் எல்லா முன்னணி பேட்ஸ்மேன்களும் பயந்தனர் என்பதை மறுக்கவே முடியாது. 30 மீ தூரத்துக்கு அவர் ஓடும் வேகமும், குறுகிய இடைவெளி பவுன்சர்களும் பிரத்யேகமானவை. அக்ரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அக்தரிடம் இருந்து ஓரளவு துல்லியமான யார்க்கர்களை எதிர்பார்க்க முடியும். ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்த பிறகு அவரது ஆட்டத்திறன் போச்சு.  தென்னாப்பிரிக்காவில் முகமது ஆசிப்பை அடித்த பிறகு மிச்சமும் போச்சு.

5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. யார் யாரெல்லாமோ கேட்டுக் கொண்ட பிறகும், பாகிஸ்தான் அணியில் அவர் ஆட வேண்டும் என்கிற கோரிக்கை வந்த போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் மோடி கேட்டதும், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் வாரியம் அவர் மீதான தடைகளை ரத்து செய்தது.

எப்படி மியான்தத், இன்சமாம் போன்றோரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்காதோ அதே போல், அக்தரையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலோனோருக்குப் பிடிக்காது. 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அக்தரின் பந்துகளை கில்கிறிஸ்ட் அடித்து நொறுக்கியதைக் கண்ட பிறகுதான், அந்த ஆண்டில் பிசிசிஐ அணி தோற்றதையே இந்திய வீரர்களால் மறக்க முடிந்தது. அந்த அளவுக்குப் பகைமை உண்டு.

பொதுவிலும் தனிப்பட்டவாழ்விலும் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கிய இந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடியப் போகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அவரது பந்துவீச்சு ஓரளவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உடல் ஒத்துழைக்காததால், இரண்டாவது மூன்றாவது ஸ்பெல் பந்துவீச்சில் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இனிவரும் போட்டிகளிலும் அவர் ஆடப் போவதில்லை என்றே தெரிகிறது.

சுமார் ஏழெட்டு ஆண்டுகள் உலக பேட்ஸ்மேன்களை பீதியில் உறைய வைத்தவரின் பந்துவீச்சை, இனி ஐபிஎல் போட்டிகளில் பார்த்தால்தான் உண்டு போலிருக்கிறது. எல்லாம் வர்த்தக மயமாகி போலித்தனம் நிறைந்து, வீரர்கள் கூலாகிவிட்டதால், இப்படியொரு ஆவேசமான உண்மையான முகத்தை இனி கிரிக்கெட்டில் காண்பதும் கடினம். தனது கடைசி முகத்தையும் பாகிஸ்தான் இழந்துவிட்டது. இனி பிசிசிஐ அணி, பாகிஸ்தானுடன் மோதும் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்துக்கு என்ன இருக்கிறது?
..
..

வியாழன், 10 மார்ச், 2011

காலிறுதியில் வங்கதேசம்? ஒரு சந்தேகம்

எப்படியும் வங்கதேச அணி இந்த முறை காலிறுதிப் போட்டிக்கு இழுத்து வரப்படும் என்றுதான் தோன்றுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவதானிக்கப்படுகிறது. அப்படி காலிறுதிப் போட்டிக்கு வரும்பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியோ, இங்கிலாந்து அணியோதான் வெளியேறும்.. பாவம்..

வரும் போட்டிகளிலெல்லாம் வங்கதேசம் ஜெயித்தால் புள்ளி பட்டியல் எவ்வாறு மாறும் என்பதில் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது.

கீழே இருப்பது உலகக் கோப்பை பி பிரிவின் புள்ளிபட்டியல்

அணி
வெ
தோ
டை
கை
புள்.
ரரே
வாங்.
கொடு.
தோ.அ
4
3
0
1
0
7
+0.992
1109/182.3
1017/200.0
இங்கி
4
2
1
1
0
5
+0.054
1132/198.4
1124/199.1
வெ.இ
3
2
1
0
0
4
+2.667
611/112.2
396/142.5
தெ.ஆ.
3
2
1
0
0
4
+1.754
739/142.5
513/150.0
அயர்
3
1
2
0
0
2
-0.296
714/149.1
742/146.0
வ.தே.
3
1
2
0
0
2
-1.764
546/150.0
607/112.2
நெதர்
4
0
4
0
0
0
-2.728
716/200.0
1168/185.1

இதைப் பற்றி நோஐபிஎல் அதிபருக்கு விடைதெரியாத ஒரு கேள்வி இருக்கிறது.

இந்த பட்டியலில் தோனி அணி 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அந்த அணியின் அடுத்து வரும் ஒரு போட்டி மழையால் கைவிடப் படுவதாகவும், அடுத்த போட்டியில் தோற்றுப் போவதாகவும் வைத்துக் கொண்டால்... அந்த அணிக்கு மொத்தம் 8 புள்ளிகள் கிடைக்கும்... சுமாராக அந்த அணியின் ரன் ரேட் 1.000 என்று வைத்துக் கொள்வோம்...

அதேநேரத்தில் வங்கதேச அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் ஜெயிப்பதாக வைத்துக் கொள்வோம் தற்போது அந்த அணி பெற்றிருக்கும் 2 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 8 புள்ளிகள் கிடைக்கும். அந்த அணியின் நெட் ரன்ரேட் 0.8 என்று வைத்துக் கொள்வோம். இரு அணிகளும் சமபுள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில் புள்ளி பட்டியலில் எந்த அணிக்கு முதலிடம் தரப்படும் என்பதுதான் சந்தேகம்... தோனி அணியா? வங்கதேசமா? மற்ற அணிகளைப் பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் புண்ணியமாகப் போகும்.
..