செவ்வாய், 22 மார்ச், 2011

ஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்?

இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் 10 ஆட்டங்கள் பார்க்கச் சகிக்கவில்லை.  இப்படியே போ னால் உலகக் கோப்பை போட்டிகளில் மவுசு குறைந்துவிடும் என்று எல்லோரும் வெளிப்படையாகச் சொன்னார்கள். அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கத்துக்குட்டி அணிகளுக்கு இடமில்லை என்று ஐசிசி எரிச்சலாகக் கூறியது. ஆன்டி பிளவர் தவிர அனைவரும் கைதட்டினார்கள். உலகம் முழுவதும் (10 நாடுகள்) இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பை போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் போனால், போட்ட காசை எப்படி எடுப்பது? அதற்குத்தான் திட்டம் வகுத்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதனால்தான் அதுவரை பலவீனமாக இருந்த அயர்லாந்து பயில்வானாக மாற்றப்பட்டது. தோற்கும் அணிகள் ஜெயித்தன. ஜெயிக்கும் அணிகள் தோற்றன. எல்லா போட்டிகளிலும் மண்ணைக் கவ்வும் வங்கதேச அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. உலகமே (10 நாடுகள்) பரபரப்பானது.
டிக்கெட்டுகள் மளமளவென்று விற்றுத்தீர்ந்தன. வங்கதேசம் மோதும் போட்டிகள்கூட சுவாரஸ்யமாக்கப்பட்டன. மிர்பூர் மைதானத்தில்  வெஸ்ட் இண்டீசிடம் 58 ரன்களிடம் சுருண்ட வங்கதேச அணி, காலிறுதிக்குத் தகுதி பெறும் என்று ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பு திணிக்கப்பட்டது. வங்கதேச ரசிகர்களுக்கு உலகக் கோப்பை கனவு வந்தது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரைறுதியில் பாகிஸ்தானையும் தோற்கடிப்பது போலவும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால், லீக் போட்டிகளை சுவாரஸ்யமாக்கிய ஐசிசி, காலிறுதிப் போட்டிகளுக்கு வழக்கமான பார்முலாவுக்குத் திரும்பிவிட்டது. "அந்த 8 அணிகள்" மட்டும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. உலகக் கோப்பை அட்டவணையைப் பார்த்த சிறு குழந்தைகூட காலிறுதிக்கு இந்த 8 அணிகள்தான் தகுதி பெறும் என்று கைகாட்டியிருக்கும். அப்புறம் எதற்கு இந்த லீக் போட்டிகள் என்று கேள்வி எழக்கூடும் என்பதால்தான்,  லீக் போட்டிகளையெல்லாம் மெனக்கெட்டு பரபரப்பாக்கியிருக்கிறார்கள். சில்லறைகளைக் குவித்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான மேட்சில் ஸ்பாட் பிக்சிங் நடத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது முதல் 10 ஓவர்களில் இத்தனை ரன்களை எடுப்பார்கள் என்பது தொடர்பாக பந்தயம் கட்டப்பட்டிருக்கலாம் அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடியிருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. இதுபற்றி ஐசிசி விசாரிக்கிறதாம். அப்படியானால், ஒரு போட்டி வலுக்கட்டாயமாக டை ஆக்கப்பட்டதே அதை யார் விசாரிப்பார்களாம்? கம்ரன் அக்மல் கால்களுக்கு இடையே கேட்சுகளை விட்டதையெல்லாம் யார் கேட்பது?

உலகக் கோப்பை போட்டிகள் மீது சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஐசிசியே கூட மறுக்கவில்லை. ஆனால், அதற்காக மேட்ச் பிக்சிங் செய்யப்படவில்லை என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள். இதுவரை நடந்த எல்லாப் போட்டிகளும் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோலவே நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு வங்கதேச, இங்கிலாந்து போட்டியில் ஒரு சாமான்யன் இங்கிலாந்து ஜெயிக்கும் என்றுதான் பெட் கட்டுவான். பாகிஸ்தானை  ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்பான். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு செல்வாக்கு மிக்க புக்கிகளால் யாரை வேண்டுமானாலும் ஜெயிக்க வைக்க முடியும். அதுதான் எதிர்பாராத முடிவுகளுக்கும், இன்னிங்ஸின் பல்வேறு திருப்பங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும். இது சரத்பவார் தலைமையிலான ஐசிசியின் ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதே நமது குற்றச்சாட்டு.
..

1 கருத்து:

  1. //இது சரத்பவார் தலைமையிலான ஐசிசியின் ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதே நமது குற்றச்சாட்டு.

    இவ்வாறு குற்றம் சாட்டும்பொது ஆதாரங்கள் அவசியம்.

    பதிலளிநீக்கு