வியாழன், 17 மார்ச், 2011

அக்தரின் அஸ்தமனம், இந்தியர்களுக்கு இழப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு என ஒரு தனித்துவம் உண்டு. மைதானத்தில் மிக ஆவேசமாகக் காணப்படுவார்கள். மியான் தத், தொடக்க கால இன்சமாம் உல்-ஹக், சலீம் மாலிக், சில நேரங்களில் இம்ரான்கான் என இந்தப் பட்டியல் மிக நீளம். தாடி வைப்பதற்கு முன்பு சயீத் அன்வர் கூட மைதானத்தில் ஆவேசமாகத் தெரிவார்.  இந்த ஆவேசம்தான் பாகிஸ்தானின் அடையாளம். பாகிஸ்தானுடனான போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பதற்கு, 1947-ம் ஆண்டுப் பிரிவினையைப் போலவே, இந்த வீரர்களும் முக்கிய காரணம்.


சமீப கால கிரிக்கெட் வீரர்களில் சோயிப் அக்தருக்கும் அந்தப் பட்டியலில் இடமுண்டு. 90-களின் இறுதியில் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தார். அக்தரின் பந்தைச் சந்திப்பதற்கு உலகின் எல்லா முன்னணி பேட்ஸ்மேன்களும் பயந்தனர் என்பதை மறுக்கவே முடியாது. 30 மீ தூரத்துக்கு அவர் ஓடும் வேகமும், குறுகிய இடைவெளி பவுன்சர்களும் பிரத்யேகமானவை. அக்ரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அக்தரிடம் இருந்து ஓரளவு துல்லியமான யார்க்கர்களை எதிர்பார்க்க முடியும். ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்த பிறகு அவரது ஆட்டத்திறன் போச்சு.  தென்னாப்பிரிக்காவில் முகமது ஆசிப்பை அடித்த பிறகு மிச்சமும் போச்சு.

5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. யார் யாரெல்லாமோ கேட்டுக் கொண்ட பிறகும், பாகிஸ்தான் அணியில் அவர் ஆட வேண்டும் என்கிற கோரிக்கை வந்த போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் மோடி கேட்டதும், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் வாரியம் அவர் மீதான தடைகளை ரத்து செய்தது.

எப்படி மியான்தத், இன்சமாம் போன்றோரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்காதோ அதே போல், அக்தரையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலோனோருக்குப் பிடிக்காது. 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அக்தரின் பந்துகளை கில்கிறிஸ்ட் அடித்து நொறுக்கியதைக் கண்ட பிறகுதான், அந்த ஆண்டில் பிசிசிஐ அணி தோற்றதையே இந்திய வீரர்களால் மறக்க முடிந்தது. அந்த அளவுக்குப் பகைமை உண்டு.

பொதுவிலும் தனிப்பட்டவாழ்விலும் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கிய இந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடியப் போகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அவரது பந்துவீச்சு ஓரளவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உடல் ஒத்துழைக்காததால், இரண்டாவது மூன்றாவது ஸ்பெல் பந்துவீச்சில் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இனிவரும் போட்டிகளிலும் அவர் ஆடப் போவதில்லை என்றே தெரிகிறது.

சுமார் ஏழெட்டு ஆண்டுகள் உலக பேட்ஸ்மேன்களை பீதியில் உறைய வைத்தவரின் பந்துவீச்சை, இனி ஐபிஎல் போட்டிகளில் பார்த்தால்தான் உண்டு போலிருக்கிறது. எல்லாம் வர்த்தக மயமாகி போலித்தனம் நிறைந்து, வீரர்கள் கூலாகிவிட்டதால், இப்படியொரு ஆவேசமான உண்மையான முகத்தை இனி கிரிக்கெட்டில் காண்பதும் கடினம். தனது கடைசி முகத்தையும் பாகிஸ்தான் இழந்துவிட்டது. இனி பிசிசிஐ அணி, பாகிஸ்தானுடன் மோதும் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்துக்கு என்ன இருக்கிறது?
..
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக