திங்கள், 7 மார்ச், 2011

யுவராஜின் எழுச்சி, தோனிக்கு ஆபத்து!

அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு அனுப்பும் யுடிஆர்எஸ் முறைக்கு கேப்டன் தோனி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இந்த முறை குழப்பமாக இருக்கிறது என்று யுவராஜ் சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த விஷயத்திலும் வாயைத் திறக்காமல் இருந்தவர்தான் இந்த "பி" கிரேடு பிளேயராகத் தரம் இறக்கப்பட்ட யுவராஜ் சிங். கேப்டன் பதவியை தோனி பறித்துச் சென்றது முதல், நீலாம்பரி போல பழைய விடியோவைப் பார்த்துக்கொண்டு வீட்டில் முடங்கிக் கிடந்தார். அய்பீஎல் போட்டிகளிலும் ஒன்றும் ஆகவில்லை. கிரிக்கெட் வாரியத்தால் பிஸ்கெட் போட்டு வளர்க்கப்படும் கேப்டன் சிங்கங்கள் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளரவிடுவதில்லை. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்கக்கூடாதல்லவா. அந்த வகையில் அழிக்கப்பட்டவர்தான் யுவராஜ் சிங். டெஸ்ட் போட்டியில் இருந்து தூக்கினார்கள், பின்னர் பி கிரேடு கொடுத்தார்கள்.

எல்லா கேப்டன் சிங்கங்களுக்கும் ஒரே முடிவுதான் ஏற்படும். கபில்தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த், அசாருதீன், கங்குலி, டிராவிட் ஆகிய எல்லோரையும் சேற்றைப் பூசித்தான் அனுப்பினார்கள். அசாருதீனுக்கு முன்பு வரைக்குமாவது ஓகே. அதன் பிறகு, கங்குலிக்கும், டிராவிட்டுக்கும் நேர்ந்தது கிரிக்கெட் பிஸினஸின் உச்சகட்ட அசிங்கம். ஆனால், இந்த அசிங்கங்களையும் தாங்கிக்கொண்டு சிங்கங்கள் தொடர்ந்து ஆடின. எல்லோருக்கும் இரண்டாம் நிலைத் தலைவர்களால்தான் பிரச்னை வந்தது. அசாருதீனுக்கு யாரால் வந்தது என்பதை அவரவர் சொந்த அபிப்ராயத்துக்கு விட்டு விடுகிறேன். கங்குலிக்கு டிராவிட், டிராவிட்டுக்கு தோனி, தோனிக்கு நிச்சயம் யுவராஜ்தான்.

இப்போது ஆட்ட நாயகன் விருதைத் தட்டியிருக்கும் யுவராஜ் பழிவாங்குவதற்குக் களத்தில் இறங்கிவிட்டார். பி கிரேடு, டெஸ்ட் பிளேயர் அந்தஸ்து போனது, கேப்டன் பதவி அபகரிக்கப்பட்டது போன்ற எல்லா நினைவுகளும் கண்முன் வந்து போகுமா இல்லையா? அதனால்தான் நீண்காலத்துக்குப் பிறகு வாயைத் திறந்திருக்கிறார் யுவராஜ். அதற்குப் பக்கபலமாக ஆட்ட நாயகன் விருதும் கிடைத்துவிட்டது. இப்படி ஸ்பின்னில் கலக்கினால், டெஸ்ட் போட்டிகளில் சேர்த்தாக வேண்டுமே... அடுத்தது கேப்டன் பதவிதான்.

-----------------------------

இப்போது தோனி கேட்டவுடன் டோர்னமென்ட் கூட முடியாத நிலையில், யூடிஆர்எஸ் முறையில் மாற்றத்தைச் செய்திருக்கிறது ஐசிசி. அந்த அளவுக்கு பிசிசிஐ மேல் பயம். இனிமேல் எல்பிடபிள்யூ பரிசீலனை செய்யப்படும்போது, பந்து உடலில் படும் தூரம் 3.5 மீ என அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 2.5 மீ என வைத்திருந்தார்கள். விளையாட்டில் பாதியிலேயே விதிகளை மாற்றுவதைப் போல கொடுமை இருக்க முடியுமா? யூடிஆர்எஸ் முறையே கிறுக்குத்தனம்தான் என்றாலும் அதை பாதியிலேயே மாற்றுவது - தலைவர் பாணியில் கேட்டால் - நியாயம்தானா? அப்ப இதுவரை நடந்த போட்டிகளெல்லாம் என்னவாம்?

1981-ம் ஆண்டுவரை இதுபோன்ற இன்னொரு கிறுக்குத்தனம் இருந்தது. அதுதான் அன்டர்ஆர்ம் பவுலிங். கிட்டத்தட்ட பந்தை உருட்டி விடுவது. 1981-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அண்ணன் ரீவர் கடைசி பந்தை உருட்டிவிட்டார். கடைசிப் பந்தில் சிக்சர் எடுத்தால் மேட்ச் டை ஆகிவிடும் என்பதால், அதை முறியடிப்பதற்காக இந்த ஏற்பாடு. ரீவர் இப்படிச் செய்த பிறகு அன்டர் ஆர்ம் பவுலிங்குக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் தடைவிதிக்கப்பட்டது. நம்ம கிளென் மெக்ராத்கூட இப்படியொரு பந்தைப் போட்டு, பில்லி பவுடனிடம் ரெட் கார்டு வாங்கியிருக்கிறார்.


 
..
.

11 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லும் தோனி யுவராஜ் கதை அப்படியே உல்டாவாக இருக்கிறது. யுவராஜ்தான் தோனியை விட சீனியர். திராவிட்டுக்கு பிறகு அவர்தான் கேப்டன் ஆவார் என்று எல்லோருக்கும் கருத்து இருந்தது. ஆனால் சேவாக்கை கேப்டனாக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் விதியின் பயனால் சேவாக் வரிசையாக டக் அடிக்க, மீண்டும் யுவராஜ் மீது கவனம் திரும்பியது. ஆனால் யுவராஜ் ஒரு அடங்காத பிள்ளை.

    புட்டி, குட்டி என்று மிக பப்ளிக்காகவே எல்லாம் செய்தார். மேலும் பயிற்சி ஆட்டத்துக்கு சரியாக வராமல் இருந்தது, அனைவரையும் மதிக்காமல் இருந்தது இவை எல்லாம் பிசிசிஐக்கு கடுப்பை கிளப்பின. சரியாக வந்து சேர்ந்தார் தோனி. இனி காலம் முழுவதும் யுவராஜ் கேப்டன் ஆகவே முடியாத ஒரு நிலை தற்போது உருவாகி விட்டது.

    இனி தோனிக்கு ஆப்பு வைக்க வேண்டுமானால் கோக்லி, அல்லது ரெய்னாவுக்குத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால் அது நடக்க கூடாது என்பதற்காகவே கோக்லியை செல்ல பிள்ளையாக்கி, ரெய்னாவை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் தோனி.

    ஆக தோனியின் எழுச்சிதான் யுவராஜுக்கு ஆபத்தாக அமைந்தது. உங்கள் எழுத்துக்களில் எப்படியாவது தோனியை கேப்டன் பதவியில் இருந்து இறக்கி விடவேண்டும் என்று ஆவல் தெரிகிறது. அது நடக்கும் ஆனால் சில காலம் கழித்து.

    பதிலளிநீக்கு
  2. ஒரு விளையாட்டில் காலத்துக்கேற்ப சட்டங்களில் புதிய முறையை புகுத்துவது நடைமுறைதானே?

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ரூல்ஸை மாற்றலாம் என்று சொல்கிறீர்களா? மாற்றக்கூடாது என்று சொல்கிறீர்களா? இல்லை பாதி தொடரில் மாற்றகூடாது என்று சொல்கிறீர்களா?

    அதுசரி இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லாத, பிசிசிஐ என்ற கம்பெனி பங்கேற்கும் ஒரு விளையாட்டில் என்ன ரூல்ஸ் இருந்தால் உங்களுக்கென்ன?

    பதிலளிநீக்கு
  3. யூடிஆர்எஸ் முறையே கிறுக்குத்தனம்தான் என்றாலும் அதை பாதியிலேயே மாற்றுவது - தலைவர் பாணியில் கேட்டால் - நியாயம்தானா?

    பதிலளிநீக்கு
  4. பாலா சார்... தோனியை மாற்றுவதெல்லாம் நம்மால் முடிகிற காரியமா? பிசிசிஐ அமைப்புக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதற்காக சரத்பவாரையும் சீனிவாசனையும் பற்றி எழுதினால் யார் படிப்பார்கள் சொல்லுங்கள்... அடுத்து, பிசிசிஐ மூலம் பெரும்பணம் சிலரிடம் குவிகிறது. அது நிச்சயம் தீங்குதான்... இப்போது லலித்மோடிக்கு இத்தனை முறை சம்மன் அனுப்பியும் பாஸ்போர்ட்டை முடக்கியும் ஏதாவது செய்ய முடிகிறதா பாருங்கள்... இதற்கெல்லாம் துணைபோவது - தலைவர் பாணியில் கேட்பதென்றால் - நியாயம்தானா?

    //அதுசரி இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லாத, பிசிசிஐ என்ற கம்பெனி பங்கேற்கும் ஒரு விளையாட்டில் என்ன ரூல்ஸ் இருந்தால் உங்களுக்கென்ன? // கூக்ளியில் ரேகைகளை இழந்தவன்... கவர் டிரைவ்களால் காயப்பட்டவன் என்கிற முறையிலே... நமக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது.. என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  5. அப்படியானால் சச்சினையும் தோனியையும் தாக்கி எழுதுவது கூட விளம்பரத்துக்குத்தான் என்கிறீர்களா? பிசிசிஐ சம்பந்தமான அரசியல் பிரச்சனைகளுக்கு இவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இவர்களை பொறுத்தவரை சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள். வாங்கும் சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். முதலாளிகளை விட்டு விட்டு வேலைக்காரர்களை குறிவைத்து தாக்குகிறீர்களே?

    இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்து விட்டதே. உங்கள் குறுகுறுப்பை மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தாமல், அவர்களின் ரூல்ஸை, நடைமுறையை விமர்சிக்கிறீர்களே?

    பதிலளிநீக்கு
  6. சுய விளம்பரம் என்று நீங்கள் கருதுவது வருத்தமளிக்கிறது. ஆனால் தோனியும் சச்சினும் எதற்கும் பொறுப்பாக முடியாது என்று நீங்கள் கூறுவது அதைவிட அதிக வருத்தமளிக்கிறது. ஐடிஆர்எஸ் தொடர்பான 8 பக்க ஐசிசி ஆவணத்தை படிக்க நேர்ந்தது. அதன்பிறகுதான் விமர்சனம். நமது எழுத்து கொஞ்சம் தத்தக்காபித்தக்கா என்று இருப்பதால் புரிதல் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... நமது ஒரே நோக்கம் பிசிசிஐயின் மோசடிகளை அம்பலப்படுத்துவதுதான்...நாம் எழுதுவதால் பிசிசிஐ திருந்திவிடவா போகிறது... அது அதிகாரமையம்... உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் சுயவிளம்பரத்துக்காக எழுதுகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை.

    //சரத்பவாரையும் சீனிவாசனையும் பற்றி எழுதினால் யார் படிப்பார்கள் சொல்லுங்கள்

    இது நீங்கள் சொன்னது. அதாவது என் பதிவுகளை எல்லோரும் படிக்கவேண்டும் என்பதற்காக நான் சச்சினையும் தோனியையும் தாக்கி எழுதுகிறேன் என்று சொல்வது போல உள்ளது.

    அவர்கள் இருவரும் பொறுப்பாகமாட்டார்கள் என்று நான் சொன்னது அவர்கள் மீதான அபிமானத்தால் அல்ல. நாளைக்கே ஒரு அரசியல் புரட்சி ஏற்பட்டு, பிசிசிஐ கலைக்கப்பட்டால், இவர்கள் இருவரும் பொத்திக்கொண்டு போகவேண்டியதுதான். இந்த ரீதியில்தான் சொன்னேன். அவர்களால் எதுவும் சொல்ல இயலாது என்று. உங்களுக்கு இருக்கு இந்த அளவு எழுத்து சுதந்திரம் கூட அவர்களுக்கு கிடையாது.


    பிசிசிஐ என்பதே ஒரு கொள்ளை கூட்டம். அதில் இருப்பவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அப்படியானால் அந்த கொள்ளை கூட்டத்துக்குள் நடக்கும் உள் அரசியல் நமக்கெதற்கு. சச்சின் அசாருக்கு துரோகம் செய்தார். தோனி டிராவிட்டுக்கு துரோகம் செய்தார் என்று தினமும் நடக்கும் விஷயங்களுக்கு நீங்களே ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே?

    பதிலளிநீக்கு
  8. இப்படி சச்சினையும் தோனியையும் தாக்கி எழுதுவதால் உங்கள் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைந்துவிடும் என்று நம்புகிறீர்களா? கண்டிப்பாக இல்லை. மாறாக உங்கள் பதிவுகளின் மீதுள்ள ஈடுபாடுதான் குறையும். உங்கள் நோக்கம் பிசிசிஐ ஒழிய வேண்டுமா அல்லது சச்சின் தோனி ஒழியவேண்டுமா?

    கருத்துக்களுக்கு நன்றி என்று நீங்கள் சொன்னது “போதும் நிறுத்திக்கொள்” என்று சொல்வது போல அர்த்தம் கொள்ளலாமா?  இது என் கருத்துறைகளுக்கான விளக்கம் மட்டுமே. இவற்றை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். என் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. அதற்காக சரத்பவாரையும் சீனிவாசனையும் பற்றி எழுதினால் யார் படிப்பார்கள் சொல்லுங்கள் என்று கூறியதில் ஒரு "மட்டும்" சேர்த்துக் கொள்ளுங்கள்...

    ஏற்கெனவே சீனிவாசன் பற்றியும் சரத்பவார் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது... சச்சின், தோனி, டிராவிட் பற்றியெல்லாம் கடுமையாக எழுதுவதால் அவர்களை நான் வெறுக்கிறேன் என்பது புரிந்துகொள்ளக்கூடாது. எல்லாவற்றிலும் ஒரு நையாண்டி இருப்பதைக் காண வேண்டும். ஏற்கெனவே இது பற்றி தெரிவித்திருக்கிறேன். மக்கள் மத்தியில் சென்டிமென்ட் இருப்பதால், அவர் பற்றி எழுதுவதையும் குறைத்தாகிவிட்டது...

    நன்றி என்று சொன்னால் அது நன்றி மட்டுமே.

    பதிலளிநீக்கு