திங்கள், 28 மார்ச், 2011

பாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்? - பாகம் 3





இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் வன்மம் 1947 பிரிவினையிலேயே தொடங்கிவிட்டது. ஆனால், இதை நீரூற்றி வளர்த்தது இரு தரப்பு கிரிக்கெட் வீரர்களும்தான். ஒருவருக்கொருவர் வீட்டுப் பெண்களைக் கெட்டவார்த்தையால் திட்டியதால்தான் மைதானத்துக்குள் மோதல்கள் நடந்தன. எப்படியெல்லாம் திட்டினார்கள் என்பதை இணையத்தில் தேடிக் கொள்ளவும்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தானுடன் டூ விட்டுக் கொண்டோம்.  மும்பையில் மைதானத்தை உழுது போட்டோம். இந்தியாவுக்கு வந்தா கொன்...டே புடுவேன் என்று மிரட்டினோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மட்டுமல்ல, பாகிஸ்தான் அரசும் நடுநடுங்கியது. எல்கேஜியிலிருந்தே பாகிஸ்தான் நமக்கு எதிரி என்பதை மனப்பாடம் செய்ததால் வந்த வினை இது.


 இப்போது இருப்பது ஜியா காலத்து, புட்டோ காலத்து பாகிஸ்தான் அல்ல. சுத்த நோஞ்சான். அஞ்சுக்கும் பத்துக்கு ஐஎம்எஃப்பின் காலைப் பிடிக்கும் நிலைமையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.  நாமெல்லாம் சேர்ந்து ராசாவிடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி பாகிஸ்தானிடம் கொடுத்துவிட்டால், காஷ்மீரை மட்டுமல்ல, ராவல் பிண்டியையும் சேர்த்து நம்மிடம் கொடுத்தேவிடுவார்கள். அவ்வளவு பஞ்சத்தில் இருக்கிறது பாகிஸ்தான் அரசு. முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்புதான் அங்குள்ள ஒரு மாநிலத்தின் பட்ஜெட். நாட்டுக்குள்ளேயே அமெரிக்காவை உளவு பார்க்கவும், ஏவுகணைத் தாக்குதல் நடத்தவும்  அனுமதித்திருக்கிறது என்றால் அந்த நாட்டின் நிலைமை எவ்வளவு மோசம்?

அமெரிக்காவிடம் ஒரு அணுஉலை ஒப்பந்தம் செய்துகொண்டு, லாகூரில் குண்டு போடுங்கள் என்று சொன்னால் கச்சிதமாக முடித்துவிடுவார்கள். அந்த அளவுக்குக் கிடுக்குப் பிடியில் சிக்கியிருக்கிறது பாகிஸ்தான். அதற்காக இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்று கூற முடியாது. வளர்ச்சியடைந்த நாடு போல காட்டிக்கொண்டிருக்கிறது. பெரிய இடத்து சகவாசங்கள் இருப்பதால், பணக்காரர்களுக்கான நாடாகி இருக்கிறது. கிரிக்கெட்டில் வல்லரசாக ஆகியிருக்கிறது. மறைக்கப்பட்ட பஞ்சமும் பசியும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கின்றன.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கடந்த ஐபிஎல் போட்டிகளில் இடமில்லை. நம் நாட்டு அரசு அவர்களுக்கு விசா வழங்காது என்பதால் அந்நாட்டு வீரர்களை யாரும் தேர்வு செய்யவில்லை. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் ஆடாத ஒரு நாடு பாகிஸ்தான் மட்டும்தான். பாகிஸ்தானில் போய் ஆடவே மாட்டோம் என்று கூறி அங்கு நடக்க இருந்த உலகக் கோப்பை போட்டிகளையெல்லாம் பிடுங்கிக் கொண்ட பிறகும்  தன்மானத்தை விட்டு, பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு வந்து ஆடுகிறார்கள் என்றால், அவர்களது நிலைமை எவ்வளவு வேதனைக்குரியது. இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணித்து வருவதாகக் கூறி உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு போருக்கும், விளையாட்டு வன்மங்களுக்கும் பின்னால் அரசியல், பொருளாதார ஆதாயம் தேடும் சதி இருக்கும் என்பார்கள். மொகாலி டிக்கெட் விலை லகரங்களில் இருக்கிறதாம். இருந்தாலும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் வன்மத்துக்குப் பின்னால் சதி ஏதும் இல்லை என்று கண்ணை மூடிக் கொள்வோம்.

பி.கு: பாகம் 1-ன் கருத்துரை பகுதிதான் பாகம் 2

இதையும் படிக்கவும்...

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்

...
....
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக