வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்

மு.கு: இது மீள்பதிவு.

ஒரிசா, சத்தீஸ்கர், அசாம், உத்தரகண்ட், பிகார், மேற்கு வங்கம், தமிழகத்தின் தேனி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தெரியும் இந்தியா வேறு, இந்தியா என்கிற பெயரில் ஆடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் அணியின் முகம் வேறு. மேற்சொன்ன இடங்களில் இந்தியா ஒரு மூன்றாந்தர நாடு. வறுமையிலும் பஞ்சத்திலும் வாடும் நாடு. கல்வி அறிவில்லாத நாடு. உணவுக்காகவும், வேலைக்காகவும் வேறு பகுதிகளைத் தேடும் நாடு. இலவசங்களுக்காக வரிசையில் நிற்கும் நாடு.

ஆனால், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிரிக்கெட் அணியின் இந்தியா, வளர்ச்சியடைந்த நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படும், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கே உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நாடு. கிரிக்கெட் உலகில் எதேச்சதிகாரப் போக்கு கொண்ட நாடு.
கடந்த 20 ஆண்டுகளில் மேம்பாலங்களாகவும், குட்டிக் கார்களாகவும், மெட்ரோ ரயில்களாகவும் இந்தியாவின் பொருளாதார வீக்கம் பெரிதாகிக் கொண்டே போவதுபோல, கிரிக்கெட் அணியின் செல்வாக்கும், அச்சுறுத்தும் போக்கும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

உண்மையைச் சொன்னால், இந்தியக் கிரிக்கெட் அணி நினைத்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம், அல்லது நிறுத்தலாம், மாற்றி அமைக்கலாம். எந்த அணியை வேண்டுமானலும் நசுக்கலாம். மேலே கொண்டுவரலாம். அந்த அளவுக்கு இந்திய மக்களின் தலைகளையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் சந்தைப்படுத்தி பிசிசிஐ செல்வாக்குப் பெற்று வருகிறது.

ஒரு களியாட்டம் என்கிற வகையில் எல்லா பொழுதுபோக்கையும் போல இது நடந்தால், வெறும் வியாபாரம் என்று கூறிவிட்டுப் போய்விடலாம். ஆனால், இங்கு நாட்டையும் துணைக்கு அழைத்து ஒரு மோசடி நடக்கிறது.
2ஜி அலைக்கற்றை இந்தியாவின் வளம் என்றால், இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வம் மட்டும் தேசத்தின் சொத்து இல்லையா? 

2ஜி, 3ஜிக்களை எல்லாம் ஏலம்விட்டு ராயல்டி கேட்கும் இந்திய அரசு, எந்த ராயல்டியும் இல்லாமல் ஒரு கூட்டம் இந்தியாவில் இந்தியாவின் வளத்தை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை எப்படி அனுமதிக்கிறது? நம்மையெல்லாம் விற்கிறார்கள், அதுவும் தனியாருக்கு, அப்படித்தானே?

இவ்வளவு காலமும் பிசிசிஐதானே கிரிக்கெட்டை கட்டிக் காப்பாற்றி வந்தது, அப்போதெல்லாம் எழுப்பப்படாத கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது என்று கேட்கலாம். இது நாள்வரை இல்லாத அளவுக்கு கடந்த 15 ஆண்டுகளில்தான் கிரிக்கெட் பெரும் வர்த்தகமாகியிருக்கிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பது போல் முதலிலேயே கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனியார் கூட்டம்தான் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாக மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். இந்தத் துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால்,  2ஜி அலைக்கற்றை, எஸ்-பாண்ட் விவகாரத்தை எல்லாம் கேள்வி எழுப்பவே கூடாது.

ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக முதற்கட்டமாக 8 அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ரூ.300 கோடி அளவுக்கு ஏலம் போயின. பணம் பிசிசிஐக்கு போனது. அவர்கள் பிரித்துக் கொண்டார்கள். யாருடைய சொத்தை யார் ஏலம் விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் இவர்களுக்கு வரிச் சலுகை வேறு.

இப்படிக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தாரை வார்த்துத் தரப்பட்டகிரிக்கெட், இப்போதெல்லாம் உண்மையாக ஆடப்படுவதில்லை; ஸ்கிரிப்ட் போல எழுதப்படுகிறது என்பதுதான் நிஜம்.
கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் டிராவிட் அணி தோல்வியுற்ற போதும், ஐபிஎல் போட்டிகளில் நடந்த மோசடிகள் வெளியானபோதும், இந்திய கிரிக்கெட், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருந்து விடுதலையாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையாவது அது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். தோனி அணி தோற்பதன் மூலம் கிரிக்கெட்டும், பின்தங்கிய இந்தியாவும் காப்பாற்றப்படட்டும்.

...
..
.

2 கருத்துகள்:

  1. Miga nandru....

    Meendum karthukkal idap padum..

    ( IPL Auction paarkkum bothu.. namaku ini IPL paarkave koodathunnu kobam varum... aanal kaalm sendru 3 maatham kalithu IPL thodangum bothu namathu kobam marnathu poikkum.... naamum TV munbu utkaaranthu IPL paarthu kondu iruppom . ithu thaan namathu kobam... mattrum rosham... enna seivathu.. naam muthalili nirutha muyarchi seivathu illye

    பதிலளிநீக்கு
  2. எனது எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்களின் எழுத்துக்களில் காண்கிறேன். மி்க்க நன்றி

    பதிலளிநீக்கு