ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

செபக் தக்ராவும் கிரிக்கெட்டும்: ஐசிசியின் அடுத்த சதி

 விளையாட்டு வீரர்களுக்கென ஒரு கோட்டா உண்டு. கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த கோட்டாவைப் பெற எல்லோரும் தீவிரமாக முயல்வார்கள். மாநில அளவிலோ, தேசிய அளவிலோ  ஆடியிருந்தால் இந்த கோட்டாவில் மெடிக்கல் காலேஜ் சீட்டும், மத்திய அரசு என்ற பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்துவிடும். மாநில அரசு என்ற குட்டி நிறுவனமும் சலுகைகள் தரும். எந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் இந்த கோட்டா உண்டு அதுதான் தெரியாது. தேசிய அளவில் கிரிக்கெட் ஆடிய எவரும் இந்தக் கோட்டாவுக்கு அலைவதில்லை. ஏற்கெனவே வீடு நிறைய கரன்சியைக் குவித்திருப்பார். காலேஜ் சீட்டும் அரசு வேலையும் அவர்களுக்கு தேவையேயில்லை. செஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளுக்கும் நல்ல ஸ்பான்சர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் மெனக்கெடுவதில்லை. அப்படியானால் யார்தான் இந்த கோட்டாவை பயன்படுத்துகிறார்கள்?

நம்மூர் பெற்றோர்கள் புத்திசாலிகள் பிள்ளையை எந்த ஆட்டத்தை ஆடவைத்தால் அவனுக்கு கோட்டாவில் எல்லாம் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். மாநில அளவில் ஆடுவதைவிட, தேசிய அளவில் ஆடுவதையும்விட, சர்வதேச அளவில் ஆடினால்தான் கோட்டா பெறுவது ஈஸி என அவர்களுக்குத் தெரியும். ஆனால் எந்த ஆட்டம் ஆடுவது...? கிரிக்கெட் ஆட வேண்டுமென்றால் பிசிசிஐயின் காலில் தவம் கிடக்க வேண்டும். டென்னிஸ், செஸ், பேட்மின்டன் போன்ற எல்லாவற்றுக்கும் போட்டி அதிகம். தேசிய, சர்வதேச போட்டிகளில் ஆடுவது எளிதல்ல. யாருமே ஆடாத ஆட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றால் ..... சூப்பர் ஐடியா..

இப்படிப்பட்ட பெற்றோர்தான் பிள்ளைகளை செபக் தக்ரா போன்ற ஆட்டங்களை ஆடவைக்கிறார்கள்.  செபக் தக்ரா தெரியுமில்லையா...? கிரிக்கெட்டை விட அதிக நாடுகளில் ஆடப்படும் ஆட்டம்தானையா அது. வாலிபால் இருக்கிறதே அதைக் காலால் ஆட வேண்டும் அவ்வளவுதான். இந்தப் பெயரைக் கேள்விப்படவில்லையென்றால் உங்களுக்கோ உங்கள் பிள்ளைக்கோ அண்ணா யுனிவர்சிடியும், எம்ஜிஆர் யுனிவர்சிடியும் சீட் தரமாட்டார்கள். இந்த ஆட்டத்தில் சர்வதேசப் போட்டிகளில் ஆடுவதென்பது மிக எளிது. ஏனென்றால் இந்தப் பேரைக் கேள்விப்பட்டிருப்பவர்களே சொற்பமானவர்கள்தான். ஒருவேளை சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றுவிட்டால், உலகச் சாம்பியன் என்று கூறிக்கொள்ளலாம்... காலேஜ் சீட் கிடைக்கும். அரசு வேலையும் கிடைக்கும்...

இதுபோன்ற புத்திசாலித்தனத்தைத்தான் ஐசிசி பயன்படுத்துகிறது. அடுத்த உலகக் கோப்பை போட்டியிலிருந்து 10 அணிகள் போதும் என்கிறது. ஏற்கெனவே 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 9 அணிகள் மட்டும்தான் ஆடின. இப்போது பழைய வரலாறு திரும்புகிறது. சிறிய அணிகளால் நேரமும் வீணாவதுடன், விறுவிறுப்பும் போகிறதாம். என்னைக் கேட்டால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை மட்டும் கொண்ட உலகக் கோப்பையை நடத்தலாம். இங்குதான் "அவர்கள்" அதிகம். என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியிலும், சுழற்சி முறையில் ஒரு அணி வெற்றிபெறுவது போல திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அப்போதுதான் "அவர்களை" தக்க வைத்துக் கொள்ள முடியும். 1983 -ஐக் காட்டியே இன்று வரைக்கும் அவர்களை ஆட்டுவிக்க முடிகிறதல்லவா?

அந்த விளம்பரம் மீண்டும் நினைவுக்கு வருகிறது...

"நான் ரேஸ்ல செகண்டா வந்தேன்"

"எத்தனை பேர் ஓடினாங்க"

"ரெண்டு"

...
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக