வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்: காம்ரேட் யெச்சூரியின் கணக்கு!

தபால்துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் நம்பலாம். அதனால்தான் அவர்கள் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்வதை விட்டுவிட்டு இன்சூரன்ஸ் பாலிசைகளை விற்பது, தங்கக் காசுகளை விற்பது என பெட்டிக்கடை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்று நாம் கூறவேயில்லை. மிகக் குறைந்த லாபத்திலோ அல்லது மிகக் குறைந்த நஷ்டத்திலோ இயங்குவதுதான் அரசு சேவை நிறுவனங்களுக்குச் சரி. மக்களுக்கு ஏதோ நன்மை செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ரயில்வே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. லாலுவும் மம்தாவும் வந்து அதை லாபத்தில் இயங்கச் செய்திருக்கிறார்களாம்.  தக்கல் டிக்கெட், முன்பதிவு ரத்துக் கட்டணம், அளவுக்கு மிஞ்சிய சரக்குகளை ஏற்றி தண்டவளங்களை டார் டாராக் கிழிப்பது என பல மோசடிகளைச் செய்துதான் இந்த லாபம் சம்பாதிக்கப்படுகிறது. மக்களும் லாபம் வந்தால்தானே நல்லது என லாலுவையும், மம்தாவையும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  அவ்வளவு ஏன் நமது காம்ரேட் யெச்சூரிகூட லாபம் குறைந்துவிட்டதே எனக் கண்டிக்கிறார். பொதுவுடைமை பேசும் அவர் திடீரென லாபம் கூடவேண்டும் என ஏன் பேசுகிறார் என்று தெரியவில்லை. லாபம் அதிகரித்தால், ஒன்று மேற்சொன்ன மோசடிகளைச் செய்ய வேண்டும், அல்லது ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மக்களிடமிருந்து கறக்க வேண்டும். யெச்சூரிக்கு இதில் எது பிடிக்கிறது என்று காம்ரேடுகள்தான் விளக்க வேண்டும்.

எல்.ஐ.சி.காரர்களின் மோசடி ரயில்வேயைவிட பல மடங்கு அதிகம். "செத்தாக் காசு" என்பதுதான் ஆயுள்காப்பீட்டின் ரகசியம். ஆனால் இந்த ரகசியத்தைச் சொன்னால் யாரும் ஆயுள்காப்பீடு செய்ய மாட்டார்கள் என்பதால், உங்களுக்கு அப்படிப் பணம் கிடைக்கும், இப்படிக் கிடைக்கும், மணிபேக், பங்குச்சந்தையில் இருக்கிறது என பலவாறு ஆசை காட்டி பணத்தைக் கறக்கிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு மட்டும்தான் செய்ய வேண்டும். இந்த முதலீட்டு வேலைகளையெல்லாம் ஏன் செய்கிறார்கள்?

 உதாரணமாக 10 லட்சரூபாய் காப்பீடு பெற மாதம் ரூ.300 முதல் 500 கட்டினால் போதும். சராசரியாக ரூ.20 ஆயிரம் சம்பளம் பெறும் ஒரு மனிதன் ரூ. 1000 காப்பீட்டுக்குச் செலவு செய்தால் போதும். அவன் இறந்தால் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் வரை கிடைக்கும். அதுதான் காப்பீட்டுக் கணக்கு. ஆனால், எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாமே முதலீடு என்கிற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதனால் லாபம் அடைகிறார்கள். இந்த லாபத்தைக் குறைத்து மக்களுக்கு கூடுதல் பணப்பயன்களைத் தரலாமே.. ம்கூம் மாட்டார்கள்.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கின. அப்போதெல்லாம் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. இப்போது அந்த நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம். வரிமூலம் அரசுக்கு பணம் கொட்டுகிறது. நஷ்டத்தை யார் சுமக்கிறார்கள். நாம்தான்..

ஆக, ஒரு அரசு நிறுவனம் அதிக லாபம் அடைகிறது என்றால், அது மக்களைச் சுரண்டுகிறது என்றுதான் அர்த்தம். இது நாம் சொல்லவில்லை. காம்ரேடுகளின் கணக்குகூட அதுதான்.

அந்த வகையில் ஐபிஎல் என்கிற அரசு நிறுவனம் (அட!) லாபத்தில் இயங்கினால், அதைபற்றி நாம் குறை கூறலாம். நோஐபிஎல் என்கிற பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டதிலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், இந்த அணிகள் எல்லாம் நஷ்டத்தில் அல்லவா இயங்கிக் கொண்டிருக்கின்றன.

2009-10 நிதியாண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 87கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய் மல்லையாவுக்கு ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

பஞ்சாப் 65 கோடியும், டேர்டெவில்ஸ் 47 கோடியும், மும்பை இந்தியன் 42 கோடியும், ராஜஸ்தான் 35 கோடியும், சென்னை 19 கோடியும் கொல்கத்தா 11 கோடியும் நஷ்டமடைந்திருக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டில்கூட இந்த அளவு நஷ்டமில்லையாம். தொடர் நஷ்டத்தால் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ஆட்டோவி்ல போகக்கூட காசில்லையாம். முகேஷ் அம்பானி எல்லா சொத்தையும் ஐபில் மூலம் நாட்டு மக்களுக்குச் சேவை செய்யவே அர்ப்பணித்துவிட்டாராம்.

ஏன்யா, இப்படி நஷ்டமடையும் தொழிலை செய்து கொண்டிருக்கிறீர்கள்? கடையை மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்க வேண்டியதுதானே என்று பொதுக்கணக்குக்குழு கேட்டிருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள் மக்கள் சேவைதான் முக்கியம் என்று. அதுவும் சரிதான்.
..
.

1 கருத்து: