திங்கள், 7 பிப்ரவரி, 2011

கபில்தேவ் - அசல் சரண்டர்!

1983 உலகக் கோப்பையை வென்ற கேப்டன், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தவர், கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்தவர், இந்திய அணியின் பயிற்சியாளராக வலம் வந்தவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் கபில்தேவ். ஹரியானா காளை, ஹரியானா சூறாவளி என்றெல்லாம் புகழ்மாலை சூட்டப்பட்டவர். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸை கேட்ச் பிடித்து வெளியேற்றியதும், ஜிம்பாப்வேயுடனான 175 ரன்களும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாதவை. 

இத்தனை பெருமைக்குரியவராக கிரிக்கெட் ரசிகர்களாலும் பிசிசிஐயாலும் பார்க்கப்பட்ட கபில்தேவ் 2007-ம் ஆண்டு இந்தியாவின் எதிரியானார். அதாவது கிரிக்கெட்டின் எதிரியானார்.  அதாவது பிசிசிஐயை பகைத்துக் கொண்டார்.  அவர் செய்தது ஜீ குழுமத்தின் ஐசிஎல் என்கிற 20 ஓவர் கிரிக்கெட் அமைப்பை தலைமையேற்று நடத்த முற்பட்டதுதான்.  இந்தியன் கிரிக்கெட் லீக் என்கிற இந்த ஐசிஎல் அமைப்புத்தான் 20 ஓவர் போட்டிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஐபிஎல்லுக்கு முன்னோடி என்பதும் நமக்குத் தெரியும்.


ஐசிஎல் அமைப்பில் சேர்ந்த மறுநாளே இந்தியக் கிரிக்கெட் அகாடெமி தலைவர் பொறுப்பில் இருந்து கபில்தேவ் தூக்கி எறியப்பட்டார். துரோகி பட்டம் சுமத்தப்பட்டது. இத்தனைக்கும் ஐசிஎல் என்பது பிசிசிஐக்கு எந்த விதத்திலும் போட்டியாக அமையாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. அதாவது அதுவரை இந்தியாவில் ஆடப்படாத 20 ஓவர் கிரிக்கெட்டை மட்டும்தான் ஆடுவோம் என்றும் ஐசிஎல் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனாலும் கிரிக்கெட்டுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் பிசிசிஐ தியாகிகள் அதைக் கேட்கவில்லை.


மைதானங்கள் கிடைக்கவில்லை. பாப்புலர் ஆட்கள் கிடைக்கவில்லை. ஐசிஎல் குதிரை நொண்டியடித்தது. பின்னர் செத்துப் போனது. இப்போது அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
ஐசிஎல் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த பலரும் பிசிசிஐ காலில் விழுந்து தேசத் துரோகி என்கிற அவப்பெயரை நீக்கிக் கொண்டார்கள். இப்போது ஒரு வழியாக கபில்தேவும் காலில் விழுந்துவிட்டார். ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்று தோனிக்கு அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.  பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவி காத்திருக்கிறது சூறாவளியே!

..


.

1 கருத்து:

  1. கபில்தேவ் உலக கோப்பையை கஷ்டப் பட்டு வென்றார், இதில் மற்ற எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் விட அதிக பங்கு அவருக்கே சேரும். அந்த பலனை இன்றைய ஆட்டக் காரர்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கபில்தேவின் அணியினருக்கு இருந்த திறமை இன்றைய வீரர்களுக்குக் கிடையாது. அன்று ஆடி நாட்டுக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு இருக்க வீடோ, வாழ பண வசதியோ இன்றைக்கு இல்லை, இன்றோ எக்கச் சக்கமான கோடிகள் விளம்பரம் மூலம் பெறுகிறார்கள், போற இடமெல்லாம் கில்மா வேறு கிடைக்கிறது. இவர்களை வாழ வைத்த கபில் தேவும் வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு