புதன், 27 ஜூலை, 2011

சச்சினுக்கு தண்டனை கிடையாதா?

 உடல்நிலை சரியில்லாவிட்டால் எந்த ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதுவும் குழுப் போட்டிகள் என்றால் உடல் தகுதியை நிரூபித்தே ஆக வேண்டும். ஏனென்றால் உடல் தகுதி இல்லாத ஒருவருக்குப் பதிலாக வேறொருவரை களமிறக்க முடியும். ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் நம் ஆள்கள் இந்த விதியை காற்றில் பறக்க விடுகிறார்கள்.

 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே நமது சச்சின் தெண்டுல்கருக்கு காய்ச்சலாம். ஆனாலும் மைதானத்தில் அவர் இருந்தார். ஏனய்யா காய்ச்சலுடன் ஆடினீர்கள் என்று கேட்டால், "காய்ச்சலையும் பொருள்படுத்தாமல் நாட்டுக்காக ஆடினேன்" என்கிற ரீதியில் பதில் வரும். அவரது பக்தகோடிகள் இதையும் கேட்டு "சல்யூட்" அடிப்பார்கள். சச்சின் இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் தோனி டீம் இந்தப் போட்டியில் ஜெயித்திருக்கக்கூடும் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அனில் கும்ளே தலை முழுக்கு கட்டுப்போட்டு வந்து ஒரு போட்டியில் பந்து வீசினார். ஆனால் அதெல்லாம் ஆடுகளத்திலேயே காயம் ஏற்பட்ட காயம். ஆனால், காய்ச்சல் இருக்கிறது எனத் தெரிந்தே ஒருவர் ஆடுகளத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு இந்த அணியின் கேப்டனும் தலையசைத்திருக்கிறார். சுய நலத்துக்காக சொந்தக் குழுவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் தண்டனை கிடையாதென்றால்...
.

.

வெள்ளி, 22 ஜூலை, 2011

சச்சின் நல்லவரா, ரொம்ப நல்லவரா?

சச்சினைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் எதையும் எழுதக்கூடாது என்பதற்காகவே மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் ஏதாவது கூறி நோஐபிஎல் அதிபரை எழுத வைத்து விடுகிறார்கள். சச்சினைப் பற்றி உனக்கென்ன தெரியும், உன்னால் நூறு மீட்டர் போட்டியில் ஓட முடியுமா, நாலு சுவருக்குள் அடைந்து கொண்டு இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். இதனால் நோஐபிஎல் அதிபர் மனமுடைந்த போய் இதை எழுத வேண்டியிருக்கிறது.

 அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை சிக்ஸ்பேக்குக்கு சொந்தக்காரர்தான் இந்த நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனத்தின் சிஇஓ. நூறு மீட்டர் என்ன 1500 மீ போட்டிகளிலும் 400 பெருக்கல் 4 ரிலே ஓட்டங்களிலும் அவர் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். முக்கியமான தருணங்களில் கிரிக்கெட் அணியை வழிநடத்தியிருக்கிறார்.

2000-ம் ஆண்டு வரை சச்சினை கிரிக்கெட் கடவுளாக நினைத்து வந்திருக்கிறார். சச்சின் ஒவ்வொரு ரன் எடுக்கும்போது அந்தப் புள்ளி விவரங்களை மனதிலேயே அப்டேட் செய்து கொண்டிருந்தவர்தான் நோஐபிஎல் அதிபர்.  ஒருநாள் போட்டியில் சச்சின் எப்போது முதல் சதம் அடித்தார், டெஸ்ட் போட்டியில் எப்போது சதம் அடித்தார் என்பதெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரியும், ஏனென்றால் பரீட்சைகளைத் தவறவிட்டு தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அவை. இதைவிட சச்சினை விமர்ச்சிப்பதற்கு வேறு ஏதாவது தகுதி வேண்டுமா எனத் தெரியவில்லை.

சச்சின் என்ன தப்பு செய்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். சூதாட்டத்தை மறைத்தது, ஃபெராரி கார் விவகாரம், இப்போது வருமான வரியைக் குறைப்பதற்காக நடிகர் என்று பொய் சொன்னது எல்லாம் சின்னச் சின்ன தவறுதானே என்கிறார்கள். நமது நாட்டின் புகழுக்காக ஆடும் செல்லப் பிள்ளையின் இந்தத் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம்தானே என்றும் கேட்கிறார்கள். இதற்கு நோ ஐபிஎல் அதிபர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

1984-ல் இந்திரா காந்தி இறந்தபிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்து ஆட்சியைப் பிடித்தார். இப்போது சச்சின் எப்படியோ அப்படியே ராஜீவ் காந்தியும். இந்தியாவுக்கே செல்லப்பிள்ளை. அவர் அரசியலில், இவர் விளையாட்டில் அவ்வளவுதான் வேறுபாடு.

ராஜீவ் காலத்தில்தான் ஈழத்துக்கு அமைதிப்படை அனுப்பியது, போபர்ஸ் ஊழல் ஆகியவை நடந்தன. அமைதிப்படையை அனுப்பியதற்கான விளைவுகள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொன்று போபர்ஸ். சில கோடிகள்தானே என்று பலரும் மன்னித்து விட்டார்கள். அப்போதும் இந்தச் செல்ப்பிள்ளை கான்செப்ட்தான் ராஜீவ் தப்பித்துக் கொள்ள உதவியது. போபர்ஸ் ஆதாரங்களை பாக்கெட்டிலேயே வைத்திருப்பதாகக் கூறிவந்த வி.பி.சிங்கும் எதற்கு மயங்கினாரோ தெரியவில்லை. ஆட்சிக்கு வந்ததும் போபர்ஸை கிடப்பில் போட்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது.

ஒரேயொரு போபர்ஸ் பிரச்னைக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்குமானால், ஹர்ஷத் மேத்தா விவகாரமும், ஜார்க்கண்ட் எம்பிகளுக்கு பணம் கொடுத்ததும், நரசிம்மராவ் மகனின் ஊழல் விவகாரமும், சந்திராசாமியின் செயிண்ட் கிட்ஸ் மோசடியும், அவ்வளவு ஏன் இன்றைக்கு 2ஜி ஊழல் கூட நடந்திருக்காது. யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருந்திருக்கும்.

இதே கரிசனம்தான் சச்சின் தெண்டுல்கர் விவகாரத்திலும் காட்டப்படுகிறது. அவரைப்போல ஆடமுடியுமா என்கிற ஒரே பதிலில் அவரது எல்லாவிதமான மோசடிகளையும் முடக்கப்பார்க்கிறார்கள். ஒரே நாளில் பல லட்சம் கோடி சம்பாதித்த ஆ.ராசாவுக்கு கூடதான் திறமை இருக்கிறது. அவருடன் யாராவது போட்டி போட முடியுமா?

தெண்டுல்கர் என்பதால் மட்டும் ஆடம்பரத்துக்காக வரிவிலக்குக் கோருவதை நியாயப்படுத்த முடியுமா? ஒரு நாளைக்கு ரூ.20க்கும் கீழே வருமானம் உள்ளோர் 37 சதவீதத்துக்கும் அதிகமானோர் இருக்கும் ஒரு நாட்டில், இதை நியாயப்படுத்துவதற்கும் சிலர் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி "சாதகமாக" நடந்து கொள்வதை ஆதரிப்பதுதான் எல்லாச் சீர்கேட்டுக்கும் காரணம்.

இன்று வரைக்கும் ஸ்பாட் ஃபிக்சிங் இருக்கிறது. ஐசிசியே இதை அவ்வப்போது ஒப்புக்கொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு அசாரை பலிகடாவாக்கியவர்கள், சச்சின் போன்றவர்களையும், பிசிசிஐயும் தப்பிக்க விட்டதால் வந்த வினைதான் இது. சச்சின் திறமையானவர்தான். அவருக்கு நிகர் யாருமில்லைதான். ஆனால் அது மைதானத்துக்குள்ளே மட்டும்தான். டிரஸ்ஸிங் ரூமிலும், மைதானத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக்கூடாது என்றால், நாட்டுக்கு அவர் சேவை செய்கிறார், பாரத ரத்னா வழங்க வேண்டும் என்கிற பேச்செல்லாம் எங்கும் கேட்கக்கூடாது.

.
..
..

புதன், 20 ஜூலை, 2011

தோனியின் சரக்குச் சண்டையும் பஜ்ஜியின் சீக்கிய மதமும்

சரக்கு அடிப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி எழுதும் அளவுக்கு அனுபவம் நோஐபிஎல் அதிபருக்கு இல்லை. எப்போதோ ஒரு காலத்தில் நண்பர்களுடன் பாரில் அமர்ந்து கோக-கோலாவும், ஆபாயிலும், ஜிஞ்சர் சிக்கனும், மட்டன் கொத்தும் சாப்பிட்டதோடு சரி. அந்த நேரத்தில் விஸ்கி, பிராந்தி ஆகியவற்றுடன் இன்னபிற அயிட்டங்களும் சேர்ந்த ஒரு காக்டெயில் வாசனை வரும். அந்த வாசனையைப் பிடித்த அனுபவம் மட்டுமே நோஐபிஎல் அதிபருக்கு இருக்கிறது. இதை ம்ட்டுமே கொண்டு  சரக்கு சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் எழுதத் துணிந்திருக்கிறார்.

 இந்தக் கட்டுரை தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோருடைய சரக்கு விளம்பரங்களைப் பற்றியது. ஹர்பஜனின் ராயல் ஸ்டேக் விளம்பரத்தைக் கேலி செய்து மால்யாவின் மெக்டவல் விளம்பரம் இருப்பதாக ஹர்பஜனின் அம்மா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மால்யாவின் விளம்பரத்தில் நடித்தது 121 கோடி மக்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனி.

 ஹர்பஜனை மட்டுமன்றி, அவரது குடும்பத்தினரையும் அந்த விளம்பரம் கேலிசெய்வதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தோனி நடித்த விளம்பரத்தில் சீக்கிய சமூகமே கேலி செய்யப்பட்டிருப்பதாகவும் ஹர்பஜனின் அம்மா கூறுயிருக்கிறார். நோஐபிஎல் அதிபருக்கு இந்த இடத்தில்தான் சந்தேகம். சீக்கிய மத அடையாளங்களை அணிந்து கொண்டு, சரக்கி விளம்பரத்தில் நடித்து, கல்லாப்பெட்டியை நிரம்பும்போது, சீக்கிய மதத்தின் மானம் போகவில்லையா. தனது சொந்த மகனே ஊர் மக்களையெல்லாம் தண்ணியடியுங்கள் என்று பரிந்துரை செய்யும்போது மத உணர்வுகள் வந்து தடுக்கவில்லையா?

 இப்போதும் ஹர்பஜனுக்கும் அவரது குடும்பத்துக்கும் மத உணர்வும், குடும்ப பாசமும் இழுத்ததால் தோனியின் விளம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரியவில்லை. ஹர்பஜன் கேலி செய்யப்பட்டதால் விளம்பர வருவாய் போய்விடக்கூடாது என்பதுதான் அவர்கள் எண்ணம். இதில் கார்ப்பரேட் வர்த்தகப் பின்னணியும், நெருக்கடியும் கண்டிப்பாக இருக்கும்.
 உண்மை இப்படியிருக்க  மதத்தை சுயலாபத்துக்காக வம்புக்கிழுக்கும் ஹர்பஜன் அண்ட் கோவுக்கு ஏகன் படத்தை இடைவேளை வரையாவது பார்க்க வைத்து தண்டனை தர வேண்டு்ம். ஏற்கெனவே சைமண்ட்ஸை திட்டியதற்காக வேட்டைகாரன் தண்டைனை நிலுவையில் இருக்கிறது.

 அது போகட்டும்  தோனியிடம் கேட்டால், எனக்கு விளம்பரத்தின் முழு ஸ்கிரிப்டும் தெரியாது என்று மழுப்பியிருக்கிறார். அதாவது தமது அணி வீரர் போன்ற ஒருவரை காதோடு அப்பும் காட்சி இருப்பது அவருக்குத் தெரியாதாம். இப்போது தெரிந்த பிறகு மட்டும் என்ன செய்யப் போகிறார். எதுவுமில்லை. ஏனென்றால் பஜ்ஜி மதத்தை மட்டும்தான் விற்கிறார். நீங்கள் விற்பதற்கும் அடகுவைப்பதற்கும்தான் 121கோடி தலைகள் இருக்கின்றனவே.

..
.