வெள்ளி, 22 ஜூலை, 2011

சச்சின் நல்லவரா, ரொம்ப நல்லவரா?

சச்சினைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் எதையும் எழுதக்கூடாது என்பதற்காகவே மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் ஏதாவது கூறி நோஐபிஎல் அதிபரை எழுத வைத்து விடுகிறார்கள். சச்சினைப் பற்றி உனக்கென்ன தெரியும், உன்னால் நூறு மீட்டர் போட்டியில் ஓட முடியுமா, நாலு சுவருக்குள் அடைந்து கொண்டு இப்படி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். இதனால் நோஐபிஎல் அதிபர் மனமுடைந்த போய் இதை எழுத வேண்டியிருக்கிறது.

 அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை சிக்ஸ்பேக்குக்கு சொந்தக்காரர்தான் இந்த நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனத்தின் சிஇஓ. நூறு மீட்டர் என்ன 1500 மீ போட்டிகளிலும் 400 பெருக்கல் 4 ரிலே ஓட்டங்களிலும் அவர் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். முக்கியமான தருணங்களில் கிரிக்கெட் அணியை வழிநடத்தியிருக்கிறார்.

2000-ம் ஆண்டு வரை சச்சினை கிரிக்கெட் கடவுளாக நினைத்து வந்திருக்கிறார். சச்சின் ஒவ்வொரு ரன் எடுக்கும்போது அந்தப் புள்ளி விவரங்களை மனதிலேயே அப்டேட் செய்து கொண்டிருந்தவர்தான் நோஐபிஎல் அதிபர்.  ஒருநாள் போட்டியில் சச்சின் எப்போது முதல் சதம் அடித்தார், டெஸ்ட் போட்டியில் எப்போது சதம் அடித்தார் என்பதெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரியும், ஏனென்றால் பரீட்சைகளைத் தவறவிட்டு தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அவை. இதைவிட சச்சினை விமர்ச்சிப்பதற்கு வேறு ஏதாவது தகுதி வேண்டுமா எனத் தெரியவில்லை.

சச்சின் என்ன தப்பு செய்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். சூதாட்டத்தை மறைத்தது, ஃபெராரி கார் விவகாரம், இப்போது வருமான வரியைக் குறைப்பதற்காக நடிகர் என்று பொய் சொன்னது எல்லாம் சின்னச் சின்ன தவறுதானே என்கிறார்கள். நமது நாட்டின் புகழுக்காக ஆடும் செல்லப் பிள்ளையின் இந்தத் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம்தானே என்றும் கேட்கிறார்கள். இதற்கு நோ ஐபிஎல் அதிபர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

1984-ல் இந்திரா காந்தி இறந்தபிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்து ஆட்சியைப் பிடித்தார். இப்போது சச்சின் எப்படியோ அப்படியே ராஜீவ் காந்தியும். இந்தியாவுக்கே செல்லப்பிள்ளை. அவர் அரசியலில், இவர் விளையாட்டில் அவ்வளவுதான் வேறுபாடு.

ராஜீவ் காலத்தில்தான் ஈழத்துக்கு அமைதிப்படை அனுப்பியது, போபர்ஸ் ஊழல் ஆகியவை நடந்தன. அமைதிப்படையை அனுப்பியதற்கான விளைவுகள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொன்று போபர்ஸ். சில கோடிகள்தானே என்று பலரும் மன்னித்து விட்டார்கள். அப்போதும் இந்தச் செல்ப்பிள்ளை கான்செப்ட்தான் ராஜீவ் தப்பித்துக் கொள்ள உதவியது. போபர்ஸ் ஆதாரங்களை பாக்கெட்டிலேயே வைத்திருப்பதாகக் கூறிவந்த வி.பி.சிங்கும் எதற்கு மயங்கினாரோ தெரியவில்லை. ஆட்சிக்கு வந்ததும் போபர்ஸை கிடப்பில் போட்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது.

ஒரேயொரு போபர்ஸ் பிரச்னைக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்குமானால், ஹர்ஷத் மேத்தா விவகாரமும், ஜார்க்கண்ட் எம்பிகளுக்கு பணம் கொடுத்ததும், நரசிம்மராவ் மகனின் ஊழல் விவகாரமும், சந்திராசாமியின் செயிண்ட் கிட்ஸ் மோசடியும், அவ்வளவு ஏன் இன்றைக்கு 2ஜி ஊழல் கூட நடந்திருக்காது. யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருந்திருக்கும்.

இதே கரிசனம்தான் சச்சின் தெண்டுல்கர் விவகாரத்திலும் காட்டப்படுகிறது. அவரைப்போல ஆடமுடியுமா என்கிற ஒரே பதிலில் அவரது எல்லாவிதமான மோசடிகளையும் முடக்கப்பார்க்கிறார்கள். ஒரே நாளில் பல லட்சம் கோடி சம்பாதித்த ஆ.ராசாவுக்கு கூடதான் திறமை இருக்கிறது. அவருடன் யாராவது போட்டி போட முடியுமா?

தெண்டுல்கர் என்பதால் மட்டும் ஆடம்பரத்துக்காக வரிவிலக்குக் கோருவதை நியாயப்படுத்த முடியுமா? ஒரு நாளைக்கு ரூ.20க்கும் கீழே வருமானம் உள்ளோர் 37 சதவீதத்துக்கும் அதிகமானோர் இருக்கும் ஒரு நாட்டில், இதை நியாயப்படுத்துவதற்கும் சிலர் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி "சாதகமாக" நடந்து கொள்வதை ஆதரிப்பதுதான் எல்லாச் சீர்கேட்டுக்கும் காரணம்.

இன்று வரைக்கும் ஸ்பாட் ஃபிக்சிங் இருக்கிறது. ஐசிசியே இதை அவ்வப்போது ஒப்புக்கொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு, ஒரு அசாரை பலிகடாவாக்கியவர்கள், சச்சின் போன்றவர்களையும், பிசிசிஐயும் தப்பிக்க விட்டதால் வந்த வினைதான் இது. சச்சின் திறமையானவர்தான். அவருக்கு நிகர் யாருமில்லைதான். ஆனால் அது மைதானத்துக்குள்ளே மட்டும்தான். டிரஸ்ஸிங் ரூமிலும், மைதானத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக்கூடாது என்றால், நாட்டுக்கு அவர் சேவை செய்கிறார், பாரத ரத்னா வழங்க வேண்டும் என்கிற பேச்செல்லாம் எங்கும் கேட்கக்கூடாது.

.
..
..

3 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  பதிலளிநீக்கு
 2. அவர் நல்லவரா கெட்டவரா

  தெரியலேப்பா
  எனக்கு தெரியலே

  நாயகன் கமல் குரல்ல வாசிங்க சும்மா கிக்கா இருக்கும்

  பதிலளிநீக்கு
 3. நியாயமான கருத்துக்கள். தலைப்பும் வெகு அருமை!

  பதிலளிநீக்கு