வெள்ளி, 8 மே, 2009

அது.... அது தெரியாது!

ஐபிஎல் அணிகளிலேயே நன்றாக விளையாடுவது யார் என்று பொதுவான கேள்வி எழுந்திருக்கிறது. இங்கே நன்றாக என்றால், பிரச்னை, சேட்டை செய்யாமல் விளையாவது என்று பொருள். அப்படிப்பார்த்தால், நம்ப பெங்களூர் அணிதான். அவர்களைப் பாராட்டியே தீர வேண்டும். மிகக் கேவலமாகத் தோற்றால்கூட அவர்களுக்கு கோபமே வருவதில்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இவர்கள் நன்றாகத்தான் விளையாடினார்களே தவிர, திறமையாக விளையாடவில்லை. அதனால்தான் தோல்வி. என்னுடைய கணிப்புப்படி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்க வேண்டியவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

புதன், 6 மே, 2009

ஒரு அனாமதேய மெயில்!

இரண்டு நாள்களுக்கு முன் எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பியவர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு விடுகதை இருந்தது. அதை வைத்து அவரது பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமாம். வேறு பொழைப்பு இல்லையா என மொறுமொறுத்துவிட்டு, அடுத்த மெயிலுக்குத் தாவ முயன்றபோது, அதில் இருந்த ஒரு வாசகம் என் கவர்ந்தது. ஜெயிக்காத டீமுக்கு இத்தனை வீரர்களா என எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அந்த மெயிலை முழுமையாகப் படிக்கத் தொடங்கினேன். அவர் ஒரு ஐபிஎல் வீரராம். ஜெயிக்காத டீம் என்றால் அது நைட் ரைடர்ஸ்தான் என ஊகித்துக் கொண்டு மேலும் படித்தேன். எதற்காக 51 வீரர்களை விலைக்கு வாங்கினார்கள். எதற்காக என்னைப் போன்றவர்களை ஆட்டத்தில் சேர்ப்பதே இல்லை. ஒன்றுக்கும் உதவாத டாடாவை டீமில் எதற்கு வைத்திருக்கிறார்கள். எங்கள் டீமுக்கு வெளிநாட்டு கேப்டன் கண்டிப்பாகத் தேவையா. எனப் பலவாறக் கேள்வி எழுப்பி தனது உள்ளக் குமுறலைக் கொட்டியிருந்தார். கோச்சை பற்றியும் தகாத வார்த்தைகளால் திட்டயிருந்தார். சரி விடுங்கள் 51 பேரைக் கொண்ட டீமில் இதெல்லாம் சகஜம்தான் என அவருக்கு பதில் மெயில் அனுப்பினேன்.
அதுசரி, என்ன ஷாருக் டீமை விற்கப் போகிறீர்களா? வேண்டவே வேண்டாம். எங்க ஊர் மாரியாத்தா கோயில் திருவிழாவில் நடக்கும் டோர்னமென்டில் உங்க அணியை என்ட்ரன்ஸ் பீஸ் இல்லாமலேயே ஆட வைக்கிறோம். அழாதீரும். ஆறுதல் பரிசு 101 உங்களுக்குத்தான்.

திங்கள், 4 மே, 2009

அணி அறிவிப்பு மர்மம்

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அணி உலகக் கோப்பையை மீண்டும் வெல்லும் என வயித்தெரிச்சல் வெங்சர்க்கார்கூடச் சொல்லிவிட்டார். ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏன் அணியை அறிவிக்க வேண்டும் என்ற சந்தேகத்தை எஸ்எம்எஸ்ஸில் நண்பர் ஒருவர் கேட்டார். விஷயம் ரொம்ப சிம்பிள். பெருந்தலைகளின் பரிந்துரை, பணப்பட்டுவாடா, அதிகார பலம் என்கிற உத்திகளைக் கொண்டு, ஏற்கெனவே அணியைத் தேர்வு செய்துவிட்டார்கள். ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகுதான் வீரர்களை அறிவிக்க வேண்டுமென்றால், அந்த அணியில் மாற்றம் செய்தாக வேண்டிய சூழல் ஏற்படும். கேப்டனையே கூட மாற்ற வேண்டிய நிர்பந்தம் கூட எழலாம். டிராவிட்டை கூடச் சேர்க்க வேண்டிய வரலாம். யார் கண்டது. அப்படிச் செய்தால் பணம் வாங்கியவர்களிடம் என்ன பதில் சொல்வது என நம்ம ஊர்க்காரர் தலைமையிலான தேர்வுக் கமிட்டி யோசித்திருக்கும். விளைவு, அவசர அவசரமாக அணி அறிவிப்பு. எனது அறிவுக்கு எட்டிய ஊகம்தான் இது. இதைவிட மோசமான தில்லுமுல்லுகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். நம்ம வாரியத்தில் இருப்பவர்கள் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள்.

பாகிஸ்தானை நசுக்காதீர்கள்!

கிரிக்கெட்டையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் அரசியலையும் தாண்டிய சமூகப் பிணைப்பு கிரிக்கெட்டுக்கு உண்டு. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் பாகிஸ்தானையும் இலங்கையையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. ஆனால், இந்தியக் கிரிக்கெட் வாரியம் என்கிற கொள்ளைக் கூட்டத்தினர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவது பாதுகாப்பானதல்ல என்பது ஒருவகையில் உண்மைதான். அதற்காக 2011 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் பொறுப்பிலிருந்து பாகிஸ்தானை மட்டும் கழற்றி விட்டிருப்பது அந்த நாட்டை நசுக்கும் செயல். அதுவும் அங்கு நடக்க வேண்டிய போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டிருப்பது பாகிஸ்தானை இழிவுபடுத்தும் நடவடிக்கை. இந்திய-பாகிஸ்தான் உறவில் உண்மையிலேயே அக்கறையிருந்தால், பாகிஸ்தானில் நடத்த வேண்டிய போட்டிகளை வேறொரு நாட்டில்தான் நடத்த வேண்டும். அல்லது இப்போதைக்கு போட்டிகள் அனைத்தையுமே வேறு நாட்டுக்கு மாற்றியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாகிஸ்தானை ஓரங்கட்டுவது இந்தியாவுக்கு எந்தக் காலத்திலும் நல்லதல்ல.
இதுவெறும் கிரிக்கெட் சார்ந்த விஷயமல்ல. இதற்குப் பின்னால், பெரிய அளவிலான பாதுகாப்பு, அரசியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இயலாமையில் இருக்கும் ஒரு நாட்டிடம் இருந்து வாய்ப்புகளைப் பிடுங்கிவிட்டதை பெரிய சாதனையாகக் கருதிக் கொண்டிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலையில் யார்தான் குட்டுவது?

விளம்பரம் செய்ய விவஸ்தையில்லையா?

கிரிக்கெட் வீரர்களின் டீ சர்ட், ஹெல்மெட், பேட், முன்புறம், பின்புறம், ஆடுகளத்தின் நடுவில், ஸ்டம்பில், எல்லைத் தடுப்புகளில் என எல்லாப் பக்கங்களையும் விளம்பரங்களால் ஆக்கிரமித்திருக்கின்றன. இதுபோக சதித்திட்டம் தீட்டுவதற்காக ஏழரை நிமிட இளைவெளி வேறு. சரி போகட்டும் விளம்பரம் செய்வதுதான் இவர்களது நோக்கம் எனத் தெரிந்துவிட்டது என்று கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கும் எம் போன்ற கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் வர்ணணையாளர்கள் புது மாதிரியாகச் சீண்டிப் பார்க்கிறார்கள். இவ்வளவு காலமும் சிக்ஸர் என்று அழைக்கப்பட்டு வந்ததை இப்போது டிஎல்ஃப் மேக்சிமம் என்கிறார்கள். வன்முறையாக எழுதுகிறேன் என நினைக்காதீர்கள், கிரிக்கெட்டின் அடிப்படைகளை அழிக்கத் தொடங்கியிருக்கும் இவர்களது நாக்குகளை தீயிலிட்டுக் கருக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு.