திங்கள், 21 மார்ச், 2011

ஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்!


 க்யூவில் நிற்பது பற்றி நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. எல்கேஜி அட்மிஷன் வாங்குவதற்கு முகப்பேர் டி.ஏ.வி. பள்ளிக்கு வாசலில் முந்தைய நாள் இரவே பெட்சீட், தலையணை சகிதம் வரிசையில் படுத்திருப்பது, இரவு 9 மணிக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் "மூன்றாந்தரப் பெட்டியில்" இடம் பிடிப்பதற்காக சாயங்காலம் 4 மணிக்கே காத்திருப்பது, நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை 50 பைசா உயரப்போகிறது என்று சன்டிவியில் பிளாஷ் நியூஸ் வந்ததும் டி.வி.எஸ். பெட்ரோல் பங்கில் கிலோமீட்டர் நீளத்துக்கு டூ வீலரில் கியூ கட்டுவது, வீட்டில் பெரிசுகளுக்கு பொங்கல் துணி எடுப்பதை மிச்சம் பிடிப்பதற்காக இலவச வேட்டி சேலை வாங்குவதற்கு ரேஷன் கடையில் முண்டியடிப்பது, ரஜினிகாந்த் என்பவர் ஒரேயொரு சீனில் வரும் படம் ரிலீஸாகும் சாந்தித் தியேட்டரில் கவுன்டர்களை மொய்ப்பது, டீச்சர் டிரைனிங் முடித்த மறுநாள் காலை 5 மணியிலிருந்து எம்ப்ளாய்மென்ட் வாசலில் தவம் கிடப்பது என பல்வேறு வகையான வரிசைகள் நமக்குப் பரிச்சையமானவை. எந்த வரிசையில் எப்படி முன்னேற வேண்டும், அவரச நிலைகளில் இடத்தைத் தக்கவைத்துக்குக் கொள்ளவது எப்படி என்பன நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.  இதற்காக நாம் ஜனங்களைக் குறை சொல்ல முடியாது. நமது ஆட்சியாளர்கள் நம்மை அப்படி வைத்திருக்கிறார்கள். அதுதான் லாபம் என்று கருதுகிறார்கள் அவ்வளவுதான்.



இந்த வரிசையில், சேப்பாக்கத்தையும் பெங்களூரையும் சேர்த்துக் கொள்ளலாம். காந்தியார் வாழ்ந்த ஆமதாபாத் நகரமும் இப்போது இணைந்திருக்கிறது. தோனி தலைமையிலான அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான காலிறுதிப் போட்டி இங்குதான் நடைபெறுகிறது என்று முடிவானதும் டிக்கெட் வாங்கப் படையெடுத்த ரசிகர்கள் கூட்டம் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.


இன்னொருபக்கம் சுனாமியும் நிலநடுக்கமும் தாக்கிய ஜப்பான் மக்களும் குடிநீருக்காகவும் பெட்ரோலுக்காகவும் வரிசையில் நிற்கிறார்கள். நம்மூர் வரிசையையும் ஜப்பானிய மக்களின் வரிசைகளின் ஒழுங்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏக்கப் பெருமூச்சு வருவததைத் தவிர்க்க முடியவில்லை.

..
.

1 கருத்து: