புதன், 30 மார்ச், 2011

கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்!


கிரிக்கெட் இரு நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டது பார்த்தீர்களா, இனி ஒரு பிரச்னையுமில்லை. எந்த வகையிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடக்காது. நாளைக்கே காஷ்மீரை இந்தியாவுக்கே கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். அல்லது சமரசம் பேசி தீர்த்துவிடுவார்கள் என்பது போல ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

அண்ணே உங்க ரெண்டு பேருக்கும் இதுவரைக்கும் சந்திக்க வாய்ப்பே கிடைக்கலையா ? எகிப்தின் குட்டித் தீவில் இருவரும் கூட்டாக ஒப்புக்குச் சப்பாணி அறிக்கையை வாசித்தீர்களே அப்போது கூட உட்கார்ந்து பேச முடியாமலா போயிற்று. கிரிக்கெட் போட்டியென்று வந்தவுடன் இருவரும் சேர்ந்து பேச வேண்டும் என்று ஏன் துடிப்பு வந்தது?

இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இரு நாடுகளுமே ராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டையே அடகு வைக்கின்றன. அதை ராஜதந்திரம் என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாகத் தேவை என்றும் கொள்வோம்.

அதனால்தான், ஷாம் எல் ஷேக் கூட்டத்தில் இருவரும் முறைத்துக் கொண்டீர்கள். ஏனென்றால், நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா குண்டுவெடிப்பு, மும்பை தாக்குதல் ஆகியவற்றை நம்மால் மறக்க முடியாது. அவர்களாலும் மறக்க முடியாது.

ஆனால், அதே ராஜதந்திரம் ஏன் கிரிக்கெட்டில் இல்லை. கிலானியை அழைத்தீர்களே அவருடன் அப்படி என்னதான் பேசியிருக்கிறீர்கள். மும்பை தாக்குதலின்போது இருதரப்பும் பேசியதையெல்லாம் மறந்துவிடப் போகிறீர்களா? சரி அதுவும் பகைமையைக்க குறைக்க உதவும் என்று வைத்துக் கொள்வோம். புதிய அத்தியாயத்தைத் தொடங்குவீர்கள் என்று கொள்வோம்.

அப்படியானால், கிலானி அழைத்தது போல பிசிசிஐ அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பப் போகிறீர்களா? பிசிசிஐ சொல்லி மன்மோகன் கேட்பார். மன்மோகன் சொன்னால் பிசிசிஐ கேட்குமா? அந்த அளவுக்கு பிசிசிஐ மட்டமா? மன்மோகன் பேச்சை அவரே கூட கேட்கமாட்டார். பிறகு எப்படி மற்றவர்கள் கேட்பார்கள்.

அப்படியானால் அதிகாரப்பூர்வமான சந்திப்பை நடத்தியிருக்க வேண்டியதுதானே. இப்போது நடந்திருப்பது கிட்டத்தட்ட தனிநபர் சந்திப்புகள், அதாவது அதிகாரப்பூர்வமற்றவை - என்று இருவருமே கூறிவிட்டீர்கள். இதன் மூலம் என்ன பேசினாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லையே பிறகு எதற்கு இப்படியொரு சந்திப்பு? அதுவும் ராகுல், சோனியா சகிதமாக. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டிக்கான முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். அதன் மூலம் பிசிசிஐ இன்னும் கூடுதலாகக் காசு பார்த்துவிட்டது.

2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், போபர்ஸ், கறுப்புப்பணம் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை மக்கள் மறக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போக வேண்டும். பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் மறக்க வேண்டும். இருவருக்கும் அமைதிப் புறாக்கள் இமேஜ் கிடைக்க வேண்டும். அதற்காகத்தானே இரு நாட்டு மக்களையும் ஏமாற்றியிருக்கிறீர்கள்.

அதையும் வேறெங்காவது வைத்திருக்கலாமே. ஏற்கெனவே மோசடிகள் நிறைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றவில்லையா?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உப்புச்சப்பில்லாமல் தொடங்கிய ஒரு கிரிக்கெட் தொடரை இருவரும் சேர்ந்து உலகப் பரபரப்பாக்கியிருக்கிறீர்கள். நம் மக்களும் இரு நாட்டு அமைதிக்கு இதுதான் வழி போலிருக்கிறது என்று இறுதிப் போட்டிக்கு ராஜபட்சவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!
.
 
.
.
.

3 கருத்துகள்:

 1. நன்றாக சொன்னிர்கள் போங்கள். ஏன் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் மடையார்களாக இருகிறார்கள்?
  ஒன்று மட்டும் நிச்சயம். மக்கள் யோசிகாவிட்டால் அரசியல்வாதிகளின் காட்டில் மழைதான்.
  பாவும் இந்திய மக்கள்

  பதிலளிநீக்கு
 2. என்னத்த சொல்ல எல்லாம் மாயம், யார் மனசுல யாரு? தான் விளையாடனும் போலிருக்கு

  பதிலளிநீக்கு
 3. Ohoho. Lot of matter irukka ithukkullay. Different approach man. I like your approach man.

  பதிலளிநீக்கு