சனி, 2 ஏப்ரல், 2011

தமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்களே...

ஒரு வழியாக முக்கியக் கடவுள்களைத் தரிசனம் செய்துவிட்டு தமிழினத் தலைவர் ராஜபட்ச அவர்கள் இப்போது மும்பைக்கு வந்திருக்கிறார். பூமியில் வாழ்வதற்குச் சிரமப்பட்ட ஆயிரக்கணக்கானோரை பத்திரமாக மேலுலகத்துக்கு அனுப்பி வைத்த அவருடைய அரும்பெரும் பணிகளையும் சேவைகளையும் பாராட்டுவதற்காக மேதகு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களும் மும்பைக்கு வருகிறார்கள். எல்லை தாண்டிப் பயங்கரவாதத்தை அரங்கேற்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் கொட்டத்தை அடக்கிய ராஜபட்சவுக்கு இந்திய அரசு தரும் உயரிய மரியாதை இது.

எளவு முடிந்து அலரி மாளிகையில் கறிவிருந்து சாப்பிட்டுவிட்டு வந்தவர்களில் ஒரு பிரிவினர் இன்று தமிழினத் தலைவர் ராஜபட்சவின் வருகையை எதிர்த்து கூக்குரலிடுகிறார்கள். ராஜபட்சவுக்கு ராஜகம்பளம் விரிப்பவர்களுக்கு எடுபிடி வேலை செய்வதையும் இவர்கள் பார்டைம் ஜாப்பாக செய்து நாடாளுமன்ற, சட்டமன்றப் பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

 டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும்  தமிழ் மீனவர்களை சேவ் செய்யுங்கள் என்று புரட்சி செய்த கூட்டம், இந்தியா வாழ்க, தோனி வாழ்க என்று அதே டிவிட்டரிலும் பேக்புக்கிலும் வேறு வகையான சமூகப் புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறது. மும்பையில் நடக்கும் போரில் ராஜபட்சவை வரவைத்து தோற்கடிப்பதன் மூலம் பழி தீர்த்துக் கொள்ளப் போவதாக தன்மானத் தமிழினம் கர்ஜிக்கிறது.

அதுதான் போர் முடிந்து அமைதி ஏற்பட்டுவிட்டதே, இனி ஏன் கலகம் செய்கிறீர்கள் என்ற  தமிழ்நாட்டுத் தமிழர்களின் தத்துவங்களைக் கேட்க முடிகிறது. சொந்தக்காரர்கள் மோட்சம் அடைந்தபிறகு ஏற்பட்ட மயான அமைதி இது என்று ஈழத்திலிருந்து பைத்தியக்காரத்தனமான உளறல்களும்  ஒலிக்கத்தான் செய்கின்றன.

மலிங்காவின் பந்துகளை அடித்து நொறுக்குவதன் மூலம் மாடத்தில் இருக்கும் ராஜபட்சவை அழ வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தக் கணக்குப்படி பாகிஸ்தானுடனான போட்டியைவிட இலங்கையுடனான போட்டிதான் தமிழர்களுக்கு முக்கியம். இந்த இனப் பற்றும் தேசப் பற்றும் இருக்கும் வரையில் தமிழனை வேறு யாராலும் ஏமாற்ற முடியாது.
.
.
.

3 கருத்துகள்:

 1. ராவணுக்கு எதிரான போரில் ராமன் தான் ..
  அதாவது இந்தியா தான் வெல்லும்..

  பதிலளிநீக்கு
 2. ///ராவணுக்கு எதிரான போரில் ராமன் தான் ..
  அதாவது இந்தியா தான் வெல்லும்.///

  ஒளறாம வேற வேலை இருந்தா போய்ப் பாருங்க.

  பதிலளிநீக்கு
 3. பாவம் ஏழுமலையான் இந்த கொலைவெறியனுக்கு அருள் பாலிக்கப் போய் முகத்தில் கரி பூசிக் கொண்டு விட்டார். சிங்கள இனவெறியன் தோற்க வேண்டும். அதே சமயம் அவனுக்கு ஆயுதம் கொடுத்து தமிழரை அழிக்க வழிநடத்திய இந்தினும் தோற்றிருக்க வேண்டும். உலக கிண்ணத்தை பாக்கிஸ்தான் வென்றிருந்தால் சிறிது ஆறுதலாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு