வியாழன், 5 ஏப்ரல், 2012

"அது" மாயம் - சிறுகதை


அன்று அமாவாசை. மாலை 4.30 மணி. ஊரே நிசப்தமான பவர்கட் நேரம். அந்த பங்களாவின் கிரில் கேட்டை திறந்து கொண்டு நான்கு உருவங்கள் உள்ளே நுழைகின்றன. முகங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் முகமூடி அணிந்திருக்கலாம். அல்லது அந்த கண்ணாடிக் கடைக்காரன் நம்மை ஏமாற்றியிருக்க வேண்டும்.

நான்கு உருவங்களும் பங்களாவின் பின்பக்கமாகச் சென்று கதவை உடைத்தன. யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டுக்குள் புகுந்தன. அந்த பங்களாக்காரர் வைர வியாபாரி. அவருக்கு  அழகான 3 பெண்கள். ஆனால், இந்த உருவங்கள் எந்த நோக்கத்துக்காக வந்திருக்கின்றன என்று இதுவரை தெரியவில்லை.

நான்கு உருவங்களும் உள்ளே நுழைந்த இடம் சமையல்கட்டு. அதைத் தாண்டிப் பார்த்தால், எதிரெதிரே இரண்டு அறைகள். பூனைகள் போல அடியெடுத்து வைத்து நகர்ந்தனர். ஒருவன் முதலாவது அறைக் கதவு அருகே சென்றான். தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே படுக்கையில் இரு பெண்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். ஐஸ்வர்யா ராயும் அமலாபாலும் போல. முதலாவது உருவம் அவர்கள் அருகே சென்றது. இருண்டாவது உருவமும் உள்ளே நுழைந்தது. மூன்றாவது உருவம் உள்ளே நுழைய முயற்சித்த போது "2 பேர் போதும்" என்பது போல நான்காவது உருவம் தடுத்தது.

கதவை ஓசையில்லாமல் சாத்திவிட்டு இரு உருவங்களும் அடுத்த அறையைத் திறக்க முயற்சித்தன. வேறு யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு ஒரு உருவம் கதவைத் தட்டியது. சில விநாடிகளுக்குப் பிறகு கதவு திறந்தது. நின்றது ஒரு பெண். அங்கே ஐஸ்வர்யா ராயும் அமலாபாலும் சொன்னோமா, இங்கே நின்றது சினேகா. இவர்களைப் பார்த்து அவள் கண்ணை அகலத் திறந்து, பிறகு வாயைத் திறந்து கத்துவதற்குள், டக்கென்று ஒரு உருவம் வாயைப் பொத்தியது. அந்தப் பெண்ணின் வாயைத்தான்.

மீதமிருக்கும் ஒரு உருவம் கதவைச் சாத்திவிட்டு வீட்டு அடுத்த பகுதிக்குச் சென்றது. அங்கே பிரமாண்டமான மற்றொரு அறை திறந்தே கிடந்தது. அழகிய வேலைப்பாடுடன் கூடிய கதவு. உருவம் உள்ளே சென்று பார்த்தது. யாரும் இல்லை. பிறகு வேறு எதையோ தேடியது. அங்கே ஒரு பீரோ. உருவத்தின் கைகள் பரபரத்தன. வேகமாகச் சென்று பீரோவைத் திறக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் மீண்டும். ஊகூம்.

திடீரென இருமல் சத்தம். பாத்ரூம் கதவு திறந்தது. வெளியே வந்தது டாப்ஸியாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுவும் பாத்ரூமிலிருந்து... கதை விளங்கிடும்... சரி.. என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தது அமிதாப் உயரம் கொண்ட ஒரு ஆள். சுதாரித்துக்கொண்ட உருவம் பீரோவின் மறுபுறத்தில் பதுங்கிக் கொண்டது.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஆள் கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு பீரோவைத் திறந்தார். அதில் இருந்த நம்பர் பேடில் சில எண்களைத் தட்டினார். சிறிய கதவுகள் திறந்து கொண்டன. உள்ளே. மின்னும் கற்கள். அவர் வைரவியாபாரி என்பதால் அது வைரக் கற்களாகத்தான் இருக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் செயல்பட்ட உருவம், கையில் இருந்த மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை அந்த ஆளின் முகத்தில் வைத்தது. அந்த ஆள் மயங்கிச் சரிந்தார். பீரோவைத் திறந்த அந்த உருவம் வைரக் கற்களைத் தள்ளிவிட்டு எதையோ தேடியது. சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு அது அகப்பட்டது. அத்துடன் வேலை முடிந்தது. 4 உருவங்களின் வேலையும் முடிந்தது.

மறுநாள் தினந்தந்தி பேப்பரில் தலைப்புச் செய்தி, "வைர வியாபாரி வீட்டில் 4 ஐபிஎல் டிக்கெட்டுகள் கொள்ளை: முகமூடிக் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு". - எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு. பக்கத்திலேயே அமிதாப் பச்சன் போல அந்த ஆளும் 3 பெண்களும் கதறியழுதபடி நிற்கும் படம், வண்ணத்தில். (உள்படம்) சிதறிக் கிடக்கும் வைரக் கற்கள். (சைடு படம்) கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்.

..
...

1 கருத்து: