உலகக் கோப்பையை ஒளிபரப்பும் உரிமையை குத்தகைக்கு எடுத்திருக்கும் இஎஸ்பிஎன் நிறுவனத்துக்கு பயம் வந்துவிட்டது. போட்டிக்கு ஏதேனும் பங்கம் வந்துவிட்டால், செய்த செலவும் போய், வர வேண்டிய லாபமும் வராமல் போய்விடுமே. வேறு வழியே இல்லாமல் ரூ.600 கோடிக்கு காப்பீடு கேட்டு அலைந்தது. இப்போது நியூ இந்தியா அஷ்ஷுரன்ஸ் நிறுவனம் காப்பீடு கொடுக்க முன்வந்திருக்கிறது.
பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. மும்பை பயங்கரவாதத் தாக்குதலால் போட்டிகள் பாதிக்கப்பட்டதும், சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ரத்தானதும் இஎஸ்பிஎன் கண்முன் வந்து போகாமலா இருக்கும். அதுவும் இந்தியாவின் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் குண்டு வைக்கும் அளவுக்கு நாட்டில் ஜனநாயகம் தளைத்து ஓங்கும் நிலையில் தாக்குதல் நடத்துவது ஒன்றும் முடியாத காரியமில்லையே. அதனால்தான், எதையும் இழந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் காப்பீடு செய்யும் முடிவுக்கு இஎஸ்பின் வந்திருக்கிறது.
இதுபோக, போட்டிகள் ரத்தானால், இஎஸ்பின் நிறுவனத்துக்கு பிசிசிஐ சார்பிலும் போட்டி ஒன்றுக்கு ஆறேழு கோடிகள் இழப்பீடு கிடைக்குமாம். பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் விஷேச சலுகையும் உண்டு.
உண்மையில் பிசிசிஐ இருக்கும்போது, இந்த மாதிரி இன்சூரன்ஸ் எல்லாம் தேவையேயில்லை. என்ன தாக்குதல் நடந்தாலும் நமது வாரியம் போட்டியை மட்டும் ரத்து செய்யவே செய்யாது. உதாரணம் வேண்டுமா? மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்த போது இங்கிலாந்துக்காரர்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடிக் கொண்டிருந்தார்கள். பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாட்டுக்குப் பறந்துவிட்டார்கள்.
விட்டு விடுமா நமது வாரியம். அவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிவந்து சென்னையில் டெஸ்ட் போட்டியை ஆட வைத்தார்கள். 2-வது ஐபிஎல் போட்டிகள் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடக்க முடியாமல் போனபோது தென்னாப்பிரிக்காவுக்கு சாமர்த்தியமாக நகர்த்தினார்கள். இது போதாதா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் திறமையைப் பறைசாற்ற? போட்டிகள் ரத்தாகும் என இன்னமுமா இஎஸ்பிஎன் பயப்படவேண்டும்?
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக