புதன், 19 ஜனவரி, 2011

வெறும் 10 டீம் விளையாடறதுக்கு பேரு உலகக் கோப்பையா?

"நான் ரேஸ்ல செகண்டா வந்தேன்"

"மொத்தம் எத்தனை பேர் ஓடினாங்க"

"ரெண்டு பேர்"

ஒரு விளம்பரத்தில் வந்து பிரபலமாகியிருக்கும் டயலாக் இது. யோசித்துப் பார்த்தால் கிரிக்கெட் உலகக் கோப்பையும் இது போலத்தான் தெரிகிறது. சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்ட ஐசிசி சர்வதேச கிரிக்கெட் அமைப்பில் இன்று வரைக்கும்10 கிரிக்கெட் வாரியங்கள் மட்டும்தான முழு உறுப்பினர் அந்தஸ்துடன் இருக்கின்றன. இதில் 9 நாடுகள்தான் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற நாடுகளாம். இந்த 9 நாடுகளில்தான் நாங்கள் முதலாவதாக வந்துவிட்டோம் என்று தற்போதைய பிசிசிஐ நிர்வாகம் பீற்றிக் கொண்டிருக்கிறது. 

இதைவிடவும் வேடிக்கை ஒன்று இருக்கிறது. 2007 உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியமான இரு போட்டிகளிலும் தோனி முட்டை போட்டதால், அணி வீட்டுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும் டிராவிட், தெண்டுல்கர், கங்குலி எல்லாம் ரெஸ்ட்  எடுத்தனர். கண்காட்சிப் போட்டி போல நடக்க இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. எல்லா நாடுகளும் இரண்டாந்தர அணிகளை அனுப்பியது. நமது பிசிசிஐயும் தோனி தலைமையில் சீனியர்கள் இல்லாத அணியைத்தான் அனுப்பியது. சோதா அணிகளை அடித்துவிட்டு கோப்பையை வாங்கியது தோனி அணி. அதை இன்று வரைக்கும் தோனி குழுவினர் பெருமையடித்துக் கொள்வதுதான் சகிக்க முடியவில்லை. ஒரு கண்காட்சிப் போட்டியில் ஜெயித்துவிட்டு உலகச் சாம்பியன் என்று கூறிக் கொள்வதற்கு இந்த அணிக்கு வெட்கமாக இல்லையா?

ஐசிசி உலகக் கோப்பையும் இப்படி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுதான். நாங்களும் உலகக் கோப்பை போட்டி நடத்துகிறோம் என்று வெறும் 10 அணிகள் மட்டும் 4 சோதா அணிகளைச் சேர்த்துக் கொண்டு ஆடுவதற்குப் பெயர் உலகக் கோப்பையா? கால்பந்தைப் போல 200 நாடுகளுக்கும் தகுதிச் சுற்று வைத்து அதிலிருந்து சில நாடுகளைத் தேர்வு செய்து இறுதிப் போட்டி நடத்தும் காலம் வந்தால்தான் ஐசிசி நடத்தும் போட்டியை உலகக் கோப்பை போட்டி என்று ஏற்றுக் கொள்ள முடியும். தற்போது அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களை முழு உறுப்பினர்களாக அங்கீகரித்த பிறகுதான் இதெல்லாம் சாத்தியம். அதன் பிறகு வெற்றிபெறும் அணியைத்தான் உலகச் சாம்பியன் என்று கூற முடியும். அதுவரைக்கும் இந்தக் கூத்துக்குப் பெயர் குண்டுச் சட்டிக் கோப்பைதானே?


..

4 கருத்துகள்:

 1. தவறான தகவல்களை வைத்து எழுதியிருக்கிறீர்கள்.

  ஐசிசியும் தகுதி சுற்று போட்டிகளை வைத்து தான் உலக கோப்பை போட்டிகளுக்கு அணிகளை தேர்வு செய்கிறார்கள். இந்த முறை ஆப்கானிஸ்தான் எப்படி உள்ளே வந்தது என்று யோசித்தீர்களா?

  டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் மற்று தகுதிசுற்று போட்டிகளின் அடிப்படியிலையே அணிகள் உலக கோப்பைக்கு வருகின்றன.


  கிரிக்கெட் விளையாடும் சுமார் 85 நாடுகள் ஐசிசியால் அங்கீரிக்கப் பட்டுள்ளன.

  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், அணிகள் பெறும் ரேங்கிங் அடிப்படையில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்படும். அதேபோல உலகப் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெறுவதும், அணிகளை குரூப் பிரிப்பது நடைபெறும். (ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி வாரம் என்று நினைக்கிறேன்)

  ட்வெண்டி20 உலக கோப்பை போட்டிகளுக்கு, அணிகளை தேர்வு செய்ததும், ரேங்கிங் அடிப்படையில் தான்.

  பதிலளிநீக்கு
 2. கால்பந்து உலக கோப்பையிலும் 32 அணிகள் இடம் பெறும். போட்டி நேரம் 3 மணி நேரம் மட்டுமே. ஆசிய கோப்பை, தெற்காசிய கோப்பை போன்றவற்றில் வெற்றி பெற்றால், தகுதி சுற்று போட்டிகள் மூலம் வரதேவையில்லை. ஹாக்கியிலும் இதே முறை பின்பற்ற படுகிறது. இந்தியா ஆசியகோப்பை வென்றிருந்தால், ஒலிம்பிக்கிற்க்கு நேரடி தகுதி பேறலாம்.

  கிரிக்கெட்டில் அணிகள் குறைவு என்பதால், இன்டர்கான்டின் போன்ற போட்டிகள் நடத்தபடுகின்றன. அதில் தகுதி பெறும் அணிகள் மற்றும் முதல் தர அணிகள் விளையாடி வெற்றி பெறும் அணிகள், டெஸ்ட் அஸ்தஸ்து பெறும் அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெறும்.

  ஊடகங்கள் டெஸ்ட் அந்தஸ்து பெறும் அணிகள் விளையாடும் போட்டிகளையே பெரிதாக வெளியிடும். இந்தியாவும் ஃபுட்பால் விளையாடுவது போல, உலகிலுள்ள மற்ற அணிகளும் கிரிக்கெட் விளையாடுகின்றன. ரேங்கிங்கில் தகுதி பெற்றால் மட்டும் வரமுடியும்!

  பதிலளிநீக்கு
 3. நண்பரே, ஐசிசியில் இன்றுவரை வெறும் 10 நாடுகள்தான் முழு உறுப்பினர்கள் என்பது காளியாத்தா மீது சத்தியம். அதனால்தான் "முழு உறுப்பினர்கள்" என்று பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 85 ஆண்டுகளுக்குப் பிறகும் ஐசிசியில் வெறும் 10 உறுப்பினர்கள்தான் முழுமையானவர்கள் என்றால் அது நல்ல விஷயமா என்று மட்டும் சொல்லுங்கள். மற்றபடி ஒப்புக்கு அசோசியேட், அபிலியேட் என்று வைத்துக் கொள்பவர்களையெல்லாம் நாங்கள் உறுப்பினர்களாகக் கணக்கில் கொள்ள மாட்டோம்

  "அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களை முழு உறுப்பினர்களாக அங்கீகரித்த பிறகுதான் இதெல்லாம் சாத்தியம்" என்று நான் எழுதியதைக் கவனிக்க...

  கிரிக்கெட் தகுதிச் சுற்றுகள் பற்றி எனக்கு மட்டுமல்ல பொதுஜனம் எல்லோருக்கும் தெரியும். அதெல்லாம் ஒப்புக்கு நடைபெறும் என்பது. தற்போதைய நிலையில் கிரிக்கெட் தகுதிச் சுற்றுக்களையும் கால்பந்து தகுதிச் சுற்றுக்களையும் ஒப்பிட்டு நாம் பேசிக் கொள்வதெல்லாம் உங்களுக்கே காமெடியாகத் தெரியவில்லையா?

  ஆனால், ஐசிசியிடம் இருக்கும் பணத்துக்கு அவர்கள் இந்த 10 பேரைக் கொண்டு உலகக் கோப்பை என்ன சூரிய குடும்பக் கோப்பை, பால்வீதி மண்டலக் கோப்பை கூட நடத்துவார்கள். யார் கேட்பார்கள்...

  மற்றபடி, நாங்களெல்லாம் கிரிக்கெட்டுக்கு எதிரியல்ல, வயிற்றெரிச்சல் கோஷ்டியுமல்ல. நாங்களும் புல்டாசுக்கு புறமுதுகு காட்டியவர்கள்தான... ஷார்ட் லெக்கில் நாள்கணக்கில் குப்புறப் படுத்திருந்தவர்கள்தான்

  பதிலளிநீக்கு