ஞாயிறு, 17 மார்ச், 2013

ஐபிஎல் கவுன்டவுன் : தேசப் பணிக்குத் திரும்பும் போதை சர்மா!




அந்தக் கால கிராமங்களில் நிறைய மைனர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முழுநேர வேலை போதை ஏற்றுவது, கிடைத்த பெண்களை பயன்படுத்திக் கொள்வது மட்டும்தான். இவர்களை யாரும் கேட்க முடியாது. நடுத்தர வர்க்கத்தை ஒடுக்க வரும் சட்டங்களும், கட்டுப்பாடுகளும் இவர்கள் ஒன்றும் செய்யாது. அப்பாவிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பண்பாட்டு நியாயங்களைக்கூட இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது.

இதுபோன்ற மைனர்கள் இப்போது இருக்கிறார்களா என்று கேட்கும்போது, சினிமாக்காரர்களைத்தான் நாம் கைகாட்டுவோம். ஆனால் அவர்களைவிட மைனர் வேலைகளைச் செய்து தப்பித்துக் கொள்பவர்கள் நமது கிரிக்கெட் வீரர்கள்தான். அதற்கு லேட்டஸ்ட் சான்று நமது ராகுல் சர்மா.

புணே வாரியர்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், பர்னெல் இருவரும், கடந்த ஆண்டு மே மாதம் மும்பையின் மேட்டுக்குடிப் பகுதியான ஜூகுவில் உள்ள கேளிக்கை விடுதியில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் (மேற்கத்திய ரேவ்) கலந்துகொண்டனர்.  இதைப்பற்றி யாரோ போட்டுக் கொடுக்க, அங்கு வந்த போலீஸ், விருந்தில் கலந்துகொண்ட ராகுல் சர்மா, பர்னெல், ஏகப்பட்ட பெண்கள் உள்பட 90 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அவர்களை விடுவித்தும் விட்டனர்.

இந்தச் சமயத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ராகுல் சர்மா, போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டால் கிரிக்கெட்டே ஆடப் போவதில்லை என்று அறிவித்தார். இதற்கு ஆதாரம் வேண்டுமெனில் யூட்யூபில் "ரேவ் ராகுல் சர்மா" என்று தேடவும்.

இப்போது சோதனை முடிவுகள் வெளியாகிவிட்டன. ராகுல் சர்மா, பர்னெல், ஷில்பா உள்ளிட்ட 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு அவர்கள் மீது ஆயிரத்துச் சொச்சம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பர்னெல் உள்ளிட்ட 35 வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டார்கள். நம்மூரில் சைக்கிளைத் திருடினால்கூட "டெய்லி சாயந்திரம் டேஷன்ல கைநாட்டு" போடச் சொல்லும் காவல்துறை, இந்த மைனர்களைத் தப்பவிட்டுவிட்டு, இப்போது, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, சவால் விட்ட ராகுல் சர்மா இப்போது வாய் திறக்க மறுக்கிறார். இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? வரும் ஐ.பி.எல். போட்டிகளில் அவர்கள் ஆடப்போவதாக  புணே வாரியர்ஸ் அறிவித்துள்ளது. இது ஒன்றும் ஊக்கமருந்து இல்லையே, போதை மருந்துதானே என்பது அவர்கள் கூறும் சாக்கு.

கஞ்சா வைத்திருந்தால் பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் உள்ளேபோடும் காவல்துறை இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஒருபடி மேலேபோய், அண்மையில் திருவாய் மலர்ந்தருளிய ஐபிஎல் அண்ணன் ராஜீவ் சுக்லா, காவல்துறையை மறைமுகமாக மிரட்டினார்.

ஓகே. இனி என்ன செய்வார்கள்..?

குறைந்தபட்சம் ஐபிஎல் போட்டிகள் முடியும்வரை ராகுல் சர்மா மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர் கிரிக்கெட் ஆடுவதை கோடிக்கணக்கானவர்கள் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், காவல்துறை மட்டும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கும். ராகுல் சர்மா சாப்பிட்டது கேக்தான். அதில் யாரோ தீவிரவாதிகள் கொகைனையும், பிரவுன் சுகரையும் தடவிவிட்டார்கள் என்று அறிக்கை அளிக்கப்படும்...

பிறகு போதை சர்மா, ஐபில், பிசிசிஐ அணிகளில் ஆடிவிட்டு, தேசப்பற்று பற்றி நமக்கு வகுப்பெடுப்பார். நாமும், நமது இனப்படுகொலை, ஜெனீவா விவகாரங்களை எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஐபிஎல் பார்க்க வரிசையில் நிற்போம்.

இந்தப் போதைசர்மா ஒரு சோறுதான்... ஐபிஎல் வடிவில் பெரும்பானை இருக்கிறது.

(குறிப்பு: படத்தில் இருப்பவர் ரொம்ப நல்லவர்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக