வெள்ளி, 15 மார்ச், 2013

ஐபிஎல் கவுன்டவுன்: நீ தமிழனாடா?


வங்கிக்கொள்ளையர்கள் என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. முகமூடி அணிந்தபடி வங்கிகள் நுழைந்து திருடிச் செல்பவர்களைத்தான் இப்படிச் சொல்கிறோம். உண்மையில் வங்கிக் கொள்ளையர்கள் என்று யாரை அழைக்க வேண்டும் தெரியுமா? வங்கிகளை நடத்திக் கொள்ளையடிப்பவர்களைத்தான். இது ஒன்றும் ஆதாரம் இல்லாமல் சொல்லும் கருத்தல்ல. உலகம் முழுவதும் மோசடி செய்து அபராதம் செலுத்திக் கொண்டிருக்கும் எச்.எஸ்.பி.சி, பார்க்லேஸ் வங்கிகளைப் பற்றிப் படித்துப் பாருங்கள். பிறகு புரியலாம். வங்கிகளில் கொள்ளையடித்தால் என்கவுன்டர்; வங்கியை நிறுவிக் கொள்ளையடித்தால் முதல் மரியாதை. ஏன் இப்படி?

காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ், டாடா என எந்த நிறுவனத்திலும் பணத்தைப் போட்டு முழுமையாகத் திரும்பப் பெற்றவர்கள், அல்லது உரிய நேரத்தில் காப்பீடு கிடைத்தவர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. குப்பனும் சுப்பனும் சிறுகச் சிறுகச் சேர்க்கும் பணத்தைத் தின்று செரித்து ஏப்பம் விட்டு விடுகிறார்கள் இந்தக் காப்பீட்டுக் கொள்ளையர்கள். ஆனாலும் இந்த நிறுவனங்களுக்கு ராஜமரியாதைதான். போதாதென்று, இந்தத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். இதைத் தடுக்கவே முடியாதா?

பூஸ்ட் குடித்தால் வலிமை பெருகும், பெப்சியும் கோக்கும் குடித்தால் உற்சாகம் பிறக்கும், ஹார்லிக்ஸ் குடித்தால் மூளை வளரும்,  ஃபேர் அண்ட் லவ்லி பூசினால் அழகாகி விடலாம் என்று சச்சின், தோனி போன்றவர்கள் கூறும்போது,  நீ அதையாடா குடிக்கிற? என்று கேள்வி எழுப்பப்படுகிறதா? இல்லை இதையெல்லாம் யாராவது சோதனை செய்து பார்த்திருக்கிறார்களா?

இதையெல்லாம் மாற்றவே முடியாது... ஏன் என்று கேட்கிறீர்களா? இது ஸ்பான்சர்களின் உலகம். இங்கு பொய்கள் எல்லாம் உண்மைபோல கொண்டாடப்படுகின்றன. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நிறுவனங்களின் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களுக்கு அடிப்படையே விளம்பரங்கள்தான். அதுவும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி டாடாக்களும் அம்பானிகளும் சம்பாதிக்கும் பணம்தான் ஊடகங்களின் "சமூக அக்கறைக்கு" அடித்தளம். கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை விவகாரம் ஒன்று போதாதா இதை விளக்க!

இதன் தொடர்ச்சிதான் ஐ.பி.எல். பொய்தான் ஐபிஎல்லின் வருமானத்துக்கே ஆதாரம்.  2ஜி முறைகேட்டில் கொள்ளையடித்த நிறுவனங்களும், பூச்சி மருந்து என்று தூற்றப்படும் குளிர்பான நிறுவனங்களும், நஷ்டக் கணக்கு காட்டியவரின் மதுபான நிறுவனங்களும் இதில் அடக்கம். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் சென்னை அணி, மும்பை அணி, டெல்லி அணி என நகரம், மாநிலம் வாரியாக அணிகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்துதான் தேசப் பற்றும், மாநிலப் பற்றையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னை அணி எனப் பெயர் வைத்தால், அதை தமிழ்நாட்டு அணி என்று நினைத்து தமிழர்கள் எல்லாம் கொண்டாடுகிறார்கள். இதைப் போலத்தான் மற்ற இடங்களிலும். எப்படி எவன் எவனெல்லாமோ இருக்கும் அணியை சென்னை அணி என்று ஏற்றுக் கொள்கிறார்கள் மக்கள்? இந்தப் பொய் எப்படி உண்மையாக்கப்பட்டது?  எப்படி நமது அடையாளத்தை மறந்து யாரையெல்லாமோ தமிழர்களின் தலைவன் போலப் பாவித்து வருகிறோம். விளம்பரங்களால் ஏற்பட்ட மயக்கங்களும், ஊடகங்களின் மௌனமும்தான் காரணம்.

இந்தக் கொடுமை மாறப்போவதில்லை, தோனியைப் பார்த்து,  நீ தமிழனாடா? என்று கேட்கும்வரை.
..
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக