ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

ஆறே ஓவர்..! அடப் பாவிகளா...

கிரிக்கெட் வீரர்களின் ஒட்டுமொத்தத் திறமையும் டெஸ்ட் போட்டிகளில்தான் வெளிப்படும் என்பதை லலித் மோடி கூட ஒப்புக் கொள்வார். ஆனால், சினிமாவில் டைட்டில் கார்டு போட்டதும் கிளைமேக்ஸ் காட்டப்பட்டது போன்று ஒரு உணர்வு தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில் ஏற்பட்டது. மழை பெய்து மைதானம் ஈரமாக இருந்தது என்பதால் ஆட்டத்தை தாமதமாகத் தொடங்கினார்கள். இதற்காக ஓவரைக் குறைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென 14 ஓவரில் ஆட்டம் நடக்கும் என்றார்கள். அப்புறம் 12 ஓவர்கள் என்றார்கள். சரி என்று பஞ்சாப் அணியினர் ஆடினார்கள். 100 ரன்களையும் அடித்தனர்.
பின்னர் தில்லி அணி ஆட வந்ததும் மீண்டும் மழை வந்ததால், ஓவர்களை மீண்டும் குறைத்தார்கள். ஆறே ஓவர். பஞ்சாப் ஓவர். இன்னும் மழை வந்தால் குறைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். 1 ஓவர், 2 ஓவர் போட்டிகளைக் காணவேண்டிய கஷ்டகாலம் நமக்கு வரத்தான் போகிறது.
இந்தப் போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்தவர் என்னிடம், Ôமொத்தமே 3 மணி நேரம் நடக்கும் ஒரு போட்டியில் ஏன் ஓவர்களைக் குறைக்க வேண்டும். வெளிச்சம்கூட பிரச்னையில்லையேÕ. என அப்பாவியாகக் கேட்டார். அடப் பாவிகளா... உங்கள மாதிரி அப்பாவிகள் இருக்கிற வரைக்கும் நம்ம கிரிக்கெட் வாரியம் மிளகாய் அரைப்பதை நிறுத்தவே செய்யாது. அது சரி, ஓவரை ஏன் குறைக்க வேண்டும் என யாருக்காவது தெரியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக