ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

ராகுல்! கமான், கமான்

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. ஆட்டத்தின் ஹீரோ நமது சுவர் ராகுல் டிராவிட்தான். 48 பந்துகளில் 66 ரன்களை அடித்துத் தள்ளினார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இப்படிக் குழம்பிப்போய் நானும் ஒருமுறைக்கு இருமுறை செய்தித்தாள்களைப் படித்தேன். உண்மைதான்.
டிராவிட்டுக்கு சுவர் என்று பெயர் வைத்தது உண்மையிலேயே புகழுக்கு உரியதா அல்லது அவரது தடவல் ஆட்டத்தைக் கிண்டலடிப்பதற்காக வைக்கப்பட்டதா என்று கூட எனக்குச் சந்தேகம் உண்டு. எனது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், ஒருநாள் அணியில் இருந்து தூக்கப்பட்டார். டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்படும் பரிதாப நிலைக்கே சென்றார். எப்படியோ தட்டுத் தடுமாறி இன்னும் டெஸ்ட் அணியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவரை சுவர் என்று கூறும்போதெல்லாம், அவர் ஒருநாள் போட்டிக்கு லாயக்கற்றவர் என்று கூறுவதுபோலவே எனக்குத் தோன்றும். எவ்வளவோ மரியாதைக் குறைவான சம்பவங்கள் நடந்தபோதும், இவர் ஏன் அணியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என நான் நினைத்ததுண்டு. கடந்த ஆண்டு பெங்களூர் ஐபிஎல் அணியிலும் அவருக்கு இதே நிலைமைதான்.
ஆனால், இப்போது அவருக்கு குரு உச்சத்தில் இருக்கிறான் என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் கொஞ்சம் ரன் எடுக்க தொடங்கியிருக்கிறார். இப்போது சிறு பையன்கள் விளையாடும் 20 ஓவர் ஆட்டத்திலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். ஆனால், ராகுல், இதையெல்லாம் வைத்துக்கொண்டு, ஒருநாள் அணியில் இடம்பிடிக்க நினைப்பதும், கேப்டன் பதவிக்கு கனவு காண்பதும் வேண்டவே வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெட்டியைக் கட்டுங்கள். ரவிசாஸ்திரியின் பேச்சைக் கேட்டு ரொம்பவே போரடித்து விட்டது. அவர் இடத்தைப் பிடிக்க வேண்டியது உங்களது பொறுப்பு. அல்லது உங்க ஊர் ஸ்ரீநாத் மாதிரி ரெப்ரி ஆகிவிடுங்கள்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இன்னொரு தகவலுக்காக ஒரு வெப்சைட்டை திறந்தேன். அதில் ஐபிஎல் முதல் நாள் ஆட்டத்தில் டிராவிட் ஆட்டத்தையும் தெண்டுல்கர் ஆட்டத்தையும் ஒப்பிட்டு வரைபடம் வரைந்து கட்டுரையும் எழுதியிருந்தனர். எல்லா வகையிலும் டிராவிட்தான் முன்னிலையில் இருந்தார். அதைப் பார்த்தும் எனக்கு அதிர்ச்சி. இந்த விவரங்களை டிராவிட் பார்த்துவிடக்கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். பார்த்துவிட்டால் இன்னும் கொஞ்ச நாள் ஆடலாம் என்று நினைத்து விடுவாரே என்ற அச்சம் என்னைத் தொற்றிக்கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக