சனி, 27 மார்ச், 2010

ஐபிஎல் அறிக்கை: உடன் பிறப்பே...

கேள்வி: ஐபிஎல் ஒரு சூதாட்டம் என கூறப்படுவது பற்றி...

பதில்: எல்லோரும் காலைவாரிவிட்ட பிறகும் தன்னம்பிக்கையுடன் இந்தத் தளம் இயங்குகிறதென்றால், எனது அண்ணன் தந்த எதையும் தாங்கும் இதயம் உன் அண்ணனுக்கு இருப்பதுதான் காரணம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சூதாட்டம் என்று சொல்பவர்கள் பகுத்தறிவுச் சிந்தனை இல்லாதவர்கள்.  அப்படிப் பார்த்ததால் வாழ்க்கையே கூட ஒரு சூதாட்டம்தானே.

கேப்டன் கங்குலியை விமர்சிப்பது சரியா?

முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கேப்டன் என்று அழைப்பதை நிறுத்துங்கள். அணித் தலைவர் என்று தாய்த்தமிழ் தந்த முத்துச் சொல் இருக்கிறபோது மாற்றான்சொல் எதற்கு. அந்தப் பெயரை நீக்கினாலே அவப்பெயரும் நீங்கும். கங்குலியை விமர்சிப்பது முற்றிலுமாகத் தவறு. காசைச் சுண்டி பூவா, தலையா போடுவது, போட்டி முடிந்ததும் தமிழினமே மெச்சத் தக்க வகையில் பேட்டியளிப்பது என எல்லாப் பணிகளையும் அவர் சரியாகவே செய்திருக்கிறார். இதில் எங்கிருந்து கண்டீர் குறை. அது சொல்வோர் கண்ணிலிருக்கிறது தம்பீ.

என்ன செய்தால் சென்னை அணி வெற்றிபெறும்?

தம்பி தோனி, ரெய்னா போன்றவர்களெல்லாம் நமது செயற்குழு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும். தொப்பி போட்டுக் கொண்டு நடுவில் நிற்பாரே நடுவர், வெயிலிலும் மழையிலும் உழைத்துச் சோர்ந்துபோகும் அவருக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். எதிரணியைச்  சேர்ந்தவர்களுக்கு நமது அணியில் சேருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இதைவிட எளிதான வழி ஒன்று இருக்கிறது. அதற்கு மதுரைக்காரர் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும். விதிகள் இடந் தருமா எனக் கேட்டுச் சொல்.


இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்?

தம்பி கங்குலியும் தொப்புள்கொடி உறவுகளுக்குத் துரோகம் செய்த நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மோதுகின்றனர். கருஞ்சிங்கம் கெயில் போன்றவர்கள் இருப்பதால் கங்குலி அணியின் வெற்றியை யாரும் அணைபோட்டுத் தடுக்க முடியாது. தம்பி கங்குலி வழக்கம்போல் தனது பணிகளை மட்டும் பார்த்தால் போதுமானது. மட்டையை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் களத்தில் இருந்து சோர்வடைய வேண்டாம். வாழ்த்துக்கள்.

கிரிக்கெட் உடன்பிறப்புகளுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்போது மற்ற நாடுகளில் சர்வதேசப் போட்டிகள் என்ற போர்வையில் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளவிடாமல் தடுப்பதற்குச் சதி நடப்பதாக அறிந்தேன். இது தொடர்பாக கடந்தவாரமே உலகக் கிரிக்கெட் சங்கத்துக்கு தந்தி அனுப்பினேன். இப்போதுதான் அதற்கான பதில் வந்திருக்கிறது. வருகிற முட்டாள் தினத்துக்குப் பிறகு வேறு எங்கும் கிரிக்கெட் ஆட்டங்களே நடக்காது என அந்தச் சங்கத்தின் தலைவர் உறுதியளித்திருக்கிறார். எனவே தம்பீ, நமது அரும்பெரும் முயற்சியால் கிடைத்த இந்த வெற்றிக்காக யாரும் எமக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டாம் என்பதை இதன் மூலம் சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

..
.
.

2 கருத்துகள்: