சனி, 13 மார்ச், 2010

ஐபிஎல் போட்டிகளின் நல்ல விஷயங்கள்

எச்சரிக்கை: இதை எழுதியது வேறொருவர்
 
கிரிக்கெட்டின் பாரம்பரியத் தன்மை சிதைந்து போகிறது; விளையாட்டு வெறும் வியாபாரப் பொருளாகிறது; தேசப்பற்று, ஊர்ப்பற்று போன்றவை பிணைந்திருக்கவில்லை; போட்டிகளின் முடிவுகளெல்லாம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்; ஒரு மாதிரியான நாடகத் தனம் தெரிகிறது; பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணித்திருப்பதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைகிறது என்பவையெல்லாம் ஐபிஎல் போட்டிகள் மீது பலராலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள்.

இவையெல்லாம் உண்மைதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் ஐபிஎல் போட்டிகளால் சில நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
  • ஐபிஎல் போட்டிகளால் பெரிய அளவு வியாபாரம் நடக்கிறது என்று கூறப்படுகிறது. சிலர் பணமுதலைகளாகக் கொழிக்கிறார்கள் என்கிறார்கள். உண்மையில் இந்த வணிகத்தால் பொதுமக்களுக்கு என்ன தீமை ஏற்பட்டிருக்கிறது? அல்லது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது வியாபாரம் ஆகக்கூடாது என்று கூறும் அளவுக்கு கிரிக்கெட்டுக்கு மட்டும் என்று ஏதாவது புனிதத் தன்மை இருக்கிறதா? கல்வியே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் கிரிக்கெட் மட்டும் வியாபாரம் ஆகக் கூடாது என்று கூறுவது சரியான வாதமாக இருக்காது. அதுமட்டுமில்லாமல் அடிமட்டத்திலிருந்து வெவ்வேறு நிலைகளிலும் பணப்புழக்கம் அதிகமாவது பொருளாதார அடிப்படையிலும் நாட்டுக்கு நல்லதுதானே?
    .
  • அதிக அளவு கிரிக்கெட் போட்டிகளால் வீரர்களின் திறன் பாதிக்கப்படும் என்கிற வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படிப் பார்த்தால் டெஸ்ட் போட்டிகளால்தான் வீரர்களின் திறன் பாதிக்கப்படும். 90களில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்டில் வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம் ஆகியோர் தொடர்ந்து 60 ஓவர்களை வீசியதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது ஐபிஎல் போட்டிகள் வீரர்களை எந்த விதத்திலும் சோர்வாக்கிவிடப் போவதில்லை.
    .
  • இன்னொரு வகையில், புதிய வீரர்களை அடையாளம் காணவும் சர்வதேச வாய்ப்புக் கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஐபிஎல் போன்ற போட்டிகள் பயன்படத்தான் செய்கின்றன. இரானி கோப்பை, ரஞ்சிக் கோப்பை போன்ற போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் ஒரு வரப்பிரசாதம். ஓரளவுக்குப் பணம் கிடைப்பதால் தொடர்ந்து இதே துறையில் அவர்கள் சோர்வில்லாமல் நிலை நிறுத்திக் கொள்ளவும் இது உதவும்.
    .
  • சீயர்லீடர்ஸால் கலாசாரம் சீரழிகிறது என்றொரு கும்பல் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் ஒன்றும் கிரிக்கெட்டின் புனிதத் தன்மையைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அது சுவாரஸ்யத்துக்கானது. அதில் மசாலாக்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. அப்புறம் தமிழ் டி.வி. சேனல்கள் செய்வதைவிடவா, இதெல்லாம் மோசம்?
    .
  • கிரிக்கெட் ரசிகர்களைப் பொருத்தவரை வெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை என்றைக்காவது மட்டுமே பார்த்து வந்த நிலை மாறி அதிகபட்ச கிரிக்கெட் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கசக்குமா என்ன? சினிமா, சீரியல் போன்றவற்றையெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு வேறுமாதிரியான களிப்புக்கும் ஐபிஎல் வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
    .
  • எல்லாக் காலங்களிலும் மேலை நாடுகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டப்பட்டு வந்த இந்தியா, கிரிக்கெட் என்கிற விஷயத்தில்தான் மற்ற எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு உலக அளவில் நமக்கு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. ஐபிஎல் போட்டிகளால் இந்த மரியாதை உயர்ந்திருப்பதுடன், உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
    .
  • ஒட்டுமொத்தமாகவே, ஐபிஎல் போட்டிகள் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளத் தெரியாதவர்கள்தான் இதை எதிர்ப்பார்கள்.
    .


டிஸ்கி: ஐபிஎல் போட்டிகளை ஆதரிக்கும் நண்பர் ஒருவரின் கருத்துக்கள் இவை. இதற்கான பதிலை நான் விரைவில் எழுதுவேன்
. சீயர்லீடர்ஸ் படத்தைப் போட்டு குறும்பு செய்தவரைப் பற்றிச் சொல்வதற்கில்லை

..

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக