புதன், 31 மார்ச், 2010

ஐபிஎல் வானிலை அறிக்கை: யூசுப் புயலும் சேவக் சூறாவளியும்

ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்வதற்கு நிறையவே துணிச்சல் வேண்டும். ராமன் லம்பாவுக்கு அது தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மெட் இன்றி வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் ஆட்டம் ஒன்றில் ஷார்ட் லெக்கில் பீல்டு செய்யும்போது மெஹ்ரப் ஹுசைன் அடித்த பந்து லம்பாவின் தலையைத் தாக்கிவிட்டு,  விக்கெட் கீப்பரின் கைகளுக்குச் சென்றது. இறந்து கொண்டிருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் லம்பா தொடர்ந்து பீல்டிங் செய்தார். கவனிக்கப்படாமல் விடப்பட்ட உள்காயத்தால், உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படாமலேயே அவர் இறந்து போனார். பிசிசிஐ அரசியல் குழப்பங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த ராமன் லம்பாவுக்கு இந்திய அணியில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது 80 களின் இறுதியில் கிரிக்கெட்டை கவனித்தவர்களுக்குத் தெரியும்.

எல்லோரும் ராமன் மாதிரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது. இந்தக் காலத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று நம்மால் புகழப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்ட சூதாட்டப் புயலும், வங்காளப் பெரியண்ணாவும், பெருஞ்சுவரும் மேலிடத்துச் செல்வாக்கப் பயன்படுத்தி நீண்டகாலம் வெட்டி மொக்கை போட்டார்கள்.

சரி அது போகட்டும். சென்னை பெங்களூர் அணி ஆட்டத்தைப் பார்க்க ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் சீயர் லீடர்ஸ் அருகில் அமர்ந்து ஆட்டத்தைக் கவனித்தபடியே இதை எழுத வேண்டியதாயிற்று. கெவின் பீட்டர்சனை அணியில் சேர்க்காதீர்கள் என்று எத்தனையோ முறை மல்லையாவிடம் சொல்லிப் பார்த்தாச்சு.. போன ஐபிஎல்லில் கெவின் போன பிறகுதான் பெங்களூர் உருப்பட்டது. இந்த ஐபிஎல்லில் அவர் ஆடுகளத்துக்குள் இறங்கியதும் நிலைமை தலைகீழாகிவிட்டது. சரி தோத்த பிறகு என்ன பேசறதுக்கு இருக்கு?

இன்றைக்கு இரண்டாவது ஆட்டம் தில்லிக்கும் ராஜஸ்தானுக்கு நடக்கிறது. இந்த ஆட்டம் பற்றி வானிலை ஆய்வு மையத்துக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் நண்பர் மெட்ராலஜி மகாவிடம் தொலைபேசியில் கேட்டோம். அவர் சொல்கிறார்.

இன்றைய ஆட்டத்தில் யூசுப் பதான் நிறைய ரன்கள் அடிக்க வாய்ப்பிருக்கிறது. காற்று திசை மாறி நகரும்பட்சத்தில் அவர் சொற்ப ரன்களுடன் வீட்டுக்குப் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் சேவக், கம்பீர் போன்றோரும் சிக்சர்களுடன் கூடிய ரன்மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி வறண்ட வானிலையே காணப்படும். ஷில்பா வந்தால் லேசான தூறல் வரும்.

ஒட்டுமொத்த நிலையைப் பார்க்கும்போது, இப்போதைக்கு தில்லியை மையம் கொண்டிருக்கும் புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.... ஷில்பா தரப்பில் இருந்து ட்ரீட்மென்ட் இல்லாதவரை.



...
..
..

1 கருத்து:

  1. // இந்தக் காலத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று நம்மால் புகழப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்ட சூதாட்டப் புயலும், வங்காளப் பெரியண்ணாவும், பெருஞ்சுவரும் மேலிடத்துச் செல்வாக்கப் பயன்படுத்தி நீண்டகாலம் வெட்டி மொக்கை போட்டார்கள்.//

    அப்பிடியே போற போக்கில எல்லாரையும் வெட்டி மொக்கைனு சொல்லிட்டுப் போயிட்டீங்க?

    சூதாட்டப் புயல்தான்யா இந்தியாவால ஜெயிக்கவும் முடியும்னு நிரூபிச்சவரு.

    வங்காளப் பெரியண்ணா - இந்தியாவால வெளிநாட்டிலையும் ஜெயிக்க முடியும்னு காட்டினவரு

    பெருஞ்சுவர் - பவுன்சி பிட்சஸ்லயும் இண்டியன் பேட்ஸ்மென் ஸ்கோர் செய்ய முடியும்னு காட்டினவரு

    மாஸ்டர் பேட்ஸ்மெனைப் பத்தி நான் சொன்னா ரசிகன் பினாத்துறான்னு சொல்லிருவீங்க.

    நீங்க சொன்னீங்களே ராமன் லம்பா, அவரோட மரணம் துரதிருஷ்ட வசமானதுதான். ஆனா ஹெல்மெட் போடாம சில்லி பாயிண்ட்ல நின்னது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

    அதோட அவரு ஒன்னும் பெரிய சூரப்புலியில்லை. ஃப்ளாட் பிட்ச்ல மட்டுமே ஆடுவாரு. ஆசியாவை விட்டு வெளிய போனா அந்தப் புலி எலியாகிடும்.

    பதிலளிநீக்கு