ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஐபிஎல் மருதநாயகா: ஓல்டுமென் ஷோசச்சினும், காலீஸும் அடிப்பதைப் பார்த்து இளைய சமூகம் கலங்கிப் போயிருக்கிறது. கங்குலி வேறு பார்முக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக தெருக்கோடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேடனும் அவ்வப்போது அடிக்கிறார். ஆக, தோனி, சேவக் மாதிரி மொக்கையர்கள் இன்னும் அடிக்கவில்லை. அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்கு விலைபோகலாம் என அவர்கள் யோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட நம்மூர் சினிமா போலத்தான் இருக்கிறது. இங்கு 30 வயசைக் காட்டிலும் 60 வயசுக்குத்தான் மவுசு அதிகம். பேத்திகள் வந்த பிறகும் டூயட் பாடுவதற்கு நம்மூர்க்காரர்களால்தான் முடியும். இப்படியொரு இளைஞரைச் சந்தித்து ஐபிஎல் பற்றி கேட்டோம்.

நம்ம வரலாற்றுப் படம் எப்ப வெளிவரும்?


என் இதயக் கொப்புளங்கள் வெடித்த புண்கள் ஆறுவதற்குச் சில காலம் ஆகும். படத் தயாரிப்பு என்பது நம் கற்பனைத் தளங்களைத் தாண்டி வேறு மாதிரியான கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு எலிசபெத் வர முடியாது. இன்னொரு முறை படத்தைத் துவக்கவும் முடியாது. அது ஒரு வியாபாரம். நானும் வியாபாரிதான். விற்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்க்கத்தான் இத்தனை ஆண்டுகால அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

உங்க படத்தைப் பார்த்தா தயாரிப்பாளரை பழிவாங்கறதுக்காக எடுக்கப்பட்டது மாதிரியே தெரியுதே?

என் ரசிகனைப் போல நானும் ஒரு காமன் மேன். எனக்கென்ன போச்சு என அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  கூவம் பிரவாகமெடுத்தாலும், வங்கக் கடல் பொங்கினாலும் எனக்கு எதார்த்தம் முக்கியம். அதற்கான செலவுகளைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்தான் என்னைக் கொண்டு படம் எடுக்க வேண்டும். மற்றவர்கள் நித்யாவை வைத்துப் படம் எடுக்கட்டும்.

வசாவதாரம் படம் காமெடிப் படம் மாதிரி இருப்பதாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் பற்றி...?

உங்கள் மொக்கையை சீரியஸ் என்று கூறினால் உங்களுக்கு எப்படி வலிக்கும். அது போலத்தான். அந்த வலியைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இருந்தாலும் எனக்கு காமெடி வருகிறது என்பதை ஒப்புக் கொண்ட தமிழனுக்கு நன்றி

நீங்க நாத்திகவாதியா?

அன்பே சிவம். நான்தான் கடவுள். அப்படியானால் நான் நாத்திகவாதியா?


சரி வேறொரு விஷயமாகப் பேச வந்தோம். இப்ப தயக்கமாக இருக்கிறது?

என்ன கேட்டுவிடப் போகிறீர்கள். என் குடும்ப வாழ்க்கை பற்றித்தானே. உங்கள் விரல் என் மூக்கு வரைக்கும் வரலாம். ஆனால் தொடக்கூடாது.

குடும்பமா? அதில்லை. இது வேறு. ஐபிஎல் பற்றி கேட்கலாமா?

ஓ. கேளுங்க. நானும் கிரிக்கெட் ரசிகன்தான். ஐபிஎல் வியாபார நுணுக்கங்களைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். சச்சின், யுவராஜ், தோனியெல்லாம் நல்ல குணச்சித்திர நடிகர்கள். நவாப் பட்டோடியிடம் கேட்டீர்களானால் எனது பேட்டிங், பவுலிங் திறமைகளைச் சொல்லுவார். இன்னும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் டீம்ல எது ஜெயிக்கும்?


எது நல்ல அணி என்று கேளுங்கள். வெளிநாட்டுக்காரர்களை தலைவர்களாகக் கொண்ட அணிகள் தோற்பது நல்லதுதான். அதுவே பொருளாதாரத்துக்கு நல்லதா என்று கேட்டீர்களானால், இல்லையென்றுதான் சொல்லுவேன். ஆனாலும் வார்னே தலைமையிலான அணியைக் காட்டிலும் நடிகர் கில்கிறிஸ்ட் அணி நல்லது. நல்ல அணிகள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். தொடர்ந்து அதுமாதிரியான அணிகள் வெளிவருவதற்கும் இது உதவும்.

வேறு ஏதாவது?


ஐபிஎல் ப்ளாக் எழுதறத விட்டுட்டு... போய் புள்ளகுட்டிகளப் படிக்க வெய்ங்க.

...
..
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக