வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ஐபிஎல் பயிரமுத்து: சென்னை அறிவாளிகள்!


திரைப்படக் கவிஞர் பயிரமுத்து ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆய்வுக் கட்டுரை பகுத்தறிவுக் கல்யாணத்துக்கு அண்மையில் செல்ல நேரிட்டது. ரூ.200 கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கவிக் கடவுளைப் பற்றிய நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை கவிதைகளாக அவிழ்த்துவிட வேண்டும். ஜென்ம சாபல்யம் கிடைத்தது. டாக்டர் பட்டம் பெறுவதற்கு இந்த தகுதி ஒன்றே போதும் என்றும் சொன்னார்கள். வயிறு முட்டச் சாப்பாடும் போகும்போது கையடக்கப் பை ஒன்றும் கொடுத்தார்கள். இதற்கெல்லாம் கவிஞரே எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாக விவரமறியாத வட்டாரங்கள் மப்பில் உளறின. ஏம்பா இப்படிக் காச செலவு பண்ணி எங்களுக்குச் சேவை செய்கிறார்கள் என்று என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த கேள்வியை ரசிகப் பெருந்தகை ஒருவரிடம் கேட்டோம். வரலாறு முக்கியம் அமைச்சரே என்றார்கள். நான் கேட்கிறேன், ஏம்பா அவரே அரசவை ஆஸ்தானக் கவிஞர், அவருக்கு ஏனப்பா இந்தப் பொழைப்பு. இன்னொரு மஞ்சள் கவிஞரான "பாவி"யும் இதே ஸ்டைலை பாலோ செய்து புகழை இன்ச் பை இன்ச்சாக உயர்த்திக் கொண்டிருக்கிறாராம். இதுக்கெல்லாம் கூட்டம் சேருகிறது பாருங்கள். தமிழர்கள் அறிவாளிகள்.



நமக்கு இந்த ஐடியா இல்லாம போச்சே தலீவா!

நம்ம விஷயத்துக்கு வாங்கோ. அண்மையில் நாக்பூர் விதர்பா மைதானத்தில் சென்னை அணியின் ஆட்டம் தொடங்கியபோது, வெறும் 500 பேர்தான் மைதானத்தில் இருந்தார்கள். ஊர்ப்பற்று, தேசப்பற்று இல்லாமல் முட்டாள்தனமாக ஐபிஎல் ஆட்டங்களைக் கருவிக் கொண்டிருப்போரெல்லாம் அன்று லட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளியிட்டார்கள். என்போன்று தேசப்பற்று மிக்கவர்களுக்கு நாக்பூர் ரசிகர்களின் பொறுப்பற்ற தனத்தை நினைத்து ஆதங்கம் ஏற்பட்டது. ஆட்டம் முடியும்வரை ஆயிரம் பேர்கூட வரவில்லை என்று சொல்லிக் கொண்டார்கள். ஐபிஎல் போட்டியைக் காண முடியாத அளவுக்கு நாக்பூர்காரர்களுக்கு அப்படியென்ன வேலையோ தெரியவில்லை. அறிவிலிகள்.

இந்த விஷயத்தில் சென்னையை மிஞ்சவே முடியாது. தலைநகர் டெல்லி, ஐடி பெருநகர் பெங்களூர், மும்பை மாநகர், கிரிக்கெட் கிறுக்கர்கள் நிறைந்த கோல்கத்தா போன்ற நகரங்களில்கூட ஆட்டம் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புகூட டிக்கெட் இருந்தது. இருக்கிறது. அங்கிருப்பவர்கள் நாட்டின் மீதும் கிரிக்கெட்டின் மீதும் அன்பில்லாதவர்கள், பாசமில்லாதவர்கள், அக்கறையில்லாதவர்கள். இல்லாவிட்டால், ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்காமல் இருப்பார்களா? நல்லவேளை அறிவாளிகள் நிறைந்த சென்னை அப்படியில்லை.

சென்னையில் நடந்த எந்த ஆட்டத்துக்குமே டிக்கெட் தாராளமாகக் கிடைக்கவில்லை. நம் ஊர் கிரிக்கெட் ஆர்வலர்களும், தேச பக்தர்களும், சமூக நீதியாளர்களும் "உரிய" நேரத்திலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஊர் மானத்தைக் காப்பாற்றிவிட்டார்கள்.  ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு பிளாக்கில் சேவை செய்யப்பட்டது. ரூ.500 டிக்கெட்டை ரூ.5 ஆயிரம் வரை விற்றார்கள். என்னவொரு கிரிக்கெட் பற்று.

நமக்கு வழக்கம்போல வந்த ஓசி டிக்கெட்டைக்கூட சில ஆயிரங்கள் கொடுத்து அறிவாளி ஒருவர் வாங்கிச் சென்றார்  என்றால் நமது ஊர்ப்பற்றை என்ன சொல்வது? மற்ற ஊர்க்காரர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான், நாங்கெல்லாம் ஆடுறோமோ இல்லியோ, கிரிக்கெட் பாக்கறது, கைதட்டறதுன்னா, நாங்கதான் டாப். பாத்து கத்துக்கோங்கப்பா.

...

..

1 கருத்து: