சனி, 26 பிப்ரவரி, 2011

தோனி அணிக்கு பேராபத்து!

அற்புதமான ஷாட்
எகிப்து - அல்ஜீரியா இடையேயான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தபோது, இரு நாட்டு ரசிகர்கள் இடையே கடும் மோதல் நடந்தது. ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது.  எகிப்தில் அல்ஜீரிய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரகத்தை மூடும் அளவுக்கு நிலைமை போனது. இறுதியில் சூடானில் வைத்து கிட்டத்தட்ட காலியான அரங்கில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாதிரியான ஒரு காரணத்துக்காக ஹோன்டூராஸுக்கும் எல்-சால்வடாருக்கும் இடையே 4 நாள் யுத்தமே நடந்திருக்கிறது. சொல்ல மறந்துவிட்டேன். இதெல்லாம் கால்பந்து விளையாட்டில்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கிரிக்கெட் போட்டிகளிலும் இதுபோன்ற பதற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அதைத்தான் பிசிசிஐ நன்றாக அறுவடை செய்தது. பாகிஸ்தான் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இப்படிக் கிரிக்கெட் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறது. பொருளாதார, அரசியல் ரீதியாகவும் சரி, கிரிக்கெட் செல்வாக்கு வாரியாகவும் சரி இப்போது இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட முடியாது. எல்லாவ வகையிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்துவிட்டது. ஆனாலும் அவர்கள் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை. ஆனால், இப்போது அந்தப் பகை கொஞ்சம் குறைந்திருக்கிறது. இது நம்மூர் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் அபாயகரமான ஒன்று என்ற எச்சரிக்கையை, நமது எதிரிகளுக்கு விடுக்கிறோம்.

இந்தியாவில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் போதை அதிகமாக ஏற்றப்பட்டிருக்கிறது. நன்றாகக் கவனிக்க வேண்டும் போதை "ஏற்பட்டிருக்கிறது". சன் டி.வி.யில் அடிக்கடி ஒரு படத்தின் விளம்பரத்தைக் காட்டினால், படம் ஓடுகிறதே அது போன்று, விளம்பரங்கள் மூலமாகவும் வேறுவகையான கவர்ச்சிகள் மூலமாகவும் இந்தப் போதை உண்டாக்கப்பட்டிருக்கிறது.

அதனால்தான், தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே குரல்கொடுத்துக் கொண்டிருந்தபோதும், இப்போதைக்கு கிரிக்கெட்டே வேண்டாம் என்று நோஐபிஎல் அதிபர் ஐ.நா.சபையில் கதறிக்கொண்டிருந்தபோதும், சென்னை ரசிகர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாகத்தின் வரிசையின் நின்றார்கள். அதுவும் அதிகாலையிலே... தக்கல் டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்பார்களே அதைவிட ஆர்வமாக, பள்ளி அட்மிஷனுக்கு காத்திருப்பார்களே அதைவிடவும் அதிக நேரமாக வரிசையில் நின்றார்கள். புதிதாகக் கட்டப்பட்ட சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. 2 பேர் காயமடைந்தனர். நம் ஜனம் அசைந்து கொடுக்கவில்லை. அவர்களை ஒருபக்கம் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். நமது தோல் தடித்துப் போன ஜனம் தொடர்ந்து வரிசையில் நின்று டிக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த கதை பெங்களூரைப் பற்றியது. பெங்களூர்காரர்கள் சென்னை ரசிகர்களைவிடப் பாவம். அவர்களுக்கு சூடு, சொரணை எல்லாம் உண்டா என்று தெரியவில்லை. இன்றைய போட்டிக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பலருக்கு காயம் ஏற்பட்டது. டிக்கெட் தீர்ந்துவிட்டது. ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் விடவில்லை தொடர்ந்து அங்கேயே நின்று அடிவாங்கினார்கள்.

இந்தச் சம்பவம் பற்றி ஐசிசி தலைமை நிர்வாகி லோர்கதிடம் கேட்டார்கள். அவர் சொன்னார், "50 ஓவர் கிரிக்கெட்டுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு" என்று. ஓ... பெங்களூர்காரன் அடிவாங்கியது, ஐசிசிக்கு நல்ல ஆதாரமாகிப் போய்விட்டது. சென்னைக்காரரகள் சளைத்தவர்களா என்ன... கிரிக்கெட் டிக்கெட் வாங்குவதற்காக உயிரையும் கொடுக்க வேண்டாமா?

சரி, ஏன்யா இந்த டிக்கெட் பிரச்னை, 40 ஆயிரம் பேருக்கு 3 மணி நேரத்தில் டிக்கெட்டை விற்றுவிடுகிறார்களா என்று பார்த்தால், அதுதான் இல்லை. பெங்களூரில் உள்ள 40 ஆயிரம் டிக்கெட்டில் வெறும் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும்தான் விற்பனைக்கு. மற்றெல்லாம், ஸ்பான்சர்கள், அரசு அதிகாரிகள், ஐசிசி, பிசிசிஐ உறுப்பினர்கள், கிளப்புகளுக்கு ஒதுக்கப்படும். இந்த வகையில் மட்டும் 31 ஆயிரம் டிக்கெட்டுகள் முடக்கப்படும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது. ஆக, டிக்கெட் விற்பதால், இவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இத்தனை டிக்கெட் பொதுவில் விற்க வேண்டும் என்பதற்கு எந்த விதியும் இல்லை. இதெல்லாம் தெரியாத பொது ஜனம் வரிசையில் போய்நின்று அடிவாங்குகிறது. என்றைக்காவது ஒருநாள் இதெல்லாம் நம்மூர்காரர்களுக்குத் தெரியத்தான் போகிறது. அப்போது இருக்கிறது தோனி அணிக்கு பேராபத்து!
.

..

2 கருத்துகள்:

  1. //இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கிரிக்கெட் போட்டிகளிலும் இதுபோன்ற பதற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.//

    True

    azifair-sirkali.blog

    பதிலளிநீக்கு
  2. டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் அந்த செய்தியை நானும் பார்த்தேன். போலீஸ் லத்தியால் விளாசும் படமும் கூடவே! ரசிகர்கள் அதற்கெல்லாம் அசராமல் நிற்கிறார்கள். என்னத்த சொல்ல:(?

    பதிலளிநீக்கு