கிரிக்கெட்டையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் அரசியலையும் தாண்டிய சமூகப் பிணைப்பு கிரிக்கெட்டுக்கு உண்டு. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் பாகிஸ்தானையும் இலங்கையையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. ஆனால், இந்தியக் கிரிக்கெட் வாரியம் என்கிற கொள்ளைக் கூட்டத்தினர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவது பாதுகாப்பானதல்ல என்பது ஒருவகையில் உண்மைதான். அதற்காக 2011 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் பொறுப்பிலிருந்து பாகிஸ்தானை மட்டும் கழற்றி விட்டிருப்பது அந்த நாட்டை நசுக்கும் செயல். அதுவும் அங்கு நடக்க வேண்டிய போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டிருப்பது பாகிஸ்தானை இழிவுபடுத்தும் நடவடிக்கை. இந்திய-பாகிஸ்தான் உறவில் உண்மையிலேயே அக்கறையிருந்தால், பாகிஸ்தானில் நடத்த வேண்டிய போட்டிகளை வேறொரு நாட்டில்தான் நடத்த வேண்டும். அல்லது இப்போதைக்கு போட்டிகள் அனைத்தையுமே வேறு நாட்டுக்கு மாற்றியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாகிஸ்தானை ஓரங்கட்டுவது இந்தியாவுக்கு எந்தக் காலத்திலும் நல்லதல்ல.
இதுவெறும் கிரிக்கெட் சார்ந்த விஷயமல்ல. இதற்குப் பின்னால், பெரிய அளவிலான பாதுகாப்பு, அரசியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இயலாமையில் இருக்கும் ஒரு நாட்டிடம் இருந்து வாய்ப்புகளைப் பிடுங்கிவிட்டதை பெரிய சாதனையாகக் கருதிக் கொண்டிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலையில் யார்தான் குட்டுவது?
ethu unmai yeleye yosikka ventiya visayam
பதிலளிநீக்கு