ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

சென்னைக்கு பெப்பே...

அணிக்கு பெயர் சென்னை. ஆனால் அணியில் சென்னைக்காரர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பத்ரிநாத், அஸ்வின் என்ற இரண்டு பையன்களை கடனே என அணியில் சேர்த்திருந்தார்கள். ஆனால், ஆட்டத்தில் அவர்கள் செய்த வேலைகளைப் பார்த்தால், அடுத்த ஆட்டத்தில் சென்னைக்காரர்களே இல்லாத அணிதான் சென்னை என்ற பெயரில் விளையாடும் எனத் தெரிகிறது. அப்படி என்ன வேலை செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? பத்ரிநாத் பூஜ்யம் ரன்களை எடுத்தார். சுழல்பந்து வீச்சாளரான அஸ்வின், பந்து வீசவே இல்லை. சரி அவர் மட்டையாவது பிடிப்பார் என்று பார்த்தால், அவரைக் கடைசி ஆளாக பெஞ்ச் தேய்க்க வைத்துவிட்டார்கள். அதனால், அவர் மட்டை பிடிக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்படிச் சென்னைக்காரர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட அணி எப்படி ஜெயிக்கும். நானே கூட சாபம் விட்டேன், தோற்றுப் போகட்டும் என்று. கடைசியில் அப்படித்தான் ஆகிப்போனது.
20 ஓவர் போட்டிகளில் ஆடவே மாட்டேன் என்று சத்தியம் செய்து வாழ்ந்து வந்த சச்சின், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், இந்தியா சார்பில் 20 ஓவர் அணியில் சேர்ந்தால், அதன் கட்டமைப்பு பாதிக்கப்படும், ஆனால் ஐபிஎல் போட்டிகள் அப்படியில்லை என்று சமாளிக்கிறார். இந்த ஆட்டத்தில் அரைச் சதம் வேறு அடித்தார். ஒருநாள் போட்டியில் செய்யும் எல்லா பந்தாவையும் செய்தார். ம்... பணம் பேசுகிறது.
ஆட்டத்தை நான் டி.வி.யில் பார்த்துவிட்டு ஓய்ந்திருந்த நேரத்தில் நண்பர் ஒருவர் போன் செய்தார். Ôநம் டீம் இப்படித் தோத்து போயிட்டாங்களேÕ என்று ரொம்ப பீல் பண்ணினார். மனதுக்குள் எழுந்த கடுமையான வார்த்தைகள் நாக்குக்கு வந்துவிடாமல் அடக்கிக்கொண்டு நான் சொன்னேன், Ôஎன்ன செய்யறது, மனச தேத்திக்கோங்க. அடுத்த ஆட்டத்தில பாக்கலாம்Õ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக