ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உலகக் கோப்பை கவுன்டவுன் 20: குவார்ட்டர் கோயிந்தன் பதில்கள்

அதைப் படிக்கும் முன் இதைப் படிக்க: கீழ்க்காணும் பதில்கள் அனைத்தும் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் குவார்ட்டர் கோயிந்தன் அவர்கள் தனது அனுபவ அறிவைக் கொண்டு எழுதியவை... கேள்விகள் அனைத்தும் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் கேட்கும் அளவுக்குத் தரமானவை.

ஐசிசி தலைவர் தலைவர் யாரு?

சரத் பவார்.


பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் யாரு?
ஜக்மோகன் டால்மியா


ரெண்டு பேருக்கும் என்ன உறவு?

வாய்க்காத் தகராறு ஏகப்பட்டது... இவரு நல்லவரு... அவரு ரொம்ப நல்லவரு...


இப்ப என்ன அக்ரிமெண்ட்?

நான் திருடினத நீ காட்டிக் கொடுக்கக்கூடாது... நீ திருடினா நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்.  


கொல்கத்தாவுல என்ன பிரச்சனை?
ஆடுற தெரு கோணலா இருக்காம்.




எதனால இந்தப் பிரச்சனை?
ஐசிசி தலைவர் சரத் பவார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா.



கோணலான தெருவ சரி செய்ய முடியாதா?
அத சரி செய்யறதுக்குத்தான் நம்ம நிதியமைச்சர்லேருந்து பொதுப்பணித்துறை வரை எல்லாம் வரிஞ்சு கட்டியிருக்காங்க.


இவங்களுக்கு வேற வேலையே இல்லையா?
இது என்ன தமிழக மீனவர் பிரச்னையா... கண்டுக்காம விடுறதுக்கு... கிரிக்கெட்டுமா கிரிக்கெட்டு...


கடைசியா ஒரு கேள்வி... கொல்கத்தாவுல குத்தாட்டம் நடக்குமா நடக்காதா?
ஐசிசி தலைவர் சரத் பவார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா.







..
..

புதன், 19 ஜனவரி, 2011

வெறும் 10 டீம் விளையாடறதுக்கு பேரு உலகக் கோப்பையா?

"நான் ரேஸ்ல செகண்டா வந்தேன்"

"மொத்தம் எத்தனை பேர் ஓடினாங்க"

"ரெண்டு பேர்"

ஒரு விளம்பரத்தில் வந்து பிரபலமாகியிருக்கும் டயலாக் இது. யோசித்துப் பார்த்தால் கிரிக்கெட் உலகக் கோப்பையும் இது போலத்தான் தெரிகிறது. சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்ட ஐசிசி சர்வதேச கிரிக்கெட் அமைப்பில் இன்று வரைக்கும்10 கிரிக்கெட் வாரியங்கள் மட்டும்தான முழு உறுப்பினர் அந்தஸ்துடன் இருக்கின்றன. இதில் 9 நாடுகள்தான் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற நாடுகளாம். இந்த 9 நாடுகளில்தான் நாங்கள் முதலாவதாக வந்துவிட்டோம் என்று தற்போதைய பிசிசிஐ நிர்வாகம் பீற்றிக் கொண்டிருக்கிறது. 

இதைவிடவும் வேடிக்கை ஒன்று இருக்கிறது. 2007 உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியமான இரு போட்டிகளிலும் தோனி முட்டை போட்டதால், அணி வீட்டுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும் டிராவிட், தெண்டுல்கர், கங்குலி எல்லாம் ரெஸ்ட்  எடுத்தனர். கண்காட்சிப் போட்டி போல நடக்க இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. எல்லா நாடுகளும் இரண்டாந்தர அணிகளை அனுப்பியது. நமது பிசிசிஐயும் தோனி தலைமையில் சீனியர்கள் இல்லாத அணியைத்தான் அனுப்பியது. சோதா அணிகளை அடித்துவிட்டு கோப்பையை வாங்கியது தோனி அணி. அதை இன்று வரைக்கும் தோனி குழுவினர் பெருமையடித்துக் கொள்வதுதான் சகிக்க முடியவில்லை. ஒரு கண்காட்சிப் போட்டியில் ஜெயித்துவிட்டு உலகச் சாம்பியன் என்று கூறிக் கொள்வதற்கு இந்த அணிக்கு வெட்கமாக இல்லையா?

ஐசிசி உலகக் கோப்பையும் இப்படி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுதான். நாங்களும் உலகக் கோப்பை போட்டி நடத்துகிறோம் என்று வெறும் 10 அணிகள் மட்டும் 4 சோதா அணிகளைச் சேர்த்துக் கொண்டு ஆடுவதற்குப் பெயர் உலகக் கோப்பையா? கால்பந்தைப் போல 200 நாடுகளுக்கும் தகுதிச் சுற்று வைத்து அதிலிருந்து சில நாடுகளைத் தேர்வு செய்து இறுதிப் போட்டி நடத்தும் காலம் வந்தால்தான் ஐசிசி நடத்தும் போட்டியை உலகக் கோப்பை போட்டி என்று ஏற்றுக் கொள்ள முடியும். தற்போது அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களை முழு உறுப்பினர்களாக அங்கீகரித்த பிறகுதான் இதெல்லாம் சாத்தியம். அதன் பிறகு வெற்றிபெறும் அணியைத்தான் உலகச் சாம்பியன் என்று கூற முடியும். அதுவரைக்கும் இந்தக் கூத்துக்குப் பெயர் குண்டுச் சட்டிக் கோப்பைதானே?


..