செவ்வாய், 17 ஏப்ரல், 2012

ஐபிஎல் போட்டியால் வளரும் வீரர்களுக்கு நன்மையா?


ஐபிஎல் போட்டிகள் பற்றி விமர்சனம் செய்யும் போதெல்லாம், எட்டுத் திக்கிலிருந்து கண்டனக் கணைகள் பறந்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் தேசபக்தர்கள். பலர் சென்னையை தாய் மண்ணாகவும் தோனியை மண்ணின் மைந்தனாகவும் கருதுபவர்கள். நொடிந்து போயிருக்கும் இந்தியக் கிரிக்கெட்டையும் மட்டையாகிப் போன தோனியையைும் மீட்பதற்கு, பிரியங்கா சோப்ரா போன்ற உலக அழகிகள் வந்துதான் குத்தாட்டம் போட வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தேசபக்தர்கள்,  "ஐபிஎல் போட்டிகளால் தேசிய அணியில் இடம் கிடைக்காத இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அதனால் கிரிக்கெட் வளருகிறது" என்று பிதற்றுகிறார்கள்.

இது எப்படியிருக்கிறது தெரியுமா? கஜானாவுக்கு 1.72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஒருவர், "நிறுவனங்களுக்கு நான் அளித்த சகாயங்களால்தான் இப்போது நீங்கள் 10 பைசாவுக்கு போனில் பேசிக் கொண்டிருக்க முடிகிறது, சந்து பொந்தெல்லாம் செல்போன் நடமாடுகிறது" என்றாராம். அப்படித்தான் இருக்கிறது ஐபிஎல் போட்டிகளால் வளரும் வீரர்களுக்கு நன்மை என்கிற சப்பைக் கட்டு, சாக்குப் போக்குகள்.

தொலைக்காட்சியில் தோன்றி ஐபிஎல்லுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் டபிள்யூ.வி.ராமன் உள்ளிட்ட எல்லோரும்தான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலே வளரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால், ஐபிஎல் போல எத்தனை அமைப்புகள் வந்தாலும் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும். திறமை உள்ளவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், நீங்கள் தேசிய அணி என்ற எதேச்சதிகார அணி ஒன்றை வைத்திருக்கிறீர்களே, அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் என்ன செய்கிறீர்கள்? இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்.

ஐசிஎல் என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த எத்தனையோ இளம் வீரர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். அப்படியொரு அமைப்பு இனி எந்த வகையிலும் தொடங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகக் கங்கணம் கட்டிச் செயல்பட்டீர்கள். உள்ளநாட்டுக்கார்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர் ஐசிஎல்லில் பந்து பொறுக்கிப் போடும் வேலையைப் பார்த்திருந்தாலும்கூட அவர்களுக்கு தேசிய அணியில்  எந்த நன்மையும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்கள்.

உண்மை இப்படியிருக்க,  ஏதோ கிரிக்கெட்டுக்கும், இளம் வீரர்களுக்கும் நன்மை செய்வதாக கபடநாடகம். ஐபிஎல் என்பது வெறும் பொழுதுபோக்கு களியாட்டம்தான். எதிரிகள் பலரை நயவஞ்சகமாக ஒழித்துக் கட்டிவிட்டு நடத்தப்படும் வியாபாரம்தான். லாபமெல்லாம் முதலாளித்துவ வர்க்கத்தின் உச்சியில் இருக்கும் பத்துப் பதினைந்து பேருக்குப்போகின்றன. இதில் எங்கிருந்து வந்தது கிரிக்கெட்டுக்கும் இளம் வீரர்களுக்கும் நன்மை?  ஆடும் வீரர்களுக்கு கிடைப்பதெல்லாம் முதலாளிகள் வீசியெறியும் சோற்றுப் பருக்கைகளும்,  எலும்புத் துண்டுகளும், சதைகளும்தான்.  இதைத்தான் நன்மை என்கிறார்கள். 
நல்லாயிருக்குப்பா உங்க பெர்பாமென்ஸு!

...

2 கருத்துகள்: