புதன், 4 ஏப்ரல், 2012

ஐபிஎல் கோடிகளும் 121 கேடிகளும்


நாட்டில் சென்சஸ் கணக்கெடுப்பதே இந்தியாவில் எத்தனை தலைகள் இருக்கின்றன. கிரிக்கெட் என்ற பெயரில் அவர்களை விற்று எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதற்குத்தான். கிரிக்கெட் ஒளிப்பரப்பு உரிமம், விளம்பரம், ஐபிஎல் உரிமம், ஏலம் எல்லாம் சென்சஸ்படிதான். நீங்கள் இன்னொரு குழந்தையைப் பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசனுக்கு லாபம் கூடுகிறது என்பதுதான் உண்மையான பொருள். 

ஆனால், ஐபிஎல் போட்டிகளை வெறுப்பவர்கள், அதை விரும்புவர்கள் என நம்நாட்டில் இரு இனங்கள் இருக்கின்றன. முதலாவது பெரும்பான்மை சுமார் 121 கோடி. இரண்டாவது மிகச் சிறுபான்மை சுமார் 121 கேடி. நோஐபிஎல் கடையின் ஓனர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். ஐபிஎல் பிடிக்காது. பிடிக்காவிட்டால் அதைப்பற்றி ஏன் பேச வேண்டும் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

இது ஏதோ "எனக்கு வென்னிலா பிடிக்காது, ஸ்டிராபெர்ரி பிடிக்காது, பிஸ்தாதான் பிடிக்கும்" என்பது போன்ற "பிடிக்காது" அல்ல. எனக்கு ராஜபட்ச பிடிக்காது, பொன்சேகா பிடிக்காது என்பார்களே அந்த மாதிரி "பிடிக்காது".

சிலர் குத்தாட்டம் போடுவதற்காக எல்லோரும் போகும் பாதையில்தான் போக்குவரத்தை மாற்றுகிறார்கள். எல்லோருக்கும் பவர்கட் இவர்களுக்கு மெகாவாட் கணக்கில் மின்சாரம். எல்லோருக்கும் பொதுவான அரசு இவர்களுக்குத்தான் இலவசமாக நிலத்தை வழங்கி மைதானம் கட்டிக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. 

தி.நகரில் விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தின் கட்டுமான விதிமீறல்கள் மட்டும் "நாட்டுக்காக" மன்னிக்கப்படுகின்றன. தியேட்டரில் 120 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை வைக்கக்கூடாது என்பதைக்கூட  அரசு நிர்ணயித்திருக்கிறது. இங்கு அந்த விதியும் கிடையாது. 

பிசிசிஐ என்கிற தனியார் நிறுவனம் இந்த நாட்டின் கிரிக்கெட் வளத்தையெல்லாம் கொள்ளையடிக்கிறது. ஒரு சிறிய தொழிலதிபர்களின் ரகசியக் கூட்டில் இதில் ஆட்டத்திறன் குறைக்கப்பட்டு நாடகத்திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பெருங்கூட்டம் பஞ்சப் பரதேசிகளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், கொஞ்சூண்டு அதை அனுபவித்து வந்த எவனாலும் ஐபிஎல் போட்டிகளை ஆகா ஓகோவெனப் புகழ்ந்து எழுத முடியாது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸை வெறுப்பவர்கள் சென்னையை வெறுப்பவர்கள் இல்லை. மும்பை இண்டியன்ஸை புறக்கணிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகளும் இல்லை. 

..


2 கருத்துகள்:

  1. ஆடு மாடுகளை போல் ஏலம் எடுத்து மோத விட்டு பல பயித்தியங்களின் அடிமடியை மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைய செய்து தானும் தனது குடும்பமும் வாழ நினைக்கும் சில மோசமான சிந்தனையாளர்களின் சூழ்ச்சியே ஐபிஎல்.

    ஆடுறவனுக்கு, ஆடுகிறவளுக்கு , ஆட்டுவிக்கிறவனுக்கு , நடத்துகிறவனுக்கு பணம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. இது யார் பணம் வேலை விட்டு பணத்தை பறி கொடுத்து சட்டையை கசங்க விட்டு வேர்த்து வடிந்து போய் பார்க்கும் இந்த பயித்தியங்களுடையது இந்த காசு

    பதிலளிநீக்கு
  2. well said...India won't change...

    பதிலளிநீக்கு