வியாழன், 17 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை அட்டவணை மோசடி: அயர்லாந்து, நெதர்லாந்துக்கு துரோகம்

தொடங்கிவிட்டது உலக நாடுகள்(!) அனைத்தும்  கலந்து கொள்ளும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் டோர்னமென்ட். இந்தப் போட்டியை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்க்கப்போகிறார்கள். அதனால் ஆதித்யா, சிரிப்பொலி சேனல்கள் இப்போதே கவலைப்படத் தொடங்கிவிட்டன. எனினும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமில்லை.
நம்ம ஊரில் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தினால், போட்டியை நடத்தும் அணி நேரடியாக செமி பைனலுக்கு வருவதுபோல அட்டவணை அமைப்போம். அதுதான் நீதி, அதுதான் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நமது பாரம்பரியம். செமிபைனலில் அம்பயர்களைக் கொண்டு, எல்பிடபிள்யூக்கள் மூலமாகவும் ரன் அவுட்கள் மூலமாகவும் ஜெயித்துவிடலாம். அதன் பிறகு உள்ளூர் தேசபக்தர்களைக் கொண்டு கலகம் செய்வோம். வெளியிலிருந்து முட்டை, காலி வாட்டர் பாட்டில், மாட்டு சாணம், விஜய் பட சிடி என தேவையற்றவைகளைக் கொண்டு அடிப்போம். நெத்தியில் பந்து படும்போது எல்பிடபிள்யூ தருவோம். உருண்டுவரும் பந்தைப் பிடித்துவிட்டு கேட்ச் என்போம். அம்பயரின் தீர்ப்பே இறுதியானது உறுதியானது என மைக் செட் அலறும். எதிரணி பாதியிலேயே ஓட்டம் பிடிக்கும். இதுதான் நடப்பு. இதை எதிர்த்து யாராவது பேசினால் அவர்கள் விவரம் தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் மரபைத் தெரிந்து கொள்ளட்டும்.

இந்த மரபுதான் இப்போது ஐசிசி உலகக் கோப்பையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த போட்டியில் டிராவிட் அணியும் பாகிஸ்தான் அணியும் முதல் சுற்றிலேயே வீட்டுக்கு வந்தன. இந்தியாவுக்கு வங்கதேசம் ஆப்பு வைத்தது என்றால், பாகிஸ்தானுக்கு அயர்லாந்து டின் கட்டியது. இப்படி வேறு எந்த அணியும் திறமை காட்டினால், நமது மரபு என்ன ஆவது. உள்ளூர் தேச பக்தர்களின் மனங்கள் உடைந்து போகாதா? இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது.

டோர்னமென்ட் டைரக்டர் ரத்னாகர் ஷெட்டிதான் அண்மையில் இதற்கான அன்டர்கிரவுன்ட் வேலைகளையெல்லாம் மக்களுக்கு விளக்கியிருக்கிறார். உள்ளூர் அணிக்கு எந்த ஆடுகள் சாதகமாக இருக்கும், எத்தனை நாள் இடைவெளி விட்டால் நம் ஆட்கள் சுயநினைவுக்குத் திரும்புவார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசியும் இதற்கு ஒத்து ஊதியிருக்கிறது. இந்த முறை அயர்லாந்து, நெதர்லாந்து, வங்கதேசம் என எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஓரிரு ஆட்டங்களில் அவர்கள் ஜெயித்தாலும் நிச்சயமாக அது நமது தேசத்துக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது. அதனால், தேசபக்தர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
..
.

.

5 கருத்துகள்: